இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனக் கட்சிகளின் எழுச்சி: நாட்டின் அரசியல் களத்தை மாற்றுமா?

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனக் கட்சிகளின் எழுச்சி: நாட்டின் அரசியல் களத்தை மாற்றுமா?

— ஜூலியன் போர்ஜர்

இஸ்ரேலின் பொதுத் தேர்தலில் பாலஸ்தீனக் கட்சிகள் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வெற்றிகள், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு ஓர் அவசரமானதும் அடிப்படையானதுமான சவாலை ஏற்படுத்தியுள்ளன. அரபு இஸ்ரேலியர்களுடன் இணைந்து செயற்படுவதா அல்லது பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அரசியல் ரீதியாகத் தப்பிப்பிழைப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதா என்ற தீர்மானத்தை அவர்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான காடி ஐசன்கோட், இந்தத் தேர்தல் முடிவுகளை “இஸ்ரேலின் சியோனிச தேசியப் பெரும்பான்மைக்குக் கிடைத்த வெற்றி” என அறிவித்தார். ஆனால், உண்மையான தேர்தல் முடிவுகள் இதைவிட மிகவும் சிக்கலான அரசியல் நிலைமையை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது.

புதிய நாடாளுமன்றத்துக்கும் பழைய நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மிகப்பெரிய மாற்றம், பாலஸ்தீனக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்திருப்பதாகும். இந்தக் கட்சிகள் முன்னர் 10 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் 17 முதல் 18 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் இஸ்ரேலின் அரசியல் களத்தில் மோதல்களுக்கான எல்லைக்கோடுகளை மறுவரையறை செய்கிறது. அரபு இஸ்ரேலியர்களை இனிமேலும் அவ்வளவு எளிதாக ஓரங்கட்டிவிட்டு புறக்கணிக்க முடியாது.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, ஐசன்கோட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியும் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியும் சமநிலையில் உள்ளன. நெதன்யாகுவின் லிகுட் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கக்கூடும் என்றாலும், 120 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான 61 ஆசனங்களை இரு தரப்பினராலும் தனித்துப் பெற முடியவில்லை.

உண்மையான தேர்தல் முடிவுகளும் இதனை உறுதிப்படுத்தினால், யாரை முதலில் அரசாங்கம் அமைக்க முயற்சிக்குமாறு அழைப்பது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்கிற்கு இருக்கும்.

ஒரு வேட்பாளரால் ஆறு வாரங்களுக்குள் அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், அந்த வாய்ப்பு அடுத்த தெரிவுக்குரிய நபருக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை மிக நீண்டகாலம் நீடிக்கக்கூடும். இதற்கிடையில், நெதன்யாகுவின் கூட்டணி இடைக்கால அரசாங்கமாகத் தொடர்ந்து பதவியில் இருக்கும்.

பேச்சுவார்த்தைகள் மூலம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான வாய்ப்பு தனக்கு இருப்பதாக,  ஐசன்கோட் வாதிடலாம். ஆனால், அதற்காக அவரும் அவரது “மாற்றத்துக்கான” கூட்டணிக் கட்சிகளும் பாலஸ்தீன அரசியல் அணிகளான கூட்டுப் பட்டியல் (Joint List) மற்றும் ராம் (Ra’am — ஐக்கிய அரபுப் பட்டியலின் சுருக்கப் பெயர்) ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும்.

இந்த இரு அணிகளில், ராம் கட்சியுடனும் அதன் தலைவரான மன்சூர் அப்பாஸுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கக்கூடும்.

நப்தாலி பென்னட் தலைமையிலான வலதுசாரிச் சார்புடைய அரசாங்கத்தில் அப்பாஸ் ஏற்கெனவே பங்கேற்றுள்ளார். தற்போது பென்னட், ஐசன்கோட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இளநிலைப் பங்காளியாக உள்ளார்.

அப்பாஸின் கட்சியில் யூத சியோனிசப் பின்னணியைக் கொண்ட துணைத் தலைவர் ஒருவர் உள்ளார். அரசியல் சமரசங்களுக்கு இணங்கும் விருப்பத்தையும் அப்பாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், செவ்வாய்க்கிழமை அவர் தனது முன்னுரிமையைத் தெளிவாக அறிவித்தார்:

“இந்தத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு, பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் இதாமர் பென்-க்விர் ஆகியோரைப் பதவியிலிருந்து அகற்றுவதே எனது முன்னுரிமை.”என்று அவர் கூறியுள்ளனர்.

