— கருணாகரன் —
றீச்சாவினால“ (ReeCha Park & Resort) “அட்சய பாத்திரம்” என்ற தொனிப்பொருளில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த உணவுத் திருவிழாவில் இந்த ஆண்டு ஒரு குழப்பம் அல்லது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளோடு சென்றவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், பணத்தைச் செலவு செய்த உணவுப் பிரியர்கள் அல்லது சுவைப்பிரியர்கள் அல்லது Visitors க்கு உரிய உணவுகள் கிடைக்கவில்லை போன்ற காரணங்கள் ReeCha வையும் அதன் நிர்வாகத்தையும் நோக்கிக் கோபமாகத் திரும்பியுள்ளது. இந்த எரியும் பிரச்சினைக்கு எண்ணெய் வார்ப்பதில் ReeCha உரிமையாளர் IBC கந்தையா பாஸ்கரனின் அரசியல் எதிராளிகளும் உற்சாகமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் இணைந்து சில நாட்களாக ஈழத் தமிழ்ச் சமூக வெளியில் ஒரு சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத்திருவிழாவில் ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம், எதிர்பார்க்கப்பட்டதையும் விட கூட்டம் அதிகமாகியதே. அதாவது ReeCha நிர்வாகம் எதிர்பார்த்ததையும் விட அதிகமானோர் அங்கே திரண்டு விட்டனர். இதை முகாமைத்துவம் செய்யக் கூடிய சூழல் அல்லது உடனடி மாற்று ஏற்பாடுகள் அங்கே இருக்கவில்லை. அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு குறைபாடு, தவறேதான். அதை ReeCha நிர்வாகமும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. பணம் செலுத்தியபின் உணவு கிடைக்காதவர்களுக்கும் ஏனைய வசதிகளைப் பெறாதோருக்கும் அவர்களுடைய பணம் மீள ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனுடைய உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இது குறித்த வீடியோப் பதிவைப் பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் தவறை ஏற்றுக் கொண்ட விதமும் மன்னிப்புத் தெரிவிக்கும் முறைமையும் ஏற்புடையதல்ல என்று மேலும் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த மாதிரி விடயங்களுக்கும் இந்த மாதிரி ஒரு பிரபலமான இடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் விமர்சனங்களும் விவாதங்களும் முடிவற்ற நிலையிலேயே இருக்கும். அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. எல்லோரையும் எந்தப் பதிலினாலும் திருப்திப்படுத்தவும் இயலாது.
கடந்த ஆண்டும் (2025) இதேபோல ReeCha வில் உணவுத்திருவிழா நடந்தது. ஆனால், அது இந்தளவுக்குக் கூட்டத்தைச் சந்திக்கவில்லை. அதனால் எந்தப் பரப்பும் பிணக்கும் இல்லாமல் அமைதியாக – நிறைவாக நடந்து முடிந்தது. அதில் கலந்து கொண்டவர்களுக்கும் திருப்தி. ReeCha நிர்வாகத்துக்கும் நிறைவு.
இந்த ஆண்டு உணவுத் திருவிழாவை ReeCha இன்னும் பெரிதாக ஏற்பாடு செய்தது. இதற்கான விளம்பரங்கள் தொடக்கம், உள்ளரங்க நிகழ்ச்சிகள். உணவு வகைகள் வரையில் எல்லாமே அதிக கூட்டத்தை எதிர்பார்த்தே செய்யப்பட்டன. ஆனாலும் திரண்டிருந்த உணவுப் பிரியர்கள் அல்லது சுவைப்பிரியர்கள் அல்லது Visitors ஐ ReeCha நிர்வாகத்தினால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது. இது துரதிருஸ்டமான நிலையே.
அன்னதான நிகழ்வுகளிலேயே சரியாக உணவைப் பரிமாறவில்லை என்றால், அல்லது உணவு தீர்ந்து விட்டால் அங்கே கூடியிருப்போர் கொந்தளித்து விடுவார்கள். இதுவோ உணவுத் திருவிழாவுக்கெனத் திட்டமிட்டுப் பயணம் செய்து வந்து, முறைப்படி பணம் செலுத்தி, பல எதிர்பார்ப்புகளோடு நுழைவோருக்கு எதிர்மறையான நிலைமை என்றால் சும்மா விட்டுவிடுவார்களா?
இந்தக் கொந்தளிப்பே சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஏனைய (பல) விடயங்களை நாம் பார்க்க வேண்டும். அது அவசியமானது.
அரசியலில், நிர்வாகத்தில், வணிகத்தில், பயணத்தில் – பயண ஏற்பாடுகளில், தொண்டுப்பணிகளில் ஏன் நம்முடைய சொந்த வாழ்க்கையில், உறவில் என எல்லாவற்றிலும் குறைபாடுகளும் தவறுகளும் ஏற்படுவதுண்டு, அவற்றைக் குறித்து அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் குறித்த விடயத்தில் நடந்த தவறுகளை அல்லது குறைபாடுகளை இனங்கண்டு, அவற்றுக்குப் பரிகாரம் காண வேண்டும். முதலில் கண்ணியமான முறையில் மன்னிப்பைக் கோர வேண்டும்.
ReeCha நிர்வாகத்தில் நடந்த முகாமைத்துவக் குறைபாடு நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டியது. அதைக் கவனித்துத் திருத்தும்போதே குறித்த நிறுவனத்தின் வளர்ச்சியும் நற்பெயரும் கெடாதிருக்கும்.
ReeCha வின் 2026 உணவுத் திருவிழாவில் நடந்ததைப்போலொரு நிகழ்வு 1955 ஜூலை 17 இல் California-வின் Anaheim நகரில் உலகப் புகழ்பெற்ற Disneyland கேளிக்கை மற்றும் கருப்பொருள் பூங்கா (Theme Park) வின் திறப்பையொட்டிய நிகழ்விலும் நடந்தது. முதல் நாள் கடுமையான செயல்பாட்டுச் சிக்கல்களை எதிர்கொண்டது. ஜூலை 17 தொடக்க நிகழ்வு (invitation only) நிகழ்வாகத் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பாக அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டும் (invitation-only) என்று திட்டமிட்டிருந்தபோதும் போலியான அழைப்பிதழ்கள் உட்பட பல காரணங்களால் திட்டமிடப்பட்டதைவிட ஆயிரக்கணக்கான அழைக்கப்படாத விருந்தினர்கள் Disneyland க்குள் நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு பல பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. கடும் வெப்பம் நிலவியது. உணவகங்களும் refreshment stands உம் பெரும் கூட்டத்தைச் சமாளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டன. உணவுக்கும் பானங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்படிப் பல பிரச்சினைகள். அப்போது சில கவர்ச்சிகரமான இடங்கள் (attractions) முழுமையாகத் தயாராகாத நிலையிலும் இருந்துள்ளன. இப்படி தொடக்கத்தில் எதிர்நிலை விளைவுகளைச் சந்தித்த Disneyland, இன்று உலகளாவிய அளவில் வளர்ந்து தன்னைப் பல இடங்களிலும் விரிவாக்கியிருக்கிறது. காரணம், நடந்த குறைபாடுகளையும் தவறுகளையும் அது அடுத்த வாரங்கள், மாதங்களில் சரிசெய்து கொண்டது. முக்கியமாக நடந்த operational problems இனங்காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலில் தயாராகாதிருந்த attractions பின்னர் திறக்கப்பட்டன. அடிப்படை வசதிகளும் வருகையாளர் அனுபவமும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன.
Public Relations துறையிலும் முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Opening day பிரச்சினைகளுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை மீண்டும் அழைத்து, Disneyland இயல்பான முறையில் செயல்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் செய்யப்பட்டதனால் Disneyland பல முன்னுதாரணங்களுக்கு வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
பாஸ்கரன், திட்டமிடலிலும் அவற்றைச் செயற்றிறன் ஆக்குவதிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டிய ஒருவர். இதற்கு அவருடைய நிறுவனங்களே சான்று; சாட்சியம்.
ReeCha தொடக்கம் அவரால் நிர்வகிக்கப்படும் இலத்திரனியல் ஊடகங்கள். வரையிலும் வெற்றிகரமானவை. அதிலும் இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha Park & Resort என்பது இலங்கையின் குறிப்பிடத்தக்க இயற்கை விவசாயப் பூங்காவும் கேளிக்கைத் தளமுமாகும். நான் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில், அந்த நிலத்தில், அத்தகைய ஒரு சூழலில் Theme Park (கருப்பொருள் பூங்கா) Amusement Park (பொழுதுபோக்கு பூங்கா) என இரண்டின் கலவையிலுமான ஒரு மையத்தை ஒருவர் உருவாக்கி, வெற்றியடையச் செய்திருப்பது பாராட்டுக்குரியதே.
புலம்பெயர் தமிழர்கள், தென்பகுதி மக்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் செல்லும்போது தங்கிச் செல்லும் ஒரு தவிர்க்க முடியாத ‘சுற்றுலாத் தளமாக ReeCha மாறியுள்ளது.
போருக்குப் பிந்தைய வடபகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தை ஒரு முதன்மைச் சுற்றுலா மையமாக (Tourism Hub) மாற்றுவதில் ReeCha முக்கிய பங்கு வகிக்கிறது. புதிது புதிதாக பல காட்சி மையங்களும் கருப்பொருள்களும் இணைக்கப்படுகின்றன. அங்குள்ள இயற்கை (Organic) விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழல் சுற்றுலாத் தளம் (Eco-tourism project) எனவும் இதைப் பார்க்கலாம்.
அங்குள்ள நூற்றுக்கணக்கான பனை மரங்கள், இயற்கையான ஏனைய மரங்கள் உள்ள பசுமையான சூழலை அடிப்படையாகக் கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இயற்கை வளங்களைச் சேதப்படுத்தாமல், பனை உட்பட அந்தச் சூழலில் உள்ள மரங்களைப் பாதுகாத்து, சூழலுக்கு உகந்த முறையில் ஒரு வணிகத் தளத்தை நடத்த முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது. இதனால் ReeCha இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்ட மக்களில் ஒரு தொகையினருக்கான வேலை வாய்ப்புக்கும் வாய்ப்பளிக்கின்ற ஒரு மையமாகவும் மாறியுள்ளது.
நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள், தங்களின் குடும்பங்களுடன் அமைதியுடனும் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கக்கூடிய நீச்சல்குளம், பூங்கா மற்றும் தங்குமிட வசதிகளை றீச்சா அளிக்கிறது. தொகுத்துச் சொன்னால், றீச்சா பூங்கா என்பது “இயற்கை எழில், பாரம்பரியச் சுவை மற்றும் பிராந்திய அபிவிருத்தி” ஆகிய மூன்றும் இணையும் ஒரு மையமாகும்.
இங்குள்ள உணவகங்கள் மற்றும் உணவுத் திருவிழாக்களுக்குத் தேவையான பால், கடல் உணவுகள், காய்கறிகள் போன்ற மூலப்பொருட்களைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களிடமிருந்தே றீச்சா நிறுவனம் நேரடியாகக் கொள்வனவு செய்கிறது. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வருமானம் உயர்கிறது. இப்பகுதியின் முதன்மை வளங்களான பனை, தென்னை மற்றும் தும்புப் பொருட்களுக்கு இந்த வளாகத்தின் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிலும் இந்த உணவுத் திருவிழாக்கள் போன்றவை வணிக நிகழ்வாக மட்டுமில்லாமல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விழாவாகவே நிகழ்த்தப்படுகிறது. நவீன உணவுகளுக்கு மத்தியில், பாரம்பரியமும் ஆரோக்கியமானதுமான உணவை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது இதில் ஒரு முக்கிய நோக்கமாகும். யாழ்ப்பாணக் கூழ், உள்ளூர் கடல் உணவு வகைகள், பாரம்பரிய தின்பண்டங்கள் என வடபகுதியின் தனித்துவமான சமையல் கலையை புதிய தலைமுறைக்குக் கடத்துவதும் – அல்லது அவர்களிடம் பரப்புவதும் – நிகழ்கிறது. இதையொத்ததாக சிறிய அளவில் கிராம மட்டத்தில் எழுத்தாளரும் களப்பணியாளருமான ‘காவேரிக் கலாமன்ற’ இயக்குநர் சிவஞானம் யோசுவா “சுவை அவை” என்ற இயற்கை உணவு முறையைப் பயிற்றுவித்துப் பரவலாக்கி வருகிறார். ஆனால், அது அவரவர் தங்கள் தங்கள் வீடுகளில் செய்து உண்ணக்கூடியதான ஒரு செயற்பாடாகும்.
இன்றைய சூழலில் ReeCha போன்ற பெருநிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு விடயங்களும் பரவலான வீச்செல்லையில் மக்களிடம் சென்று சேரக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. இன்றைய பொதுசன உளவியல் அப்படித்தான் வடிவம் பெற்றுள்ளது, அல்லது அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. என்தால் ReeCha வில் செய்யப்படும் பாரம்பரிய – மரபு மற்றும் சூழல்சார் உணவு, கலைகள், கைவினை வெளிப்பாடுகள், உள்ளுர் உற்பத்திப் பொருட்கள், பண்ணைத் திட்டம் போன்றவை எல்லாம் இளைய தலைமுறையிடம் ஒரு ஈர்ப்பைக் கொடுக்கக் கூடியது. தாமும் அவற்றில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியன.
புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தங்களின் தாயக மண்ணிற்குத் திரும்பி, எவ்வாறு உருப்படியான மற்றும் நிலையான முதலீடுகளைச் செய்யலாம்? எப்படி வெற்றிகளைப் பெறலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும் (Model Project). இதைப்போல இயக்கச்சியில் இன்னொரு இயற்கைப் பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. ‘இராவணன் வனம்‘ என்ற பேரில் இயங்கும் அந்தப் பூங்காவிலும் ஒரு குறிப்பட்டோருக்கான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அது ஒரு நல்ல தாவரவியல் பூங்காவாக வளர்ந்திருக்கும்.
பல முதலீட்டாளர்கள் இலங்கையில் வந்து என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று தடுமாறுவதையும் அரசாங்கத்தோடு மல்லுக்கட்டுவதையும் கண்டிருக்கிறேன். பாஸ்கரன் இதையெல்லாம் கடந்து நிற்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ReeCha என்பது உணவுத்திருவிழாவில் ஏற்பட்ட சறுக்கல், அல்லது பிரச்சினை என்ற ஒரு சம்பவத்தினால் மட்டும் வைத்து மதிப்பிடக்கூடியதல்ல. அப்படி மதிப்படுவதும் சரியானதல்ல. அதற்கும் அப்பால், அது கொண்டுள்ள முக்கியத்துவம், அதனால் சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் கிடைக்கின்ற பயன்கள் என்ன என்பதையும் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும். அப்படி மதிப்பிடும்போது ReeCha Park & Resort (றீச்சா பூங்கா) என்பது வெறும் ஒரு பொழுதுபோக்குத் தளம் மட்டுமல்லாமல், வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் விவசாய மறுமலர்ச்சியின் மிக முக்கிய அடையாளமாகவும் இருப்பதைக் காணலாம். இதுதான் ReeCha வின் பெறுமதி என எண்ணுகிறேன்.
இதேவேளை கந்தையா பாஸ்கரனுடைய அரசியல் தெரிவுகளிலும் அரசியல் குறித்து அவர் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டிருக்கும் கருத்துகளிலும் பலரைப்போல இந்தக் கட்டுரையாளருக்கு ஏற்பில்லை. மட்டுமல்ல, அவருடைய ஊடக அணுகுமுறைகளும் வெளிப்பாடுகளும் விவாதங்களுக்குரியவை. திருத்தம் செய்யப்பட வேண்டியவை. ஆனால், அது வேறானது மட்டுமல்ல, அரசியல் என்பது அவருடைய தெரிவு, அந்தத் தெரிவுக்குள்ள உரிமை அவருக்குண்டு. என்றாலும் அதனால் தமிழ்ச் சமூகத்துக்கு பாதகமும் பின்னடைவும் ஏற்படுமாக இருந்தால், அதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.
சரிகளையும் பிழைகளையும் சரியாக மதிப்படவும் அளவிடவும் வேண்டும். அதுதான் பெறுமதிகளைப் பற்றிய கரிசனையையும் பெறுமதிகளைச் சேர்க்கக் கூடிய வழிமுறைகளையும் உருவாக்கும். ReeCha விலும் அதை நாம் கைக் கொள்ள வேண்டியது காலப் பணி. சமூகத் தேவை.
