தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சி பற்றிய விமர்சனங்கள் 

தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சி பற்றிய விமர்சனங்கள் 

— கருணாகரன் —

தேசிய மக்கள் சக்தி (NPP)அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சியைப் பற்றிய விமர்சனங்களும் மதிப்பீடுகளும் பல தரப்பிலும் நிகழ்கிறது. சில விமர்சனங்கள் ஆரோக்கியமானவை. 

1.  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் NPP யின் துணிகரமான நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

2.  கடந்த காலங்களில் இடம்பெற்ற முக்கிய நிதி மோசடிகள், முறைகேடுகள்,போதைப்பொருள் கடத்தல்கள் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

3.  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு நிதியுதவியுடனான வீடுகள், ஓய்வூதியம், வாகனங்கள் பணியாளர் சலுகைகள் நாடாளுமன்றத்தின் மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன. 

4.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறைகள் ஒழிக்கப்பட்டு, அவர்களுக்கான சொகுசு வாகன அனுமதிப்பத்திரச் சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் அரசாங்கத்தின் பொருளாதாரச் சிக்கனத் தன்மையை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள். 

5.  இந்தத் தொடர்ச்சியில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்கும் நிலையை மாற்றி, “சட்டம் அனைவருக்கும் சமம்” என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது. 

6.  போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவே தெரிகிறது. முன்னரெல்லாம் வட மாகாணத்தின் கடற்கரைகள் உள்பட பல இடங்களிலும் படையினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருள் பொதிகளைப் பற்றிய சேதிகளும் காட்சிகளும் ஊடகங்களில் வரும். இப்போது அவற்றைக் காண முடியவில்லை.

7.  2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, மெல்ல மெல்ல பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு 5.1% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. 

8.  மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

9.  கடுமையான எதிர்ப்புகளின் மத்தியில் ஞானசார தேரர் விடயத்தில் அரசின் உறுதியான நிலைப்பாடு. 

இவையல்லாம் அரசாங்கத்துக்கும் அதனுடைய அபிமானிகள்,ஆதரவாளர்களுக்கும் இனிப்பானவை. 

மறுவளமாக சில விமர்சனங்களும் மதிப்பீடுகளும் வேறு விதமானவை. முக்கியமாக – 

1.  முந்தைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொண்ட கடுமையான நிபந்தனைகளை மறுபரிசீலனை (Renegotiate) செய்து, மக்களின் வரிச்சுமையைக் குறைப்பதாக NPP தேர்தல் பிரச்சாரங்களில் உறுதியளித்தது. அது நடைமுறைக்கு வரவேயில்லை. பதிலாக வரிச்சுமையும் வாழ்க்கைச் சுமையுமே அதிகரித்துள்ளது. 

2.  NPP ஆட்சிக்கு வந்த பின்னர், முந்தைய அரசின் அதே நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளையும், IMF இன் அதே கடுமையான நிபந்தனைகளையும் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. 

3.  “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கப்படும்“ என்று தேர்தல் மேடைகளில் NPP யினர் முழங்கினார்கள். ஆட்சியில் அதைச் சுலபமாக மறந்து விட்டனர். 

4.  மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அது நடத்தப்படவும் இல்லை. நடத்தப்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. 

5.  பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” (Protection of the State from Terrorism Act – PSTA) என்ற புதிய சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது

6.  கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% ஆக படிப்படியாக உயர்த்துவதாகவும், ஆசிரியர்களின் சம்பளத்தை நாட்டின் மிக உயர்ந்த நிலைக்கு மாற்றுவதாகவும் NPP உறுதியளித்தது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் (Budget) கல்விக்கான ஒதுக்கீடு வெறும் 1.5% என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே நீடிக்கிறது. அதேநேரம், இராணுவத்திற்கான பாதுகாப்புச் செலவினங்கள் 455 பில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 

7.  ஊழல்களை வெளிக்கொண்டுவந்து தண்டனை வழங்குவதாகக் கூறி ‘ஊழல் ஒழிப்பு’ முழக்கத்தை முன்னிறுத்தியே NPP வென்றது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் “மேலோட்டமான நாடகமாகவே” (Cosmetic Theatre) உள்ளதே தவிர, முறையான நிறுவன ரீதியான கட்டமைப்பு மாற்றங்களோ அல்லது பெரியளவிலான தண்டனைகளோ வழங்கப்படவில்லை.

8.  மலையகத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் சட்ட ரீதியான நகர்வுகளை மேற்கொண்ட போதிலும், பெருந்தோட்ட நிறுவனங்களின் தன்னிச்சையான பணிச்சுமை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தாததும், காணி மற்றும் வீட்டுரிமை போன்ற அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றாததும் மலையக மக்கள் மத்தியில் NPP அரசு மீதான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த 1,750 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்குப் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்கள் மீது அதிகப்படியான வேலைப் பளுவை (Target) திணித்து வருகின்றன. ஒரு நாளில் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை நிறுவனங்கள் கணிசமாக உயர்த்தியுள்ளதால், வயதான மற்றும் பெண் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

9.  மலையகத்தில் உள்ள பின்தங்கிய பெருந்தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு தவறியுள்ளதுடன், IMF பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, கிராமப்புற மற்றும் தோட்டப்புற சிறிய பாடசாலைகளை மூடும் அல்லது ஒன்றிணைக்கும் மறைமுக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

10. மலையகப் பகுதிகளின் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முந்தைய காலங்களில் உருவாக்கப்பட்ட “புதிய கிராமங்கள், அபிவிருத்தி அதிகார சபை” (New Villages Development Authority) போன்ற பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான சிறப்பு நிறுவனங்கள் தற்போதைய NPP ஆட்சியில் முடக்கப்பட்டு அல்லது செயலற்றுப் போயுள்ளன. 

11. தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் IMF நிபந்தனைகளைக் காரணம் காட்டி, மலையக மக்களுக்கான புதிய வீட்டுத் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், காணி வழங்குவது தொடர்பாகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கையில், நிலக் பற்றாக்குறை மற்றும் சட்டச் சிக்கல்களைக் காட்டி அரசு காலம் தாழ்த்தப்படுகிறது.

12. முஸ்லிம்களின் பாதுகாப்புத் தொடர்பான நிலை இன்னமும் உத்தரவாதப்படுத்தப்படாமலே உள்ளது. 

13. ‘முறைமை மாற்றம்’ (System Change)நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டாலும் இன்னும் அது  சாத்தியமாகவில்லை. 

14. முந்தைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையை விட்டு விலகாத, அதே பாணியிலான ஆட்சியைத் தொடருதல். 

15. சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளில் அக்கறையற்ற தன்மை. அதிகாரப் பகிர்வுக்கும் அரசியல் தீர்வுக்கும் தயாரற்ற நிலைமை.

16. புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் காட்டப்படும் தயக்கம்.

17. தேசிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்க முடியாமல் தடுமாறுவது.

18. தேசியப் பிரச்சினைகள் எதையும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவற்றுக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டியிருந்தும், அதில் ஈடுபடாமல், காலத்தைக் கடத்துவது.

19. பெருந்திரள் மக்களின் அதிகாரத்தையும் அரசியல் அபிலாஷைகளையும் சிறு குழுவினரான JVP யினர் கட்டுப்படுத்தி வைத்திருப்பது. அல்லது அதில் ஆதிக்கம் செலுத்துவது. 

20. ஜனநாயக அடித்தளத்தை NPP அரசாங்கம் பேணும். அரசியல் தலையீடுகளைக் கட்டுப்படுத்தும் என்று ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க அழுத்தமாகச் சொன்னாலும் நடைமுறையில், கட்சியினரே அனைத்தையும் கையாள்கின்றனர். அவர்களுக்கே அதிகாரம் அதிகளவு அளிக்கப்பட்டுள்ளது.

21. மக்களுடைய வாழ்க்கைச் சுமை மேலும் மேலும் கூடும் நிலையே உள்ளது. அதைக் குறைப்பதற்கான எத்தகைய நம்பிக்கைத் திட்டங்களையும் காண முடியவில்லை. 

22. பௌத்தமயமாக்கல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. நாடு முழுவதிலும் உள்ள மலைச்சிகரங்களில் புத்தர் சிலைகளை வைப்பதையே அபிவிருத்தி என்று அரசாங்கம் நம்புவதாகத் தெரிகிறது. 

23. புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார முன்னேற்றத்துக்காக எத்தகைய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, இயங்குகின்றன?அரசியல் தீர்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் விளைவு என்ன? என்று இதுவரையில் சொல்லப்படவில்லை. என்பதால் மக்கள் இருளுக்குள் கைத்தடியைத் தேடுகிறார்கள்.

இப்படி ஒரு நெடும்பட்டியல் NPP ஆட்சியின் மீதான குறைபாடுகளாகவும் குற்றங்களாகவும் உள்ளது. இவை அவ்வளவும் கவனித்துச் செயற்படுத்தப்பட வேண்டியவை. ஆட்சிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அதற்கிடையில் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியப்பணிகள் ஏராளம் உண்டு. செல்ல வேண்டிய பயணத் தூரம் மிக நீண்டது. அதைச் செய்து முடிப்பதும் பெரிய விடயமல்ல. தயக்கங்களை விட்டுத் துணிந்தாலே பாதித்தூரத்தை நடக்காமலே கடந்து விடலாம்.

இப்போது, அநுரகுமார திசநாயக்க என்ற பிம்பத்தின் மீது அல்லது ஆளுமையின் மீது கட்டியெழுப்பப் பட்டிருக்கும் NPP ஆட்சியானது, ஆதரவு – எதிர்ப்பு, பாராட்டு – கண்டனம், மதிப்பீடு – விமர்சனம் என்ற இருநிலைகளில் விவாதிக்கப்படும் அளவுக்கும் அவசியத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. “வெளிப்படுத்தப்படுகின்ற விமர்சனங்கள் அல்லது மதிப்பீடுகள் வெறுப்பின் விளைவானவை. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான தரப்பினரின் விமர்சனங்கள் ஏறக்குறைய எதிர்நிலையிலானவை. அவற்றைப் பொருட்படுத்த முடியாது” என்று NPP யினரோ அவர்களுடைய ஆதரவாளர்கள்,அபிமானிகளோ சொல்லக் கூடும். அது தாமதங்களையும் தவறுகளைச் சீராக்காது. பதிலாகத் துணிச்சலும் அறிவுபூர்வமானதுமான நடவடிக்கைகளே மாற்றத்தை உருவாக்கும். நெருக்கடிகளைக் குறைக்கும். நம்பிக்கையை மக்களிடத்திலே ஏற்படுத்தும். அதைக்குறித்து அரசாங்கம் ஆழமாகச் சிந்திப்பது அவசியம். 

ஆனால், பொதுவாக ஆட்சியாளர்களைப் பற்றிய இத்தகைய மதிப்பீடுகளும் விமர்சனமும் அவசியமானவை. ஒரு ஆட்சியைச் சிறப்பாக்குபவை நியாயமான விமர்சனங்களும் காழ்ப்பில்லாத மதிப்பீடுகளுமேயாகும். இவற்றைக் காழ்ப்பும் வெறுப்பும் இல்லாமல் அரசாங்கமும் அணுக வேண்டும். எப்போதும் இனிப்பான சொற்கள்தான் வேண்டும். முதுகை யாராவது தடவிக் கொடுக்க வேண்டும் என்று கருதக் கூடாது. 

இதேவேளை அரசாங்கம்,வெளியுறவுக் கொள்கையிலும் பிராந்திய நாடுகளைக் கையாள்வதிலும் முதிர்ச்சியோடு அல்லது நிதானத்தோடு செயற்படுவதாகத் தெரிகிறது. முக்கியமாக NPP அரசாங்கம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் புவிசார் அரசியல் போட்டிக்குள் (Geopolitical Rivalry) சிக்கிவிடாமல், “எந்தவொரு நாட்டிற்கும் அடிபணியாத தன்னாட்சி வெளியுறவுக் கொள்கையை” (Strategic Autonomy) பேண முற்படுகிறது. நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரு வல்லரசுகளின் நிதி மற்றும் மூலோபாய உதவிகளையும் ஒரே நேரத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதே NPP அரசாங்கத்தின் தற்போதைய பிரதான சர்வதேச நலனாகும். 

அதாவது, அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தனது இடதுசாரி / தேசியவாதப் பின்னணியையும் தாண்டி, சர்வதேச – பிராந்திய மட்டங்களில் முற்றிலும் நடைமுறைச் சாத்தியமான (Pragmatic) மற்றும் அணிசேராக் கொள்கையை கையாண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில், குறிப்பாக இந்தியா, சீனா ஆகிய இரு வல்லரசுகளுடனான மூலோபாய சமநிலையை பேணுவதில் அரசாங்கம் பெற்றுள்ள நம்பிக்கையும் அதன் பின்னாலுள்ள நலன்களும் பாராட்டுக்குரியவை. ஆனால், இதை அது மேலும் பல அடுக்குகளில் வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *