— அழகு குணசீலன் —
இந்த நாட்டில் இனிமேலும் இன, மத வாதங்களுக்கு இடமில்லை. இனவாதிகளை சட்டம் சும்மாவிடமாட்டாது. இருக்கின்ற சட்டங்கள் போதாது என்றால் மேலும் சட்டங்களை கொண்டு வந்து இனவாதிகளை உள்ளே தள்ளுவோம்…….” இந்த வார்த்தைகள் கடந்த ஒருவருட காலத்தில் சிறுபான்மை தேசிய இனங்களின் காதுகளை தட்டிய இனிப்பான செய்திகள். ஆனால் இதே வார்த்தைகள் பேரினவாதிகளுக்கு கசப்பான செய்தியையே சொல்லி இருக்கின்றன என்பதை திருகோணமலை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இன்னும் சொன்னால் இந்த வார்த்தைகளில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் சந்தேகமும், நம்பிக்கையும் இழந்திருந்த சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் நம்பிக்கையீனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. யாரைத்தான் நம்புவது……?
கடந்த வாரம் திருகோணமலையில் இடம் பெற்ற புத்தர்சிலை விவகாரத்தை நோக்கினால் இன, மத வாத அரசியல் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்திற்காக கட்சிகளும், ஆட்சியாளர்களும் விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகவே உள்ளதை அவதானிக்க முடியும். அவர்களின் பக்கத்தில் அவர்கள் பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டியவர்களாக, தேர்தல் அரசியலில் அவர்களில் தங்கியிருப்பவர்களாக உள்ளனர். எவ்வளவுதான் சமூக நீதி, சட்டவாட்சி பற்றி பேசினாலும் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பதே இலக்காக இருக்கிறது. அந்த அதிகாரத்திற்காக இன, மத வாதிகளுடன் ஆட்சியாளர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள்.
1. திருகோணமலை மாநகரசபை அதிகாரத்திற்குட்பட்ட கடலோர பாதுகாப்பு பிரதேசத்தில் மாநகரசபையின் சட்டரீதியான நிர்மாண அனுமதியின்றி புத்தர்சிலை ஒன்று இருட்டில் நிறுவப்பட்டது
.2. இந்தச் சட்டத்திற்கு முரணான செயற்பாடு உள்ளூர் அரசியல் வாதிகளின் கவனத்திற்கும், பொலிசாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டபோது அந்த சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டது. என்.பி.பி. அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் கடந்த கால வார்த்தைகளை நம்பிய சிறுபான்மை மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கை பாராட்டைப்பெற்றது.
3. மறுநாள் பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால “பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டது என்றும், மீண்டும் அகற்றியவர்களால் அதே இடத்தில் இது நிறுவப்படும்”என்றும் அறிவித்தார். ஆக சட்டரீதியற்ற வகையில் அமைக்கப்பட்டு பொலிசாரால் அகற்றப்பட்ட அந்த சிலை அரசாங்க ஆசீர்வாதத்துடன் மீண்டும் அங்கு அமைக்கப்படுகிறது. வழமையாக வடக்கு, கிழக்கில் சட்டரீதியற்ற நடவடிக்கைகளை கொழும்பு அரசாங்கங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
4. எதிர்க்கட்சித்தலைவர் சஜீத் பிரேமதாசா தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்/ தமிழரசின் சிபார்சின் பேரில் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு தனது பௌத்த பேரினவாத உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். சட்டத்திற்கு முரணான இந்த சிலை நிறுவல் விவகாரத்தை “பூஜா பூமியில் இப்படி நடக்கமுடியுமா?” என்றும் அரசியலமைப்பின் இரண்டாவது சரத்தை சுட்டிக்காட்டியும் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தினார். சிங்கள பௌத்த பேரின வாதத்திற்கு அடிபணிந்த அரசாங்கம் அதே இடத்தில் சிலை மீண்டும் நிறுவப்படும் என்ற செய்தியை அறிவித்தது. சட்டரீதியற்ற வகையில் நிறுவப்பட்ட சிலையைத்தான் பொலிஸார் அகற்றினர் என்று வாதிடவேண்டிய சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டதாக கூறி எங்களுக்கு என்ன? பௌத்த பாசம் இல்லையா? உங்களுக்கு மட்டும் தானா? என்பதுபோல் சஜீத் பிரேமதாசவுக்கு அமைச்சர் ஆனந்த விஜயபால பதிலளித்தார். இத்தனைக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தளபதி , அதிகாரத்தை மக்களுக்காகவே பயன்படுத்துவேன் என்று கார்த்திகை வீரர்கள் தினத்தில் ரோகண விஜயவீரவின் நிழற்படத்தின் முன்னாள் சத்தியம் செய்தவர். அவர் கூறிய மக்களுக்கான அதிகாரம் சிங்கள, பௌத்த மக்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதா…..?
5. பொதுஜன பெரமுன, ஐக்கிதேசியக்கட்சி உள்ளிட்ட மேலும் சில சிறிய கட்சிகளின் ஏற்பாட்டில் நவம்பர் 21 ம்திகதி இடம்பெற்ற நுகேகொட பேரணிக்கு ஆதரவு திரட்டும் எதிர்கட்சிகளின் இன, மதவாத சதி அரசியல் இது என்று அரசாங்கம் கூறுகிறது. கடந்த கால இனவாத அரசியலில் இந்த கூற்றை முற்றாக நிராகரிக்கமுடியாது. ஆனால் பேரணியையும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் கையாள அரசாங்கம் அதே இடத்தில் சிலையை நிறுவ எடுத்த தீர்மானம் சரியானதா? இன, மத வாதம் என்று வந்தால் அதற்கு எதிராக சமூக நீதியுடன் செயற்பட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள ஒரு இடதுசாரி (?) அரசாங்கம் பலவீனமானதாகவே உள்ளதா…? எதிர்க்கட்சிகளின் இனவாத அரசியலை தானும் இனவாத அரசியலால் கையாள நினைக்கிறதா? ஆக, நாங்கள் பண்டா -செல்வா , ஜே.ஆர். ஜயவர்த்தனவின் களனி யாத்திரை….. காலத்திற்கு அல்லவா திரும்பியிருக்கிறோம்.
6. சிங்கள, பௌத்த தேசிய வாதத்திற்கு சற்றும் குறையாத தமிழ்த்தேசிய வாதம் இந்த விவகாரத்தை சஜீத் பிரேமதாச போன்று ஊதிப்பெருப்பித்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால் பெரும்பான்மை அரசாங்கமே இந்த விவகாரத்தை கையாள முடியாமல், செயலில் இனவாதிகளுக்கு சார்பான தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில், தமிழ்த்தேசிய வாதிகளுக்கு சகல விமர்சனங்களுக்கும் அப்பால் உள்ள வேறு மாற்று அணுகுமுறை என்ன? இது விடயத்தில் சாணக்கியனின் பாராளுமன்ற உரையை ஜனாதிபதி – தமிழரசு சந்திப்பின் போது அநுரகுமார திசாநாயக்க பாராட்டியதாக தெரிகிறது. எம்.ஏ.சுமந்திரன் வெளியுறவு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உட்பட வடக்கு கிழக்கு என்.பி.பி.தமிழ் எம்.பி.க்கள் உடனடியாக இராஜினாமாச் செய்யவேண்டும் என்று அவரது பாணியில் கட்டளையிட்டுள்ளார. அப்படியானால் 2010 முதல் சுமந்திரன் அன் கோ எத்தனை தடவைகள் இராஜினாமாச் செய்திருக்கவேண்டும் என்பதை எண்ணிக்கணக்கெடுப்பது சிரமமானது. அதே வேளை அருணின் கரங்கள் மட்டும் அல்ல தேசிய கட்சிகளின் பங்காளிகள் அனைவரதும் கரங்களும் கட்டப்பட்டுத்தான் உள்ளன என்பதும், அருண் ஹேமச்சந்திரா பெலவத்தைக்கும் கொழும்பு அதிகார பீடங்களுக்கு இடையில் சிக்கியுள்ள நிலையில் இதற்கு மேலும் அவரால் செயற்படமுடியாது. முத்துநகர் விவகாரத்தில் அவரின் மௌளனம் …. அவரின் அரசியல் பயணப்பாதையை வரையறுக்கிறது என்று அண்மையில் அரகலய போராட்ட போராளி ஒருவர் கூறியிருந்தார்.
ஒட்டு மொத்தத்தில் இனவாதத்தை , இனவாதத்தால் அணுகுகின்ற அரசியலே நிலவுகிறது. இது பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் அணுகும் முறை போன்றது. ஆபத்தானது. இதனால் புத்தர் திருகோணமலயின் கடற்கரையோரப்பாதுகாப்பு வலையத்தில் தற்காலிகமாக குடியேற்றப்படவில்லை என்பதே உண்மை. திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளார். அந்த இடம் விரைவில் அவரின் நிரந்தரவதிவிடமாகவும் மாறும். திருகோணமலை வாக்காளர் பட்டியலில் புத்தரின் பெயர் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இனவாத வாக்குச்சேகரிப்புக்கு அவர் தனது பங்களிப்பை செய்யாமலா? இருக்கப்போகிறார். இதற்காகவே அரச, எதிர்த்தரப்புக்கள் போட்டியிட போதாக்குறைக்கு தமிழ்த்தேசியமும் கொஞ்சம் பிச்சிபிடுங்க பார்க்கிறது.
இதைத்தான் “மத குருமார்களின் ஆதிக்கம் மக்களின் அறியாமை….” என்றாரா? மதம் ஒரு வெறி -போதை என்றால் போதை ஒழிப்பில் இந்த போதையும் ஒழிக்கப்பட வேண்டியதல்லவா…?
