‘ஈழத்துச்சிறை’ கவிதை நூல் (பகிர்வுகள்- பகிர்வு – 04)

‘ஈழத்துச்சிறை’ கவிதை நூல் (பகிர்வுகள்- பகிர்வு – 04)

(‘அரங்கம்’ கலை இலக்கியப் பத்தித்தொடர்)

 — செங்கதிரோன் —

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் மகுடம் கலை இலக்கிய வட்டமும் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடர் – 62 ஆக, கவிஞர் வில்சன் சுதாகரின் ‘ஈழத்துச்சிறை’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 12.10.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நூலின் சிறப்புப் பிரதியொன்றினைப் பிரதம விருந்தினர் பேராசிரியை திருமதி.லோரன்ஸ் பாரதிகென்னடி (பணிப்பாளர் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு) அவர்களிடமிருந்து பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

‘ஈழத்துச்சிறை’ நூல் முழுவதையும் படித்து முடித்தபோது இப்பகிர்வை இடவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

தமிழ்க்கவிதையுலகில் ‘புதுக்கவிதை’ப் போக்கு வந்த பின்னர் புற்றீசல் போலப் புறப்படும் புதுக்கவிதைத் தொகுதிகளுக்குப் பஞ்சமேயில்லை. வாக்கியத்தை முறித்துப் பின் வரிசையிலே வைத்து ஆக்கியதால் வந்த சொல்லடுக்கைத்தான் சோக்கான கவிதையெனச் சோடித்துக் காட்டும் போக்கே அனேகமான கவிதைத் தொகுதிகளை ஆக்கிரமித்திருக்கும். அல்லது நுகர்வோனுக்குப் புரியாத கவிதைமொழியால் புனையப்பெற்றதும் அதற்குப்போய் படிமம் – குறியீடு என வியாக்கியானம் செய்கின்றதுமானதொரு அவிழ்க்க முடியாத புரியாத ‘புதிர்’ப் போக்கிலிருக்கும். ஆனாலும் கவிதைத்தொகுப்பின் தலைப்பும் அட்டைப்படமும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். உள்ளே ஒன்றுமிருக்காது. கவிதை என்ற பெயரில் ஏதோ வார்த்தைகள் வரிசையில் அடுகப்பட்டிருக்கும். ஆனால் அதில் கவித்துவம் இருக்காது. எனது அனுபவங்கள் இதுவரையில் அனேகம் இப்படித்தான் இருந்துவருகின்றன. ஆனாலும் எழுத்தை ஊக்குவிக்க வேண்டுமென்ற காரணத்தால் நூலின் தரம் பார்க்காமல் அனேகமாக எல்லா நூல்வெளியீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவே முயற்சிப்பேன். விரும்புவேன்.

எனினும், ‘ஈழத்துச்சிறை’ எனும் நூலின் எனது வாசிப்பனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தது. அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற அவாவின் விளைவே இப்பதிவு.

கவிதைக்கு ஒசை – சந்தம் அதாவது தொடரோசை முக்கியமானது. ஓசையில்லாதது கவிதை இலக்கியமாகாது. ‘புதுக்கவிதை’க்கு ஓசை ஒரு பொருட்டல்ல என்பதுதான் பொதுவிதி. ‘புதுக்கவிதை’ என அழைக்கப்பெற்றாலும்கூட ‘புதுக்கவிதை’ வடிவத்தை ‘பா’ (கவிதை) இலக்கியமாகப் பார்க்க முடியாது. ‘புதுக்கவிதை’ என்பது உரைநடையின் ஒரு உன்னதமான வளர்ச்சியே. அது கவிதை இலக்கியமாகாது. கவிதை ஒரு இறுக்கமான ஊடகம் என்பதால் இறுக்கமான உரைநடையெல்லாம் கவிதையாகிவிடமாட்டாது. ஆனாலும் இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி புதுக்கவிதை வடிவம் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செல்வாக்குச் செலுத்தும் நிலையிலும் உள்ளது என்பது உண்மையே. காரணம் கவிஞர்கள் என அழைக்கப்படும் அனேகமானவர்கள் ‘புதுக்கவிதை’ யாளர்களாக இருப்பதால் – பெரும்பான்மையாக இருப்பதால் ஜனநாயகம் வென்றுள்ளது.

ஓசை இல்லாமல் உரைநடையிலமைந்த இறுக்கமான வரிகளுக்குக் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள பொருத்தமான பெயர் ‘பொழிச்சல்’ என்பதாகும். ‘பொழிச்சல்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு நூலொன்றையும் அவர் தந்துள்ளார்.

இந்தப் பின்புலத்திலேயே ‘ஈழத்துச்சிறை’ நூலிலுள்ள ஆக்கங்களைப் படித்தேன்.

இந்நூலிலுள்ள அத்தனை ஆக்கங்களிலும் ஈழத்தின் அரசிருக்கையில் எப்போதும் அமர்ந்திருக்கின்ற பௌத்த – சிங்கள பேரினவாத அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையின் கீழ் இந்நூலாசிரியர் அனுபவித்த அவலமான அனுபவங்களும் – அவ் அனுபவங்கள் தந்த உள – உடல் வலிகளும் எந்தவிதமான சோடிப்புமின்றி நேர்மையாகவும் – உண்மையாகவும் – ஒளிவு மறைவின்றியும், – ஓர்மத்துடனும் உணர்வு வெளிப்பாடுகளாக வெடித்துக் கிளம்பியுள்ளன. நூலாசிரியரின் அனுபவங்கள் அனைத்துத் தமிழர்களுக்கும் ‘பொதுமை’யே.

தனது அனுபவங்களையும் – அந்த அனுபவங்கள் தந்த வலியையும் – கொடுமைகண்டு கொதிக்கின்ற தனது தர்மாவேசத்தையும் தனக்கு வாலாயமான ஒரு வடிவத்தில் வார்த்தைகளில் கொட்டித் தீர்த்திருக்கிறார். அந்த வடிவம் கவிதையா இல்லையா என்ற கேள்வி இங்கு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்கும் மேலாக உணர்வுவெளிப்பாடுகளின் உண்மைத்தன்மைதான் ஓங்கி நிற்கிறது. இதுதான் வில்சன் சுதாகரின் வெற்றி.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சு. சிவரெத்தினம், ‘தனது கோபத்தை அல்லது உளவெளிப்பாட்டை வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருடைய கவிதையில் தெரிகின்றது. இந்தக் கோபத்துக்கு முன்னால் அவருக்கு கலைவடிவம் அதன் நியமம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த வகையில் ஒரு கலைஞருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஆத்மார்த்த கோபம் வில்சன் சுதாகருக்கு நிறையவே உண்டு’ எனக் கூறியுள்ளமை அச்சொட்டாகப் பொருந்துகிறது.

அதேபோன்று இத்தொகுதியிலுள்ள ஆக்கங்களைப் படித்து (அமரர்) கவிஞர்.சண்முகம் சிவலிங்கம் 15.02.2002 இல் அளித்துள்ள அணிந்துரைக் குறிப்பில் கூறியுள்ளவாறு வில்சன் சுதாகரின் மொழிநடையில் ‘மழலையின் அழகையும்’ அதாவது வஞ்சகமில்லாத வார்த்தைப் பிரயோகங்களையும் அதேபோன்று ‘முதிரா நாம்பனின் அழகையும்’ அதாவது பயமறியாத இளங்கன்றின் தீவிரத்தையும் – துணிவையும் – துள்ளலையும் தரிசிக்கவும் ரசிக்கவும் முடிகிறது.

ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல உதாரணத்திற்குச் சில வரிகள்.

‘இருந்தும் நான் எனது எல்லையை

கடந்தாக வேண்டும்.

நான் விரைகின்றேன்.

எல்லைக் காப்பரண் நெருங்குகிறது.

துப்பாக்கி முனை மிரட்டுகிறது

எனது கைகளை, இடுப்பைத் தட்டுகிறது.

நான் தடுக்கப்படுகிறேன்

‘நீ யார்?’

‘நான் மனிதன்’

‘எங்கே போகிறாய்?’

‘எனது தாய் நிலத்திற்கு’

‘உன் தொழில்?’

‘அடிமை தனத்திற்கு எதிராய் கவிதை எழுதுவது’

‘உன் பெயர்?’

‘தமிழன்’

பின்பு அவன் கேள்வி கேட்கவில்லை

காலையில் பத்திரிகையில் செய்தி வந்தது

ஒரு புரட்சிக் கவிஞன்

பாரிய அடிகாயங்களுடன்

பற்றைக்குள் இருந்து மீட்பு!!’

மொத்தத்தில் புற்றுக்குள்ளிருந்தீசல் புறப்பட்டு வந்ததுபோலும் கொட்டும் குளவிக் கூட்டைக் கலைத்ததுபோலும் தமிழ்க் கவிதைப் பரப்பில் எட்டுத் திக்குகளிலுமிருந்தும் வந்து குவியும் – மலியும் ‘புதுக்கவிதை’க் குவியல்களுக்கு மத்தியில் மின்னும் குண்டுமணிகளிலொன்றாகவே வில்சன் சுதாகரின் ‘ஈழத்துச் சிறை’ நூலை நோக்குகின்றேன். இந்நூலினூடாக வெளிப்படும் அவரது தமிழின நேசிப்பிற்கும் தாய் மண் பற்றிற்கும் தலை வணங்குகின்றேன்.