மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக உருமாறுதல்

மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக உருமாறுதல்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

கடந்த மாத பிற்பகுதியில் இந்திய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்ததுடன் மாணவர்கள் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கத்தை இணங்க வைத்த புதுடில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை வழிநடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கேயின் வீட்டுக்கு முன்னால் இரு இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள தீப்கேயின் வீட்டில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எதிர்கால திசைமார்க்கம் குறித்து ஆராய்வதற்காக அதன் முக்கிய தலைவர்களைக் கொண்ட குழு புதன்கிழமையில் இருந்து கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்த வேளையிலேயே  இந்த போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் செய்திகள் கூறின. மூன்று மாதங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில்  ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் எதிர்காலம் குறித்து ஆராயும் முக்கியமான கூட்டங்களில் இருந்து அடிமட்டத் தொண்டர்கள் விலக்கி வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர்கள் ‘இன்னொரு கெஜ்ரிவால் எமக்கு வேண்டாம்’ என்று கூறினர்.

குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிய இரு போராட்டக்காரர்களும் கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பங்கேற்றதாகவும் ஆனால், கட்சியின் தந்திரோபாயங்கள் குறித்து ஆராயும் கூட்டத்துக்கு தாங்கள் அழைக்கப்படவில்லை என்றும கூறினர்.  “கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கிளர்ச்சி தொடங்கியபோது அது முகமற்றதாக இருந்தது. வேறு பல தொண்டர்களுடன் சேர்ந்து ஜந்தர் மந்தர் கிளர்ச்சிக்கு பங்களிப்பு செய்திருந்தேன். கட்சியின் முக்கிய குழுவைச் சந்திப்பதற்காக நான் இங்கு வந்தேன். என்னை எவரும் சந்திக்கவில்லை. கூட்டத்திற்கும் நான் அழைக்கப்படக்கூட இல்லை” என்று ஒரு போராட்டக்காரர் கூறினார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்குள் தீர்மானங்கள்  எடுக்கப்படும் முறை குறித்து  கேள்வியெழுப்பிய அவர் “சகோதரர்களும் நண்பர்களும் ஒன்றாகக்  கூடியிருக்கிறார்கள். முழு நாடுமே நடத்திய போராட்டத்துக்கு பிறகு கட்சியின் எதிர்காலப் போக்கு குறித்து அவர்கள்  தீர்மானிக்க முடியாது” என்று கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்குள் பெருளவுக்கு  ஜனநாயக ரீதியான கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்பதும் இயக்கத்துக்காக பாடுபட்டவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு போதியளவு  வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். என்பதுமே இந்த  போராட்டக்காரர்களின் பிரதானமான அக்கறை என்று தெரிகிறது. இந்த உணர்வை இவர்கள் இருவருக்கும் மட்டுப்பட்டதாக கருத முடியாது. 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இப்போதைக்கு அரசியலில் இறங்கப் போவதில்லை என்றும் ஒரு “அழுத்தக் குழு” வாகவே செயற்படும் என்றும்  தீப்கே கட்சியின் எதிர்கால வழிவரைபடம் குறித்து ஆராய்ந்த மையக் குழுவின் கூறியிருக்கிறார் என்ற போதிலும், இன்னொரு கெஜ்ரிவால் வேண்டாம் என்ற சுலோகம் முக்கியமான ஒரு ஜனநாயக விவாதத்துக்கு உரியதாகிறது.

அந்த சுலோகம் வெறுமனே ஒரு தனிநபருக்கு எதிரானதோ அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சியின் உருவாக்கத்துக்கோ எதிரானது அல்ல. அது கடந்த காலத்தில் மாணவர் போராட்ட இயக்கங்களும் வெகுஜன இயக்கங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களை நடத்தி மக்களின் மதிப்பைப் பெற்ற பின்னர் தேர்தல் அரசியல் வலைக்குள் சிக்கி அவற்றின் முதன்மையான இலட்சியத்தை  இழந்த அனுபவங்களின்  அடிப்படையிலான ஆழமான ஒரு எச்சரிக்கை மணியாகும்.

இந்தியாவில் மாணவர் போராட்ட இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல் சம்பவம் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வடகிழக்கு மாநிலமான அசாமில் நடந்தது. அதை அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம் தலைமை தாங்கி நடத்தியது.

மாநிலத்திற்குள் நுழைந்த ‘அந்நியர்களை’ வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த மாணவர் ஒன்றியம் 1979 — 1985 காலப் பகுதியில் அரசாங்கத்துடன் போராடியது. அந்த போராட்டத்துக்கு பொது மக்கள் மத்தியில் அமோகமான  ஆதரவு கிடைத்தது.

மாணவர்  போராட்டத்திற்கு  தலைமை தாங்கிய தலைவர்கள், 1985 ஆம் ஆண்டில்  அசாம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அசாம் கண பரிசத் என்ற  அரசியல் கட்சியைத்  தொடங்கி இறுதியில் அதிகாரக் கட்டிலில் அமர்ந்தனர். மாணவர் ஒன்றியத்தின் தலைவரான பிரபுல்ல குமார் மகந்தா அன்றைய காலத்தில் இந்திய மாநிலம் ஒன்றின் இளவயது முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

மாணவர்களினால் நடத்தப்பட்டு, அரசியலை மாற்றியமைத்த மற்றொரு போராட்டம் 1965 ஆம் ஆண்டில் அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமாகும். அது இறுதியில் சி.என். அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக்கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றவும் மாநிலத்தை ‘தமிழ்நாடு ‘ என்று பெயர் மாற்றம் செய்யவும் வழிவகுத்தது.

இந்தியாவின் ஏனைய பல மாநிலங்களில் நக்சலைட்டுக்களினால் முன்னெடுக்கப்பட்ட  மக்கள் எழுச்சிகளில் மாணவர்கள் பெருமளவில் இணைந்தனர். வசதி படைத்த நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த படித்த மாணவர்கள் கூட நக்சலைட் இயக்கத்தில் சேருவதற்கு உந்துதலைக் கொடுக்கின்ற அளவுக்கு அந்த புரட்சிகர உணர்வு கவர்ச்சியானதாக இருந்தது.

பிரதமர் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்திய அவசரகாலநிலைக்கு எதிராக  தொடங்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கமும் பெருமளவில் மாணவர்களைக் கவர்ந்திழுத்தது. அதில் பங்கேற்ற பலர் பின்னாளில் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளாக வந்தனர்.

அண்மைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிரான போராட்டங்களிலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கான முதல் குரல் கூட ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தான் ஒலித்தது. இவ்வாறாக இந்தியாவில் மாணவர் போராட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

அதேபோன்று  தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களும்  பாரிய  மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாக இந்த கட்சி உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. தங்களால் செய்ய முடியாத, ஆனால் தாங்கள் செய்ய நினைத்த ஒன்றை கரப்பான் பூச்சிகள் என்று தங்களை அழைக்கும் இந்த மாணவர்களும் இளைஞர்களும் செய்வதைக் கண்டு பிரமிக்கும்  மக்கள் அவர்களுக்கு பேராதரவை வழங்குகிறார்கள்.

ஒரு தார்மீக அமைப்பாகவும் அழுத்தக் குழுவாகவும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கும் இயக்கங்கள் திடீரென்று தேர்தல் அரசியல் கட்சிகளாக உருவெடுக்கும்போது அவற்றின் அடிப்படை இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது என்பதற்கு பல்வேறு கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன.

சிவில் சமூக இயக்கங்கள் மக்களின் அன்றாடச் சிக்கல்களையும் அரசு நிருவாகத்தின் சீர்கேடுகளையும் நேரடியாகக் கேள்வி கேட்கும் சுயாதீனமான அதிகாரத்தைக் கொண்டவை. ஆனால், அவை தேர்தல் கட்சிகளாக மாறும்போது வாக்கு வங்கி அரசியல், கூட்டணி உடன்பாடுகள் மற்றும் தேராதல் நிதி திரட்டல் போன்ற சமரசங்களுக்கு ஆளாகின்றன.

2011 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய  ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அண்ணா ஹசாரேயின் இயக்கம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியாக மாறிய வரலாற்றுப் பின்னணியே இந்த மாணவர்களின் அச்சத்துக்கு பிரதான காரணம் என்று தெரிகிறது. அதிகாரம் கைமாறுவதை விடவும் ஆட்சிமுறையில் மாற்றத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளான பின்னர் அவை அமைப்பு ரீதியான சமரசங்களுக்குள் நுழைய நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு நையாண்டி (Satire) இயக்கமாக தொடங்கி, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கல்வித்துறைச் சீர்கேடுகளுக்கு எதிரான வலிமையான அழுத்தக் குழுவாக  உருவெடுத்தது. அது முழுமையான அரசியல் கட்சியாக மாறும்போது அதன் தார்மீக ஆற்றல் மங்கிவிடுமோ என்பதே மாணவர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது போன்று தெரிகிறது.

முன்னைய மக்கள் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறும் போது அவை குறுகிய காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது என்றாலும், நாளடைவில் ஒரு ‘ சுயசார்புகொண்ட தார்மீகக் கண்காணிப்பாளராக ‘ தொடர்ந்து செயற்பட முடிவதில்லை. தேர்தல் அரசியல் இயல்பாகவே சீரழிவைக் கொண்டு வந்துவிடும்.

தேர்தலில் போட்டியிடாமல் நெடுகவும் ஒரு வலுவான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது என்பது சவாலானது என்றாலும், சாத்தியமற்றது என்று கூறிவிடமுடியாது. மக்களின் அமோக ஆதரவைக் கண்டு சபலப்படாதவர்களாக அழுத்தக் குழுக்களின் தலைவர்கள் இருக்க வேண்ட.யது இது விடயத்தில் அவசியம்.

தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்புக்களினால் மாத்திரமே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தயவுதாட்சணியமின்றி மக்கள் பக்கம் நின்று கேள்வி கேட்கமுடியும். அரசியல் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக்கொண்டு செயற்படும்போது அழுத்தக் குழுக்கள் கொள்கை மாற்றங்களையும் நிருவாகச் சீர்திருத்தங்களையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டியவையாகின்றன.

அழுத்தக் குழுவாக இயங்குவதற்கு தலைமைத்துவங்களின் சுயநலமற்ற அர்ப்பணிப்பும் நிதிச் சார்பின்மையும் மக்கள் ஆதரவைத் தக்க வைக்கும் உறுதியான கட்டமைப்பும் தேவை.

அபிஜித் தீப்கே வீட்டின் முன்னால் போராட்டம் நடத்திய மாணவர்கள் எழுப்பிய குரல் இளைஞர்களின் போராட்டக்களம் தேர்தல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையின் விளைவானது என்றே தெரிகிறது.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்களை தொடர்ந்து பொறுப்புக் கூற வைக்கும் கூர்மையான சாட்டையாகச் செயற்படுவதே ஒரு சிவில் சமூக இயக்கத்தின் உண்மையான வலிமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *