— அழகு குணசீலன் —
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி/என்.பி.பி. அரசாங்கத்திற்கு எதிராக ‘மாபெரும் மக்கள் குரல்’ என்ற தொனிப்பொருளில் 17 எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு அரசாங்க எதிர்ப்பு பேரணியை நடாத்தியிருக்கின்றன. இந்த பேரணி இவ்வளவுக்கு எடுபடும், முக்கியம் பெறும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. அரசாங்க தரப்பில் இருந்து இது குறித்து ‘நையாண்டி மேளமே’ அடிக்கப்பட்டது. இப்போது பேரணிக்கு திரண்ட மக்கள் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அந்த செய்திதான் என்ன…..?
இந்த பேரணியில் ஆற்றிய உரைகளில் கவனிக்கத்தக்கது என்னவெனில் அரசாங்கத்தின் ஊழல், இலஞ்ச ஒழிப்பு, போதைவஸ்து ஒழிப்பு என்பன குறித்து எதிரணி வாய் திறக்கவில்லை. இது விடயத்தில் ‘ரட்ட எக்கட்ட’ என்ற கோசத்தை எதிரணி விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியேயும் இருந்திருக்கின்றது. இது எதிர்க்கட்சிகளின் நிலை மட்டும் அன்றி அந்த கட்சிகளின் ஆதரவாளர்களினதும், மக்களினதும் நிலை அதுதான். அப்படியானால் எதற்காக எதிர்பாராத அளவுக்கு அந்த பேரணிக்கு மக்கள் கூடினார்கள்…..? சாராயம், சாப்பாடு, ஏற்றி இறக்கல் எல்லாம் ….. அரசியல் நோக்கில் வெறும் நொண்டிச்சாட்டுக்கள். இவற்றை தேர்தல் காலத்தில் செய்யாத கட்சிகள் இருந்தால் சொல்லுங்கள்?
அரசியல் நோக்கில் இந்த எதிர்ப்பு பேரணி அரசாங்கத்தின் ஒரு வருட கால ஆட்சிக்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் வழங்கி இருக்கின்ற மதிப்பெண். அதற்காக அரசாங்கம் ‘பெயிலாகி’ விட்டது என்பதும் அல்ல. இது பரீட்சை எழுதிவிட்டு பாஸ் பண்ணுவேன் என்று மட்டும் அல்ல வெட்டுப்புள்ளியையும் தாண்டுவேன் என்று முடிவை எதிர்பார்த்து இருந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், உறவினருக்கும், ….. கிடைத்திருக்கின்ற அதிர்ச்சி போன்றது. அநுர அரசாங்கம் அதிக புள்ளிகளை இழக்கவில்லை. ஆனால் கணிசமான அளவு இழந்திருக்கிறது/ இழந்து கொண்டிருக்கிறது. உள்ளுராட்சி, கூட்டுறவு சங்க தேர்தல்கள் கிராமிய மட்டத்தில் இந்த தகவலை ஏற்கனவே தந்துள்ளன. மாகாணசபை தேர்தல் இழுத்தடிப்பு இதன் தொடர்ச்சி.
இந்தப் பேரணிக்கான மக்கள் ஆதரவு ஜே.வி.பி- என்.பி.பி. அரசாங்கம் கடந்த ஒரு வருடப் பயணப்பாதையை திரும்பிப்பார்க்க வேண்டும் என்று கோருகிறது. தொடர்ந்தும் அதே பாதையில் பயணிக்கையில் சிக்னல் பச்சையில் இருந்து ஒரேஞ்சுக்கு மாறப்போகிறது என்று எச்சரிக்கிறது. ஏற்கனவே அநுர அரசாங்கம் “இடது பக்கம் சிக்னல் போட்டு வலது பக்கம் திரும்புகிறது’ என்று வெளிச்சம் பதிவிட்டிருப்பதை இங்கு நினைவுபடுத்த முடியும்.
இந்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்ற காலப்பகுதி அதன் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறது என்றே கொள்ளவேண்டும். என்.பி.பி. ஒரு இடதுசாரி கட்சியாக ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகள் நடைமுறைச் சாத்தியமற்றவை. இதை எதிர்க்கட்சிகள் அப்போதே சொல்லியிருந்தன. அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி பிராந்திய, சர்வதேச பூகோள பொருளாதார, அரசியல் அழுத்தங்களில் இருந்து விலகி இருக்க முடியவில்லை. ஏன்? சிங்கள, பௌத்த பேரினவாத அழுத்தத்தை விரும்பியோ, விரும்பாமலோ தட்டிக்கழிக்க முடியாத நிலையில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் உள்ளனர், என்பதற்கு கடந்த ஒரு வருடத்தில் பல நிகழ்வுகளை பட்டியலிடமுடியும்.
மறுபக்கத்தில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைத் தேர்தல், ஜெனிவாவில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, காணி – குடியேற்ற கொள்கைகள்…… போன்ற வற்றிற்கு கவனம் செலுத்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் ‘செலக்கிரிவ்’ ஆக உள்ளனவே அன்றி இலங்கையின் பெரும்பாலான சாதாரண மக்களை சென்றடையவில்லை.
நாளும் பொழுதும் ஆளுக்கொரு காரணங்களை ஒன்றுக்கு பின் ஒன்றாக, முரண்பாடாக தெரிவித்து உள்வீட்டு பூதங்களே வெளிவருகின்றன. தமிழரசுக்கட்சி சந்திப்புக்கு திகதி கோரி எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்க கூட ஜனாதிபதிக்கு நேரமிருக்கவில்லை. தென்னிலங்கையில் காணாமல் போனவர்களின் நினைவு நிகழ்ச்யில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்புக்கு பதிலும் இல்லை. பங்கேற்கவும் இல்லை. முத்துநகர் மக்கள் கொழும்புக்கு வந்து திரும்பிப்போய் இருக்கிறார்கள். மன்னாரில் காற்றாலை விவகாரம் ஆயரைக்கொண்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழரசின் நல்ல காலம்(?), அதிஷ்டம்(?) சாணக்கியனின் தந்தையின் மரணம். அங்குதான் வரவு – செலவுத்திட்ட வேலைப்பளுவை காரணம் காட்டிய சந்திப்புக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஜனாதிபதியின் செயலாளரே “கடிதம் கிடைத்தது. வரவுசெலவுத்திட்ட வேலைகள் முடிவடைந்த பின்னர் சந்திப்போம்.” என்று ஒரு கடிதம் எழுதுவதற்கு இத்தனை பூச்சூடல்கள், சுத்தல்கள். இதனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி – தமிழரசு உறவில் அரசாங்கமே விரிசல் ஏற்பட காரணமாக இருந்தது. பின்னர் வரவு -செலவுத்திட்ட ஆதரவுக்காக பேச்சுக்கு திகதி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விளையாட்டு முறைமை மாற்றத்தில் எந்த வகைக்குள் அடங்கும்?
நுகேகொட கூட்டத்தின் எதிர்பாராத அரசியல் திருப்பம் கூட்டத்தில் இருந்து ஒதுங்கியிருந்த சஜீத் பிரேமதாசவுக்கும். தலையைச் சுற்றுகிறது. அந்த இழப்பை ஈடுசெய்ய திருகோணமலை விவகாரத்தை கையில் எடுத்தார் அவர். பேரணி அதிர்ச்சி, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்த சஜீத்தின் பஞ்சசீலம், பௌத்த பீடாதிபதி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் எல்லாம் கல்லும் தேங்காயுமாக சந்திக்க அகற்றப்பட்ட புத்தர் சிலை மீள நிறுவப்பட்டது. மக்கள் பார்வையில் வைத்தவர் சமன் அகற்றியவர். அகற்றியவர் சமன் மீள வைத்தவர். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் இனவாதிகள்.
சஜீத் பிரேமதாச ஒரு பலவீனமான அரசியல் தவைமைத்துவம். துணிச்சலான முடிவுகளை எடுக்கும் தலைமைத்துவ பண்பும், ஆளுமையும் அவரிடம் இல்லை. இதை நல்லாட்சி மற்றும் கோத்தபாய காலத்தில் இருந்து மக்கள் அறிவார்கள். இல்லையேல் தனியொரு ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிரதமராகி – ஜனாதிபதியாகி இருக்கமுடியும். தலஸ் அழகப்பெருமவை கடைசி நேரத்தில் சம்பந்தரின் நற்சான்றிதழுடன் பிரதமர் வேட்பாளராக்கிய பலவீனம் இதில் மற்றொரு வெட்கக்கேடு.
இப்போது இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜீத் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். குறைந்த உறுப்பினர்களுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சியை எதிர்கொள்ளும் எதிரணி அரசியல் தலைவராக நாமல் ராஜபக்சவை நுகேகொட முன்னுக்கு தள்ளியுள்ளது. நாமலை முன்னுக்கு தள்ளியதில் அநுர, சஜீத், ரணில் பலவீனம் பெரும் பங்கு வகித்திருக்கிறது. இந்த பின்னடைவை தனித்தா, சேர்ந்தா சஜீத் முன் நகர்த்தப்போகிறார் என்பதுதான் இன்றைய அரசியல் நொடி.
நுகேகொட பேரணி கொடுத்த அதிர்ச்சியில், திருகோணமலை இனவாதத்தை மறைக்க சிறுபான்மை கட்சிகளுக்கு ஜனாதிபதியினால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு மனோ கணேசன் இலங்கையர் ஆவதில் பிரச்சினை இல்லை அதற்கு முன்னர் சிறுபான்மை தேசிய இனங்களின் சம அந்தஸ்து, தனித்துவம், பன்மைத்துவம், அதிகாரப்பகிர்வு என்பன அதிலும் முக்கியமானவை என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டால் ‘இலங்கையர் விழா ‘ என்ற பட்டாசு எதற்கு என்ற தொனியில் மனோவின் கருத்து அமைந்துள்ளது.
இந்த இலங்கையர் விழா சந்திப்பு சஜீத்தின் புத்தர் சிலை தொடர்பான கருத்துக்களுக்கு ஜனாநிபதி வழங்கிய பதில். எதிரணி கூட்டணியில் இருந்து சிறுபான்மை கட்சிகளை பிரித்து ஐக்கிய மக்கள் சக்தியின் -சஜீத்தின் விரலை கொண்டு சஜீத்தின் கண்களை குத்துவது. இதற்கிடையில் மேலும் பேரணிகளுக்கு அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் திட்டமிடுகின்றன
நுகேகோட, இலண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. அதுதான் திருகோணமலையை அரசாங்கம் கையாண்ட அணுகுமுறை ரில்வின் சில்வாவின் தலையில் விடிந்திருக்கிறது. ரில்வின் சில்வாவின் சிறுபான்மை தேசிய இனங்களை – பன்மைத்துவத்தை நிராகரிக்கும் சீனப்பாணிக்கு இலண்டன் தமிழர்கள் சிவப்பு கொடி காட்டியிருக்கிறார்கள். ரில்வின் பயணித்த ஆடம்பரக்காரில் புலிக்கொடியை கட்டாத குறை.
ஆக, இலஞ்ச ஒழிப்பும், போதைப்பொருள் ஒழிப்பையும் மிஞ்சிய எங்கள் வாழ்வாதார பிரச்சினைகளும், பொருளாதார, சமூகப்பிரச்சினைகளும் தங்கள் வீட்டுக்கதவை தட்டுகின்றன என்று மக்கள் கருதுகிறார்கள். ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று சாதாரண கிராமிய விவசாயிகள், மீனவர்கள், தினக்கூலிகள்…. கருதுகிறார்கள். குற்றவாளிகள், ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவதை விடவும், சிறையில் அடைக்கப்படுவதை விடவும் தங்களின் வீடுகளில் மூன்று வேளையும் அடுப்பு எரிவதற்கு வழியில்லாமல் இருப்பது அவர்கள் பிரச்சினையாக உள்ளது.
தமிழ், முஸ்லிம், மலையக மக்களைப் பொறுத்தமட்டில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்தீர்வும், அதிகாரப்பகிர்வும் அவசியமாகிறது. இதற்கு அரசாங்கம் இன்னும் தயாரில்லை. கடந்த ஒரு வருடத்தில் சொல்லப்பட்ட காலக்கெடுக்களும், காரணங்களும் பொய்யானவை. காலம் கடத்தல்கள்.
சஜீத் முயலாக நினைத்து முந்தி ஓடி படுத்து தூங்க, நாமல் ஆமையாக சஜீத்தை முந்தி விட்டார். முயல் சிங்கத்தை இனவாத கிணற்றடிக்கு இழுத்துக்கொண்டு போகிறது. ஆளுந்தரப்பு ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க முயலை நம்பி இனவாதக் கிணற்றில் விழுந்தால் அது சிங்கத்திற்கு ‘அரசியல் அதிகார தற்கொலை‘. சிங்கம் ஆமையையும், முயலையும் தனது இராட்சத பாராளுமன்ற பலத்தை பயன்படுத்தி இரையாக்கினால் அது ‘அரசியல் ஜனநாயக கொலை ‘.
