— மிலிந்த மொரகொட / த பிரிண்ட் (The Print) —
இந்திய உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விசாரணைகள், கச்சத்தீவு தொடர்பான விவாதத்தை வழக்கமாக எழுப்பப்படும் இறைமை குறித்த கேள்விக்கு அப்பால் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா–இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒப்பந்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்தபோது, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு மத்திய அரசையும் தமிழக அரசையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
இதற்கிடையில், அந்த ஒப்பந்தங்களை மீண்டும் திறந்து பரிசீலிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை இராஜதந்திர வழிமுறைகள் ஊடாகக் கையாள்வதாகவும் இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் முக்கியமாக, இந்தியக் கடற்பரப்பில் மீன் வளம் குறைந்து வருவதே மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்கான காரணங்களில் ஒன்று என இந்தியச் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார். விசாரணையின்போது, மீன்பிடி நடைமுறைகள் மற்றும் இந்தியக் கரையோரக் கடற்பரப்பின் நிலைமை குறித்தும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.
இந்தக் கருத்துகள் ஓர் அடிப்படையான கேள்வியை முன்வைக்கின்றன: கச்சத்தீவு மீதான தொடர்ச்சியான கவனம், உண்மையான நெருக்கடியிலிருந்து இந்தியாவையும் இலங்கையையும் திசைதிருப்புகிறதா? அந்த உண்மையான நெருக்கடி பாக்கு நீரிணையின் கடல் வளங்கள் அழிந்து வருவதும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அழிவுகரமான மீன்பிடி முறைகள் தொடர்ந்து நிலவுவதும்தானா?
ஒரு தீவை விடப் பெரிய பிரச்சினை:
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவும் இலங்கையும் இரண்டு கடல்சார் எல்லை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அவற்றில் ஒன்று 1974 ஆம் ஆண்டிலும் மற்றொன்று 1976 ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை வரையறுத்ததுடன், கச்சத்தீவு மீதான இலங்கையின் இறைமை உள்ளிட்ட இரு நாடுகளினதும் கடல்சார் அதிகார வரம்புகளையும் நிறுவின.
இந்த ஒப்பந்தங்கள், இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை வழங்கவில்லை. அதேபோன்று, இந்தியக் கடற்பரப்பில் இலங்கை மீனவர்களுக்கு பரஸ்பர மீன்பிடி உரிமைகளையும் அவை வழங்கவில்லை.
இந்த ஒப்பந்தங்களுக்கு எதிரான அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான சவால்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. அவற்றின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து நீதிமன்றம் இதுவரை தீர்ப்பளிக்கவில்லை. இந்த விவகாரம் இன்னமும் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
எனினும், இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த ஒப்பந்தங்களின் மூலம் நிறுவப்பட்ட கடல்சார் எல்லையை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை நிர்வகிப்பதற்கான அடிப்படையாகக் கருதி வந்துள்ளன.
தமிழக மீனவச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உண்மையானவை. கடல் எல்லையைத் தாண்டியதன் பின்னர் படகுகள் தடுத்து வைக்கப்படுவதும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிப்பதற்காக இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அண்மையில் வலியுறுத்தியதுடன், மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளார்.
ஆனால், இந்த உடனடிப் பிரச்சினைகள் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கின்றன: மீன் வளம் ஏன் குறைந்து வருகிறது? அதை மீண்டும் மீட்டெடுப்பதற்கு என்ன செய்ய முடியும்?
மீண்டும் மீண்டும் இராஜதந்திர ரீதியில் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலமோ, கைது செய்தல், விடுவித்தல் மற்றும் மீன்பிடிப் படகுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு கோருதல் போன்ற நடவடிக்கைகளின் மூலமோ இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. கச்சத்தீவு குறித்த அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து மீண்டும் கிளறுவதன் மூலமும் இதனைத் தீர்க்க முடியாது.
பாக்கு நீரிணை என்பது இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் ஓர் இயற்கைச் சூழலியல் அமைப்பாகும். அதன் வளங்கள் வரையறுக்கப்பட்டவை. கடல் வளத்தின் ஆரோக்கியமே, கடல் எல்லையின் இருபுறங்களிலும் வாழும் மீனவச் சமூகங்கள் தொடர்ந்து அதனை நம்பி வாழ்வாதாரத்தைப் பெற முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.
