(‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர் பகிர்வுகள்)
— செங்கதிரோன் —
கிழக்கிலங்கையின் பேர் சொல்லும் மூத்த புலமைத்துவ ஆளுமைகளில் ஒருவரான
வாகரைவாணன் 10.08.2026 அன்று காலை காலமானார் என்று எழுத்தாளரும் இலக்கிய
நண்பருமான டாக்டர்.ஓ.கே.குணநாதன் அனுப்பியிருந்த புலனச் செய்தியால் ஒரு கணம்
உறைந்து போனேன்.
சந்தியாப்பிள்ளை அரியரத்தினம் எனும் இயற்பெயர் கொண்ட வாகரைவாணன் அவர்களை
நான் 1970 இன் நடுப்பகுதிகளிலிருந்தே அறிவேன்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினராகவும் – அக்கட்சியின் தீவிர தொண்டனாகவும் –
செயற்பாட்டாளனாகவும் அரசாங்க சேவையிலிருந்தபோதிலும் அதனைப் பற்றியெல்லாம்
அலட்டிக்கொள்ளாது உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள இருபது வயது இளைஞனாகத்
தமிழர்தம் உரிமைப் போராட்ட அரசியலில் ஈர்ப்புக்கொண்டு நான் இயங்கிக்கொண்டிருந்த
காலம் அது.
‘தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரல்’ என மகுடம் தாங்கி தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தைசெல்வா) அவர்களினால் வெளியிடப்பெற்ற
‘சுதந்திரன்’ பத்திரிகை வாராவாரம் வந்து கொண்டிருந்தது. அதில் மட்டக்களப்பிலிருந்து
கவிஞர் காசிஆனந்தன் மற்றும் வந்தாறுமூலையைச் சேர்ந்த சோமலிங்கம், சந்திவெளியைச்
சேர்ந்த ‘சந்தியூரான்’ கிருஸ்ணபிள்ளை, திருகோணமலை மாவட்டம் ஈச்சந்தீவிலிருந்து
‘தாமரைத்தீவான்’ எனப் புனைபெயர் தாங்கிய இராசேந்திரம் மற்றும் ‘திருகோணமலைக்
கவிராயர்’ தா.சி.வில்வராஜன் போன்றவர்களுடன் வாகரைவாணனும் இணைந்து
ஆளுக்காள் சளைக்காமல் தமிழுணர்ச்சிக் கவிதைகளைச் சுதந்திரனில் விதைத்துக்
கொண்டிருந்தார்கள். காசி ஆனந்தனின் ‘தமிழன் கனவு’ குறுங்காப்பிய நூலைப் படித்து
ஏற்பட்ட அகத்தூண்டலினால் நானும் அவ்வப்போது சுதந்திரனில் தமிழுணர்ச்சிக் கவிதைகள்
படைத்துக்கொண்டிருந்தேன். சமகாலத்தில் வந்தாறுமூலையிலிருந்த இன்னொரு தமிழரசு
இளைஞனான கி. துரைராசசிங்கம் ‘அண்ணதாசன்’ எனும் பெயரில் கவிதைகள்
எழுதிக்கொண்டிருந்தார். கோவை மகேசன் சுதந்திரன் ஆசிரியராகவிருந்தார். பின்னாளில், 1977 – 1980 காலப்பகுதியில் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் துணை ஆசிரியராக
வாகரைவாணன் செயற்பட்டார். ‘சுதந்திரன்’ நின்றுபோய் ‘உதயசூரியன்;’ அந்நாள் தமிழர்
விடுதலைக்கூட்டணியின் கட்சிப் பத்திரிகையாக வெளிவரத்தொடங்கியதும் 1981 இலிருந்து 1982 வரை அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தார். இல. 10, பண்டாரநாயக்கா மாவத்தை,
கொழும்பு – 10 இல் அமைந்திருந்த சுதந்திரன் அச்சகத்திலிருந்து வெளிவந்த ‘சுடர்’ சஞ்சிகையிலும் அவர் எழுதினார். ‘சுடர்’ சஞ்சிகையிலேயே கவிஞர் காசி ஆனந்தனின் ஆரம்பகால ‘நறுக்குகள;’ ‘தெருப்புலவர் சுவர்க்கவிகள்’ எனும் தலைப்பிட்டு வெளிவந்தன.
கவிஞர் காசி ஆனந்தனினதும் வாகரைவாணனினதும் ஆக்கங்களுக்காகச் ‘சுதந்திரன்’
பத்திரிகையையும் ‘சுடர்’ சஞ்சிகையையும் தேடித்தேடிப் பணம் கொடுத்துவாங்கி
விழுந்துவிழுந்து வாசித்து அனுபவப்பட்ட அந்த நாட்கள் மறக்கமுடியாதவை.
வாகரைவாணனின் புலமைத்துவம் கவிதையோடு நின்றுவிடாமல் நாடகம் – ஆய்வு-காவியம் – சிறுவர் இலக்கியம் – சிறுகதை – நாவல் – மொழிபெயர்ப்பு – இதழியல் என விரிந்து புகழ் படைத்தது.
1930 – 1957 காலப்பகுதியில் மட்டக்களப்பு வாகரை – பணிச்சங்கேணிப் பகுதியில் பொலிஸ் விதானையாகக் கடமையாற்றிய பேதுருப்பிள்ளை சந்தியாப்பிள்ளை – சந்தனம்
சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு 22.12.1941 அன்று ஐந்தாவது மகனாக வாகரைவாணன்
(சந்தியாப்பிள்ளை அரியரத்தினம்) வாகரையில் அவதரித்தார். நான்கு மூத்த
சகோதரர்களும் ஒரு தங்கையும் இவரது உடன் பிறப்புக்கள். உடன் பிறப்புக்களில் ஆக
மூத்த சகோதரர் நவரத்தினம் (செபநாயகம் – 98) உம் தங்கை மனோரஞ்சிதமுமே (80)
உயிரோடுள்ளனர். இவரது தந்தைவழிப் பூட்டனான அந்தோனிப்பிள்ளை வடமாகாணம் வல்வெட்டித்துறையைச்
சேர்ந்தவரென அறியக்கிடக்கிறது. அவர் 1870களில் கிழக்கு மாகாணம் வந்து கிழக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்களிலொன்றான முத்துக்கல் (தற்போது பொலனறுவை
மாவட்டத்தின் கீழுள்ளது) எனும் இடத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து வாகரையில் குடியமர்கிறார். வாகரைக் கிராமத்தை உருவாக்கிய சிற்பி இவரேயெனக் கூறப்படுகிறது.
அந்தோனிப்பிள்ளை – பேதுருப்பிள்ளை – சந்தியாப்பிள்ளை – அரியரத்தினம்
(வாகரைவாணன்)
இவரது தாய்வழிப்பாட்டன் க.செ.கணபதிப்பிள்ளை 1930 இற்கு முன்பு பனிச்சங்கேணிப்
பாடசாலையின் முதல் ஆசிரியராக இருந்துள்ளார்.
தந்தைவழிப் பாட்டன் பேதுருப்பிள்ளை வாகரையில் பொலிஸ்விதானையாகவும் (1907 -1930) பின்னர் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) உடையாராகவும் (1930 –
1949) இருந்துள்ளார்.
வாகரைவாணன் தனது ஆரம்பக்கல்வியை வாகரை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும்
இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் உயர்கல்வியை
மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுப் பின் 1968 இல் இந்தியா சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் (பச்சையப்பன் கல்லூரியில்) வெளிவாரி மாணவனாகப்
பயின்று தமிழ்மொழியில் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம் –
லத்தீன் – சமஸ்கிருத மொழிகளிலும் பரிச்சயமுடையவராகத் திகழ்ந்தார்.
1970 இல் நாடு திரும்பி மீண்டும் இந்தியா சென்று 1974 இல் மீண்டும் வந்து
வாகரையிலேயே வசித்து 1981 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர்
அ.அமிர்தலிங்கத்தின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணம் சென்று ‘உதயசூரியன்’ பத்திரிகை
ஆசிரியராகப் பொறுப்பேற்று அது நின்றுபோக 1983 இல் யாழ் புனித பத்திரிசியார்
கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்று 1997 இல் ஓய்வுபெற்றபின் மட்டக்களப்பு திரும்பி நாவற்குடாவில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார். இவரது மனைவி மகேஸ்வரி யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். தனது தாம்பத்திய வாழ்வில் நான்கு
பெண்குழந்தைகளுக்குத் தந்தையாகி மூத்த பெண்குழந்தை ஆரணி 9வது வயதில் மரணித்துப்போகத் தனது இல்லத்திற்கு ‘ஆரணியகம்’ எனும் பெயர்சூட்டி வாழ்ந்தார்.
இவரது எழுத்துப்பணி 1956 இல் ஆரம்பமானது. இவர் எழுதிய முதல் நூலான ‘சுட்டபொன்’ இவரைச் சென்னைக்கு கல்விகற்க அனுப்பிய இக்னேஷியஸ் கிளெனி யோ.ச.ஆண்டகை
பற்றியதாகும். ‘சுதந்திரன்’ மற்றும் ‘சத்தியவேத காவலன்’ ஆகிய பத்திரிகைகளில்
கட்டுரைகள் எழுதினார். 1961/62 காலப்பகுதியில் கல்வி கற்கும்போது மட்/சிவானந்த
வித்தியாலய ‘அருவி’ யெனும் கையெழுத்துப் பிரதிக்கு இணை ஆசிரியராகவும், 1968 இல்
‘அன்னையின் குரல்’ ஆசிரியராகவும், 1977 – 1980 காலப்பகுதியில் ‘சுதந்திரன்’ துணை ஆசிரியராகவும், 1981 – 1982 இல் ‘உதயசூரியன்’ ஆசிரியராகவும், 1998 இலிருந்து 2008
வரை மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ‘போது’ சஞ்சிகையின் ஆசிரியராகவும் இவரது இதழியல் பணிகளும் அனுபவங்களும் மிக விரிந்தவை. திருகோணமலை – மட்டக்களப்பு மறை மாவட்ட சமூகத்தொடர்பு நிலையத்தின் வெளியீடான ‘தொண்டன்’ சஞ்சிகையிலும்
இவரது ஆக்கங்கள் களம் கண்டன.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் (1982 – 1996) ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கல்லூரியின் ‘PATRICIAN’ எனும் தமிழ் – ஆங்கில சஞ்சிகை ஆசிரியராகவும்
மிளிர்ந்துள்ளார். அக்காலப் பகுதியிலேயே 1986 இல் இவரது முதல் ஆங்கில நூலான
‘Culture and Civilization எனும் நூல் வெளியிடப்பெற்றது.
‘அருளாளர் அந்தோனியார்’ கவிதை நூலுக்கு 1994 இல் யாழ் இலக்கியப் பேரவையின்
விருதும் -‘பாலர் தமிழ்ப்பாட்டு’ சிறுவர் இலக்கியத்திற்கு அதே ஆண்டில் யாழ் கலை
இலக்கியப் பேரவையின் விருதும் -‘சின்னச்சின்னப்பூக்கள்’ எனும் சிறுவர் இலக்கியத்திற்கு
1998 இல் இலங்கை அரசின் இலக்கிய விருதும் –
‘கிழக்கிலங்கைத் தமிழகம்’ எனும் வரலாற்று நூலுக்கு 2013 இல் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் விருதும் பெற்றார்.
இவற்றிற்கும் மேலதிகமாக இலங்கை அரசின் ‘கலாபூஷணம் விருது’ (2010) – கிழக்கு மாகாண ‘முதலமைச்சர் விருது’ (2010) – கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால்
தமிழ்ப்பணிக்காக வழங்கப்பெற்ற ‘தமிழ் நீதி விருது’ (2014) –
‘தொண்டன் சஞ்சீவி விருது’
– மட்டக்களப்பு மாவட்ட கலைஞர் கௌரவம் – மூத்த எழுத்தாளர் கௌரவம் எனப்
பலதரப்பட்ட கௌரவங்களுக்குள்ளானவர்.
நோய்வாய்ப்பட்டு முடங்கும்வரை கவிதை – ஆய்வு – சிறுவர் இலக்கியம் – காவியம் – சிறுகதை – நாவல் – மொழிபெயர்ப்பு என நாற்பத்தியிரண்டு (42) நூல்களை எழுதி
வெளியிட்டுள்ளார். எழுத்துப்பணியில் எழுபது வருடங்கள் இருந்துள்ளார். இதுவும் ஒரு
சாதனைதான்.
வாகரைவாணன் அவர்கள் நாடகச் செயற்பாடுகளிலும் நாட்டம் கொண்டு இயங்கியவர்.
1990 இன் நடுப்பகுதியில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து மணிராசன், மணியம்மை தலைமையில் மட்டக்களப்புக்கு வருகை தந்த நாடகக் குழுவினர் வாகரை றோமன் கத்தோலிக்கத் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் கொட்டகை அமைத்து ‘சத்தியவான்
சாவித்திரி’, ‘நல்லதங்காள்’ ஆகிய இசை நாடகங்களை நடாத்தினர். இவர்கள் தமிழ்நாடு
திரும்பியபின் வாகரை வாணன் அவர்கள் தனது சிறிய தந்தையாரான அன்னத்துரை
என்பவரின் தலைமையில் ஏனைய நாடக ஆர்வலர்களையும் இணைத்துக்கொண்டு
ஒவ்வோர் ஆண்டும் நத்தார் திருநாளை முதன்மைப்படுத்தி நாடகங்களை அரங்கேற்றுவதில்
பங்களித்தார்.
நாடக எழுத்தாளராகவும் தன்னை வெளிப்படுத்திய வாகரைவாணன் ‘சாஸ்திரமும்
சமூகமும்’-,
‘பவளநாடு காத்த பாலகன்’-
‘கைதி’-
‘வெற்றித்திருமகன;’,
‘கல்லறை திறந்தது’
-‘அக்கினிப் பரீட்சை’,
‘புதுவையில் ஒரு பூங்குயில்’ ஆகிய நாடகங்களையும்
மட்டக்களப்பில் 1968 இல் வீரமாமுனிவர் முத்தமிழ் மன்றத்தை உருவாக்கி ‘துரோணர் சபதம்’
-‘புலத்திநகரப் புரவலன்’,
‘பங்குனி 15’ (Ides of march) –
‘போராட்டம்’
-‘புரட்சித்துறவி’,
‘கவிஞனின் காதலி’,
‘போரா? சமாதானமா?’, ‘கவிச்சக்கரவர்த்தி கம்பன்’, ‘கொற்றமும் சுற்றமும்’,
‘போர்ப்புயல்’,’நீதி’,’நல்லவன்’,
‘நம்பினார் கெடுவதில்லை’,
‘கடவுள் ஒரு கைதி’,’மகாகவி பாரதி’,’இயேசு ராத்திரி’ ஆகிய நாடகங்களையும்
1975 இல் இந்தியாவின் பெங்களுர் குருமட மாணவர்களால் நடிக்கப்பெற்ற ‘ஒரு பூ மலர்கிறது’ எனும் நாடகத்தையும் எழுதியது மட்டுமல்ல அவற்றில் பலவற்றை நெறியாள்கை செய்துமுள்ளார்.
உலக நண்பர்கள் அமைப்பின் இசையோடு மட்டக்களப்பு ‘கதிரவன் கலைக்கழகம்’ தனது
40 ஆவது ஆண்டு நிறைவில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில்
02.04.2016 அன்று நடாத்திய வாகரைவாணன் அவர்களது ‘மட்டக்களப்பு காவியம்’ நூல்
வெளியீட்டில் நூல் நுகர்தல் உரையாற்றும் வாய்ப்பினை வாகரைவாணன்
எனக்களித்திருந்தார். பண்டைய மட்டக்களப்புத் தமிழகத்தை ஆட்சிசெய்த அரசியார்
உலகநாச்சியின் கதையை அல்லது கதைப்பகுதியை வாகரைவாணன் இந்நூலினூடாகக்
காவியமாக்கிக் கையளித்துள்ளார்.
வாகரைவாணனுடனான எனது உறவும் – ஊடாட்டமும் உன்னதமானவை.
நேரடியாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும்கூட தமிழ்மக்களின் உரிமைப்போராட்ட
அரசியலில் அவர் மிகவும் ஆழமான அக்கறையுடன் செயற்பட்டார்.
வாரைவாணன் அவர்கள் தனது கலை, இலக்கிய, அரசியல் நிலைப்பாடுகளில் மிகவும்
இறுக்கமானவராகவும், பிடிவாதமாகவும், நெகிழ்ச்சியில்லாதவராகவும் இருந்ததால் எவருடனும் ஒத்துப்போகமுடியாத ஒரு ‘ஒற்றைப்போக்குடன்’ வாழ்ந்தார். இதனால் தன்னைத்
தானே ஓரம் கட்டிக்கொண்டு ஒதுங்கி வாழ்தல் அவரது இயல்பாயிற்று. அதனால் கலை
இலக்கிய உலகம் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை முறையாகக் கண்டுகொள்ளவில்லை
யென்பது துரதிஷ்டமானது. மகாகவி பாரதிக்கும் இதுதான் நடந்தது. பாரதியின் மரணச்
சடங்கில் ஆக பதின்மூன்று பேர்தான் கலந்து கொண்டதாகக் கதையுண்டு. ஆனால் இன்று
பாரதி உலகளாவியரீதியில் நினைவு கூரப்பெறுகின்றான். அதுபோலவே வாகரைவாணன்
இட்டுச் சென்றுள்ள இடைவெளி அன்னாரது மரணத்தின் பின்பே உணரப்படுகின்றது.
அன்னாரின் மறைவு மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாகவும் கிழக்கிலங்கையில்
பொதுவாகவும் ஒரு புலமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்று அவரது
மரணத்தின் பின்பு வெகுவாக உணரப்படுகிறது.
(பகிர்வு – 16)
