— அழகு குணசீலன் —
“இலங்கையின் இயல்புகளைக் கருத்தில் கொள்ளும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மிகவும் அவசியமானது. அதே நேரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வருபவர்கள் அந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது அவசியம்……..”. இந்த கருத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் குவியும் அளவற்ற அதிகாரத்திற்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே சமநிலைப்படுத்துவதற்கு கூறப்பட்டுவருகின்ற ஒன்று. இது ஜனாதிபதி ஒருவரின் தனிநபர் குணாம்சத்திற்கு ஒரு தேசத்தை அடகு வைப்பதாகும்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பு ஒன்றில் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார் இலங்கை சட்டக்கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ். காலத்திற்கு காலம் ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதும், அதிகாரத்திற்கு வந்த பின்னர் அதில் தொங்கிக்கொண்டு தொடர்வதும் இலங்கையில் குணப்படுத்த முடியாத ஒரு அரசியல் மனநோயாக மாறி விட்டது. அப்படியாக “நல்லமுறையில்” அதிகாரத்தை பயன்படுத்துகின்ற எந்த ஒரு ஜனாதிபதியையும் இலங்கை சிறுபான்மை தேசிய இனங்கள் இதுவரை கண்டதில்லை. மாறாக பெரும்பான்மை தேசிய இனம் இந்த நல்லமுறையை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் பகுதியளவில் அனுபவித்து வருகின்றது.
இந்த கருத்தை அல்விஸ் சட்டத்துறை சார்ந்த ஒரு கலந்துரையாடலில், அதிகாரக்குவிப்பு அல்லது அதிகார மையம் குறித்த கருத்தரங்கு அல்லது ஆய்வரங்கு ஒன்றில் கூறவில்லை. மாறாக ஊடகச்சந்திப்பு ஒன்றை நடாத்தி கூறியிருக்கிறார். இந்த பாணியிலான ” கருத்துருவாக்கம்” கடந்த காலங்களிலும் மீண்டும், மீண்டும் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளது. மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதற்காக தமக்கு தேவையானவர்களை கொண்டு திட்டமிட்ட வகையில் செய்யப்படும் ஒரு அரசியல் யுக்தியாகவே கடந்த காலங்களில் நாம் இதைக் கண்டுள்ளோம். பெரும்பான்மை அதிகாரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டு வரும் இந்த கருத்தானது கடந்த காலங்கள் போன்று மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறுவதையே வெளிப்படுத்துகிறது.
இலங்கை சட்டக்கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் இதற்கு இரண்டு நியாயப்படுத்தல்களை முன் வைத்திருக்கிறார்.
ஒன்று: “நாட்டின் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமையை பேணுதல்.”
இரண்டு: ” வெளிநாட்டு செல்வாக்குகளை தடுத்தல் “.
அல்விஸ் குறிப்பிட்ட இந்த இரண்டு கருத்துக்களுமே இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்திலேயே தோற்றுப்போனவை. அதன் வெளிப்பாட்டை இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் இன்று அனுபவிக்கிறது. விடுபட முடியாத பிராந்திய, சர்வதேச இடியப்ப சிக்கலில் சிக்கியுள்ளது.
ஜே.ஆர்.ஜயவர்த்தன காலம் முதலான ரணசிங்க பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரினதும் நிறைவேற்று அதிகாரம் இலங்கையின் இனக்குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமையை பேணவில்லை. இந்த முறையானது ஒப்பீட்டளவில் இயல்பாகவே பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை வழங்கியது என்று கூறினாலும் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் பாதுகாப்பையும், இருப்பையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் ஒரு வருடம் கடந்து விட்டது. நாட்டின் மையப்பிரச்சினைகளை தவிர்த்து பிரதான வீதிவரைபடத்தில் இருந்து விலகி அரசாங்கம் பக்க வீதிகளில் ஓடுகிறது.
இந்த அதிகார குவிப்பு சகோதர இனங்களுக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்வதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சிறுபான்மை தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைப்பதிலும் இந்த அதிகார மையத்திற்கு கணிசமான பங்களிப்பு இருந்து வந்துள்ளது. அதற்காக பாராளுமன்றத்திடம் அதிகாரம் இருந்த காலத்தில் இவை இடம்பெறவில்லை என்பதல்ல. ஆனால் ஒரு ” தனிநபரின்” முடிவுகளில் தங்கியிருக்காத ஒரு குறைந்த பட்ச ஜனநாயகம் இருந்திருக்கின்றது என்றாவது கொள்ள முடியும்.