எனினும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான மதிப்பீடுகள், இரண்டு பாலஸ்தீன அரசியல் அணிகளில் ராம் கட்சியே சிறிய அணியாக இருக்கும் எனக் காட்டுகின்றன. புதிய நாடாளுமன்றத்தில் அக்கட்சி ஏழு ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசன்கோட்டின் கூட்டணியில் உள்ள ஏனைய உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ராம் கட்சியுடன் ஓர் உடன்பாடு எட்டப்பட்டாலும், அது மட்டும் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமானதாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

11 அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் கூட்டுப் பட்டியலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இன்னும் கடினமானதாக இருக்கும்.

ஐசன்கோட் நான்கு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்:

  • இஸ்ரேலை யூதர்களின் அரசாகவும் ஜனநாயக அரசாகவும் அங்கீகரிக்க வேண்டும்.
  • இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விழுமியங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்டாய இராணுவச் சேவையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன இஸ்ரேலியக் குடிமக்களும் கட்டாய இராணுவச் சேவையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கண்டிக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது கருத்துத் தெரிவித்த ஹடாஷ் கட்சியின் பொதுச் செயலாளர் அம்ஜத் ஷ்பிதா, கூட்டுப் பட்டியலில் மிகப்பெரிய பிரிவாக விளங்கும் இந்தச் சோசலிசக் கட்சியின் சார்பில், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளை விதிக்கும் நிலையில் ஐசன்கோட் இருக்கமாட்டார் என்று கூறினார்.

“கூட்டுப் பட்டியலுடன் நிபந்தனைகளை விதிப்பது பலனளிக்காது. நாம் சமமான தரப்பினராகப் பேச்சுவார்த்தை நடத்துவோம். ஏனெனில், இரு தரப்பினருக்கும் ஒருவரையொருவர் தேவைப்படுகின்றனர்” என்று ஷ்பிதா தெரிவித்தார்.

பாலஸ்தீன அரசியல் அணிகளில் ஒன்றுடனோ அல்லது இரண்டுடனுமோ உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஐசன்கோட் சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிக்கக்கூடும்.

அவ்வாறான அரசாங்கம், ஒவ்வொரு வாக்கெடுப்பின்போதும் முறைசாராத உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, புதிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் தொடர்ந்து செயற்படுவதற்கு முயற்சிக்கும்.

ஆனால், இது நிலையற்ற தீர்வாக இருக்கும். இதனால், மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

அத்தகைய தேர்தல், பழமைவாத இஸ்ரேலிய யூதர்களிடையே ஆதரவைத் திரட்டுவதற்கும், தனது தேர்தல் முழக்கமான “வலதுசாரிகளா அல்லது பாலஸ்தீனமா?” என்பது சரியானது என வாதிடுவதற்கும் நெதன்யாகுவுக்கு வாய்ப்பளிக்கும். எபிரேய மொழியில் இந்த முழக்கம் ஒத்த ஓசையைக் கொண்டதாக அமைந்துள்ளது.

நெதன்யாகு, கடந்த மூன்று தசாப்தங்களாக இஸ்ரேலிய அரசியலின் உச்சியில் அல்லது அதற்கு அண்மையில் இருந்து வந்துள்ளார். பல சந்தர்ப்பங்களில் அவர் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார் என்று தோன்றியபோதிலும், ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளார்.

அரசியல் உடன்பாடுகளை ஏற்படுத்துவதில் அவருக்கு இருக்கும் இணையற்ற தந்திரோபாயத் திறன்களே இந்த மீட்சிகளுக்கு உதவியுள்ளன.

மீண்டும் ஒருமுறை அவர் வியப்பூட்டும் வகையில் அரசியல் நெருக்கடியிலிருந்து தப்பித்து மீள்வார் என்ற சாத்தியத்தை எவரும் இதுவரை நிராகரிக்கவில்லை.

ஆனால், இந்த முறை அவர் மீண்டும் அரசியல் எழுச்சி பெற்றால், அதற்கான கடப்பாடு அவரது வெளிப்படையான அரசியல் எதிரிகளிடமே இருக்கும். இஸ்ரேலின் ஆழமான இனப் பிளவைக் கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சமரசங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அவருக்கு அரசியல் ரீதியாக உயிர்ப்பிழைப்பதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்கியதாகிவிடும்.

புதன்கிழமை அதிகாலை நாசரேத்தில் நடைபெற்ற கூட்டுப் பட்டியலின் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் அதிகாரி ஒருவர் கூறினார்:

அவர் சொன்னது,“சியோனிச எதிர்க்கட்சிகள் மேலாதிக்கத்தைத் தொடர்வதா அல்லது ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.”

நன்றி: த கார்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *