தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளும் தேர்தல்கள் மூலமான ஆட்சி மாற்றங்களும் 

தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளும் தேர்தல்கள் மூலமான ஆட்சி மாற்றங்களும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

தெற்காசியாவில் அண்மைய வருடங்களில் மக்கள் கிளர்ச்சிகளினால் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்ட நாடுகளில் முதலில் இலங்கையில் 2024ம் ஆண்டு பிற்பகுதியிலும்  அடுத்து பங்களாதேஷில்  கடந்த வாரமும் தேர்தல்கள் மூலம் புதிய அரசாங்கங்கள் தெரிவு செய்யப்பட்டன. மூன்றாவது நாடான நேபாளத்தில் மார்ச் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், மூன்று நாடுகளிலுமே கிளர்ச்சிகளுக்கு  தலைமை தாங்கிய சக்திகள் அதற்கு  பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளில்  செல்வாக்கைச்  செலுத்த முடியாதவையாகப் போயிருப்பதைக்   காணக்கூடியதாக இருக்கிறது. 

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியை விரட்டியடித்த  2022  ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு  இரு வருடங்கள் கழித்து  ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. ஜனாதிபதி தேர்தலில் பெற்றதை விடவும்  பாராளுமன்ற தேர்தலில் அதன் வெற்றி பிரமாண்டமானதாக  அமைந்தது. பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பழைய அரசியல்  கட்சிகளும்  படுதோல்வியை தழுவின. 

  முன்னரங்கத்தில் நின்று  ஜே.வி.பி.  மக்கள் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தவில்லை என்ற போதிலும், தவறான ஆட்சிமுறைக்கு  பொறுப்பான  பாரம்பரிய அரசியல் வர்க்கத்துக்கு எதிரான மக்களின் வெறுப்புணர்வை அந்த கட்சி அநுர குமார திசநாயக்க தலைமையில் உச்சபட்சத்துக்கு தனக்கு சாதகமாகப்  பயன்படுத்தி ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. 

அரசைக் கைப்பற்றுவதற்காக  கடந்த நூற்றாண்டில்  இரு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்ட ஒரு  இயக்கம் ஜனநாயக தேர்தல்கள் மூலம் பதவிக்கு  வந்த அந்த  நிகழ்வை அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் என்று சில அவதானிகள் வர்ணித்தனர். 

முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டிநின்ற அந்த மக்கள் கிளர்ச்சியின் அரசியல்  விளைபயன்களை  தேசிய மக்கள் சக்தி அனுபவித்த அதேவேளை, கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற இளைஞர் தலைவர்கள், இடதுசாரிக் குழுக்கள் மற்றும்  அரசியல் செயற்பாட்டாளர்கள் சேர்ந்து அமைத்த மக்கள் போராட்ட முன்னணியை தேர்தல்களில்  மக்கள் அலட்சியம் செய்ததை காணக்கூடியதாக இருந்தது. 

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேக்கு வெறுமனே 11, 191 வாக்குகள் (0.08 சதவீதம்) மாத்திரமே கிடைத்தது. பாராளுமன்ற தேர்தலில் அந்த முன்னணிக்கு   தேசிய ரீதியில் 26, 611 வாக்குகள் (0.27 சதவீதம் ) கிடைத்தன. பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையேனும் அவர்களால் பெறமுடியவில்லை. உள்ளூராட்சி தேர்தல்களில் அவர்கள் 50,492 வாக்குகளுடன் (0.48சதவீதம் ) 16 ஆசனங்களைப் பெற்றனர்.

பங்களாதேஷில் ஷேய்க் ஹசீனாவின் 15 வருடகால ஆட்சிக்கு முடிவு கட்டிய 2024 மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர்  முதன் முதலாக நடைபெற்ற தேசிய தேர்தலில் அண்மையில் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஸியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் பங்களாதேஷ்  தேசியவாத கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. பங்களாதேஷின் இரு பிரதான  அரசியல் ஆதிக்க குடும்பங்களில்  ஒன்றின் வாரிசான அவர் பிரதமராக கடந்த செவ்வாய்கிழமை பதவியேற்றார். 20 வருடங்களுக்கு பிறகு பங்களாதேஷ் தேசியவாத கட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கிறது. 

பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் 212 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. இஸ்லாமியவாத அரசியல் கட்சியான ஜமாத் – ஈ – இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 77 ஆசனங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக வந்திருக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஷேய்க் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை முஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் தடைசெய்த காரணத்தினாலேயே இஸ்லாமியவாத கட்சியினால் இவ்வாறாக பெருமளவு ஆசனங்களைக் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. 

‘2024 ஜூலை புரட்சி’ என்று அழைக்கப்படும்  கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய மாணவர் தலைவர்கள் அமைத்த தேசிய குடிமக்கள் கட்சி தேர்தலில்  ஜமாத் – ஈ – இஸ்லாமி கட்சி தலைமையிலான   கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.  தனித்துப் போட்டியிடுவதில் உள்ள ஆபத்தை அதன் தலைவர்கள் உணர்ந்திருந்தனர் என்று தெரிகிறது.  

32 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய மாணவர்களின் கட்சி 3.05 சதவீத வாக்குகளுடன் ஆறு ஆசனங்களில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. தலைநகர் டாக்காவில் உள்ள தொகுதி ஒன்றில் போட்டியிட்ட அதன் அமைப்பாளர் நஹீத் இஸ்லாம் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் வேட்பாளரை வெறுமனே சுமார் 2 ஆயிரம் வாக்குகளினால் மாத்திரமே தோற்கடிக்க முடிந்தது.

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பங்களாதேஷின் ஆட்சிமுறைக்  கட்டமைப்பில் பாரிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை செய்வதற்கான  நோக்கில்  கடந்த வருடம் அக்டோபரில் பிரகடனம் செய்யப்பட்ட ‘2025 ஜூலை தேசிய சாசனத்துக்கு ‘ மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும்  நடத்தப்பட்டது. ஷேய்க் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர் கிளர்ச்சி 2024 ஜூலை பிற்பகுதியில் ஆரம்பித்த காரணத்தினால் அது ஜூூல சாசனம் என்று அழைக்கப்படுகிறது. 

எதேச்சாதிகார — பாசிச ஆட்சி மீண்டும் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் எண்பதுக்கும் அதிகமான சீர்திருத்த யோசனைகள் அடங்கிய அந்த சாசனத்தில்  33 அரசியல் கட்சிகள் கடந்த அக்டோபரில் கைச்சாத்திட்டன. பங்களாதேஷ் தேசியவாத கட்சியும் அதில் கைச்சாத்திட்ட போதிலும், முக்கியமான பல ஏற்பாடுகள் குறித்து அது  கடுமையான கருத்து வேறுபாடுகளை பதிவு செய்தது. 

சர்வஜனவாக்கெடுப்பில் 60.26 சதவீதமான வாக்காளர்கள் ஜூலை சாசனத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கும் பிரதமர் தாரிக் ரஹ்மானின் புதிய  அரசாங்கம் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டிய அரசியல் மற்றும் சட்டரீதியான கடப்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

“சாசனத்தின் வழிகாட்டல்களின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு உட்பட முக்கியமான அரசியலமைப்பு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு பக்கச்சார்பற்ற இடைக்கால அரசாங்கத்திடம்  ஒப்படைக்கப்பட வேண்டும்; பாராளுமன்றத்தை இரு சபைகளைக் கொண்டதாக மாற்றி 100 உறுப்பினர்களுடனான  மேல்சபை நிறுவப்பட வேண்டும்; தேசிய தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மேல்சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் ; 

“எதிர்காலத்தில் 

எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் மேல் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின்  அங்கீகாரத்துடனேயே நிறைவேற்றப்பட வேண்டும்; ஒருவர் இரு பதவிக் காலங்களுக்கு கூடுதலாக  பிரதமர் பதவியில் இருக்க முடியாது;  பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்; பிரதி சபாநாயகரும் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்களும் எதிர்க்கட்சிகளில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும்.” இவையே சாசனம் வலியுறுத்துகின்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் மிகவும் முக்கியமானவை.

சர்வஜனவாக்கெடுப்பில் ஜூலை சாசனத்துக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் புதிய பாராளுமன்றத்தின் மீது பிரத்தியேகமான கடப்பாடுகளை திணித்திருக்கிறது. பாராளுமன்றம் அரசியலமைப்புச் சீர்திருத்த பேரவையாக இயங்க வேண்டும் என்றும் சாசனத்தின் ஏற்பாடுகளை 180 வேலை நாட்கள் அவகாசத்திற்குள் அந்த பேரவை  நிறைவேற்ற வேண்டும் என்றும் 2025 அரசியலமைப்பு சீர்திருத்த பேரவையின் கட்டளையில் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு  உறுப்பினரும்  பாராளுமன்ற உறுப்பினராகவும் அரசியலமைப்பு சீர்திருத்த பேரவையின் உறுப்பினராகவும் இரு பதவிப் பிரமாணங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. 

சாசனத்தின் குறிப்பிட்ட சில ஏற்பாடுகள் தொடர்பிலான கருத்து வேறுபாடுகள் குறித்து அரசாங்கத்துக்கும்  பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியது அவசியமாகிறது.  சாசனத்தின் மீது பங்களாதேஷ் தேசியவாத கட்சி பற்றுறுதியை வெளிக்காட்டிய போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதில்   பிரதமர் தாரிக் ரஹ்மானின் அரசாங்கத்தின் உறுதிப்பாடு  எதிர்வரும் மாதங்களில் பரீட்சிக்கப்படும்  என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இது இவ்வாறிருக்க, முஹம்மட் யூனுஸ் தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்படாத  இடைக்கால அரசாங்கத்தில் இருந்து  பங்களாதேஷுக்கு ஜனநாயக மாற்றம் ஒன்று அவசியமாக இருந்தது  என்ற போதிலும், அந்த நாட்டின்  மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான அவாமி லீக் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த வாரத்தைய தேர்தலின் நியாயப்பாடு குறித்து அரசியல் அவதானிகள் கேள்வியெழுப்புகிறார்கள்.

ஜனநாயக கட்சியை தடைசெய்துவிட்டு அமெரிக்கா ஒரு தேர்தலை நடத்தியிருந்தால் அதை மக்களின் வெற்றி என்று அழைத்திருக்க முடியுமா? ஐக்கிய இராச்சியத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியோ அல்லது தொழிற்கட்சியோ தடைசெய்யப்பட்ட நிலையில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அதை ஜனநாயக ரீதியான தேர்தல் என்று அழைக்கமுடியுமா? காங்கிரஸ் கட்சியை தடைசெய்த பிறகு இந்தியாவில் ஒரு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அதை ஜனநாயகத்தின் வெற்றியாக அமைந்திருக்குமா? நேபாளத்தில் ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸட் கட்சியை அல்லது மாவோயிஸ்டுக்களை தடைசெய்துவிட்டு தேர்தலை நடத்தியிருந்தால் அதை ஜனநாயக மாற்றம் என்று அழைத்திருக்க முடியுமா? என்று ‘தி இந்து’ பத்திரிகையின் சர்வதேச விவகார ஆசிரியர் ஸ்ரான்லி ஜொனி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பினார்.

 அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதை பல அவதானிகள் பாராட்டியிருக்கின்ற போதிலும், அவாமி லீக் மீதான தடை தேர்தல் செயன்முறையின் ஒரு  அடிப்படைக் குறைபாடு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் போன்று தெரிகிறது என்றும் அந்த தடையே இஸ்லாமியவாத அரசியல் கட்சியை பலப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அடுத்ததாக நேபாளத்தில் தேர்தல் நெருங்குகின்ற நிலையில், கடந்த வருடம் செப்டெம்பரில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை கவிழ்த்த, கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய இளைய தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள்  போன்ற பாரம்பரிய அரசியல் கட்சிகளில் இடம்பிடிப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. பங்களாதேஷின் தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர்களைப் போன்று நேபாள போராட்டக்காரர்களும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதற்கு  துணிச்சல் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

பங்களாதேஷில் மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரும் கூட பாரம்பரியமான அரசியல் கட்சியொன்றையே தேர்தல் மூலமாக மக்கள் அதிகாரத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையில் பாரம்பரியமான கட்சிகளை நிராகரித்து மக்கள் முன்னர் ஒருபோதுமே ஆட்சியதிகாரத்தை அனுபவிக்காத அரசியல் கட்சியை பதவிக்கு  கொண்டுவந்தார்கள். இதை  இரு நாடுகளினதும் ஆட்சி மாற்றங்களுக்கு இடையிலான ஒரு வேறுபாடாக நோக்க முடியும். 

இந்த நாடுகளில் வீதிப் போராட்டங்களின் மூலமாக அரசாங்கங்களை அடிபணிய வைத்து அரசியல் மாற்றத்துக்கான அத்திபாரத்தை அமைத்த இளந்தலைமுறைச் சக்திகளினால் தேர்தல்களில் ஏன் மக்களின் ஆதரவைப் பெறமுடியாமல் இருக்கிறது? தேர்தல்களுக்கு பின்னரான அரசியலின் அதிகாரக் கட்டமைப்புக்களை தீர்மானிப்பதில் அவற்றினால்  செல்வாக்கு செலுத்த முடியாமல் இருக்கிறது? இறுதியில் கிளர்ச்சிகளின் பயன்விளைவுகளை ஏதாவது ஒரு பாரம்பரிய கட்சியே  அனுபவிக்கக் கூடியதாக இருப்பதற்கு  காரணம் என்ன? 

போராட்டக்காரர்களை பொறுத்தவரை, தேர்தல்களில் வெற்றி பெறுவதை விடவும் அரசாங்கங்களை கவிழ்ப்பது சுலபமாக இருக்கிறது என்பதற்கு தெற்காசியாவில் இலங்கைக்கு அடுத்த உதாரணமாக பங்களாதேஷ் விளங்குகிறது. அடுத்து நேபாளத்திலும், நேபாள காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள்  போன்ற பாரம்பரிய கட்சிகளே மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை தடுக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. 

சமூக ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்துகின்ற இன்றைய நவீன உலகில் கிளர்ச்சிகளை முன்னெடுக்கின்ற இயக்கங்கள் மக்களை அணிதிரட்டி  வீதிப் போராட்டங்களின் மூலமாக  அரசாங்கங்களை கவிழ்ப்பதில் வெற்றி பெறக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை, தேர்தல்களின் மூலமாக அதிகாரத்துக்கு வரக்கூடிய அரசியல் சக்திகளாக தங்களை மாற்றிக்கொள்ள அவற்றினால்  முடியாமல் இருக்கிறது என்பதை அரபு வசந்தம் தொடக்கம் தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள் வரை நிரூபித்து நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *