இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு 

— எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் —  

பெரியார் சாதியெதிர்ப்பு போராளியாகவும் கடவுள் மறுப்பாளராகவும்  மட்டுமே கூடியளவு அறியப்படுபவர். அதனால் இந்திய சுதந்திர விடுதலைப்போராட்ட வீரனாக அவரது பங்களிப்புகள் அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால் அவர் இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாண (தென்னிந்திய)  செயலாளராகவும் தலைவராகவும் இருந்தவர். 

பெரும் தனவந்த குடும்பத்தில் பிறந்து பல்வேறு 

கெளரவங்களோடும் செல்லப்பிள்ளையாக  வாழ்ந்துவந்த ஒரு இளைஞன்தான் பெரியார். அக்காலங்களில் அவர் ஈரோடு நகரமன்ற  தலைவராகவும், கெளரவ மஜிஸ்திரேட்டாகவும் இருந்தவர்..

அவ்வேளைகளில்தான்  இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்று இந்திய தேசிய காங்கிரஸ் நடத்தி வந்த போராட்டங்கள் பெரியாரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. இந்திய சுதந்திரம் பற்றிய பேச்சுக்களால் மட்டுமன்றி காந்தியாரின்  ‘தீண்டாமை கொடுமைகள்’ ஒழியவேண்டும் என்கின்ற பிரச்சாரங்களினாலும் பெரியார் சற்று அதிகமாகவே கவரப்பட்டார்.  

1919ஆம் ஆண்டு காலத்தில் பஞ்சாப்பில் இடம்பெற்ற ஜூலியன் வாலாபாக்  படுகொலை  பெரியாரை பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கியது. பிரிட்டிஸாசாரின் அப்பட்டமான அந்த மனித உரிமை மீறலுக்கு  எதிர்ப்புத்தெரிவித்து  தனது நகர மன்ற தலைவர், கெளரவ மஜிஸ்ரேட் போன்ற பதவிகள் உட்பட தான் வகித்துவந்த 28 கெளரவ பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு  இந்திய சுதந்திரத்துக்காக போராடும் வண்ணம் தேசிய காங்கிரசில்  இணைந்தார்.

பெரியாரின் வரவு இந்திய தேசிய காங்கிரசின் சுயராஜ்ய கொள்கைகளை  தமிழ் நாடு முழுக்க விரிவாக்குவதில்  முக்கியபாத்திரம் வகிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் முன்வைத்த சுதந்திரத்துக்கான இயக்கங்களான ஒத்துழையாமை  இயக்கம், கதர் ஆடை பிரச்சாரம், மதுவிலக்கு போன்றவற்றுக்கான போராட்டங்களை தமிழ் நாட்டின் மூலை மூடுக்குகளெல்லாம் கொண்டு சென்றவர் பெரியார்தான். தனது மனைவி நாகம்மை, தங்கை கண்ணம்மாள் போன்றவர்களையும் மதுவிலக்கு போராட்டத்தில் இணைத்து பெண்கள் அனைவரையும் போராட வருமாறு  அறைகூவல்  விடுத்தார். 

அரசியலுக்கு வந்தபின்னர்  மாளிகை கட்டிக்கொண்டவர்  அல்ல பெரியார். தனது மாளிகை போன்ற வீட்டையே அரசியலுக்காக தானம் கொடுத்தவர் அவர். தமிழ் நாடு காங்கிரசின் தலைமையகமாக  அவரது வீடு மாறியது. காந்தியார் தென்னாட்டுக்கு வந்தபோதுகூட அந்த தலைமையகத்தில் இருந்துதான் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரும் கள்ளுக்கடை  மறியல் போராட்டத்தை அறிவித்தார். 

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் செயற்பட்டு வந்த காலங்களில்தான் கேரளத்தில்  “வைக்கம்” போராட்டத்தை முன்னின்று நடாத்தி வெற்றிகண்டார். காந்தியார் கூட ‘வைக்கம்’ வந்து இருதரப்பாரையும் சமரசம் செய்து போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயன்றும் முடியவில்லை. ஒரு கட்டத்தில்  போராட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட நேர்ந்தது. இப்போராட்டத்தில் இருமுறை சிறை சென்றார் பெரியார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் ‘தேச விடுதலை என்பது தீண்டாமைக்கொடுமைகளிலிருந்தும் விடுதலையடைவதாய்  இருக்கவேண்டும் என்றும்  வெறுமனே வெள்ளையர் கையிலிருந்து பார்ப்பன மேட்டுக்குடிகளின் கரங்களுக்கு அதிகாரம் கைமாறுவதால் சுதந்திரம் கிடைத்துவிடாது’ என்றும்  வாதிட்டார்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் மிகவும் கீழான  நிலையிலேயே இருந்து வந்தனர். உயர்கல்வி கற்பதற்கும் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொள்வதற்கும் தமிழ் மூலம் கல்வி கற்றோருக்கு வாய்ப்புகள் மிக அரிதாகவே இருந்தன. சமஸ்கிரதமும்   ஆங்கிலமும்  கற்ற பிராமணர்களே அரச உத்தியோகங்கள் அனைத்திலும் நிறைந்திருந்தனர்.

இந்நிலையில்தான் தொடர்ச்சியாக ஐந்து காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர் அல்லாதவர்களுக்குரிய  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து  தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோல்விகண்டார் பெரியார். 

 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் மாநாட்டில் இறுதி  முயற்சியாக  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தபோதிலும்  அதிலும் அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. தீண்டாமையை மட்டும் அகற்றிவிட்டு சாதிய ஏற்றத்தாழ்வுகளை பாதுகாக்கும் காங்கிரஸினதும் காந்தியாரினதும்  பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரால் முடியவில்லை.

 தனது  முதற்கடமையான தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புக்கு இந்த தேச விடுதலைகோரும் தேசியவாதிகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை  என்றுணர்ந்தார்.  அதன் காரணமாகவே இறுதியில் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பெரியார் வெளியேறினார்.  

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அது ஆங்கிலேயரிடமிருந்து பார்ப்பனியர்களிடம் அதிகாரம் கைமாறும் நிகழ்வு மட்டுமே,  இதனால் சமூக விடுதலை கிடைத்துவிடாது என்று அறிவித்து அந்நாளை துக்கதினமாக பிரகடனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *