— கருணாகரன் —
கிளிநொச்சியில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் எனக்கு நெருக்கமான நான்கு பேர் வீதி விபத்தில் பலியாகியிருக்கிறார்கள். ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். பெருமாள் கணேசன். மாலையில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு, கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் கடக்கும்போது வேகமாக வந்த உந்துருளியினால் மோதிச் சாவடைந்தார். சம்பவம் நடந்த இடத்தையும் முறையையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். நகரின் மத்தியில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையிலேயே விபத்து நடந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே கணேசனின் உடல் நொருங்கி விட்டது. அந்தளவுக்கு உந்துருளியின் வேகம் இருந்திருக்கிறது.
அடுத்த விபத்து, கிளிநொச்சி – உருத்திரபுரம் வீதியில் நடந்தது. இதுவும் உந்துருளி மோதியதால் ஏற்பட்டது. இதில் 32 வயதுடைய சுகந்தன் கஜிதா மரணமடைந்தார். தன்னுடைய பிள்ளையை பாடசாலையிலிருந்து அழைத்து வருவதற்காக உந்துருளியில் பயணித்த கஜிதாவை, சாகஸக் குழுவாக உந்துருளியில் பயணித்தவர்கள் மோதினார்கள். இந்தச் சாகஸக்குழுவில் எட்டுப்பேர், நான்கு உந்துருளியில் பயணித்ததாக சம்பவம் நடந்தபோது வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சாகஸக் குழுவைச் சேர்ந்தவர் ஒருவர் சில வாரங்களுக்குப் பின்பு, ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது சொல்லியிருக்கிறார், “அன்று நாம் ஒரு அணியாக வீதியில் உந்துருளியை ஓட்டி மகிழ்ந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்தது. ஆனால், பொலிஸ் தரப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து வழக்கின் கணக்கை முடித்துக் கொண்டோம்” என்று.
அடுத்த விபத்து, இயக்கச்சிச் சந்திக்கு அண்மையில் நடந்தது. இதில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சிறுமியை ‘பட்டா’ என்று அழைக்கப்படும் சிறிய ரக பாரஊர்தியே மோதியிருக்கிறது. இந்த விபத்து நடந்து இரண்டு வாரங்கள் ஆகவில்லை. அதற்கிடையில் அதே இடத்தில் 49 வயதுடைய சந்திரன் சசிகலா என்ற பெண்ணை, HIACE ரக பயணிகள் ஊர்தி ஒன்று மோதிக் கொன்றுள்ளது. மறுநாள் அதே இடத்தில் இரண்டு படையினர் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதே இடத்தில் மூன்று இளைஞர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை டிப்பர் வாகனம் மோதி மூவருமே உயிரிழந்தனர். இதைப்போல பல விபத்துகள் கிளிநொச்சியிலும் அதற்கப்பால் இலங்கையின் பல இடங்களிலும் தினமும் நடக்கின்றன. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது புளியங்குளம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தோடு, Coolar வண்டியொன்று மோதி, அதில் பயணித்த உதவியாளர் மரணமடைந்துள்ளார்.
இப்படி ‘நாளொன்றுக்கு 7 – 8 பேர் வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 2500 – 3000பேர் வரையில் இலங்கையில் பலியாகின்றனர். 2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் சுமார் 1,18,697 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 12,322 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ‘இலங்கையின் சனத்தொகை விகிதாசாரத்திற்கும் இலங்கையின் புவியமைப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் இது அதிகப்படியானது’ எனச் சர்வதேச விபத்துக் கண்காணிப்புத் தரப்பினர் கருத்துக் கூறுகிறார்கள்.
விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 70%க்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் போன்றோரே. விபத்துகளில் அதிகம் உட்படும் வாகனங்களாக மோட்டார் சைக்கிள்கள் (சுமார் 35%), முச்சக்கர வண்டிகள், டிப்பர் எனப்படும் பாரவூர்தி, பேருந்துகள், பயணிகளை ஏற்றும் Hiace போன்றவை அவதானிக்கப்பட்டுள்ளது. இன்னொன்று, தொடருந்துக் கடவைகளில் நடக்கும் விபத்துகள்.
இந்த விபத்துகள் எல்லாமே வெறும் புள்ளிவிவரங்களாக மட்டும் மாறிக் கொண்டிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. யுத்தத்தின்போதும் இப்படித்தான் நடந்தது. அப்பொழுது யுத்த களத்தில் நடக்கின்ற எந்த மரணத்துக்கும் மதிப்பில்லை. எல்லாமே புள்ளிவிவரங்களாகி விட்டது. அது கூடச்சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இங்கே இந்த விபத்துகளும் விபத்துகளில் நடக்கின்ற மரணங்களும் இதுவரையில் புள்ளிவிவரங்களாக மட்டுமே பதியப்பட்டுள்ளன. அதற்கு அப்பால், இவை பெறுமதியான மனித உயிர்களின் இழப்புகள் என்றோ, இந்த இழப்புகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற புரிதலோ யாருக்கும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. என்பதால்தான் வரவர வீதி விபத்துகள் பெருகி அதிகரித்துள்ளன.
ஒவ்வொரு விபத்து நிகழும்போதும் இழக்கப்படும் மனித உயிர்கள் நாட்டின் மனித வள இழப்பாகும். மனித வளம் என்பது நாட்டின் பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. மனித உயிர்களுக்குப் பதிலாக கால் நடைகள் உயிரிழந்தால் அதுவும் பொருளாதார இழப்பாகவே அமையும். இதைவிட விபத்தின்போது சேதமடையும் வாகனங்கள், அதன் பிறகு நீதி மன்றத்திலும் பொலிஸ் நிலையத்திலும் தடுத்து வைக்கப்படும் வாகனங்கள் என்று வாகனங்களின் இழப்பும் பெரியது. இவையெல்லாம் நாட்டின் வளர்ச்சியோடு நேரடியாகச் சம்மந்தப்பட்டவை. ஆகவே விபத்துகளைத் தடுப்பதென்பது, தனியே உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, நாட்டையே காப்பாற்றுவதாகும்.
என்பதால்தான் எந்தவொரு முன்னேறிய சமூகத்திலும் (நாட்டிலும்) இந்த மாதிரியான விபத்துகள் தொடர்வதையோ, இழப்புகள் நிகழ்வதையோ அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான ஆய்வுகளைச் செய்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, அவற்றைக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.
இலங்கையில்?
இலங்கையில் வீதி விபத்துகள் என்பது முடிவே இல்லாத தொடர்கதையாகும். இதனால் வீதியில் பயணிப்பதற்கே அச்சமாக உள்ளது. நீங்கள் நிதானமாகவும் சரியாகவும் பயணித்தாலும் தப்ப முடியாது. காரணம், எதிரே வருகின்றவர் அல்லது பின்னால் வருகின்றவர் உங்களை மோதிச் சாய்த்து விடலாம். அப்படி மோதிச் சாய்த்து விட்டுச் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பி விடலாம். இதற்குப் பலரும் பொலிஸ் தரப்பையே குற்றம் சாட்டுகின்றனர். காரணம், விபத்தொன்று நிகழ்ந்தால், அதற்கான வழக்கைப் பதிவு செய்வது பொலிஸ் தரப்பேயாகும். பொலிஸ் தரப்பு விபத்துகளைத் தடுக்கும் நோக்குடன் வழக்கைப் பதிவு செய்தால், விபத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தப்புவது கடினம். பொலிஸ் தரப்பு உரிய முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்யாமல், விபத்துக்குக் காரணமானோருடன் டீல் செய்வதாகவே பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட, கிளிநொச்சியில் நடந்த விபத்தொன்றுக்குக் காரணமானவர்கள் ஒரு லட்சம் ரூபாயை டீல் பண்ணி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிய கதை நிரூபிக்கிறது.
பொலிஸ் தரப்புக்கு அடுத்து, சட்டத்தில் திருத்தம் வேண்டும். அதைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சமூக நன்மையைக் குறித்த அக்கறையோடு சட்டவாளர்களும் செயற்பட வேண்டும். சட்டத்தில் மாற்றத்தை அல்லது திருத்தத்தைச் செய்ய வேண்டியது அரசாங்கமாகும். பொலிஸ் தரப்பின் லஞ்சத்தையும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் சரிப்படுத்தவில்லை என்றால், விபத்துகளைக் கட்டுப்படுத்தவே முடியாது. அத்துடன், நீதித்துறையும் சட்டவாளர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இவையெல்லாம் சரியாக நடக்கவில்லை என்றால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸ் உத்தியோகத்தரும் சரி, சட்டவாளர்களும் சரி, நீதிபதியும் சரி, எவரும் ஏதோ ஒரு விபத்தில் சிக்க நேரிடலாம். ஏனெனில் ஏற்கனவே சொன்னதைப்போல நீங்கள் சரியான முறையில் பயணித்தாலும் எதிரே அல்லது பின்னே வருகின்றவர்கள் நிதானமிழந்தால் அல்லது பொறுப்பற்ற விதமாக வந்தால் அவ்வளவுதான், கதை முடிந்து விடும்.
விபத்துகளுக்குக் காரணங்கள், மது, போதை வஸ்து போன்றவற்றைப் பாவித்து விட்டு வண்டிகளை ஓட்டுவது, அதிவேகம், தேர்ச்சியில்லாத சாரதியம், பொறுப்பின்மை, தூக்கம், கவனச்சிதறல் குறிப்பாகக் கைப்பேசியில் உரையாடிக் கொண்டு வண்டியைச் செலுத்துவது, வீதி விதிகளை மீறுதல் எனப் பலவாக உள்ளன.
விபத்துகளின் பின்னர் மேற்கொள்ளப்படும் பொலிஸ் விசாரணை, மருத்துவ ஆய்வு போன்றவற்றில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதை விட போட்டியிட்டு வண்டிகளை ஓட்டுவதும் நடப்பதுண்டு, அதனாலும் பல விபத்துகள் ஏற்படுகின்றன. என்னுடைய சொந்த அனுபவத்திலேயே இதைப் பல தடவை கண்டிருக்கிறேன். பேருந்து ஓட்டுநர்களில் அதிகமானோர் கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டே வண்டிகளைச் செலுத்துகிறார்கள். தங்களுடைய பேருந்தில் பயணிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்குத் தான் பொறுப்பாளி என்ற எந்தக் கரிசனையும் பொறுப்புணர்வும் அவர்களிடம் இருப்பதில்லை. அரச பேருந்து ஓட்டுநர்கள் கூட இதில் விலக்கில்லை.
இதற்கு அவர்களைப் பணிக்குச் சேர்க்கும்போதே நிபந்தனை விதிக்கப்பட வேண்டும். வண்டியைச் செலுத்தும்போது தொலைபேசியில் உரையாடினால் பணி நீக்கம் செய்யப்படுவார் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். அவ்வாறே இரண்டு வாகனங்களுக்கிடையில் போட்டி வந்து விடும். ஒருவரை ஒருவர் முந்திச் செல்லக் கூடாது என்ற போட்டியில் சாலை விதிகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு வண்டிகளை விரைவாக ஓட்டுகிறார்கள். ஒரு தடவை டிப்பர் வாகனமொன்றுடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து போட்டியிட்டது. அந்தப் பேருந்தில் நானும் பயணித்தேன். டிப்பர் வாகனங்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன. அவற்றை முந்திச் செல்வதற்கு பேருந்து முயற்சித்தது. அதை டிப்பர்ச் சாரதிகள் விரும்பவில்லை. எப்படியோ ஒரு டிப்பரை பேருந்துச் சாரதி முந்தி விட்டார். டிப்பர்ச் சாரதி பேருந்தை விரட்டிக் கொண்டே வந்தார். அந்த டிப்பர் சாரதிக்கும் பேருந்துக்கு முன்பாகச் சென்று கொண்டிருக்கும் டிப்பர் சாரதிக்கும் இடையில் உரையாடல் நடந்திருக்க வேண்டும். அதனால், முன்னே சென்ற டிப்பர் சாரதி பேருந்து முந்திச் செல்வதற்கு இடமளிக்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பேருந்துச் சாரதி வண்டியை வேகப்படுத்தி, சாலையின் ஓரத்துக்குச் சென்று டிப்பரை முந்தினார். அப்படி முந்தும்போது வேண்டுமென்றே பேருந்தை சரித்து, டிப்பரின் பக்கக் கண்ணாடியைப் பேருந்தினால் பிடுங்கினார். இப்படியெல்லாம் நடக்கும்போது பயணிகள் பதட்டமடைந்து சத்தமிடத் தொடங்கி விட்டனர். எனக்கு நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது. அதையெல்லாம் பேருந்தின் ஓட்டுநரோ நடத்துநரோ பொருட்படுத்திக் கொள்ளவேயில்லை. அவர்களுக்கு இது வேடிக்கையும் வழமையுமாகும். இப்படியான சந்தர்ப்பங்களில் குறித்த சாரதிகளுக்கிடையில் கைகலப்புகள் நிகழ்வதும் உண்டு. அவையும் சாதாரணம் என்ற மாதிரியே நடக்கின்றன. இதில் துயரம் என்னவென்றால், இதையெல்லாம் பயணிகளோ மக்களோ பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. விபத்து நடக்கும்போது மட்டும் வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்க்கிறார்கள். பிறகு அவர்களும் வழமைக்குத் திரும்பி விடுகிறார்கள். இவையெல்லாம் மனிதர்களுடைய தவறுகள்.
அடுத்தது, உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளினால் ஏற்படும் விபத்துக்கள். இதற்கான காரணம், பாதுகாப்பற்ற பாதசாரி கடவைகள், போதிய வீதி விளக்குகள் இன்மை, குறுகிய மற்றும் சேதமடைந்த வீதிகள் போன்றவை காணப்படுகின்றன. அடுத்த காரணம், வண்டிகளின் பிரேக் கோளாறு, தேய்மானமடைந்த டயர்கள் மற்றும் தரமற்ற வாகனங்களின் பயன்பாடு போன்றவை உள்ளன.
இதையெல்லாம் சரியான முறையில் மதிப்பிடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் பொலிஸ், நீதிமன்றம், மருத்துவ மனை வட்டாரங்கள் போன்றவை உள்ளன. விபத்துப் பதிவுகளில் இருந்தே இதற்கான தகவல்களைச் சரியாகத் திரட்டிக் கொள்ள முடியும். குறிப்பாக என்ன காரணத்தினால் குறித்த விபத்து நடந்தது? எந்தப் பகுதிகளில் அதிகமான விபத்துகள் நடக்கின்றன? எவ்வாறான வண்டிகள் விபத்துக்குள்ளாகின்றன? எந்தெந்த நேரங்களில் விபத்துகள் நிகழ்கின்றன? என ஒவ்வொன்றையும் பகுப்பாய்வு செய்தால், அவற்றைத் தடுப்பதற்கான பொறிமுறைகளையும் ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியும். இதற்கான முதன்மைப்பொறுப்பு அரசுக்கே உண்டு. கூடவே சமூகத்துக்கும் உண்டு. ஆக இதொரு கூட்டுச் செயற்பாடாகும்.
இதைச் செயற்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அதிவேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் சட்டங்களை அமல்படுத்துதல். முக்கிய வீதிகளில் நவீன வேக கண்காணிப்பு கேமராக்களை (CCTV & Speed Radars) நிறுவுதல். பாதசாரிகளுக்கான பாதுகாப்பான கடவைகள், மேம்பாலங்கள் மற்றும் பிரத்தியேக நடைபாதைகளை அமைத்தல். மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டிகளுக்கென தனிப் பாதைகளை (Dedicated lanes) உருவாக்குதல். பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் தானியங்கி வாயில்கள் (Automatic Gates) மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகளை நிறுவுதல். சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையை சிறப்புத் தரத்தினதாக்குதல். குறிப்பாக நிபந்தனைக்குட்பட்ட முறையில். மற்றும் முறையான பயிற்சிகளை வழங்குதல்.
பள்ளிப் பருவத்திலிருந்தே வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்தல். வீதியில் பயணிக்கும் அனைத்து பொது மற்றும் தனியார் வாகனங்களின் தொழில்நுட்பத் தகுதியை (Vehicle Fitness) சீரான இடைவெளியில் பரிசோதிப்பதை கட்டாயமாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக காவல்துறை வீதிக் கண்காணிப்பில் ஈடுபடுவது விபத்துகளைத் தடுப்பதற்குப் பதிலாக, வசூல் செய்வதற்கே நிற்கிறது என்ற எண்ணத்தை மக்களிடமிருந்து போக்க வேண்டும். அது முதற்பணியாகும்.
விபத்துகளைத் தடுப்பது என்பது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளில் ஒன்று. போரினாலும் இன ஒடுக்குமுறையினாலும் பல லட்சம் உயிர்களை இழந்த சின்னஞ்சிறிய நாடு, விபத்தினாலும் உயிர்களை இழப்பதென்பது ஏற்கவே முடியாதது.
