காலநிலை நெருக்கடியின் காரணங்கள், பாதிப்புகளால் ‘இரட்டை இலாபம்’ பெறும்  பெரும் செல்வந்தர்கள் – ஒக்ஸ்பாம் அறிக்கை

காலநிலை நெருக்கடியின் காரணங்கள், பாதிப்புகளால் ‘இரட்டை இலாபம்’ பெறும் பெரும் செல்வந்தர்கள் – ஒக்ஸ்பாம் அறிக்கை

— ஜொனதன் வட்/ த கார்டியன் —

காலநிலைச் சீர்குலைவுக்குக் காரணமான மாசுபடுத்தும் தொழில்துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் இலாபம் ஈட்டும் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள், அதனால் ஏற்படும் பேரழிவுகளின் விளைவுகளிலிருந்தும் அதிகளவில் இலாபம் சம்பாதித்து வருவதாக ஒக்ஸ்பாம் அமைப்பின் ஆய்வொன்று தெரிவிக்கிறது.

உலகளாவிய சமத்துவமின்மையைக் குறைப்பதற்காகச் செயற்படும் ஒக்ஸ்பாம்  அமைப்பு, உலக மக்கள்தொகையில் செல்வந்தர்களான 0.1 சதவீதத்தினர், பேரிடர்களுக்கான தயார்நிலை, பாதிப்புகளிலிருந்து மீட்சி மற்றும் மறுகட்டமைப்பு ஆகிய துறைகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இந்தச் சந்தையின் வருடாந்த பெறுமதி, தற்போது 7000 கோடி அமெரிக்க டொலரிலிருந்து 2029ஆம் ஆண்டளவில் 9200 கோடி டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களும் அதிகாரம் மிக்கவர்களும் காலநிலை நெருக்கடியிலிருந்து ‘இரட்டை இலாபம்’ பெறுகின்றனர். அதைவிடக் கவலைக்குரிய விடயம் என்னவெனில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தவோ அல்லது சீர்குலைக்கவோ அவர்களுக்கு இது ஊக்கமளிக்கிறது என இந்த அரச சார்பற்ற அமைப்பு கூறுகிறது.

உலகளாவிய வெப்பமயமாதலுக்குக் குறைந்தளவு பொறுப்பான மக்களே, அதன் விளைவுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைச் சமாளிப்பது, தீவிர வானிலை நிகழ்வுகளால் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்ப்பது அல்லது வேறு இடங்களுக்குக் குடிபெயர்வது போன்றவற்றுக்காக, இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களுக்கே அவர்கள் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் உலகளாவிய சமத்துவமின்மை மேலும் மோசமடைகிறது.

ஒக்ஸ்பாம் அமைப்பின் கொள்கைச் செல்வாக்குப் பிரிவின் தலைமை அதிகாரியான ஜீன் மெக்லீன், குழப்பங்களையும் பேரழிவுகளையும் கோடீஸ்வரர்கள் இலாபமாக மாற்றுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அவர் கூறியதாவது:

“இந்த நெருக்கடியின் இரு முனைகளிலும் பெரும் செல்வந்தர்கள் இலாபம் பெறுகின்றனர். முதலில், மாசுபடுத்தும் தொழில்துறைகளில் தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் இலாபமடைகின்றனர். இரண்டாவதாக, வேகமாக வளர்ந்து வரும் ‘காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும் பொருளாதாரத்தில்’ முதலீடு செய்கின்றனர். அதாவது, வெப்பமடைந்து வரும் உலகிற்கு மீட்பு மற்றும் மறுகட்டமைப்புச் சேவைகளை விற்பனை செய்கின்றனர்.

“காலநிலை நெருக்கடிக்குக் குறைந்தளவு பங்களிப்புச் செய்த மக்களே அதன் மிக மோசமான விளைவுகளைத் தாங்கிக்கொள்கின்றனர். ஆனால், இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அதிக வசதிகளைக் கொண்டுள்ளனர்.”

உலகின் செல்வந்தர்களான 0.1 சதவீதத்தினர், அதாவது சுமார் 80 இலட்சம் பேர், உலகின் மிக வறிய 350 கோடி மக்கள் இணைந்து வெளியிடும் கார்பன் உமிழ்வைவிட அதிகமான உமிழ்வுக்குப் பொறுப்பானவர்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.

இதன் விளைவாக, தீவிர வெப்ப நிகழ்வுகளுக்கு இந்தச் செல்வந்தர்கள் சராசரி மனிதரைவிட 125 மடங்கு அதிகமாகப் பங்களித்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கு அவர்களது வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும். உதாரணமாக, உலகின் தனியார் விமானங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு, உலகின் பெரும்பாலான மக்கள் ஓராண்டு முழுவதும் வெளியிடும் அளவைவிட இரண்டு விநாடிகளில் அதிகமாக உள்ளது.

எனினும், இந்தச் செல்வந்தர்களின் மிகப் பெரிய தாக்கம் அவர்களது முதலீடுகளின் மூலமே ஏற்படுகிறது.

ஒக்ஸ்பாமின் புதிய ‘அழித்து மீண்டும் கட்டியெழுப்பும் சுட்டெண்’ (Destroy and Rebuild Index), காலநிலைச் சீர்குலைவுக்குக் காரணமாக இருக்கும் அல்லது அதற்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் சேவைகளை வழங்கும் 217 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது.

குளிரூட்டும் சாதனங்கள், வெள்ளத் தடுப்புக் கட்டமைப்புகள், தீயணைப்புக் கருவிகள், போக்குவரத்து, உணவு, காப்புறுதி மற்றும் கடன்கள் போன்றவற்றை வழங்கும் நிறுவனங்களும் இதில் அடங்குகின்றன.

கடந்த ஆண்டு, இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 180 கோடி அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டியதுடன், தமது பங்குதாரர்களுக்கு 100 கோடி டொலரை இலாபப் பங்கீடாக வழங்கியுள்ளன.

செல்வந்த முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆறு முக்கிய சொத்து முகாமைத்துவ நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவை, பட்டியலில் உள்ள ஏனைய நிறுவனங்களிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளன.

அவற்றில் இரண்டு மிகப் பெரிய நிறுவனங்களான பிளாக்ரொக் (BlackRock) மற்றும் வான்கார்ட் (Vanguard), இந்தச் சுட்டெண்ணில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் 92 சதவீதமானவற்றின் பங்குகளை வைத்துள்ளன. இந்தப் பங்குகளின் மொத்தப் பெறுமதி ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகம் என ஒக்ஸ்பாம் தெரிவிக்கிறது.

இதேபோன்று, தீவிர வானிலை அல்லது போர் காரணமாக ஏற்படும் நெருக்கடிகள், கோடீஸ்வரர்களின் ஆதிக்கத்தில் உள்ள பெரிய உணவு வர்த்தக நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 2020ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் கோடீஸ்வரர்களின் செல்வம் 1200 கோடி அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது.

வறட்சி, வெள்ளம் அல்லது புயல் காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்படும்போது, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் சிறு உற்பத்தியாளர்களும் சாதாரண நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளை, பெரிய நிறுவனங்களும் அவற்றின் முதலீட்டாளர்களும் அதிகளவில் இலாபமடைகின்றனர் என ஒக்ஸ்பாம் கூறுகிறது.

இதற்கு ஓர் உதாரணமாக, 2024ஆம் ஆண்டு மேற்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாகக் கொக்கோவின் விலை 231 சதவீதம் அதிகரித்த சம்பவத்தை அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. எனினும், இந்த விலை உயர்வால் கிடைத்த இலாபத்தில் உள்ளூர் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என அது தெரிவிக்கிறது.

இத்தகைய சமத்துவமின்மை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

உலகின் செல்வந்தர்களான ஒரு சதவீதத்தினர் வெளியிடும் வருடாந்த கார்பன் உமிழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் காரணமாக, வெப்பத்தினால் ஏற்படும் மேலதிக மரணங்களின் எண்ணிக்கை 19 இலட்சமாக இருக்கும் என ஒக்ஸ்பாம் மதிப்பிட்டுள்ளது. மனித ஆரோக்கியம், விவசாய உற்பத்தித்திறன் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றின் மீதான தாக்கங்களைக் கணக்கில் கொண்டே இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மரணங்களில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமானவை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய உமிழ்வுகளில் இந்த நாடுகளின் பங்களிப்பு வெறும் எட்டு சதவீதம் மட்டுமே என்பதால், அவை காலநிலை நெருக்கடிக்குக் குறைந்தளவே பொறுப்பானவை.

செல்வந்த நாடுகளும் தனிநபர்களும், குறைந்தபட்சம் தற்போதைய நிலையில், காலநிலை நெருக்கடியின் பாதிப்புகளிலிருந்து ஓரளவு பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.

அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலையைச் சமாளித்தல், வலுவான வீடுகளை அமைத்தல், அவசரகால வெளியேற்ற ஏற்பாடுகளைச் செய்தல், தனியார் மருத்துவப் பராமரிப்பைப் பெறுதல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவற்றுக்கான வசதிகள் அவர்களிடம் அதிகமாக உள்ளன.

இதனால், காலநிலை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காகத் தங்களிடமுள்ள கணிசமான அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களிடம் குறைவாக இருக்கலாம். மாறாக, தங்களது தனிப்பட்ட செல்வத்தைப் பாதிக்கக்கூடிய உமிழ்வுக் குறைப்பு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தவோ தடுக்கவோ அவர்கள் முயற்சிக்கக்கூடும் என ஒக்ஸ்பாம் தெரிவிக்கிறது.

அதற்குப் பதிலாக, சிலர் பேரிடர்களைப் பயன்படுத்தி அரச சேவைகளைத் தனியார்மயமாக்கும் திட்டங்களை முன்னெடுக்கின்றனர் அல்லது வறிய நாடுகள் கடன்களைப் பெறுவதற்கு ஊக்கமளிக்கின்றனர் என்றும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.

ஒக்ஸ்பாம் அறிக்கையின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவரான அலெக்ஸ் மைட்லண்ட் கூறுகையில், மிகப் பெரும் செல்வந்தர்கள் காலநிலை நெருக்கடியின் விளைவுகளால் வெறுமனே இலாபமடையும் நபர்கள் மட்டுமல்லர் என்றார்.

“இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களது அரசியல் செல்வாக்கையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போது நிகழ்ந்துகொண்டிருப்பவற்றை அவர்களால் திட்டமிட்டு வழிநடத்த முடிகிறது என்பதற்கான மிகக் கடுமையான ஆதாரமாக இது அமைகிறது” என அவர் தெரிவித்தார்.

ஒக்ஸ்பாமின் கோரிக்கைகள்..

செல்வந்தர்கள், தனியார் விமானங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், மாசுபடுத்தும் தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என ஒக்ஸ்பாம் கோருகிறது.

மேலும், சர்வதேச காலநிலை நிதியுதவிக்கான தனது உறுதிமொழிகளைப் பிரித்தானிய அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என்றும், கடன்களுக்கு மாறாகத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத மானியங்களின் அடிப்படையில் அந்த நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

காலநிலைப் பேரிடர்களைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டும் நடைமுறைகளுக்கும் முடிவுகட்ட வேண்டும் எனவும் அது கோருகிறது.

ஒக்ஸ்பாம் இன்டர்நஷனல் அமைப்பின் காலநிலை மாற்றக் கொள்கைப் பிரிவின் தலைவரான நஃப்கோட் டாபி கூறியதாவது:

“காலநிலை மாற்றம் குறித்துப் பேசுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை என்று ஒவ்வொருவரும் கருத விரும்புகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல.

“காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வது மிகவும் எளிதானது. மிகப் பெரும் செல்வந்தர்களைக் கட்டுப்படுத்துங்கள்; அவர்களது அதிகாரத்தைக் கட்டுப்படுத்துங்கள்; அவர்களது உமிழ்வைக் குறையுங்கள்; அவர்களது செல்வத்துக்கு வரி விதியுங்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *