— அழகு குணசீலன் —
மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சேரியில் பட்டதாரி பயிலுனராக ஆரம்பித்து மாவட்ட கலாச்சார உத்தியோகத்தராக நீண்ட காலம் பதவி வகித்து, பின்னர் வடக்கு- கிழக்கு மாகாண சபையின் கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் இயக்குனராகவும் செயற்பட்டவர் அமரர் செல்லத்தம்பி எதிர்மன்ன சிங்கம் அவர்கள். அன்னார் ஆரம்பம் முதல் இறுதி வரையான தனது பதவிக்காலங்களில் மட்டக்களப்பிலும், கிழக்கிலும் தனது பணியின் ஊடாக பல பதிவுகளை எமக்கு நினைவுகளாக விட்டுச் சென்றுள்ளார். சுவாமி விபுலாநந்தர் உருவாக்கிய சிவாநந்தாவித்தியாலயத்தின் -ஒரு சிவாநந்தியனாக அவருக்கு கலை, கலாச்சாரம், பண்பாட்டில் இருந்த அக்கறையும், அதீத ஆர்வமும், அவை குறித்த ஆழமான அறிவும், பார்வையும் ஒருவர் அதிசயிக்கத்தக்க ஒன்றல்ல இயல்பானதுதான்.
செல்லத்தம்பி எதிர்மன்னசிங்கம் அவர்கள் மட்டக்களப்பில் கலாச்சார உத்தியோகத்தராக இருந்த காலத்தில் கிராமங்களின் கலை, இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. அவரது பதவி ஒரு அலுவலகத்தில் “பைல்களோடு” காலம் கடத்துகின்ற பதவியல்ல. கலை பண்பாட்டு வாழ்வியல் மையங்களாக விளங்குகின்ற கிராமங்களுக்கு சென்று களப்பணியாற்றிய ஒருவர். அவர் ஒரு சமூகச்செயற்பாட்டாளர், கலை, இலக்கியவாதி, படைப்பாளி, ஆய்வாளர், மானிடவியல் நோக்கர், வரலாற்று தகவல்களை கொண்ட நடமாடும் நூலகம் என்ற பல பரிமாணங்களை கொண்டவர்.
1970களில் மட்டக்களப்பு மாநகர், மற்றும், எழுவான், படுவான் கிராமங்களில் கலை, பண்பாட்டு ஆர்வம் அதிகமாக இருந்தது. கிராமங்களில் கலை பண்பாட்டு அமைப்புக்கள் இளைஞர்களால் உருவாக்கப்படுவதற்கும், அவற்றை பதிவு செய்து மாவட்ட கலாச்சார பேரவையை உருவாக்குவதற்கும் அண்ணர் எதிர்மன்ன சிங்கத்தின் பங்கு அளப்பரியது. இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமாகினார். அப்போது கலைக்கதிர் கலாமன்றத்தின் செயலாளர் என்ற வகையில் நிர்வாகத்தொடர்புகள், மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக அதிகாரிகளை சந்திக்கவேண்டி இருந்தது. இதில் எதிர்மன்னசிங்கம் அவர்களுடனான சந்திப்புகள் அடிக்கடியும், அதிகமாகவும் அமைந்தன.
நாங்கள் முனைக்காட்டில் கலைக்கதிர்கலாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி பதிவு செய்து ஆண்டுதோறும் கலைநிகழ்வுகளை திறந்த வெளியில் நடாத்தினோம். அதில் எப்போதும் கலந்து கொள்ளும் அதிதிகளில் அவரும் ஒருவராக இருந்தார். அரசாங்க அதிபர் அல்லது அவரின் பிரதிநிதி, வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் மற்றைய அதிதிகளாக இருப்பார்கள்.
அப்போது மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராகவும், சிவாநந்தா வித்தியாலயத்தின் அதிபராகவும் சமகாலத்தில் இருந்தவர் க.தியாகராசா அவர்கள். அவரது காலத்தில் மட்டக்களப்பில் பௌர்ணமி கலை நிகழ்வு மாநகரசபையின் அனுசரணையுடன் மாதாமாதம் இடம்பெறுவது வழக்கமாகியிருந்தது. இதில் கலாச்சார உத்தியோகத்தராக, மாவட்ட கலாச்சார பேரவை இணைப்பாளராக எதிர்மன்னசிங்கம் அண்ணரின் பங்களிப்பு குறிடத்தக்கது. கிராமங்களில் இருந்தும் கலை பண்பாட்டு நிகழ்வுகளை நகரத்தில் மேடையேற்றுவதில் கிராமிய கழகங்களுக்கு அவர் வாய்ப்புக்களையும், வசதிகளையும் வழங்கினார். இதன் மூலம் தென்மோடி, வடமோடி நாட்டுக்கூத்துக்கள், கோலாட்டம்,கும்பி, வசந்தன், …. நவீன நாட்டுக் கூத்து போன்றவற்றையும் மேடையேற்றும் வாய்ப்பு கிராமிய அமைப்புக்களுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பு மாவட்ட, தேசிய போட்டிகளில் பங்குபெறவும் வசதியானது.
பௌர்ணமி கலை நிகழ்ச்சிகள் குறித்து எனது நினைவுக்கு எட்டிய வகையில் சில விடயங்களை இங்கு குறிப்பிடலாம். இவற்றில் நினைவில் இருந்து விடுபட்டவை அல்லது தவறுகள் இருப்பின் நண்பர்கள்/வாசகர்கள் தயவுசெய்து அவற்றை பதிவிடுவதன் மூலம் இப்பதிவை முழுமை பெறச்செய்ய முடியும். மோசாப்பிட்டி வெண்ணிலா கலைக்கழகம் ஒன்று மட்டக்களப்பு நகரத்தில் இயங்கியது. இந்த அமைப்பினர் சமூகப்பிரச்சினைகளை முதன்மைப்படுத்திய நாடகங்களை மேடையேற்றினார்கள். அவை நகைச்சுவை நாடகங்களாக அமைந்த போதும் சமூகப்பிரச்சினைகளை தனித்துவத்துடன் பேசின. ஈச்சந்தீவு நண்டு நவரெட்ணம், லஷ்மி பவான் தவராசா, இ.போ.ச.பஸ் நடாத்துனர் யோகராசா….. போன்றவர்கள் தங்கள் நடிப்பால் இன்றும் மனதில் இருக்கிறார்கள். யோகராசா பெண்பாத்திரங்களை ஏற்கும் போது பெண்ணாகவே மாறிவிடுவார்.
பௌர்ணமி நிகழ்வு இசை, நாடகத்துறையில் சில ஆளுமைகளையும் மாவட்ட எல்லைகளை தாண்டி தேசிய மட்டத்திலும் வெளிப்படுத்த வழிவகுத்தது. பாடும் மீன் இசைக்குழு அன்று பிரபல்யமானது.நிலாமதி பிச்சையப்பா முதல் நித்தி கனகரெட்ணம் வரை எம்மால் குறிப்பிட்டு கூற முடியும். அதுபோன்று நாட்டியத்தில் மாலதி கணேசானந்தம், கமலபாதம்…. போன்றவர்கள் மட்டக்களப்பின் கிராமங்கள் வரை அழைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டவர்கள். கிழக்கு பல்கலைக்கழகம், விபுலானந்த இசை நடனக்கல்லூரி என்பன இல்லாத அந்த காலத்தில் இவை பெரும்சாதனைகள். ஏன்? பரதநாட்டியம், கர்நாடகசங்கீதம், தெலுங்கு கீர்த்தனைகள் கூட மட்டக்களப்பில் அன்று அரிதிலும் அரிது.
கல்லடி – ஆரையம்பதி கலைஞர்களை உள்ளடக்கிய ஒரு பிரபல பிரமாண்டமான நாடகக்குழு இருந்தது. அக்குழுவின் பெயர் நினைவில் இல்லை. ஆரையூர் இளவல் என்ற செல்லத்தம்பி கிராமசேவகர், ஆரையூர் அமரன் என்ற அமரசிங்கம் ஆசிரியர், ஆரையம்பதி நல்லரெட்ணம் ஆசிரியர்…. போன்றோரின் நெறியாள்கை, பிரதி அமைப்பு என்பன இவர்களின் படைப்பில் கவனத்தை ஈர்ப்பவை. இந்த நாடகக்குழுவில் கல்லடி உப்போடை முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன், ஆசிரியை இந்திராணி தாமோதரம்பிள்ளை, இந்திராணி அக்காவின் கணவர் -அவர் சிறைச்சாலை உத்தியோகத்தராக இருந்தார் என்று நினைக்கிறேன் . … போன்ற தலைசிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். இக்குழுவின் பிரமாண்டமான படைப்பு “நீறுபூத்தநெருப்பு” வரலாற்று நாடகம். இந்த நாடகம் கிராமங்களிலும் கழகங்களுக்கு நிதி சேகரிப்பு நோக்கில் மேடையேற்றப்பட்டது. முனைக்காடு கலைக்கதிர் கலாமன்றத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் முதலைக்குடா மகாவித்தியாலயத்தில் நாங்கள் இதனை மேடையேற்றினோம். நண்பர் தா.சிதம்பரப்பிள்ளை இதற்கு முன்னோடியாக இருந்தார். அப்போது சிவா நந்தாவில் படித்த அவர் இந்திராணி அக்கா குடும்பத்தினரின் வீட்டில் தங்கியிருந்து படித்ததால் இந்த தொடர்பு ஏற்பட்டது. எனினும் எங்களுக்கு சில உள்ளூர் பிரச்சினைகள் இருந்ததன் காரணமாக நோக்கத்தில் வெற்றியில்லை “கையும்கணக்கும்” சரி என்றநிலை.
நல்லரெட்ணம் மாஸ்டர் நவீன நாட்டுக் கூத்து ஒன்றை பாடசாலை மாணவர்களைக்கொண்டு தயாரித்து இருந்தார். “லஷ்மி கல்யாணம்” என்ற பெயரிலான இந்த மேடைக்கூத்து சமூகத்திற்கு அன்றைய பிரச்சினைகளை எடுத்து செல்வதற்கான சிறந்த ஊடகமாக அமைந்திருந்தது. பல பாடசாலை நிகழ்வுகளிலும், ஆலயதிருவிழாக்கள், உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்வுகளிலும் இது மேடையேற்றப்பட்டது. இவை அனைத்தும் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தராக அண்ணர் செல்லத்தம்பி – எதிர்மன்ன சிங்கம் கொடுத்த ஊக்கம், ஆக்கம், ஒத்துழைப்பு என்பனவற்றின் மூலமும் மட்டக்களப்பு கச்சேரி, மாநகரசபை, கலாச்சார பேரவை என்பனவற்றின் நிர்வாக அங்கீகாரத்தின் மூலமும் சாதிக்கக்கூடிய வகையாக அமைந்தவை.
இந்தக் காலத்தில் களுதாவளை “ஆனைக்குட்டி” குழுவினர் அருமையான நாடகங்களை மேடையேற்றினர். இவை மாவட்டம் முழுக்க பெரும் கவன ஈர்ப்பைபெற்றவை. அரங்கம் டிஜிட்டல் பத்தியில் ” சுகந்த நினைவுகள்” என்று பாடும் மீன் சிறிஸ்கந்தராசாவினால் எழுதப்பட்ட தொடரிலும் அவர் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் கலை பண்பாட்டு முயற்சிகள் பற்றி பதிவுசெய்துள்ளார். இவ்வாறு மாவட்டம் தழுவிய ஒரு கலை பண்பாட்டு எழுச்சி நகர, கிராமிய அல்லது எழுவான், படுவான்கரை எல்லைகளை தாண்டி அன்று இருந்தது.அதில் எதிர்மன்னசிங்கம் அவர்களின் பங்கு ஏதோ ஒரு வகையில் உந்து சக்தியாக அமைந்திருந்தது.இன்னொரு வகையில் இந்தக் காலம் கலை இலக்கிய திறனாய்வில் வெறும் அழகியலுக்கு அப்பால் மக்கள் கலை இலக்கியமாக- வர்க்கம், அதிகாரம் என்ற வகையில் நோக்கப்பட்ட முற்போக்கு காலமாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மண்முனை தென்மேற்கு பகுதியில் பட்டிப்பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவு அப்போது அமைந்திருக்கவில்லை. வெல்லாவெளி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குள்ளேயே மண்முனை தென்மேற்கும் உள்வாங்கப்பட்டு இருந்தது. அப்போது முனைக்காட்டில் “கலைக்கதிர் கலாமன்றம், அரசடித்தீவில்”இளங்கதிர்” கலாமன்றம், அம்பிளாந்துறையில் “கதிரவன் ” கலாமன்றம் என்பன முக்கியமாக செயற்பட்டன. இது தமிழ்த்தேசிய அரசியல் ஆயுதப்போராட்டம் மட்டக்களப்பில் முளை விடத்தொடங்கியிருந்த காலம்.. இயக்கங்களின் நடமாட்டங்கள் கிராமங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தது. இந்த மூன்று அமைப்புக்களின் பெயர்களிலும் உள்ள “கதிர்” க்கு பின்னால் ஒரு அரசியல் ஒழிந்து இருந்தது. அதுதான் தமிழர்கூட்டணி/தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ்த்தேசிய அரசியல். “உதயசூரியன்” இந்த கதிருக்குள் மறைந்து இருந்த்து.
கலைக்கதிர்கலாமன்றத்திற்குள் ஒரு பிரச்சினை எழுந்தது. 1978 இல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவி ஏற்கும் நிகழ்வு கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எண்கோண மண்டபத்தில் இருந்து அவர் உரையாற்ற ஏற்பாடாகி இருந்தது. இந்த நிகழ்வில் கண்டி கலைப்பேரணியில் – ஊர்வலத்தில் கலைக்கதிர் கலாமன்றத்தின் வசந்தன் ஆட்டத்தை மட்டக்களப்பு பாரம்பரிய கலை ஆட்டமாக கொண்டு செல்ல அண்ணர் எதிர்மன்னசிங்கம் தெரிவுசெய்திருந்தார். அதற்காக விருப்பத்தையும் எங்களிடம் கேட்டிருந்தார். அப்போது பெயரில் ஒழிந்திருந்த தமிழ்த்தேசியம் வெளிப்பட்டது. கலை பண்பாட்டு அமைப்பு ஒன்றுக்குள் அரசியல் புகுந்து கொண்டது. ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வை பகிஷ்கரிக்கவேண்டும் என்று ஒரு குழுவும், கண்டிநிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற இன்னொரு குழுவுமாக கலைக்கதிர்கலாமன்றத்திற்குள் ஒரு கருத்துமோதல்.
அப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவனாக நான் இருந்தேன். அன்றைய எனது தமிழ்த்தேசிய ஈடுபாடு பகிஷ்கரிபுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் ஊரில் இருந்த நண்பர்களில் – வசந்தன் கலைஞர்களில் ஒரு பகுதியினர் விழாவை பகிஷ்கரிக்க ஒரு பகுதியினர் அண்ணர் எதிர்மன்னசிங்கத்தின் ஏற்பாட்டில் கண்டி சென்று பெரஹெரவில் கலந்து கொண்டனர். இன்று அன்றைய எனது நிலைப்பாடு தமிழ்தேசிய அரசியல் குறித்து முற்றுமுழுதாக மாறிவிட்டது. நண்பர்களின் அன்றைய முடிவே சரியானது என்பதை இன்று உணரமுடிகிறது. இந்தக் குழப்ப நிலையில் வசந்தன் கலைஞர்களிடையே சமாதானப்படுத்துவதில் எதிர்மன்னசிங்கம் அண்ணர் பெருமுயற்சி எடுத்து அவருக்கே உரிய பாணியில் அதை கையாண்டு வெற்றியும் கண்டார்.
காலப்போக்கில் கிராமங்களில் மட்டும் அன்றி நகரத்திலும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் படிப்படியாக குறைவடைந்து விட்டன. போர்க்காலத்தில் போர்க்கால கலை பண்பாட்டு முயற்சிகள் கூட மட்டக்களப்பில் அரிதாகவே இருந்தது. இந்த கால கட்டம் எல்லா சிறிலங்கா அதிகாரிகளுக்கும் போன்று அண்ணர் எதிர்மன்ன சிங்கத்திற்கும் வில்லங்கமான காலமாகவே இருந்தது. அவரது மாகாணசபை பணிப்பாளர் காலம் இன்னும் வில்லங்கமானது. எனினும் அவரது தனித்துவமான குணாம்சம், அமைதியான தொடர்பாடல், பிரச்சினைகளை கையாளும் திறன் என்பன காரணமாக அவர் இக்கட்டான காலகட்டத்திலும் தன் கடமையை – தன்னால் இயன்றதை இயலுமானவரை செய்தார் என்றே அறியமுடிகின்றது.
இந்த வகையில் அன்னாரின் இழப்பு கிழக்கின் கலை பண்பாட்டுக்கும், பாரம்பரியக்கலைகளுக்கும், அவற்றிற்கு உயிரூட்டும் கிராமங்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். மட்டக்களப்பு ஒரு பாரம்பரிய கலை பண்பாட்டு இயங்கியல் சக்தியை இழந்து நிற்கிறது. அன்னாருக்கு அரங்கத்தின் அஞ்சலிகள். அவரின் இழப்பால் துயருறும் அனைவரது துயரிலும் கலைக்கதிர்கலாமன்றமும் பங்குகொள்வதுடன், இறுதிப்பயணத்திலும் வழியனுப்பிவைக்கிறது. கடந்த கால கனத்த நினைவுகளுடன் உங்களிடம் இருந்து விடைபெறுகிறோம் அண்ணா!