“வெளிநாட்டு செல்வாக்கை தடுத்தல்” என்பது இன்றைய பூகோள அரசியலை விளங்கிக் கொண்ட ஒரு கருத்தாக இல்லை. இது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருவகை ஆட்சிமுறையிலும் தோல்வி கண்ட ஒன்று. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சமூக, பொருளாதார, அரசியலில் வெளிநாட்டு செல்வாக்கு இன்றி இருந்ததில்லை. இந்த நிலையை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தடுத்து நிறுத்தவில்லை என்பதற்கு இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை நல்ல உதாரணம். இந்தியா பிராந்திய வல்லரசாக இராஜதந்திர ரீதியாக அழுத்தங்களை வழங்கியபோது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஒத்து ஓடவேண்டியே இருந்தது.
இவற்றிற்கும் பிந்திய இன்றைய பூகோள, உலகமயமாக்கல் அரசியல் சூழலில் இலங்கை போன்ற ஒரு நாட்டின் ஆட்சி முறைகளுக்கு அப்பால், அந்த நாடுகள் தலையிட்டு செல்வாக்கை செலுத்துவதை விடவும் ,இலங்கை தானாக வெற்றிலை வைக்கவும், விட்டுக்கொடுக்கவும் வேண்டிய நிலையிலேயே உள்ளது என்பதே யதார்த்தம். இதை அநுரகுமார அரசாங்கத்தினாலும் தேர்தல் வாக்குறுதிகளின்படி தடுத்துநிறுத்த முடியவோ, விலகியிருக்கவோ முடியவில்லை என்பதை இன்றைய நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.
இதுவரையான நிறைவேற்று அதிகாரத்தில் மூன்றே மூன்று விடயங்களே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நன்மையாக அமைந்தவை. அவை கூட சட்டக்கல்லூரியின் முதல்வரின் வாதத்திற்கு முரண்பட்ட சூழலில் ஏற்பட்டவை.
1. ஏற்கனவே குறிபிட்ட இந்திய -இலங்கை உடன்படிக்கையூடான வடக்கு -கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு – மாகாணசபை நிர்வாக கட்டமைப்பு.
2. ஜே.ஆர். அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு நிபந்தனையாக சௌ.தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. விதித்த நிபந்தனையின் அடிப்படையிலான மலையக மக்களின் வாக்குரிமை மீளளிக்கப்பட்டமை.
3. ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததன் மூலமான மற்றொரு நிபந்தனையாக விகிதாசார தேர்தல் முறை வெட்டுப்புள்ளி சிறிய கட்சிகளுக்கு சார்பாக ஐந்து வீதமாக குறைக்கப்பட்டது.
இவை பிரஷாந்த லால் டி அல்விஸ் கூறுகின்ற “…. அதே நேரம் நிறைவேற்று ஜனாதிபதியாக வருபவர்கள் அந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது அவசியம்”. என்ற ஜனாதிபதிகளின் தனிநபர் அரசியல் ஒழுக்கத்தினால் ஏற்பட்டவை அல்ல. மாறாக வெளிநாட்டு செல்வாக்கு மற்றும்,மற்றைய கட்சிகளின் ஆதரவு தங்கள் அரசியல் இருப்பு – அரசியல் உறுதிக்கு தேவை என்ற அரசியல் நிர்ப்பந்தத்தினால் விளைந்தவை. இது இரு தரப்புக்குமான “WIN-WIN SITUATION”.
சட்டக்கல்லூரி முதல்வரின் கருத்தோடு இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரகுமார ஜனாதிபதியின் கடந்த ஓராண்டு காலம் செயற்பாட்டில் இன்னும் பிரஷாந்த லால் டி அல்விஸ் கூறுகின்ற முன் அரைப்பகுதியான ” ….. இலங்கையின் அரசியல் இயல்புகளை கருத்தில் கொள்ளும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியமானது”. என்பதையோ அல்லது பின் அரைப்பகுதியான “ …. அதேநேரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வருபவர்கள் அந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்” என்பதை நேர்மையாகவும்,நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதாக இல்லை.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் அமைப்பு விவகாரம் அரசாங்கத்திற்குள் இன்னும் விவாதப்பொருளாகவே உள்ளது. பாராளுமன்றத்தில் 159 பேருடன் அதிகப்பெரும்பான்மையும், நிறைவேற்று அதிகாரத்தையும் கூடவே கொண்டுள்ள ஜனாதிபதியிடம் இருந்து நம்பிக்கையான சைகை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதேவேளை புதிய அரசியல் அமைப்பு மக்கள் கருதுக்கணிப்புக்கு விடப்படும் என்ற “ஜனநாயக மாயை” ஜனாதிபதியும், அவரது கட்சியும் யாரை திருப்திப்படுத்த விரும்புகிறார்கள் என்பதற்கு வெளிச்சம் போடுகிறது. 70 வீதம் பெரும்பான்மை சமூகத்தை கொண்டுள்ள நாட்டில் மக்கள் வாக்கெடுப்பு எப்படி அமையும். ? பெரும்பான்மை இனவாத சக்திகளுக்கு வாய்ப்பளித்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அர்த்த முள்ள அதிகாரப்பகிர்வில் இருந்து தப்பிக்கொள்வதற்கான வழியா இது? இந்த இடத்தில் இனக்குழுக்களுக்கிடையாலான ஒற்றுமையை பேணலின் இனப்பிரச்சினைக்கான அர்த்தமுள்ள தீர்வின் நிலை என்ன?
சட்டக்கல்லூரி முதல்வர் பேசும் வெளிநாட்டு செல்வாக்கு என்பது வெறுமனே பூகோள அரசியல் பொருளாதார, இராணுவ, இராஜதந்திர செல்வாக்கை குறிப்பதாக கருவதற்கில்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் கோருகின்ற சர்வதேச விசாரணையை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எடுத்த எடுப்பில் தனிநபராக கிடப்பில் போடமுடியும் என்பதையும், போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முடியும் என்பதையும் மறைமுகமாக வலியுறுத்துகிறது. ஆக, வெளிநாட்டு செல்வாக்கு ஒட்டு மொத்த இலங்கையர்களுக்கு சாதகமாக அன்றி பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதாகவே அமையமுடியும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போர்குற்றவாளிகளுக்கு இல்லை. போர்க்கால உயர்தர படை அதிகாரிகளை நிறைவேற்று அதிகாரம் சட்டத்திலும் உயர்வானவர்களாக ஆக்குகிறது. நியாயமான நீதியான விசாரணை என்பதும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.
இலங்கையின் கடந்த கால பிதமர்/ஜனாதிபதி/ பாராளுமன்ற 2/3 பெரும்பான்மை ஆட்சிகள் இதுவரை 1972, 1978 புதிய அரசியல் அமைப்புக்கள்,பின்னர் அடுக்கடுக்காக பல அரசியல் அமைப்பு திருத்தங்கள்….இவை எல்லாம் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை பறிப்பனவாகவே இருந்துள்ளன. இதனால்தான் அநுரகுமார அரசாங்கம் பேசுகின்ற புதிய அரசியல் அமைப்பு, அவர்களுக்கு பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை, மேலதிகமாக கூறப்படும் மக்கள் கருத்துக்கணிப்பு, தென்னிலங்கையில் அதிகரித்து வரும் சிங்கள -பௌத்த பேரினவாத செல்வாக்கு என்பனவற்றிற்கு மத்தியில் அநுரகுமாரவை அவருக்கான அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்த விடுமா? அல்லது அவரது கரங்கள் கட்டப்படுமா? என்ற சந்தேகம் கடந்த ஓராண்டு காலத்தில் சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் சிறுபான்மை மக்களுக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை வழங்குவது என்பது எந்த ஆட்சி முறையாயினும் மைய அதிகாரம் பாராளுமன்றத்திற்கா…? அல்லது ஜனாதிபதிக்கா….? ஜனாதிபதி நல்லவரா….., ?கெட்டவரா……? என்பனவற்றுக்கு எல்லாம் அப்பால் அடுத்த தடவை அதிகார கதிரையில் அமர்வதையே குறியாகக்கொண்டது என்பதையும், கடந்த காலங்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி பெரும்பான்மை சமூகம் தனித்து தங்களுக்கான ஆட்சியை தீர்மானிக்க முடியும் என்பதையும் சாதாரணமாக கடந்து செல்லும் அரசியல் அனுபவங்களாக கொள்ள முடியாது.
மற்றவை எல்லாம் ஐ.நா.வையும் தாண்டி ஒலிக்கின்ற அழகான, அலங்கார வார்த்தைகள் தான்.
இதில் …, முறைமை மாற்றம்…..,
முள்ளைப்பிடுங்கி கட்டையை அடித்தால் என்ன….?
கட்டையைப்பிடுங்கி முள்ளை அடித்தால் என்ன…?
பலாப்பழம் பழுத்தால் அது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக அன்றி முறை மாற்றத்தின் ஊடான சமூக, பொருளாதார, அரசியல் நீதியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு வழங்குவதாக அமைய வேண்டும்.
அப்போதுதான் அல்விஸ்ஸின் கருத்து அர்த்தமுள்ளதாக அமையும்.
