கல்முனை: அரசாங்கமும்  ஆறுகட்சி கூட்டும்…!(மூன்றாவது கண்:XXIX)

கல்முனை: அரசாங்கமும்  ஆறுகட்சி கூட்டும்…!(மூன்றாவது கண்:XXIX)

— அழகு குணசீலன் —

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை விவகாரம் கொதி நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட  என்.பி.பி.அரசாங்கத்தின் சுகாதார அமைச்சும், கிழக்கு மாகாசபை சுகாதாரத்திணைக்களமும் 

மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வாளாவிருந்து  இரு சமூகங்களையும் சமூக ஊடகங்களில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

 இதற்கிடையில் தமிழ், முஸ்லிம் மக்களின்  பொதுவான பிரச்சினைகளை, கருத்து முரண்பாடுகளை பேசி தீர்க்கவே தமிழ் பேசும் ஆறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று கூறியவர்கள், குறிப்பாக வடக்கு -கிழக்கு தமிழர் அரசியல் கள்ள மௌனம்  காக்கிறது.   சம்பவம் நடந்து பத்து நாட்கள் காலம் கடந்தாவது ஆறில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி  தலைவர் மனோகணேசன் மௌனம் கலைத்தார். அதற்கு பின்னரே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் வாயைத்திறந்திருக்கிறார்.

ஆறு கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டபோது அவர்கள் சொன்னது இதுதான்.

“தங்கள் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பொதுவாக விவாதிக்கவும், கருத்துப் பரிமாற்றம் செய்யவும், ஒருமித்த கருத்தை உருவாக்கவும், வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையகத்தமிழர்கள் மற்றும் இலங்கை முழுவதும் வாழும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் ஒரு தளம்”.

இவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அண்மையில் சந்தித்த போது அவர் என்ன சொன்னார்?

“சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்ற பாகுபாடின்றி இலங்கையர்கள் தங்களுக்குள், சக இலங்கையர்களை கண்டு கொள்ளக் கூடிய ஒரு அடித்தளத்தை அரசாங்கம் அமைத்து வருகிறது”

இந்த இருதரப்பு வார்த்தையாடல்களுக்கு மத்தியில் இன்று கல்முனையில் என்ன நடக்கிறது. 

இந்த விவகாரம் இலங்கையின் அரச நிறுவனங்களில் மீண்டும், மீண்டும் உருவாகும்/உருவாக்கப்படும் பிரச்சினையாக உள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் …… என்று  கட்டாய சீருடை  முன்மொழியப்பட்டுள்ள அரச நிறுவனங்களில் இது தொடர்கிறது.  அதுவும் பெண்களை குறிவைத்து இடம்பெறுகிறது. மகளிர் விவகார அமைச்சு,  அரசாங்கத்தின் மகளிர் பாராளுமன்ற குழு எல்லோரும் வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர். ஒன்று மட்டும் உண்மை யாரும் வாயைத் திறந்து தங்கள் “வாக்கு அரசியலுக்கு” சேதாரம் ஏற்படுத்த விரும்பவில்லை. இதனால் இரு சமூகங்களும் ஆரோக்கியமான கருத்துகளோடு மட்டும் அன்றி அசிங்கமான தனிநபர், சமூக, மத இழிவுபடுத்தல் பதிவுகள் மூலம் சமூக ஊடகங்களில் மோதுகின்றனர்.

உதவித்தாதியர்களின் சீருடை விவகாரத்தை “முள்ளை முள்ளால் எடுக்கவேண்டியது” என்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம். அவர் பேசுகின்ற முள் “சீருடை சுற்றறிக்கை” என்றால் அதை எடுக்க அவரிடம் உள்ள “முள்” எது?  “அரசாங்கத்திடம் விமோசனம் கேட்டால் சுகாதார அமைச்சின் செயலாளர் கடந்த அரசாங்கத்தில் “மையத்து” எரிக்க காரணமாக இருந்தவர்” என்று தனது நம்பிக்கையீனத்தை / இயலாமையை வெளிப்படுத்துகிறார் ஹக்கீம்.

2012 .11.30 ம் திகதியிடப்பட்ட  “சுவசிரிபாய” சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பொது சுற்றறிக்கை கடித இலக்கம்: 02.-176 / 2012 இல் பின்வரும்  முக்கிய தகவல்கள் உள்ளன.

” கொழும்பு மாவட்ட நீதிமன்ற வழக்கு இலக்கம் 5532/SPL வழக்கின் 2009.07.23 திகதிய கட்டளைப்பிரகாரம் உதவியாளர்/, உதவியாளர் பெண் மற்றும் ஆண் வேலையாட்கள் மற்றும் பெண்களுடன் ஆண் வேலையாட்கள் நலவியல் வேலையாட்கள் அடங்கிய கனிஸ்ட உத்தியோகத்தர் குழாத்தின் சீருடை வெள்ளை கவுன், வெள்ளை சொக்ஸ், வெள்ளை சப்பாத்து மற்றும் வெள்ளை சட்டை, வெள்ளை நீளத் காற்சட்டை, கறுப்பு சப்பாத்து கூடாது என்பதுடன், அந்த சீருடை தொகுப்பு அல்லது அதற்கு சமமான வெள்ளை நிறமுடைய ஆடைத்தொகுதி அந்த கனிஸ்ட உத்தியோகத்தர் குழாத்தின் சேவையாளர்களினால் தமது சேவைக்காக அணிவதற்கு மற்றும்/ அல்லது உடுத்துவதற்கு எதுவித உரிமையும் இல்லை.”

” அதன்படி சுகாதார பணி உதவியாளர் கனிஸ்ட, சுகாதார பணி உதவியாளர் சாதாரண மற்றும் கங்காணி பதவிகளின் சீருடை கீழ் குறிப்பிடப்படும் பிரகாரம் என இத்தால் அறியத்தருகிறேன்”.

சுகாதார பணி உதவியாளர் (கனிஸ்ட/சாதாரணம்)- (பெண்).

“கிறீம் நிறம் கவுண், முழங்கால் தலைவரை இருக்குமாறு இருத்தல் வேண்டும். அந்த கவுண்களுக்கு கூரான கொலர் (pointed coller) மற்றும் முன் பக்கத்திற்கு இரண்டு பைகள் (pockets) உடன் இருத்தல் வேண்டும்”. (இணைப்பு 01)

சுகாதார பணி உதவியாளர் (கனிஸ்ட/சாதாரணம்)-(ஆண்)

“டியூனிக் கொலர் மற்றும் பைகள் (pockets) உடன் கூடிய”கிறீம் நிறம்” கட்டை சேட் மற்றும் அதே நிறத்திலான நீள காற்சட்டையுமாகும்.”

 இவ்வாறு சுற்றறிக்கை மிகத் தெளிவாக இருக்கும் போது டாக்டர் சுகுணன் மீது வேண்டும் என்றே இன, மத வாத வீண்பழி சுமத்தப்படுகிறது. சுகுணன் சரியாகவே செயற்பட்டுள்ளார். அவர் விரும்பினாலும் சுற்று நிரூபத்தை மாற்றும் அதிகாரம் அவருக்கு இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் டாக்டர் சுகுணனின் இந்த சரியான தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கல்முனை “நாய்” விவகாரத்துடன் தொடர்புபடுத்தி முடிச்சுப் போடுவது. 

இந்த சுற்றறிக்கை சட்டவாளர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கோ, தமிழரசுக்கட்சிக்கோ அல்லது அவர்களின் ஆறு கட்சி கூட்டுக்கோ தெரியாததல்ல அவர்கள் கண்களை மூடிக்கொண்டு மாகாணசபை முதலமைச்சராக கனவில் திளைக்கிறார்கள்.

அரசாங்கத்தின் இலங்கையர் கொள்கைக்குள் சிறுபான்மை தேசிய இனங்களின் கலாச்சார அடையாளங்கள் பாதுகாக்கப்படவேண்டுமாயின், பன்மைத்துவம் பேணப்பட வேண்டுமாயின் இந்த சுற்றறிக்கையை மிகவும் இலகுவாக நெகிழ்வான வகையில் மாற்ற முடியும்.  

இல்லை;

 இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் அரச நிறுவனங்களில் தொழில்களுக்கு ஏற்ற வகையிலான பொதுவான சீருடைகளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இது சுகாதாரத்துறைக்கு மட்டும் அன்றி ஒட்டு மொத்த கட்டாய சீருடையை வேண்டி நிற்கின்ற துறைகளில் நெகிழ்ச்சித்தன்மை அற்று அறிமுகப்பட வேண்டும்.

இந்த மாற்றங்கள் எவையாயினும் அவை வெறும் சுற்று நிருபங்களுக்கு அப்பால் சட்டமாக வர்தமானியில் வெளியிடப்படவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இவ்வாறான இனங்களுக்கு இடையிலான வீண் பழிகளை தவிர்க்க முடியும். 

இந்த விவகாரத்தில் இரு சமூகங்களையும் பத்துநாட்களுக்கும் மேலாக மோதவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய தேவை அரசியலுக்கு இருக்கலாம், ஆனால் மக்களுக்கு இல்லை. ஆனால் அரசியல் ஆதாயம் என்று வந்தால் எல்லோரதும் சந்திப்பு புள்ளி ஒன்றுதான்.

படங்கள் நன்றி: செய்தியாளர் மப்ரூக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *