— அழகு குணசீலன் —
அரசியல் கோரிக்கை ஒன்றுக்கு அதற்கான பெறுமானத்தை, அடைவுக்கான வாய்ப்பு வசதிகளை வழங்குவது அதற்கான காலச் சூழல். மற்றும் கோரிக்கையின் உள்ளடக்கத்தின் ஜதார்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம். அடுத்து கோரிக்கையை முன் வைக்கும் தரப்பினரதும், கோரிக்கையை நிறைவு செய்யும் தரப்பினதும் அரசியல் பலம் /பலவீனம். மேலும் கோரிக்கையை முன் வைத்த தரப்பு அதை அடைவதற்காக மறுதரப்புக்கு கொடுக்கக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் அழுத்தம்.
இந்த வகையில் தமிழ்தேசிய அரசியல் இனப்பிரச்சினைக்கு தீர்வாக மீளுருவாக்கம் செய்துள்ள காலாவதியான “திம்புக்கோட்பாடு” மேற்குறிப்பிட்ட அவசியமான நிபந்தனைகளை எந்தளவுக்கு பூர்த்தி செய்கிறது….? வேதாளங்கள் ஏன் மீண்டும் முருங்கையில் ஏறி முறிந்து விழப்போகின்ற விசப்பரீட்சையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு நஞ்சூட்டுகின்றன?
1985 இன் யூலை- ஆகஸ்ட் மாதங்களில் அன்றைய தேசிய, பிராந்திய பூகோள அரசியல் சூழலில் முன் வைக்கப்பட்ட திம்புக்கோட்பாட்டின் நான்கு அம்சங்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வியலில் இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் பொருத்தமானவையா? தேசிய இனம் ஒன்றின் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்ட வரையறைகளோடு திம்பு கோட்பாடு ஒத்துப் போகிறது என்பது ஒரு சட்ட அணுகுமுறை. ஆனால் அந்த சட்டத்தன்மை/ அங்கீகாரம் மட்டும் சாதிப்பதற்கு போதுமானது அல்ல. வேண்டுமானால் மீண்டும் சர்வதேசம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ட்ரம்பின் சமாதான சபை போன்ற வற்றுடன் கயிறிழுக்கவே உதவும்.
திம்புக்கருத்தியலுக்கு வயது 40. தமிழ்த்தேசிய சமஷ்டி அரசியலுக்கு வயது 75 என்று கூறுகிறார்கள். ஆயுதப்போராட்டம் கூட்டிக் கழித்தால் முப்பது 30 வயதில் மௌனித்துவிட்டது. மௌனித்து 16 ஆண்டுகள் வெறும் முட்டுக்கொடுப்பிலும், முரண்டு பிடிப்பதிலும் கடந்து இருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் “புத்திசாலிகள்” நிலைமாறுகாலம், திரட்சி, மண்ணாங்கட்டி என்று வார்த்தையாடல்களையே செய்கிறார்கள். நிலைமாறு காலத்தில் இவர்கள் முள்ளிவாய்க்கால் – நந்திக்கடவில் இருந்து கற்றுக் கொண்டு இனப்பிரச்சினைக்கான வீதி வரைபடத்தில் செய்த மாற்றங்கள் என்ன? நிலை மாறுகாலம் வழங்கிய கால இடைவெளியில் தமிழ்த்தேசிய அரசியல் பலவீனமானதைத்தவிர.
இந்த சூழலில் தமிழ்த்தேசிய அரசியல் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? இந்த சட்ட உரிமைக் கோரிக்கைகளின் இலக்கு அடையப்படாமல் போனமைக்கு கொழும்பு அரசு மட்டும் தான் காரணமா…? தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளுக்கும் அதில் பங்குண்டா? இல்லையா? முரண்பாடு இரு தரப்புக்களுக்கு இடையிலானது என்றால் அதற்கு இரு தரப்பும் பொறுப்பு. அந்த முரண்பாட்டை தீர்ப்பதிலும் இருதரப்புக்கும் பொறுப்பு உண்டு. ஒரு தரப்பை மட்டும் பொறுப்புக்கூற கட்டாயப்படுத்துவது சம்பந்தப்பட்ட மறு தரப்பு எதையோ மறைக்க விரும்புகிறது என்பதை காட்டுகிறது. அதில் சுய அரசியல் பலவீனமும், தமிழ்மக்கள் சர்வதேசத்தை நம்பச் செய்யுமாறு விடும் புரூடாக்களும் அடங்கும்.
திம்புக்கோட்பாட்டின், இலங்கைத்தமிழர்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு ஒரு பாரம்பரிய தாயகபிரதேசம் இருக்கிறது, அவர்கள் சுயநிர்ணய உரிமையை கொண்டவர்கள் என்ற மூன்று அம்சங்களும் , நான்காவது அம்சமாக இலங்கையர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் வலியுறுத்தப்பட்ட பிரகடனமே திம்பு பிரகடனம். இதில் குடியுரிமை விவகாரம் மலையக தமிழர்களை அடிப்படையாகக் கொண்டது. அது பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு பிரச்சினை. அதை மலையக அரசியல் தலைமைகள் எவ்வாறு தீர்த்துக்கொண்டன என்பதையும், அதுவும் “வட்டுக்கோட்டை தனிநாடு கோரிக்கை” தீர்மானம் மலையகத்தமிழர்களுக்கு பொருத்தமற்றது என்று கூறி மலையக அரசியல் தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து வெளியேறி, இணக்க அரசியல் மூலம் இந்த வாக்குரிமை இலக்கை அடைந்தது என்பதும் தமிழ்த்தேசிய அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்திட்டத்தில் அடங்கும்.
இன்று ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை அற்ற, ஒரு அகதிக்குழுமமாக மாறியிருக்கிறார்கள். 89 ஆயிரம் என்பது தட்டிக்கழிக்க கூடிய ஒரு தொகையா? இது நீங்கள் கூறுகின்ற திம்புக்கோட்பாட்டு “பாரம்பரிய தாயகத்தில்” ஏற்படுத்தியுள்ள சமூக, பொருளாதார, அரசியல் தாக்கங்கள் எத்தனை? அதில் இருந்து மீள கடந்த பதினாறு ஆண்டுகளில் தமிழ்த்தேசிய அரசியலின் வகிபாகம் எதையும் செய்யவில்லை. அந்த மக்களை போர் துரத்தியது என்றால், போரின் பங்காளிகளான தமிழ்த்தரப்புக்கு அதில் பங்கில்லையா?
ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளும், அவற்றிற்கான கோரிக்கைகளும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் 75, 50, 30, 16 ஆண்டுகளாக எவ்வாறு மாற்றம் அன்றி இருக்கமுடியும். இந்த நிலைப்பாடு மக்கள் வாழ்வியலின் இயங்கியலுக்கு முரண்பட்டதில்லையா? இந்த காலப்பகுதிகளில் பூகோள சமூக, பொருளாதார, அரசியல் வரைபடம் சர்வதேசத்திலும், பிராந்தியத்திலும், இலங்கையிலும் எவ்வளவு மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அந்த மாற்றங்களுக்காக எவ்வளவு புதிய அணுகுமுறைகள், கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தலைமைத்துவம், சிந்தனை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எங்களுடைய ஆட்டுக்கல்லிலும் மாற்றம் இல்லை, அதற்குள் போடும் மாவிலும் மாற்றம் இல்லை. ஆட்டும் அணுகு முறையிலும் மாற்றம் இல்லை. சமூக அரசியல் இயங்கியல் நியதியில் இது எப்படிச் சாத்தியம்?
தமிழ்த்தேசிய அரசியல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அந்த ஆல மரத்திற்கு கீழ் மட்டும் நின்று சுழல்வதை தவிர்த்து தனது சுழல் பாதையை புதிதாக நிர்ணயம் செய்து விரிவுபடுத்த வேண்டும். இந்த மரபுவழியான சுற்று வட்டத்தை தகர்த்து, விலகி வட்டத்திற்கு வெளியே புதிய பாதையில் சுழல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பொலிஷ் பண்ணப்பட்ட வடிவம் திம்புக் கோட்பாடு. பிரிந்து செல்வதற்கான உரிமையை கொண்ட சுயநிர்ணய உரிமையை அது கோருகிறது. வட்டுக்கோட்டை, திம்பு, திருகோணமலை மந்திரங்களான ஊர்களின் பெயர்களை கழட்டி விட்டால் மறைமுகமாக எல்லாம் தனிநாட்டுக்கு முலாம் பூசப்பட்டவை. இன்னொரு வகையில் அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்தின் கீழ் பாராளுமன்றத்தை சட்டத்தின் பிடியில் மாட்டுப்படாமல், அலங்கரிப்பதற்காக இந்த முலாம் பூசப்படுகிறது. பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சமஷ்டியும் அதுதான். ஒருநாடு இருதேசமும் அதுதான்.
ஆகக்குறைந்த பட்சம் இன்றைய ஆட்சியாளரான ஜே.வி.பி.யின் வளர்ச்சி -மாற்றம் பற்றியாவது தமிழ்த்தேசிய அரசியல் சிந்தித்துள்ளதற்கான அறிகுறிகளை தேடியும் காணமுடியவில்லை. 1965 கால ரோகண விஜயவீரவின் தலைமையிலான கொள்கைகளோடு ஜே.வி.பி. அரசியல் செய்து இன்றைய நிலையை அடைந்திருக்க முடியுமா? சோஷலிசப் புரட்சிக்காக பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையற்று ஆயுதம் ஏந்தியவர்கள் ஜே.வி.பி.யினர். அவர்களிடையே கொள்கை முரண்பாடுகளின் போது தலைமை மாற்றங்கள் ஏற்பட்டன. தலைமைமாற்றம், சிந்தனையிலும், கொள்கைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது . ஜே.வி.பி. தனது இருபோராட்டங்களினதும், ரோகண விஜயவீர கொலை செய்யப்பட்ட தன் பின்னரும் தன்னை மறுவார்ப்பு – மீளுருவாக்கம் செய்தது. அதன் விளைவுதான் ஜே.வி.பி. என்.பி.பி. யாக மறுபிறப்பு எடுத்தது.
அவர்கள் சாகும்வரை, ஆயுட்கால தலைமைத்துவத்தை ஆராதிக்கவில்லை- வழிபடவில்லை . எம்.ஏ.சுமந்திரன் இரா.சம்பந்தர் தலைமைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியபோது தமிழ்த்தேசிய புத்திசாலிகள் / பக்தர்கள் சுமந்திரனை எதிர்ப்பதற்காக அதை எதிர்த்து முதுமை அரசியலை அங்கீகரித்தனர். ஜே.வி.பி.என்.பி.பி.யாக ஒரு முறை தன்னை உருமாற்றம் செய்துள்ளது. தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அது போன்று தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய பேரவை….. இந்த உருமாறங்கள் ஏற்படுத்திய ஆக்கபூர்வமான கொள்கை மாற்றங்கள் எதுவும் உண்டா? அனைத்தும் கதிரைகளுக்கானதே அன்றி மக்களின் விடிவுக்கானதல்ல
ஜே.வி.பி.யில் சமூக இயங்கியல் சார்ந்து ஏற்பட்ட மாற்றங்கள், பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக மாற்றங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆட்சி அதிகாரங்களை பெறும் உரிமைகளுக்கு அப்பால் மக்கள் எதிர்நோக்கிய, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை அவர்கள் பேசினார்கள். ஆட்சி மாற்றத்திற்கான சூழல் ஒன்று ஏற்பட்டபோது அதை பயன்படுத்தி கொண்டார்கள். ஆட்சியில் அமர்ந்த போது 1971 கிளர்ச்சியின் அடிப்படையாக அமைந்த ” இந்திய மேலாதிக்க எதிர்ப்பு வாதம்” காணாமல் போனது. வெளியுறவுக்கொள்கையில் கட்சிக்குள் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு நீண்ட கால இலக்கில் நிலவுகின்ற சர்வதேச பூகோள, பிராந்திய சூழலை பயன்படுத்தி கொள்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளுக்கும் இன்றைய அரசியல் அணுகுமுறைகளுக்குமான இடைவெளி சார்ந்த விமர்சனங்களுக்கு அப்பால், இதற்கு பெயர் பூகோள அரசியலுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய காலத்திற்கு ஏற்ற ஜதார்த்த அரசியல். இதை ஜே.வி.பி. தனது கடந்த 30 ஆண்டு கால நிலைமாறு காலத்தில் ஆரம்பித்தது.
ஈழத்தமிழர்கள் தனிநாடு கோரிய மக்கள் கருத்துக்கணிப்பு 1977 பாராளுமன்றத்தேர்தல் என்று கூறப்படுகிறது. அந்த முடிவுகள் 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் செல்லுபடியாகுமா? அன்று முஸ்லீம் மக்களினதும் வாக்குகளை புத்தளம் வரை கூட்டி அள்ளியே கருத்துக்கணிப்பு தேர்தல் வாக்களிப்பு மட்டுமட்டாக 50 வீதத்தை சற்று தாண்டியது. இது அ.அமிர்தலிங்கம் கணித்த கணிப்பு. இன்று முஸ்லீம் மக்களின் அரசியல் பாதை என்ன? அவர்களை அந்த பாதைக்கு வலிந்து தள்ளியது தமிழ்த்தேசிய அரசியல். தமிழ்மக்களின் அரசியல் பாதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை 1977 பின்னரான பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.
தனிநாடு/ சுயநிர்ணயம்/ பிரிந்து செல்லும் உரிமை/ சமஷ்டி என்பவற்றிற்கு எதிராக தமிழ்மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இன்று மாகாணசபை தீர்வுக்கு வாக்களிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய அரசியல் சூழல் நிலவுகிறது. அந்தளவுக்கு வடக்கு கிழக்கில் ஜே.வி.பி.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. ஜே.வி.பி. கூறுகின்ற புதிய அரசியல் அமைப்பு குறித்த சர்வஜன வாக்கெடுப்பு நடந்தால், அரசியல் அமைப்பில் முன் வைக்கப்படும் குறைந்த பட்ச தீர்வே மக்களால் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழ் தரப்பு கோரும் தீர்வை முன்வைத்தால் அது தோல்வியடையும் என்ற நிலையே தென்னிலங்கையில் மாறிவரும் அரசியல் சூழல் வெளிப்படுத்துகிறது. 8000 பிக்குகள் வீதிக்கு இறங்குவது சரி, பிழைக்கு அப்பால் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. மாறாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மட்டும் அல்ல தமிழ், முஸ்லீம் எம்.பி.க்களின் பெரும்பான்மையையும் ஜே.வி.பி. / என்.பி.பி. கொண்டுள்ளது. இதனால்தான் தமிழ் தரப்பு யார்? என்று கேட்கிறது ஜே.வி.பி. ஆக, வேட்டி பறிபோகப்போகிறது.
தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய தேவை கொள்கை மாற்றம், அந்த கொள்கையை அடைவதற்கான புதிய அரசியல் அணுகுமுறை. இந்த மாற்றங்களும், அணுகுமுறையும் கஜந்திரகுமாரின் அல்லது சுமந்திரனின் கருத்து திணிப்புக்களாலும், அவர்களுக்கு பின்னால் சிவில் அமைப்புக்கள் என்ற பெயரில் ஆளுக்கொரு அமைப்பை பெயரளவில் வைத்திருப்பவர்களின் கருத்துக்களுக்கு அப்பால் மக்களின் சமகால கருத்தை பிரதிபலிப்பதாக அமையவேண்டும். ஆகக் குறைந்த பட்சம் இருக்கின்ற வடக்கு, கிழக்கு தனித்தனியான மாகாணசபை கட்டமைப்பை, அதிகாரங்கள் குறித்த விவாதங்களுக்கு அப்பால் காப்பாற்றிக் கொள்வதே தமிழ்த்தேசிய கற்பனாவாதிகளுக்கு இருக்கின்ற முதல் வழியும் ஒரே வழியுமாகும். தென்னிலங்கையில் மாகாணசபை சபை தேர்தலை நடாத்துமாறு எழுந்துள்ள சூழலை தமிழ்த்தேசியம் பயன்படுத்தி கொள்வது வேட்டியில் ஒரு துண்டையாவது காப்பாற்ற உதவும். இல்லையேல் நிர்வாணம் தான்.
தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய தேவை விரலுக்கு ஏற்ற வீக்கம்….!
சொப்பிங் பையையே தூக்க வழியில்லாமல் இருக்கையில் முதுகுப்பையும்…., மாராப்பும் …. வெறும் அரசியல் ஏமாற்று..!
