மாகாண சபைத் தேர்தலும் முதலமைச்சர் கனவுகளும்

மாகாண சபைத் தேர்தலும் முதலமைச்சர் கனவுகளும்

— கருணாகரன் —

இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்குமா? இல்லையா என்று யாருக்குமே இன்னும் சரியாகத் தெரியாது. ஜனாதிபதிக்கும் தெரியாது. தேர்தல் திணைக்களத்துக்கும் தெரியாது. மக்களுக்கும் தெரியாது. புத்த பிக்குகளுக்கும் தெரியாது. ஏன் கடவுளுக்கும் தெரியாது.

ஆட்சிக்கு வர முன்பு தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிவிப்பில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றே சொல்லப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகும் தேசிய மக்கள் முன்னணி ஆட்சியாளர்கள் மாகாணசபைகளுக்கான தேர்தலைப் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால், ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரிப் பேசி வருகிறார்கள். இதுதான் குழப்பத்திற்குரியது.. இதைத் திட்டமிட்டே செய்கிறார்களா அல்லது அரசாங்கத்தரப்பிலிருந்து அவரவருக்குத் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும் NPP அரசாங்கத்துக்கு இதொரு அழுத்தமாகவே உள்ளது.

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆட்சியில் இல்லாத அனைத்துக் கட்சிகளும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஒருகாலம் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் – நடத்த விரும்பாமல் தவிர்த்து வந்த கட்சிகள் கூட இப்போது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கோருகின்றன. காலத்தின் விசித்திரம் அப்படி. தமிழ்த்தரப்பில் மாகாணசபைகளைப் பற்றி அதிகம் அக்கறைப்படாத ஒரு கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) மட்டுமே. ஆனால், அவர்களும் மாகாணசபைகளுக்கான தேர்தல் என்று வந்தால் போட்டியிடுவார்கள்.

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் சுயாதீனத்தைக் கோரும் ‘கபே’ அமைப்பும் கேட்டுள்ளது. “இது மக்களுடைய ஜனநாயக அடிப்படைகளில் ஒன்று. அதை அரசாங்கம் மறுதலிக்க முடியாது” என ‘கபே’ கூறுகிறது. “மக்களுடைய ஜனநாயக உரிமைகளும் விருப்பங்களும் மதிக்கப்பட வேண்டும். ஆகவே மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்“ என இந்தியா தொடக்கம் மேற்குலக நாடுகள் வரையில் பல தரப்பும் வலியுறுத்துகின்றன.

கடந்த வாரம் கூட இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மாகாணசபைகளுக்கான தேர்தலைக் காலம் தாழ்த்தாமல்  இலங்கை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் சிலவேளை இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம். உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, ஆட்டைக் கொண்டு வருவதற்கு முன்பே இறைச்சியை ருசி பார்க்கிறமாதிரிச் சில காரியங்கள் நடக்கின்றன. மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே நான்கைந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் களமிறங்கத் தயாராகி விட்டனர். அல்லது களமிறக்கப்படுவதற்குத் தயார்ப்படுத்தப்படுகின்றனர். இதைப்பற்றிய அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களைக் கடந்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பகிரங்கமாக வரத் தொடங்கி விட்டன.

இவ்வாறு பிரகடனப்படுத்தப்படும் வேட்பாளர்கள் யாரென்றால், பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இராமநாதன் அருச்சுனா, சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன், றீச்சா ReeChaa)  பாஸ்கரன் என இந்தப் பட்டியல் உள்ளது. இதில் சிறிதரனும் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தக் கட்சியே தமது தரப்பிலிருந்து யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவெடுக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் தமிழரசுக் கட்சிக்குள்ளிருக்கும் தலைமைத்துவப் போட்டியினால் இரண்டு அணிகளும் தத்தம் தெரிவுகளை முன்வைத்து இந்தப் Promotion ஐச் செய்கின்றன.

ஏனையோருக்கு கட்சிகளே இல்லை. முதலமைச்சர் வேட்பாளர் என்பது ஜனாதிபதி வேட்பாளர் இல்லை. தனியொருவருக்கு விழுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்வாகுவதற்கு. இந்த அடிப்படைப் புரிதலே பலரிடத்திலும் இல்லை. இந்த நிலையில்தான் இந்தக் கோமாளித்தனங்கள் எல்லாம் நடக்கின்றன.  

என்பதால் இதோடு இந்தப் பட்டியல் நின்று விடாமல், மேலும் நீள்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு தமிழ்ச் சமூக வலைத்தள வெளியில்  கழுவி ஊற்றுதல், காய்தல், எதிர்த்தல், கண்டித்தல், ஆதரவு தெரிவித்தல் என எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. முன்மொழியப்பட்டவர்களின் யார் தகுதிக்குரியவர்? மக்கள் மீதான கரிசனையும் அரசியல் திறனும் மக்களுக்கான அரசியல், சமூகப் பணிகளை ஆற்றிய பின்புலமும் யாரிடம் உள்ளது? என்ற எந்த ஆய்வும் இல்லாமலே கட்சி கட்டுதல் நடந்தேறுகிறது.  

இப்படித்தான் கோமாளித்தனங்களில் தமிழ்ச் சமூகம் தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் எப்படியெல்லாம் வீணடித்துக் கொண்டிருக்கிறது! முப்பது ஆண்டுக்கு மேலாகப் பெரும் போராட்டமொன்றை நடத்திய சமூகமா இது என்ற கேள்வி எழுகிறது.

புகலிட தேசங்களில் உள்ள புலம்பெயர் மக்கள் இந்தப் பந்தயத்தைக் கையில் எடுத்து நடத்துவதற்குத் தயாராகி விட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி இளஞ்செழியன் லண்டனுக்குச் சென்றபோது, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிலும் அப்போது பேசப்பட்ட விடயங்களிலும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டும் என்ற கதைகள் பரலாக்கப்பட்டன. இளஞ்செழியனுக்கு மட்டுமல்ல, அருச்சுனாவுக்கு, சுமந்திரனுக்கு, சிறிதரனுக்கு, றீச்சா பாஸ்கரனுக்கு என ஒவ்வொருவருக்கும் புகலிட நாடுகளில் காசு கட்டுகின்றவர்கள் உள்ளனர். ஆகவே இங்கே தாயக மண்ணில் இருப்போரை விடவும்  புலம்பெயர் மக்களில் ஒருசாரார்தான் முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில்  மும்முரமாக நிற்கிறார்கள். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வேட்பாளர்களையும் பந்தயக் குதிரையாக்குகின்றனர். இது ஒரு பொழுதுபோக்காகி விட்டது.  அந்தளவுக்கு ஈழத்தமிழரின் அரசியல் கீழிறங்கி விட்டது.

இதிலே துயரமும் வேடிக்கையும் வெட்கமும் என்னவென்றால், மாகாணசபைகளுக்கான தேர்தல் என்பது, இலங்கையில் உள்ள ஒன்பது மாகாண சபைகளுக்குமானது. ஆக ஒன்பது முதலமைச்சர்களைத் தேர்வு செய்வதற்குரியது. அதில் ஒன்று கிழக்கு மாகாணசபைக்கும் உரியது.   இவர்கள் பேசிக் கொண்டிருப்பதோ வடக்கு மாகாணசபைக்கு மட்டுமான முதலமைச்சர் வேட்பாளரைப் பற்றியும் அதற்கான தெரிவைப்பற்றியுமே. இதுவரையில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே. என்றால் இவர்களுடைய சிந்தனை எப்படி உள்ளது? இது வழமையைப்போல யாழ்ப்பாணத்துக்குள் குதிரை ஓட்டுவதுதானே!

“வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், வடக்குக் கிழக்கு இணைப்பைப் பிரிக்கவே முடியாது. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகத்தின் உயிர்நாடி…” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையா? அல்லது இதெல்லாம் பழைய கரடி விடுகிற கதைதானா?

இந்த மாதிரியான குறுகிய, தவறான செயற்பாடுகள், சிந்தனைகளால்தான் “கிழக்கு வேறு. வடக்கு வேறு“ என்ற எண்ணமும் நிலைப்பாடும் கிழக்கில் உள்ள ஒரு சாராரிடம் எழுந்து வலுப்பெற்றது. அதாவது, அதொரு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நியாயம் என. அந்த எண்ணமும் நிலைப்பாடும் சரியானதுதான் என ஏனையோரையும் அந்தப் பக்கமாகத் திரள்வதற்குத் தூண்டும் செயல்களே இவையாகும்.

இந்தத் தவறுகளைச் சீர்ப்படுத்திக் கொள்ளாமல், “கிழக்குப் பிரிவினை, பிரதேசவாதத்தைத் தூண்டுதல்“ என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. உண்மையில் பிரிவினையும் பிரதேச வாதமும் எங்கே இருந்து உருவாகிறது? நிச்சயமாக அது வடக்கில் இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால், பழி மட்டும் எப்போதும் கிழக்கின் தலையில் கட்டப்படுகிறது.

இந்த இடத்தில் இந்தத் தவறைக்குறித்துப் பேச வேண்டியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் சிவில் சமூகத்தினரும் வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டோரும் யாழ்ப்பாணத்து ஊடகங்களுமாகும். அத்துடன், பல்கலைக்கழக சமூகத்தினர் தொடக்கம் தமிழ்த்தேசியவாதத் தரப்பினர் அனைவருமாகும். இவர்கள் எல்லோரும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திச் சிந்தித்து வந்திருக்கிறார்கள். ஆனால், கிழக்கை ஆழ்மனதில் – சமனிலையில் – கொண்டிருக்கத் தவறி விடுகிறார்கள்.  “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை“ என்று கலர் புல்லாக  நிகழ்ச்சிகளை நடத்துவது முக்கியமில்லை. பொத்துவிலையும் பொலிகண்டியையும் உணர்வினாலும் நீதியான அணுகுமுறையினாலும் சமத்துவ நோக்கினாலும் இணைத்துக் கொள்வதே முக்கியமானது.

இல்லையென்றால் இப்போது சொல்லுங்கள், வடக்கு மாகாண சபைக்கு பல முதலமைச்சர் வேட்பாளர்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்களே! கிழக்குக்கு ஒரேயொரு பெயரைக் கூடச் சிந்தித்திருக்கிறீர்களா? அப்படிச் சிந்திக்க முடியாமல் போனது ஏன்?

ஏனென்றால், உள்ளத்தில் உள்ளதே வெளியே வரும். உள்ளத்தில் என்ன இருக்கிறதோ, அதுவே வெளியே வந்திருக்கிறது; வந்து கொண்டிருக்கிறது. உள்ளம் திருந்தாத வரையில் உலகம் திருந்தாது என்று தெரியாமலா சொன்னார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால், இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னொன்றும் உள்ளது. இந்த மாதிரியான குறுகிய சிந்தனையும் பொருந்தாக் குணங்களும் பிரித்தாள முற்படும் சிங்களத் தரப்புக்கு வாய்ப்பாகி விடும். கிழக்கை தென்னிலங்கை மேலும் தூரப்படுத்துவதற்கு இவை இலகுவாகும்.

ஏற்கனவே குறுகிய சிந்தனையின் அடிப்படையில் நட்புச் சக்திகளையெல்லாம் விரோதமாக்கிய தமிழ்த்தேசியவாத அரசியல் சிங்களத் தரப்பையே பலப்படுத்தியது. அதிலிருந்து எத்தகைய பாடங்களையும் அது இன்னும் படித்துக் கொள்ளவில்லை. வரலாற்றிலிருந்து எதையும் படித்துக் கொள்ளவில்லை என்றால், திரும்பத்திரும்பத் தவறுகளே நடக்கும். அதுவே தமிழ் அரசியலிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து சிங்களச் சமூகம் கைகொட்டித்தான் சிரிக்கும். மாகாண சபையும் முதலமைச்சர் கனவுகளும் என்பதை நினைக்க நமக்கும் சிரித்தான் வருகிறது. கூடவே அடங்க முடியாத கோபமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *