— அழகு குணசீலன் —
இலங்கை அரசியலில் ‘பெரும்பான்மை’ என்பது வெறும் எண்கணிதம் மட்டும் அல்ல உளவியலையும் உள்வாங்கிக்கொண்ட கருத்தியல். இவை இரண்டும் ஒன்று சேரும் போது அதன் உருமாற்றம் அரசியலில் ஆணவம், அகம்பாவம், கர்வம், திமிர், ஏதேச்சாதிகாரம், ஏகபோகம் …… போன்ற குணாம்சங்களை கொண்ட தாக மாறுகிறது. இந்த வகையில் சுதந்திரத்திற்கு பின்னரான அனைத்து பெரும்பான்மை அரசாங்கங்களுடனும் இலங்கையின் அனுபவம் கசப்பானதாகவே இருந்து வருகிறது. இதற்கு தேர்தலுக்கு முன்னர் சிவப்பு சாயம் பூசப்பட்டு இப்போது சாயம் வெளிறிக் கொண்டிருக்கின்ற இன்றைய ஜே.வி.பி./ என்.பி.பி. ஆட்சி அதிகாரமும் விலக்கல்ல.
அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் வழிமுறைகள் இல்லாது இருக்கும் வரை பிரச்சார வாக்குறுதிகள் அதிகாரத்தை வெல்வதற்காக வடிவமைக்கப்பட்ட வெற்று வாக்குறுதிகளாகவே இருக்குமே அன்றி உண்மையான உறுதிமொழிகளாக இல்லை என்பதை 78 வது (சு)தந்திர தினத்தின் போதும் இலங்கை அரசியல் மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி நிற்கிறது.
பெரும்பான்மை என்பது இங்கு சிங்கள, பௌத்த எண்ணிக்கை, உளவியல் பெரும்பான்மையை கொண்ட கொழும்பு அதிகாரபீடத்தை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. மாறாக வடக்கு -கிழக்கு தமிழ், இந்து பெரும்பான்மையையும் இந்த குணாம்சத்தில் இருந்து பிரித்து நோக்கமுடியாது. தெற்கில் கொழும்பு மையம் போன்று வடக்கில் இது யாழ்ப்பாண மையத்தை கொண்டது. இதனால்தான் இரண்டு மையங்களும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தமக்கிடையே சமரசம் செய்து கொள்கின்றன. யாழ். மைய வாதமும் தமிழ் மக்களின் (சு)தந்திரம் பற்றி பேசுகிறது. ஆனால் அரசியலுக்காக தெற்கில் வெள்ளையாகயாகவும் , வடக்கில் கறுப்பாகவும் நிறந்தீட்டப்படுகிறது.
இந்த இரு பெரும்பான்மைகளும் சந்திரனையும், நடசத்திரங்களையும் தங்கள் சொந்த குழந்தைகளுக்கு பிடித்து வருவதாக பொய் பேசும் பெற்றோர்களைப் போன்றவர்கள். அரசியல் ஏமாற்றுக்காரர்கள். இதனால் ஒரு பக்கம் சுதந்திர நாள் கொண்டாட்டம், மறுபக்கம் கரிநாள் துக்கம். மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளுக்கான அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை தவிர்த்து, அதற்கான செயற்பாட்டு அரசியலை தவிர்த்து மாயமானுக்கு பின்னால் மக்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
தென்னிலங்கையில் இடம் பெறும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது அரசாங்கத்தின் ஒரு (சு)தந்திர அரசியலாகவே தெரிகிறது. கொழும்பு கொதி நிலையில் இருக்கிறது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. ஏழு ஆண்டுகளாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அவர்கள் தங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை கோருகிறார்கள். இந்த பட்டதாரிகளுக்கு அநுர அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியதில் பெரும் பங்குண்டு. காலிமுகத்திடல் அரகலய முதல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரை தேர்தல் வாக்குறுதிகளை நம்பி கடுமையாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டவர்கள். உண்ணாவிரதிகள் மரணப்படுக்கையில் இருக்கிறார்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்றரை தசாப்தங்களை கடந்தும், தற்போதே மக்களின் தொகையைவிடவும் படையினரின் பிரசன்னம் நிகழ்வுகளில் அதிகமாக இருக்கும் போது மேலும் 32 ஆயிரம்பேரை பொலிஸில் சேர்க்க முனைப்பு நடக்கிறது. கல்விச் சீர்திருத்தம் நடைமுறையில் வெற்றியளிக்க கல்வியில் நிலவும் ‘இரட்டைத்தன்மை ‘ நீக்கப்பட வேண்டும். அதில் ஒன்று நகர -கிராமிய பாடசாலைகளுக்கு இடையிலான ஆசிரியர் பங்கீட்டு ஏற்றத்தாழ்வு. இது போன்ற கல்வி தேவைகளை புறந்தள்ளினால் கல்விச் சீர்திருத்தம் மீண்டும் நகர பாடசாலைகளுக்கே பிரயோசனப்படும். பின்தங்கிய பகுதிகளில் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை, கட்டாய தேவைகளை பூர்த்தி செய்யாமல் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது ஜதார்த்தமற்றது. இதன் ஆசிரியர் நியமனங்களை தவிர்த்து பொலிஸாரை நியமிப்பதன் மூலம் அடைய முடியாது. வேண்டுமானால் கல்விச்சீர்திருத்த குறைபாடுகளை சுட்டிக்காட்டும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கலாம்.
மறுபக்கத்தில் அரச மருத்துவ அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம். கட்சிக் கொடியில் சுத்தியலும், அரிவாளும், சிவப்பு நிறமும் எவ்வளவு ஏமாற்று வித்தை என்பதை தொழிற்சங்கங்களை கையாளும் சீத்துவத்தில் தெரிகிறது. அரசாங்கம் ‘அடிபணியமாட்டாது’ என்று சிவப்பு சட்டையை அணிந்து கொண்டு அமைச்சர் சூளுரைக்கிறார். இவர்கள் தொழிலாளர்களின் நலன்கள் பற்றியும், தொழிற்சங்க ஜனநாயக உரிமைகள் பற்றியும் பேசாத மேடைகளை மக்கள் தேர்தல் காலத்தில் கண்டதில்லை. அரச மருத்துவ அதிகாரிகள் தொழிற்சங்கம் சம்பளத்தை உயர்வு கேட்கிறார்கள் என்பது மட்டும் அரசாங்க தரப்பால் உரத்து உச்சரிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் மக்களுக்கு வைத்திய சேவையை வழங்குவதற்கான கருவிகள், உபகரணங்கள், மருந்துகள், மனிதவளம் இல்லை என்றும் அதற்கான அடிப்படைகளை நிவர்த்தி செய்யுமாறும் கோருகிறார்கள். வைத்திய சேவைக்கான வசதிகளும், வளங்களும் இன்றி மக்களுக்கு சேவை செய்வது எப்படி?
மலையக மக்கள் புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி, ஒரு நாள் கூலியை செலவு செய்து கொழும்புக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை சந்திக்க,பேச அரசதரப்பு மட்டும் அல்ல மலையக மக்களின் வாக்குகளை பெற்ற மலையக அரசாங்க எம்.பி.க்களும் அந்த பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. குருநாகல், அநுராதபுரம் பகுதிகளில் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணியும், 50 இலட்சமும் வழங்கப்படும் போது மலையக மக்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பதாகவும், இது அப்பட்டமான இன ஒதுக்கல் என்றும் கூறி தென்னாபிரிக்க இனவாதத்துடன் ஒப்பிட்டிருக்கிறார் மனோகணேசன் எம்.பி.
புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான வீடமைப்பை ஏற்கனவே உள்ள இந்திய வீடமைப்பு உதவியுடன் முடிச்சுப் போட்டு வெறும் 20 இலட்சம் ரூபாவுடன் கணக்கை முடிக்கப்பார்க்கிறது அநுர அரசாங்கம். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி காணியும், 50 இலட்சமும், காணி இல்லை என்றால் ஒரு கோடியும் என்று அறிவிக்கும் போது அது சிங்களவர்களுக்கு மட்டுமே என்று அறிவித்திருந்தால் அவர் (சு)தந்திரதினம் கொண்டாடுவதில் அர்த்தம் இருக்கிறது (?). மனோகணேசன் இந்திய தூதரகத்தின் மூலம் கொடுக்கும் அழுத்தமும், ஐ.நா. அதிகாரிகளிடம் முறையிட்டும், மலையக மக்களின் அழுகுரல் இன்னும் ஜனாதிபதியின் காதுகளில் விழவில்லை.
இவற்றை விடவும் மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகள் வேறு. அரசாங்க கணக்கில் நிதி இல்லாமல் திருப்பப்பட்ட 75 நிவாரண காசோலைகள் …… என்று சிறுபிள்ளைத்தனமான அரசியலே செய்யப்படுகிறது. இது ஒரு நிதிமோசடி, ஏமாற்று, வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்குதல் போன்ற சட்டப்பிரச்சினை. தங்கள் இயலாமையை மறைக்க அரசாங்கம் அதிகாரிகளின் தலையில் கட்டிவிடுவதுடன், அவர்கள் மீது அரசியல் பழிவாங்கல்களையும் செய்கிறது. அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக அதிகாரிகளின் இராஜினாமாக்கள் தொடர்கிறது. இந்த சூழலில் தான்
(சு) தந்திர தினத்தை 100 மில்லியன் ரூபாய் செலவில் கடந்த வருடத்தை விடவும் 30 மில்லியன் அதிகமாக செலவு செய்து கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் ஏற்கெனவே அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், முக்கிய சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டு இரவோடிரவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் மக்களை விடவும் தன்னை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது.
அதிகாரம் எங்களிடம் இருக்கிறது, அரசு எங்களிடம் இல்லை என்று ஒரு ஏகபோக ஏதேச்சிகார கருத்தை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் லால் கந்த. ஏற்கெனவே நீதித்துறையையும், பௌத்தபீடத்தையும் அவர்களின் சீருடையையும் குறிப்பிட்டு அவமானப்படுத்தியவர் இவர். மக்கள் ஜே.வி.பி/ என்.பி.பி.க்கு வழங்கிய அதிகாரம் அரசாங்கத்தை கொண்டு நடாத்துவதற்கான மக்களுக்கும் -ஜே.வி.பி.க்கும் இடையிலான ஒப்பந்தம். இதை சட்டவாக்கம், நீதி, நிர்வாகம் என்பனவற்றின் சுதந்திரமான இயக்கத்தில் அரசாங்கம் விட்டு விடவேண்டும். இங்கு கட்சி அரசியல் செய்யமுடியாது. லால் கந்த கூறுவது போன்று சிறிலங்கா ஜனநாயக சோஷலிசக்குடியரசை மக்கள் ஜே.வி.பி.க்கு குத்தகைக்கு விடவில்லை. அரசு என்பது எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கியது. லால் கந்தவின் கருத்து தனிக்கட்சி ஆட்சியை கோரி நிற்கிறது. கடந்த ஒன்றரை வருடத்தில் இந்த ஆட்சி எவ்வளவு பலவீனமாகி இருக்கிறது என்பதற்கு இது சான்று.
பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பு அறுதிப்பெரும்பான்மையை பெற்றிருந்த காலங்களில் இந்த எதேச்சிகாரப்போக்கு எப்போதும் இருந்துள்ளது. இது மக்கள் வழங்கிய ஜனநாயக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். 1970, 1977, 1989 மற்றும், ராஜபக்சாக்களின் காலங்களிலும், இன்றைய ஜே.வி.பி/ என்.பி.பி. ஆட்சியிலும் இது தொடர்கிறது. ஜே.வி.பி.யின் இந்த எதேச்சாதிகார போக்குக்கு எதிராக பாராளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தாங்கள் வழங்கிய ஆதரவை மீளப்பெறத்தொடங்கினர். இன்றைய நிலையில் ஆட்சியாளர்களுக்கான மக்கள் ஆதரவு தென்னிலங்கையிலும், வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் குறைந்து விட்டது. இதனால் தான் சட்டச் சிக்கலுக்குள் மாகாணசபை தேர்தல் முறையை இழுத்து மாகாணசபைத்தேர்தலை நடாத்தாமல் அரசாங்கம் இழுத்தடிக்கிறது.
நாமல் ராஜபக்சவின் நுகேகொட பொதுக்கூட்டம், ரணில் -சஜீத் இணைவில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம், வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு, தமிழரசு -முஸ்லீம் காங்கிரஸ் புரிந்துணர்வு அதிகரிப்பு, சிவப்பு லேபல் கொள்கலன்கள் விடுவிப்பு ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல், ஜே.வி.பி.தொழிற்சங்க தலைவருக்கு குறைந்த ரெண்டரில் சொகுசு வாகமொன்றை விற்பனை செய்தது, சில அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு முறையீடுகள், ஈஸ்டர் படுகொலைகள் விசாரணையில் ஏற்படாத முன்னேற்றம், ஐ.எம்.எப். நிபந்தனைகளுக்கு ஊடாக பயணிக்கவேண்டிய கட்டாய அழுத்தம்……
மேலும் அரசாங்க தரப்பில் வெளிப்படத்தன்மையின்மை, அனுபவமின்மை என்பனவற்றால் இடம்பெறும் தவறுகள் -அரச சொத்து வீண்விரயங்கள் காரணமாக அரசாங்கத்திற்கான ஆதரவு ஒன்றரை ஆண்டில் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனை பாதிக்கப்பட்ட தரப்புக்களின் -அவர்களைப்பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களின் கருத்துக்களை கேளாது -அவர்களோடு பேசாது ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுத்து அரசாங்கம் செயற்படுகிறது. இதனால் ஒரு திட்டத்தை அறிவிப்பதும் மீளப்பெறுவதும், பின் போடுவதும், இன்னொன்றை அறிவித்து திசைகாட்டுவதும், அதிகாரிகளை குற்றம்சாட்டுவதும், பதவிவிலக அழுத்தம் கொடுப்பதும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஜனநாயகத்திற்கு முரணாக பெரும்பான்மையை பயன்படுத்தும் போக்கு கணக்காய்வாளர் நாயக நியமன இழுபறியில் தொடங்கி, பாராளுமன்ற உதவி செயவாளர், சட்டமா அதிபர் வரை வந்து நிற்கிறது. கடந்த காலங்களில் வேலை நிறுத்தங்களுக்கு பின்னால் ஜே.வி.பி. ஒழிந்திருந்தது. ஜே.வி.பி ஆட்சியில் அவர்கள் தொழிலாளர் நலன் சார்ந்து செயற்படுவார்கள் வேலை நிறுத்தங்கள் இடம்பெறாது என்று நம்பிய மக்களுக்கு ஜே.வி.பி. நம்பிக்கை துரோகம் செய்துள்ளது.
(சு) தந்திர தின கொண்டாட்டத்திற்கு வெளிநாட்டு தலைவர்கள் அதிதியாக அழைக்கப்படவில்லை. ஆகக்குறைந்தது இந்தியா, சீனாவில் இருந்தும் இல்லை. இது மேற்குலகுடன் அரசியல் வியாபாரம் செய்வதற்கும், மறு பக்கத்தில் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய குடியரசு தினத்தில் வழங்கப்பட்ட முக்கியத்துவத்திற்கும் அநுர அரசாங்கம் வழங்கும் (சு) தந்திர நகர்வு. மற்றொரு காரணம் இன்றைய நிலையில் வெளிநாட்டு தலைமைகள் அழைக்கப்பட்டால் அநுர ஆட்சியின் ஜனநாயக மறுப்பும், இனப்புறக்கணிப்பும், மதவேறுபாட்டு செயற்பாடுகளும், சட்டம், நீதி, நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகளும் அம்பலமாகிவிடும். இதனால் அரசாங்கம் தற்பாதுகாப்பு ஏற்பாடாக இதை செய்துள்ளது என்றே கொள்ளவேண்டும். அதில் ஒன்று தான் அத்தியாவசிய சேவைகள் பிரகடனப்பட்டியல்.
எப்படியிருப்பினும் அநுர அரசாங்கத்திற்கும் இந்தியா, சீனாவுக்குமான உறவு வெறுமனே பொருளாதார நலன்கள் சார்ந்த உத்தியோகபூர்வ அரசாங்கங்களுக்கு இடையிலானது. ஜே.வி.பி.யை இந்தியாவும், சீனாவும் முதலாவது கிளர்ச்சியில் இனம்கண்டு கொண்டவை. பண்டாரநாயக்கா, ராஜபக்ச குடும்பங்களுக்கும் இந்தியா, சீனாவுக்குமான உறவு ஜே.வி.பி.கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட காலத்தையும் விஞ்சிய நீண்டகால நட்புறவு. இந்த வேறுபாட்டை இலங்கையின் பூகோள அரசியல் எப்போதும் வெளிப்படுத்தும். சீன உல்லாசப்பிரயாணிகளான சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்சவை அதிகாரம் அற்ற நிலையிலும் வீடு தேடிச்சென்று சந்திக்கிறார்கள் என்றால், அரசாங்க, பிரதான எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களை தவிர்த்து நாமல் ராஜபக்ச இந்திய குடியரசு தினத்தில் பிரதமர் மோடியுடன் கை குலுக்குகிறார் என்றால் அதன் பின்னணியில் உள்ள அரசியல் செய்திதான் (சு) தந்திரதினத்திற்கான இலங்கை மக்களுக்கான இந்தியாவினதும், சீனாவினதும் செய்தி.
