— டாக்டர் நிஷா அருணதிலக / டெய்லி எஃப்.டி.—
இலங்கையில் உயர்கல்வி விரிவுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதற்கான தெளிவான மூலோபாயத் திட்டம் ஒன்று இருக்கவில்லை. உயர்கல்வி வளர்ச்சி பெரும்பாலும் முதலாவது பட்டப்படிப்பு மட்டத்திலேயே குவிந்துள்ளது. அதேவேளை, உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்கள், இணைத் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் போதிய அளவில் இல்லை என கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் (IPS) தெரிவித்துள்ளது.
IPS நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் டாக்டர் நிஷா அருணதிலக, செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற வட்டமேசைக் கலந்துரையாடலில் இந்தக் தகவல்களை முன்வைத்தார். அக்கலந்துரையாடல், IPS நிறுவனத்தின் முதன்மை அறிக்கையான இலங்கைப் பொருளாதாரத்தின் நிலை 2026 (Sri Lanka State of the Economy 2026) என்ற அறிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
‘நிலையான பொருளாதார வளர்ச்சி: அனைவரையும் உள்ளடக்கிய செழிப்புக்காக மனித மூலதனத்தை மேம்படுத்துதல்’ (Durable Growth: Advancing Human Capital for Inclusive Prosperity) என்பதே இந்த அறிக்கையின் கருப்பொருளாகும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, உயர்கல்வி பெற்றவர்களின் விகிதம் 2012ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாக அதிகரித்தது. இதேவேளை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய STEM துறைகளில் கல்வி கற்றவர்களின் விகிதம் 2016ஆம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்து, 2023ஆம் ஆண்டில் 31 சதவீதமாக உயர்ந்தது.
எனினும், இந்தப் புள்ளிவிவரங்கள் நான்கு முக்கிய கட்டமைப்புசார் பலவீனங்களை மறைத்துவிடுகின்றன என டாக்டர் அருணதிலக தெரிவித்தார்.
முதலாவது பலவீனம்: வளர்ச்சியின் வேகம்
இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே உயர்-நடுத்தர வருமான நிலையை அடைந்துள்ள நாடுகளுடனும், குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடனும் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது.
ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர ஏனைய நாடுகளைவிட இலங்கை பின்தங்கியுள்ளது. உயர்கல்வித் துறையின் முன்னேற்றமும் மந்தமாகவே உள்ளது.
தற்போது சுமார் 1 சதவீத வளர்ச்சி வீதத்தில் விரிவடைந்துவரும் உயர்கல்வித் துறை, உயர்-நடுத்தர வருமான நாடுகளின் நிலையை எட்ட வேண்டுமானால், அதன் வளர்ச்சி வீதம் சுமார் 4 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
“இறுதியில், இந்த நாடுகளுடன் போட்டியிட வேண்டிய ஒரு சிறிய பொருளாதாரமாகவே நாம் இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
இரண்டாவது பலவீனம்: கல்வித் தகுதிகளின் அமைப்பு
உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள பெரும்பாலான வளர்ச்சி, முதலாவது பட்டப்படிப்புகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலமே ஏற்பட்டுள்ளது.
ஆனால், நடைமுறைப் பணிகளிலும் தொழில்நுட்பத் துறைகளிலும் ஈடுபடுவதற்கான பயிற்சிகளைப் பெற்ற முதுகலைப் பட்டதாரிகளும், குறுகியகால உயர்கல்விப் படிப்புகளை முடித்தவர்களும் பொருளாதாரத்திற்குத் தேவைப்படுகின்றனர்.
தொழிலாளர் சந்தையில் இந்த இடைவெளி மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது.
சர்வதேசத் தொழில்சார் வகைப்பாடுகளின்படி, அறிவுசார் பணியாளர்கள் (Knowledge Workers) என்போர் தொழில்சார் நிபுணர்கள், முகாமையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இணைத் தொழில்சார் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளனர்.
இந்தப் பணிகளுக்கு உயர்கல்வித் தகுதி இருப்பது சிறந்தது என சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) குறிப்பிடுகிறது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் தொழிலாளர் படையில் அறிவுசார் பணியாளர்களின் விகிதம் ஓரளவுக்குச் சிறப்பாக உள்ளது. எனினும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே உயர்கல்வி பெற்றவர்களாக உள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இணைத் தொழில்சார் நிபுணர்கள் மத்தியில் உயர்கல்வி பெற்றவர்களின் விகிதம் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.
மூன்றாவது பலவீனம்: பாலின வேறுபாடு
உயர்கல்வி பெற்றவர்களில் 57 சதவீதமானோர் பெண்கள். முதலாவது பட்டப்படிப்பைப் பெற்றவர்களில் பெண்களின் பங்கு 59 சதவீதமாகும்.
இது பாலினச் சமத்துவத்தின் அடிப்படையில் நேரடியான வெற்றியாகக் கருதப்பட முடியாது என டாக்டர் அருணதிலக தெரிவித்தார்.
பல்கலைக்கழகப் பட்டதாரிகளான பெண்கள் வேலைவாய்ப்புகளைத் தெரிவுசெய்வதில் அதிகத் தேர்வுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக, அவர்கள் கற்பித்தல் தொழிலில் அதிகமாகக் குவிந்துள்ளனர்.
ஏனைய தொழில்சார் துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு மாறாக, ஆண் தொழில்சார் நிபுணர்கள் பல்வேறு தொழில்களில் ஒப்பீட்டளவில் பரவலாகப் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலைமை, அறிவுசார் பணியாளர்களின் பற்றாக்குறை என்பது கல்வித்துறையுடன் மட்டுமே தொடர்புடைய பிரச்சினை அல்ல என்பதைக் காட்டுகிறது. அது தொழிலாளர் சந்தையுடன் தொடர்புடைய பிரச்சினையாகவும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
திறன்களுக்கு ஏற்கெனவே அதிக கேள்வி உள்ளது
தற்போது தொழிலாளர் சந்தையில் பற்றாக்குறையாக உள்ள திறன்களுக்கு ஏற்கெனவே அதிக மதிப்பு வழங்கப்படுகிறது.
இரண்டாம் நிலைக் கல்வியுடன் மாத்திரம் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், STEM துறைகளில் பட்டம் பெற்றவர்கள், STEM அல்லாத துறைகளில் பட்டம் பெற்றவர்களைவிட விரைவாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன், அவர்களின் ஊதியமும் அதிகமாக உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து முன்னேறுவதால், இந்த ஊதிய வேறுபாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என டாக்டர் அருணதிலக தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தரவு அறிவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகள் ஏனைய துறைகளைவிட வேகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறனாளர்கள் பொருளாதார உற்பத்தித்திறனை எவ்வாறு அதிகரிக்கின்றனர்?
நீண்டகால மொத்தக் காரணி உற்பத்தித்திறனை (Total Factor Productivity – TFP) அதிகரிப்பதில் திறமையான தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என அவர் கூறினார்.
மொத்தக் காரணி உற்பத்தித்திறன் என்பது, தொழிலாளர் எண்ணிக்கையையோ மூலதனத்தையோ அதிகரிப்பதன் மூலம் மட்டும் விளக்க முடியாத உற்பத்தி வளர்ச்சியைக் குறிக்கிறது.
வளங்களைத் துல்லியமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதன் மூலம் திறமையான தொழிலாளர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றனர்.
துல்லியமான விவசாயம் இதற்கு ஓர் உதாரணமாகும். இம்முறையில், விளைச்சலை அதிகரிப்பதற்காகப் பயிர்களுக்குத் தேவையான நீர் மற்றும் உரத்தின் அளவு துல்லியமாகத் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், திறமையான தொழிலாளர்கள் புத்தாக்கங்களை உருவாக்குவதற்கும், பொருளாதார அதிர்ச்சிகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்வதற்கும் உதவுகின்றனர்.
IPS நிறுவனத்தின் பரிந்துரைகள்
பொருளாதாரத்திற்குத் தேவையான உயர்கல்வித் தகுதிகளையும் திறன்களையும் துல்லியமாக அடையாளம் காண்பதற்கான தகவல் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என IPS நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் பட்டதாரிகளின் திறன்களையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் பொருத்தமாக அமைக்க முடியும்.
மேலும், உயர்கல்வித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றும், திறமையான பட்டதாரிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் ஏற்படும் மூளைசார் வள வெளியேற்றத்தை (Brain Drain) குறைப்பதற்குப் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கல்வித்துறையையும் தொழிலாளர் சந்தையையும் ஒருங்கிணைத்துச் சீர்திருத்த வேண்டும்
இந்தப் பிரச்சினைக்கான தீர்வு, கல்வித்துறையிலும் தொழிலாளர் சந்தையிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என டாக்டர் அருணதிலக தெரிவித்தார்.
ஆண் மாணவர்கள் உயர்கல்வியில் இணைவதில் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை என்பதையும், பெண்கள் ஏன் கற்பித்தல் தொழிலையே அதிகமாகத் தெரிவுசெய்கின்றனர் என்பதையும் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சிறந்த சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேம்பட்ட பணிச்சூழலையும் உருவாக்குவதன் மூலம், கற்பித்தல் துறைக்கு வெளியேயுள்ள ஏனைய தொழில்சார் துறைகளிலும் பெண்கள் அதிகளவில் பணியாற்றுவதற்கு ஊக்கமளிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