சூழலியலுக்கு ஏற்படும் பாதிப்பு:
அடித்தள இழுவைமடி மீன்பிடியே இந்தப் பிரச்சினையின் மையத்தில் உள்ளது. கடற்படுகையின் மீது கனமான வலைகளை இழுத்துச் செல்வதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. இளம் மீன்களும் பிடிக்கப்படுகின்றன. மேலும், இலக்காகக் கொள்ளப்படாத கடல்வாழ் உயிரினங்களும் கணிசமான அளவில் வலைகளில் சிக்குகின்றன.
இதன் விளைவுகள் காலப்போக்கில் அதிகரிப்பதுடன், நீண்டகாலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, பிரச்சினை என்பது மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டுகிறார்களா என்பதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுவதில்லை. பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் அழிவுகரமான மீன்பிடி நடவடிக்கைகள் கடல் சூழலியல் அமைப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் இதில் முக்கியமானதாகும்.
ஒரு காலத்தில் செழிப்பான மீன்பிடித் தொழிலைக் கொண்டிருந்த இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மீன் பிடிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் 35,000 மெட்ரிக் தொன்னாக இருந்த மீன் பிடிப்பு, 2023 ஆம் ஆண்டில் 17,000 மெட்ரிக் தொன்னாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பல காரணிகள் இந்த வீழ்ச்சிக்குப் பங்களித்துள்ளன. பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களினதும் இடப்பெயர்வுகளினதும் தாக்கங்களும் அவற்றில் அடங்குகின்றன. எனினும், பாக்கு நீரிணையில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் இழுவைமடி மீன்பிடியினால் ஏற்படும் அழுத்தம், வடபகுதி மீனவச் சமூகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மேலும் அதிகரித்துள்ளது.
எனவே, இரு தரப்பிலும் உள்ள மீனவர்களின் நீண்டகால நலன்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும்: தமது வாழ்வாதாரம் சார்ந்துள்ள கடல் வளத்தைப் பாதுகாப்பது.
தொடர்ச்சியான, ஆனால் செயலற்ற அணுகுமுறை:
கச்சத்தீவு தொடர்பாக இலங்கை கடந்த ஐந்து தசாப்தங்களாகத் தொடர்ச்சியானதும் நிதானமானதுமான நிலைப்பாட்டைப் பேணி வந்துள்ளது. நிறுவப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திரக் கட்டமைப்புகளுக்கு உட்பட்டே அது செயற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளின் அடையாளமாகவும் கச்சத்தீவு இருந்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயமும் இரு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்கும் வருடாந்தத் திருவிழாவும் இந்த உறவுகளின் அடையாளங்களாக விளங்குகின்றன.
ஆனால், கச்சத்தீவுக்கு இன்றைய சூழலில் ஆக்கபூர்வமானதொரு பங்கை வழங்குவதற்கு இலங்கை மிகக் குறைந்தளவிலேயே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், மூலோபாய விவகாரங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனமான பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation), கச்சத்தீவில் கடல்சார் ஆய்வு நிலையமொன்றை அமைக்கும் யோசனையை முன்வைத்தது. இலங்கை மீன்பிடித் திணைக்களம், தேசிய நீர்வாழ் உயிரின வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் தலைமையில் இந்த நிலையம் இயங்க வேண்டும் என்பதே அந்த முன்மொழிவாகும்.
இந்த முன்மொழிவு மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.
கச்சத்தீவை அறிவியல் ஆய்வுக்கான தளமாக மாற்றுதல்:
கடல்சார் ஆய்வு நிலையமொன்று அமைக்கப்படுவது, பாக்கு விரிகுடாவின் பரந்த சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதில் பங்களிப்புச் செய்வதுடன், தனது கடற்பரப்பில் பொறுப்பான வள முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை வாய்ப்பையும் இலங்கைக்கு வழங்கும்.
அத்தகைய நிலையம் பின்வரும் பணிகளை முன்னெடுக்க முடியும்:
- கடல்வாழ் உயிரினப் பல்வகைமையையும் சூழலியல் சீரழிவையும் கண்காணித்தல்.
- அடித்தள இழுவைமடி மீன்பிடியின் நீண்டகாலத் தாக்கங்களை மதிப்பிடுதல்.
- கடல்வாழ் உயிரினங்களின் இடம்பெயர்வு முறைகளையும் இனப்பெருக்கச் சுழற்சிகளையும் கண்காணித்தல்.
- மீன்பிடிக் கொள்கைகளை உருவாக்குவதற்குத் தேவையான அறிவியல் தரவுகளைச் சேகரித்தல்.
- இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இராஜதந்திரத்துக்கும் கலந்துரையாடல்களுக்கும் தளமொன்றை வழங்குதல்.
இந்தியாவிடம் ஏற்கெனவே கணிசமான கடல்சார் ஆய்வுத் திறன்கள் உள்ளன. கடல் எல்லையின் தனது பக்கத்தில் அதற்குத் துணையாக விளங்கக்கூடிய ஆய்வுத் திறனை இலங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சூரியசக்தி, கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பம் மற்றும் தொகுதிமுறை கட்டுமானம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இத்தகைய நிலையத்தை அமைப்பதில் முன்னர் இருந்த நடைமுறைச் சிரமங்களைக் குறைத்துள்ளன.
சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை, அதிக பயனை வழங்கக்கூடிய ஆய்வு நிலையமொன்றை அமைப்பது இப்போது சாத்தியமான முன்மொழிவாக உள்ளது.
சர்ச்சையிலிருந்து ஒத்துழைப்பை நோக்கி:
தற்போதைய விவாதம், இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலின் தன்மையை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழகத்தின் மீனவர்கள் குறித்த அக்கறை நியாயமானது. சட்டவிரோத மீன்பிடி மற்றும் தனது கடல் வளங்கள் சீரழிவது குறித்த இலங்கையின் கவலையும் அதேபோன்று நியாயமானது.
ஒரு தரப்பின் கவலையைச் செல்லுபடியானதாகவும் மற்றொரு தரப்பின் கவலையைத் தடையாகவும் கருதுவது நீடித்த தீர்வை உருவாக்காது.
இறைமை குறித்த கேள்விக்குத் திரும்பத் திரும்பச் செல்வதன் மூலமும் தீர்வைக் காண முடியாது.
மாறாக, பாக்கு விரிகுடாவை இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் ஓர் இயற்கைச் சூழலியல் அமைப்பாகக் கருதி, அதன் முகாமைத்துவத்தில் இந்தியாவும் இலங்கையும் கவனம் செலுத்த வேண்டும்.
கூட்டு அறிவியல் கண்காணிப்பு, கடல் வளப் பாதுகாப்புத் திட்டங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் நிலைபேறான மீன்பிடி தொடர்பான கலந்துரையாடல்கள் ஆகியவை நடைமுறைச் செயற்பாடுகளுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியும்.
இத்தகைய ஏற்பாடுகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், அடித்தள இழுவைமடி மீன்பிடி போன்ற அழிவுகரமான நடைமுறைகளைப் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உதவக்கூடும்.
இத்தகைய ஒத்துழைப்புக்கு எந்தவொரு நாடும் தனது இறைமையையோ சட்டரீதியான நிலைப்பாட்டையோ விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அரசியல் எல்லைகளை கடல் சூழலியல் அமைப்புகள் மதிப்பதில்லை என்பதை இரு நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே இதற்குத் தேவையானதாகும்.
உணர்ச்சிகளை விட அறிவியலுக்கு முன்னுரிமை:
கச்சத்தீவு தொடர்பான விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீனவச் சமூகங்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இராஜதந்திர மற்றும் சட்ட வழிமுறைகள் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த நடவடிக்கைகள் நீண்டகாலத் தீர்வுக்கு மாற்றாக அமைய முடியாது.
கச்சத்தீவை யார் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மையான சவாலல்ல. அந்தத் தீவைச் சூழவுள்ள கடற்பரப்பு, அதை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து தாங்கி நிற்குமா என்பதே உண்மையான சவாலாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில், இதற்கான பதில் வெறும் வார்த்தைப் போராட்டமாகவோ செயலற்ற இராஜதந்திரமாகவோ இருக்கக்கூடாது. அது அறிவியல் ஆய்வு, பொறுப்பான கடல் வள முகாமைத்துவம் மற்றும் ஆக்கபூர்வமான பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
கச்சத்தீவு தொடர்ந்து சர்ச்சையின் அடையாளமாகவே இருக்க வேண்டியதில்லை. முறையாகப் பயன்படுத்தப்பட்டால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான ஒத்துழைப்புக்கான தளமாக அது மாறக்கூடும்.
———-
(மிலிந்த மொரகொட இலங்கையின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர், இராஜதந்திரி மற்றும் மூலோபாய விவகாரங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனமான பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். 2021 செப்டெம்பர் முதல் 2023 செப்டெம்பர் வரை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார். இவரது ட்விட்டர் கணக்கு: @MilindaMoragoda. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அவருடைய தனிப்பட்ட கருத்துகளாகும்.)
