மாகாணசபை தேர்தல்கள்: தெற்கிலும் வடக்கு, கிழக்கிலும் அண்மைக்காலமாக தீவிரமடையும் கோரிக்கைகள்

மாகாணசபை தேர்தல்கள்: தெற்கிலும் வடக்கு, கிழக்கிலும் அண்மைக்காலமாக தீவிரமடையும் கோரிக்கைகள்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடம் நடத்துவது குறித்து அரசாங்கத் தலைவர்கள் அடிக்கடி செய்யும் அறிவிப்புகள் இன்னமும் கூட நம்பிக்கை தருபவையாக இல்லை என்ற போதிலும்,  தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள்  தென்னிலங்கையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வெவ்வேறு காரணங்களுக்காக  அண்மைய நாட்களாக  தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது  இவ்வருடம் மே மாதத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து அரசாங்கம் மக்கள் மத்தியில் ஆதரவை இழக்கத் தொடங்கிவிட்டதாக நம்பும் தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் அடுத்து நடைபெறக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கடுமையான  பின்னடைவை காணும் என்று எதிர்பார்க்கின்றன. அதனால் அவை இந்த வருடத்துக்குள்ளேயே மாகாணசபை தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் துணிச்சல் இருந்தால் மாகாணசபை தேர்தலை நடத்திக்காட்டுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. 

எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது அண்மைய எதிர்காலத்தில் மத்தியில் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்பதால் ஆட்சிமுறையின் அடுத்த அடுக்கான மாகாண சபைகளில் நிருவாகத்தைக் கைப்பற்ற வேண்டியது அல்லது கணிசமான ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டியது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அரசியல் அவசியமாக இருக்கிறது. அல்லாவிட்டால், ஏற்கெனவே கடுமையாகப் பலவீனப்பட்டிருக்கும் கட்சிக் கட்டமைப்புக்களை பேணிப்பாதுகாப்பது பெரும் சவாலாக அமைந்துவிடும். ஏதோ ஒரு மட்டத்திலாவது அதிகாரப் பதவிகளில் இருக்காவிட்டால் அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளுக்கு தொடர்ந்து விசுவாசமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அவை  முன்வைக்கும் கோரிக்கைக்கும் அதிகாரப்பகிர்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வாக்குறுதியளித்தார்கள். ஆனால்,  தற்போது அவர்கள் அதைப் பற்றி பேசாமல் வெறுமனே மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு தங்களது அரசியல் நலன்களுக்காக மாத்திரமே கோருகிறார்கள்.  

ஆனால், வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் கோரிக்கை வேறுபட்ட அடிப்படையைக் கொண்டது. மாகாண ஆட்சிமுறையை பாதுகாக்க வேண்டும் என்ற தீவிர அக்கறை ஓரிரு கட்சிகளை தவிர,   பெரும்பாலான தமிழ்க் கட்சிகளுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது. 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பது தொடர்பில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகள் மீது  நடவடிக்கைளை முன்னெடுப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டுவதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டிய இலங்கை தமிழரசு கட்சி அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கால அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. ஜனாதிபதி தமிழரசு கட்சியினரை அழைத்துப் பேசுவார் என்று இராமலிங்கம் சந்திரசேகர் போன்ற அமைச்சர்கள் ஊடகங்களிடம் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து பதில் எதுவும் வந்ததாக இல்லை. 

அதேவேளை, இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இருக்கின்ற ஒரேயொரு ஏற்பாடான 13 வது திருத்தத்தையும் மாகாண ஆட்சி முறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) வடக்கு,  கிழக்கில் அண்மைக்காலமாக கருத்தரங்குகளை நடத்திவருகிறது. 

 இணைந்த வடக்கு — கிழக்கு மாகாணத்தின் முதலும் கடைசியுமான முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாளும் இந்தியாவில் இருந்து வந்து மாகாண ஆட்சிமுறையை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விளக்கப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ்,  முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பல்கலைக்கழக சமூகத்தினர் உட்பட சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்திவருகிறார்.

இவ்வாறாக, நீண்டகால அலட்சியத்துக்கு பிறகு மாகாணசபை தேர்தல்கள் குறித்து தமிழ் அரசியல் சமுதாயத்தின் மத்தியில் ஒருவித  அக்கறை ஏற்பட்டிருப்பது நிச்சயமாக  வரவேற்கப்பட வேண்டியதாகும். 

இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உண்மை. அந்தக் காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் வெறுமனே மாகாணசபை தேர்தல்களை நடத்தினவே தவிர, மாகாணசபைகளை  பயனுறுதியுறுதியுடைய முறையில் இயங்க  வைப்பதில் அக்கறை காட்டவில்லை. பதிலாக 13 வது திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை சகல அரசாங்கங்களும் உறுதிசெய்தன. 

அது மாத்திரமல்ல, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் மத்திய அரசாங்கங்கள் மாகாண சபைகளுக்குரிய பெருவாரியான அதிகாரங்களை பல்வேறு சட்டவாக்கங்கள் மூலமாக அபகரித்துவிட்டன. 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர, இந்தியாவினாலும் கூட எதையும் செய்ய முடியவில்லை. தொடர்ந்தும் அத்தகைய வேண்டுகோளை புதுடில்லி விடுக்குமே தவிர, கொழும்புக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாக இனப்பிரச்சினை விவகாரத்தில் எந்தவிதமான உறுதியான நடவடிக்கையையும் எடுக்கும் என்று தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில்  எதிர்பார்க்க முடியாது.

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு முறையில் நடத்துவதற்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் விளைவான எல்லைநிர்ணய சர்ச்சையையடுத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. எல்லை நிர்ணயச் செயன்முறையை கடந்து தேர்தல்களை தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் நடத்துவதற்கு பாராளுமன்றத்தில்  சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராயில்லை. அந்த நோக்கத்திற்காக தனிநபர் பிரேரணை என்ற வடிவில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு கூட  ஒத்துழைக்கவும் அரசாங்கம் தயாராயில்லை. 

எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருட முற்பகுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று  பிரதமர் உட்பட அரசாங்க அமைச்சர்களில் சிலர் கூறுகின்ற அதேவேளை வேறு சில அமைச்சர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் என்றாலும் தேர்தல்களை அரசாங்கம் நடத்தியே தீரும் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக மாகாணசபை தேர்தல்கள் விவகாரம் ஒரு குழப்ப நிலையிலேயே இருக்கிறது. 

இத்தகையதொரு பின்புலத்திலேயே, மாகாண ஆட்சி முறையைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் செயற்பாடுகளை வடக்கு,  கிழக்கில் தமிழ்க் கட்சிகள் முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை,  மாகாணசபை முறையின் மூலம் தமிழர்கள் எந்தப் பயனையும் அடைய முடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழ் பயனுறுதியுடைய  அதிகாரப்பகிர்வை ஒருபோதும் செய்வது சாத்தியமில்லை என்றும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்போர் மாற்று  வழியைக் கூறுவதாகவும்  இல்லை.

மாகாணசபை முறையை மாத்திரமல்ல, இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட கடந்த கால முயற்சிகள் சகலதையும் கடுமையாக எதிர்த்த கசப்பான ஒரு கடந்த காலத்தைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இன்று பதவியில் இருக்கிறது. அத்துடன் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளை விரைவில் முன்னெடுக்கப்போவதாகவும் அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. 

தென்னிலங்கையில் குறிப்பாக, சிங்கள தேசியவாத சக்திகள் மத்தியில் 13 வது திருத்தத்துக்கு இருந்துவரும் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கின்ற  அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு எத்தகைய வடிவில் அமையும் என்ற கேள்வி எழுகிறது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை மாகாணசபைகள் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்க தலைவர்கள் கூறுகிறார்களே தவிர, எதிர்காலத்தில் அதிகாரப்பகிர்வு ஏற்பாடு எத்தகைய வடிவில் அமையும் என்று சிறுபான்மைச் சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் எந்த கருத்தையும் கூறுவதாக இல்லை. 

 இனப்பிரச்சினை விவகாரத்தில் சிங்கள தேசியவாத சக்திகளை பகைத்துக் கொள்ளக்கூடிய எந்தவொரு  நடவடிக்கையையும் தேசிய மக்கள் சக்தி எடுக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகளும் குறிப்பாக, ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன மற்றும் அவர்களுடன் இணைந்த தேசியவாத சக்திகள் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை இனவாத அடிப்படையில் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. 

அதேவேளை, 13 வது திருத்தமும் இல்லாமல் போனால் அதையும் விட குறைவான அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றை கொண்டு  வருவதற்காவது அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய வல்லமை இன்றைய சூழ்நிலையில்  தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை.

அதனால், மாகாண ஆட்சிமுறையை தவிர, தற்போதைக்கு வடக்கு, கிழக்கு மக்களுக்கு வேறு மாற்று கிடையாது. இந்த யதார்த்த நிலையை புரிந்துகொள்ளாமல் செயற்பட்டால் எந்தவிதமான அதிகாரப்பகிர்வு ஏற்பாடும் இல்லாத மக்கள் கூட்டமாக  தமிழ் மக்கள் விடப்படும் ஆபத்தான சூழ்நிலை உருவாகுவதை தவிர்க்க முடியாமல் போகும். 

நீண்டகாலத் தீர்வுகளைப் பற்றி நெடுகவும் பேசிக்கொண்டிருக்கலாம். சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து தமிழ்க்கட்சிகள் முக்கால் நூற்றாண்டாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றிடம் அத்தகைய தீர்வு ஒன்றை எவ்வாறு  அடைவது என்பதற்கான  வழிவரைபடம்  எதுவும் கிடையாது. 

அதனால், மாகாண ஆட்சிமுறையை அதன் குறைபாடுகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பது உடனடித்  தேவையாக இருக்கிறது. மாகாணங்களுக்கு உரிய பெருமளவு அதிகாரங்களை  மத்திய மத்திய அரசாங்கங்கள் பறித்தெடுத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால், வடக்கு, கிழக்கில் மாகாணசபை முறையை அதற்கு இருக்கக்கூடிய எஞ்சிய அதிகாரங்களுடனாவது பயன்படுத்துவதற்கு முயற்சிக்காததில்  தமிழ்க்கட்சிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்பதும் உண்மையே. 

அதனால், மாகாண ஆட்சிமுறையை காப்பாற்றுவதற்கும் தமிழ் மக்கள் மத்தியில் அது தொடர்பில் விளக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும்  தமிழ்க்கட்சிகளினால் காலந்தாழ்த்தியாவது தற்போது முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும். 

மாகாணசபை முறையை வலியுறுத்துவது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் தரத்தைக் குறைத்துவிடும்  என்று ஒரு கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள்.  கற்பனையில் இருக்கும் தீர்வின் தரம் குறைந்துவிடும் என்பது உண்மையே.