— அழகு குணசீலன் —
கிழக்குமாகாணணத்தை தளமாக கொண்டு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதாகவும் “தமிழ்த்தேசிய முன்னணி” என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்கள் பேசுகின்றன. சமையலுக்கு “மசாலா” இல்லாவிட்டால் சமையல் எடுபடாது என்பது போல் “தமிழ்த்தேசியம்” என்ற வார்த்தை இல்லாமல் அரசியல் செய்வதற்கு கிழக்கிலும் முடியாமல் இருப்பது வங்குரோத்து -அரசியல் வறுமை.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் போராளிகள் 700 பேரை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கின் தனித்துவத்தை முதன்மைப்படுத்தி செயற்படப்போவதாகவும், தங்களின் முதல் எதிரி தமிழரசுக்கட்சி என்றும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் அதிலும், 2029 இல் இடம்பெறவுள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவது இலக்கு என்றும் அவர் கூறுகிறார்.
“தமிழரசுக்கட்சி” முதல் எதிரி என்றால் இன்றைய நிலையில் தமிழ்த்தேசிய அரசியலில் அனைத்து விமர்சனங்களுக்கு மத்தியிலும் யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பெருமளவு தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக அந்தஸ்த்தை தமிழரசு தான் பெறுகிறது. அடுத்த மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல்கள் வரை இந்த நிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.
அதற்காக தமிழரசுக்கட்சிக்கு எதிராக ஒரு கட்சி ஆரம்பிக்கப்படக் கூடாது என்பதல்ல. கேள்வி என்னவென்றால் தமிழ்த்தேசியக்கொள்கையை கொண்ட தமிழரசுக்கட்சி முதல் எதிரி என்றால், கொள்கை ரீதியாக தமிழ்த்தேசிய முன்னணி ஏன் தனது பெயரில் தமிழ்த்தேசியத்தை சுமக்கிறது.?
தமிழ்த்தேசிய அரசியல் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் தோல்விகளுக்கு பின்னரும் – போர் முடிவுக்கு பின்னரும் தோல்வியடைந்த அரசியல் ஒன்றை ஏன் சுமக்கிறோம்?
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெயரில் உள்ள “விடுதலைப்புலிகள்” என்ற வார்த்தை குறித்தும் இந்த கேள்வி இன்னும் உள்ளது.
பொதுவாக தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தும் பெயரில் தமிழ்த்தேசியத்தை சுமக்காது விட்டாலும் கொள்கையளவில் தமிழ்த்தேசிய கொள்கையை தேர்தலில் பிரச்சாரம் செய்பவை. ஆனால் அவை தமிழ்த்தேசியம் சார்ந்து செயற்படுகின்றனவா? என்பது வேறு கேள்வி.
அப்படியானால் தமிழரசு மட்டும் எப்படி முதல் எதிரியாக முடியும்? இந்த முதல் எதிரி தேர்வில் உள்ள அரசியல் பின்னணி என்ன?
அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இயங்குகின்ற. ஏனைய கட்சிகள் அல்லது கூட்டமைப்புக்கு வெளியேயுள்ள தமிழ்த்தேசிய கட்சிகள் எதிரி பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதன் மர்மம் என்ன?
ஒரு வகையில் புரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் கிழக்கில் தமிழரசுக்கட்சி வடக்கை விடவும் பலமாக உள்ளது(?). இதனால் அதை முதல் எதிரியாக கொண்டு மக்களை ஜனநாயக அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதாக இருக்க முடியும்.
தமிழ்த்தேசியம் பேசுகின்ற ஒட்டு மொத்த கட்சிகளும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் “பாரம்பரிய தமிழர் தாயகம் ” என்ற நிலைப்பாட்டை கொண்டவை. பல நூற்றாண்டுகளாக தமிழர்களோடு வடக்குகிழக்கில் வாழும் முஸ்லிம்களையோ அல்லது குறைந்தது ஒரு நூற்றாண்டாக குடியேறி/ குடியேற்றப்பட்டு வாழும் சிங்கள மக்களையோ இவர்கள் அப்படி கருதுவதில்லை.
தமிழரசுக்கட்சி உட்பட, தமிழ்த்தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளும் வடக்கு தலைமைகளை கொண்டவை. இந்த நிலையில் புதிய கட்சியாக செயற்படவுள்ள “தமிழ்த்தேசிய முன்னணி”யின் செயற்பாட்டுதளம், தலைமைத்துவம் என்பன கிழக்கு சார்ந்து உள்ளன. அப்படி என்றால் கிழக்கில் புதிதாக செயற்படவுள்ள தமிழ்த்தேசிய முன்னணி தனது பெயரில் கொண்டிருப்பது “கிழக்கு தமிழ்த்தேசியமா”?
அல்லது தமிழ்த்தேசியத்திற்காக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கின் 700 போராளிகளை “தமிழ்த்தேசிய மந்திரத்தால்” கட்டுச்சொல்லி ஆட்டுவிக்கப்போகிறதா?
“ஆயிரம் மலர்கள் மலரட்டுமே….” என்று பாடி விட்டு போவதற்கு கிழக்கு மாகாணத்தின் அரசியல் ஒன்றும் தமிழ்சினிமா அல்ல. வடக்கு தலைமைகளால் உணர்ச்சி அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு, கறிவேப்பிலையாக தூக்கி வீசப்பட்ட ஒரு சமூகத்தின் தனித்துவத்தை சமூக, பொருளாதார, அரசியல் கட்டுமானங்களுக்கு ஊடாக எப்படி தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற எதிர்கால வாழ்வியல் ஜதார்த்தத்தை கொண்டது. இந்த ஜதார்த்தத்தை, நம்பிக்கையை இது வரையான கிழக்கு அரசியலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் மட்டுமே அவர்களுக்கு எதிரான மிகப் பலமானதும், பல பக்க விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஓரளவுக்காவது தக்கவைத்து காட்டியிருக்கிறார்கள்.
கடந்த பதினைந்து ஆண்டுகள் ரி.எம்.வி.பி.யின் மக்கள் அரசியல் இதனை இன்றும் உறுதிப்படுத்தி நிற்கிறது. கருணா அம்மானும், அவரது “தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும்”, அத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தல்களை எதிர்கொண்ட கட்சிகளும், அமைப்புக்களும் தோல்வியடைந்தது வரலாறு. இந்த நிலையில் கிழக்கை முதன்மைப்படுத்தியும், தமிழ்த் தேசியத்தை பெயரில் கொண்டும் ஒரு புதிய கட்சியின் பிறப்பு சுகப்பிரசவமாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.
இனி…..
கிழக்கின் தமிழர் தனித்துவ ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் குறிப்பிட்டுக்கூறக்கூடிய அளவுக்கு இதுவரை ஐந்து கட்சிகளையே இனம் காணக் கூடியதாக உள்ளது.
1. தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி.
2. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி.
3. முற்போக்கு தமிழர் கழகம்.
4. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவான கிழக்கு தமிழர் கூட்டமைப்பு.
5. தமிழர் மகாசபை.
இங்கு பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் மூன்று கட்சிகளும் 2025 மார்ச்மாதம் 15ம்திகதி காலகட்டத்தில் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற பெயரில் செயற்படுவதற்கு இணங்கி செயற்படுகின்றன. ஆரம்பத்தில் காணப்பட்ட உத்வேகத்தை மற்றைய இரு பங்காளிக்கட்சிகளிடம் காணவில்லை என்றாலும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவு என்று கூறப்படுகின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உண்மையில் கிழக்கிற்கான ஒரு கூட்டமைப்பாக இல்லை. வடக்கு தலைமைத்துவத்தை கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பனவற்றின் கூட்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த முன் முயற்சியாக இருப்பினும் இது வெற்றி அளிக்கவில்லை. இது முரண்பட்ட வடக்கு, கிழக்கு சக்திகளின் கூட்டுக்கான முயற்சி என்பதால் எதிர்பார்த்த வெற்றியை தராமைக்கு காரணமாக இருக்கமுடியும். இதனால் தானோ என்னவோ பின்னர் கிழக்கிற்கான தனிக்கட்சியின் அவசியம் பற்றி வரலாற்று ஆதாரங்களை கொண்டு விரிவாக பேசப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதே வேளை இந்த பெயரை இந்த கூட்டமைப்பு பயன்படுத்துவது பற்றியும் , அதற்கான உரிமை குறித்தும் பட்டியலின் 4ம்,5ம் இடத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர் ஏற்கனவே ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தேர்தல் திணைக்களத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரையான தேர்தல் திணக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்று ஒரு கட்சி இல்லை.
விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன, ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை இத்துடன் விட்டு விடுவோம். இந்த சூழலில் தான் இன்னொரு புதிய உதயமாக “தமிழ்த்தேசிய முன்னணி ” பற்றி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
“தற்போது பல்லின மக்கள் வாழும் இந்த மாகாணத்தில் தமிழ் மக்களினுடைய எதிர்காலம், அவர்களின் அரசியல் அதிகாரத்தினை தக்க வைப்பது, கல்வி பொருளாதார சுகாதார உட்கட்டுமான மேம்பாடு, மாகாணசபையின் அதிகாரம் என்பனவற்றை பார்க்கும் போது, நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டுக்கொண்டிருப்பது இந்த மக்களுக்கும், இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.”
“கிழக்கில் பலம் மிக்க அரசியல் சக்தியொன்றை கட்டமைப்பதும், அரசியல் ரீதியாக தமிழர்களை வலுப்படுத்துவதும் தங்கள் நோக்கம்” என்று கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று நன்கு அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் ஆரம்ப ஊடகச்சந்திப்பில் கூறியிருக்கிறார்.
புதிய கட்சியாக செயற்படவுள்ள “தமிழ்த்தேசிய முன்னணி” கிழக்கை தளமாக கொண்டும், கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்தியை நோக்காக கொண்டும், தமிழரசுக்கட்சி கட்சியை முதல் எதிரியாக கணித்தும் செயற்படப்போவதாகவே அறிவித்துள்ளது.
ஆக, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, முற்போக்கு தமிழர் கழகம் என்பனவற்றை உள்ளடக்கிய கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன், தமிழ்த்தேசிய முன்னணி கொள்கை அடிப்படையில் ஒருமித்த பாதையில் பயணிக்கப்போகிறதா….? அல்லது இந்த கூட்டமைப்புக்கு சமாந்தரமாக தனி வழியில் பயணிக்கப்போகிறதா….? என்பதே இன்றுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
அதேவேளை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இந்த கிழக்கு திசையையே காட்டுகிறது. எனவே தமிழ்த்தேசிய முன்னணிக்கு இன்னொரு தெரிவும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஏனெனில் தமிழர் அரசியலின் கடந்த காலம் அகிம்சை, ஆயுதப்போராட்டங்களாலும், அவற்றின் கட்சிகளாலும், ஆயுத போராட்ட அமைப்புக்களாலும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களும், சிறப்பாக கிழக்குமாகாண தமிழ் மக்களும் கற்றுக் கொண்ட கசப்பான அனுபவங்களும், வலிகளும் இந்த ஜதார்த்தத்தை தவிர்த்து ஓட முடியாமல செய்து விட்டன.
இதனால்தான் புதிய வரவை “ஆயிரம் பூக்கள் மலரட்டுமே….” என்று வாழ்த்துவதில் சங்கடமும், சந்தேகமும் உள்ளது.
