— இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் —
பேராசிரியர் மௌனகுரு அவர்களை இந்தக் கட்டுரையை வாசிக்கும் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்-இஸ்லாமியர்கள் என பலரும் அறிந்திருப்பார்கள். அவர் கிழக்குத் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு விடயங்களில் மிகவும் ஆழமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற அடையாளங்களைக் கடந்து பேதமின்றி அவரது வாழ்நாள் முழுதும் அத்தனை மக்களுடனும் இணைந்து வாழ்பவர்.
‘’இப்படியும் ஒருகாலமிருந்தது’ என்ற தலையங்கத்தில் அவர் எழுதிய தொகுப்பை ‘’எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒருபாட்டன் சொல்லும் பழங்கதை” என்றுதான் சிறு எழுத்துக்களால் முத்திரையிட்டிருக்கிறார்.
1–மம்மது கடையும் கச்சிக் காக்காவும் (1-9)
2- க்றீன்காக்கா (கரீம் காக்கா) (10-19)
3- வினாசிப்பரிசாரியாரும் காத்தான்குடி ஈசிப்பாசியாரும்.
4–இரு இனத்து மாணவர்களையும் இணைத்த வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம்
5- முஸ்லிம் மாணவர்கள் மேடையேறி நடித்த நாடகங்கள்
6- கல்லுப் பிள்ளையார் கோயிலடியும் மாதா சொருூபத்தை வரவேற்ற மூவின மக்களும்.
7.–இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி- சுபைர் இளங்கீரனும், எச்.எம்.பி.முகைதீனும் கூறியவை.
8-பேராதனைப் பல்கலைக் கழக முஸ்லிம் மாணவத் தோழர்கள்.
9- கெக்கிறாவை மீரா சாகிப்- கடலோடு இணைய வழிகாட்டிய வாய்க்கால்.
10-றஷீதியா ஹொட்டேலின் ஆட்டுக்கால் சூப்பும் சாவலின் ஏலக்காய் பிளேன்டீயும்.
11-கல்முனை நினைவுகள்.
12- என் வாழ்வில், யாழ்ப்பாணமும் ஒஸ்மானியாக் கல்லூரியும்.
13-என் மகனுக்கு நுஃமான் அன்பு மாமாதான்..
14-இராவணேசன் நாடகத்தின் நிர்வாகி றியாஸ் அஹமட்.
15- உயிர்ப்பித்த நான் இருக்க உயிர் தந்தவர் போனார்-
டாக்டர் லாஹி.
மேற்குறிப்பிட்ட பதினைந்து கதைகளையுள்ளடக்கிய இப்புத்தகம் 2024ம் ஆண்டு பௌசர் அவர்களால் வெளியிடப்பட்டது. கிழக்கிலங்கையில் மட்டுமல்லாது இலங்கையில் பல இடங்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் 1948- 2024 வரைக்குமான அவரது உறவு எவ்வளவு பரந்த விதத்தில் இணைந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் எழுதியிருக்கிறார். இது ஒரு ஆவணப் படைப்பல்ல. தகவல்களை மட்டும் திரட்டித்தந்த தொகுப்புமல்ல.
இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வழங்கிய பௌசர், இப்புத்தகம் பற்றிய தனது முன்னுரையின் தலையங்கமாகவே ‘’தமிழ் முஸ்லிம் மக்களிடையே இருந்த முழு வாழ்க்கையின் பல் வர்ணமிகு முக்கியத்தவமிக்க சித்திரம்’’ என்று எழுதியிருக்கிறார்.
ஆமாம் இது ஒரு பவித்திரமாகப் பாதுகாக்கப் படவேண்டிய ஆவணச் சித்திரம்தான்.
அதாவது இந்தத் தொகுப்பு வாசிப்பவனை இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களால் பல தளங்களுக்கு இழுத்துச் செல்கிறது. அதாவது, கிழக்கிலங்கையில் 1948ம் ஆண்டிலிருந்து தனது குடும்பம், உற்றார் உறவினர் மட்டுமன்றி பல்லின மக்களுடன் முக்கியமாக முஸ்லிம் மக்களுடன்; இணைந்த வளர்ந்த ஒரு ஆறு வயதுச் சிறுவனின் கள்ளங் கபடமற்ற அறிவின் விளக்கத்துடன் தொடங்கிய வாழ்க்கைப் பிரயாணத்தின் அனுபவத் தொடர்பு எப்படி ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது இப்படியான கால கட்டத்து எனது நினைவுகளும் அப்பாவின் சினேகிதர் அக்கரைப்பற்று ஹாஜியாரும் என் முன் வந்தார்கள்.
அந்த அருமையான உறவின் ஆழத்தில் எனது பால பருவம் எத்தனையோ நிகழ்வை நினைத்துப் பார்த்தது. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதும் தெளிவாக ஞாபகமில்லை. ஆனால் ஒரு சில விடயங்களும் அதைப் பேசும்போது அவர்களின் முகபாவங்களும் போன்ற காட்சிகள் ‘இளமையில் கல்வி சிலையில் எழுத்தாக’ என் மனதில் ஒரு அழகான சித்திரமாகப் பதிந்து கிடக்கிறது. அதனால், பௌசர் அவர்கள் இந்தப் புத்தகத்தை ’சித்திரம்’ என்று மேன்மையாக வர்ணித்தது மிகவும் பொருத்தமான பதிவாகும்.
இன்றைய மௌனகுரு அவர்களின் பரந்த மனம் சார்ந்த சமுதாய நோக்குகளை படைப்புகளைப் பார்க்கும்போது அவரின் ஆரம்ப கால மனிதர்களின் சந்திப்பும் அதன் தொடச்சியும் அவரின் களங்கமற்ற ஒரு சீரான சிந்தனைப் போக்குக்குகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறது.
எனது லண்டன் வாழ்க்கை பல துறைகளில் நுழைய சந்தர்ப்பங்களைத் தந்தது. அதில் ஒன்று மருத்துவ மானுடவரலாறு. அந்தப் படிப்பும் அதைத் தொடர்ந்து நான் செய்த தொழில்களும் எனக்குப் பல துறைகளில் ஆய்வுகளைச் செய்ய உதவின. இவரின் இந்தப் படைப்பைப் படிக்கும்போது அக்கால கிழக்கிலங்கைத் தமிழரின் உள அறிவு -சமுதாய, ஆத்மீக வளர்ச்சிகளுக்கு எவ்வளவு தூரம் இந்த தமிழ்-முஸ்லிம் உறவு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.
இவரின் முதற்கதையான ‘’மம்மது கடையும் கச்சிக் காக்காவும்” என்பது இவரது ஆறாவது வயதின் உள வளர்ச்சியின் அத்திவாரமாக மம்மது காக்காவும் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையும் இருந்திருக்கிறது என்பதை விளக்குகிறது.
ஓரு மனிதனின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் அவனின் ஆரம்ப கால உளவளர்ச்சி- சமுதாய வளர்ச்சிகள் எவ்வளவு முக்கியமானவை என்பது பற்றி முதன் முதல் ஒரு கோட்பாட்டை ஆராய்ந்து எழுதியவர் எறிக் எறிக்ஸன் என்பவர் (1902- 1994); இவர் ஜேர்மனியில் பிறந்தவர். அமெரிக்காவில் வாழ்ந்தவர். இளமையில் ஒரு குழந்தை வாழும் சூழ்நிலை அவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்பது போன்ற ஒரு முக்கியமான கோட்பாட்டை முன்வைத்தவர். அதற்கு இந்தக் கதைகள் ஒரு எடுத்துக் காட்டாகவிருக்கிறது.
மௌனகுரு அவர்களின் அனுபவங்களை எழுத இணைந்து உதவிய அவரது பாரியார் சித்திரலேகா அவர்களுக்கும் அந்தப் பதினைந்து படைப்புகளை ‘அரங்கம்’ பிரசுரத்திற் பிரசுரித்த சீவகன் அவர்களுக்கும் புத்தக உருவில் கொண்டுவந்த பௌசர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தச் சிறு புத்தகத்தினால் இதில் வரும் பதினைந்து முத்தான கதைகளால் பலரிடம் வரப்போகும் இன மத மொழி அத்துடன் பிராந்திய பேதமற்ற மனித உறவுகள் பற்றிய விழிப்புணர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
முக்கியமாக அரசியல்வாதிகளின் நன்மைக்காக உருவாக்கப் பட்ட இலங்கைத் தமிழ் -முஸ்லிம் மக்களிடையே வந்த பிரிவினை உணர்வுகளைத் தாண்டி எதிர்காலத்தில் மிகவும் ஆக்க பூர்வமான ஒற்றுமையைத் தேடும் முயற்சிகளில் ஒரு பெரிய மாற்றம் பெரிதாக வரவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
நான் இதைப் படிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மௌனகுரு அவர்கள் தனது அனுபவங்களைச் சொல்ல வருகிறார் என்பதற்கப்பால் எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு சரித்திரத்தை மிகவும் அழகிய மட்டக்களப்புத் தமிழ் நடையில் ’உண்மையான உணர்வுகளுடன்’ சொல்ல ஆரம்பித்திருக்கிறார் என மிகவும் திட்டவட்டமாகப் புரிந்து கொண்டேன்.
மானிட வரலாறு என்பது மொழி பண்பாடு கலாச்சார நெறி முறைகளுடன் இணைந்தது. கடந்த நூற்றாண்டு கிழக்கிலைங்கைத் தமிழ்- முஸ்லிம் மக்களின் வாழ்வமைப்பு, மொழி, கலாச்சாரம், அன்புணர்வு, புரிந்து வாழ்தல், ஒற்றுமையை முன்னெடுத்தல் போன்ற பல பரிமாணங்களின் பிரதிபலிப்பால் அவர்களின் சாதாரண வாழ்க்கை எப்படி இணைக்கப் பட்டிருந்தது, அதை வெளியிலிருந்து வந்த அரசியல் சமய சிந்தனைகள் எப்படிச் சிதைத்தன என்ற வேதனையை இந்தப் புத்தகம் ஒருவிதமான அரசியல் சார்பற்ற ஒரு தூய சிந்தனையின் சித்திரமாக வாசகர்கள் முன் வைத்திருக்கிறது.
பதினைந்து படைப்பிலும் அன்றைய கிழக்கிலங்கை மக்களின் ஒன்று பட்டிணைந்திருந்த வாழ்க்கைமுறை அவர்களின் கலை ஈடுபாடுகள் வியாபார நெருக்கம் மருத்துவத் தொடர்புகள் கல்வித் தொடர்புகள் நாடகக் கலைத் தொடர்புகள இலக்கியத் தொடர்புகள் நுஃமான் போன்ற ஆளுமைகளுடன் இன்னும் தொடரும் குடும்ப உறவுகள் என்பன போன்ற பல கதைகளைச் சொல்கிறார்.
உதாரணமாக,1–மம்மது கடையும் கச்சிக் காக்காவும் (1-9)
பக்கம் 4. ‘இஸ்லாத்திலும் முகமது நபியிலும் எனது தந்தை மதிப்பு வைத்திருந்தார். அவருக்குப் புத்தர் மீதும் சித்தர்கள் மீதும் மதிப்பிருந்தது. எனது தந்தையார் ஒரு இந்துவாயினும், அவர் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதாகவும் சொல்கிறார் மௌனகுரு. (கிழக்கிலங்கைத் தமிழர்கள் அக்காலத்தில் தங்களைச் ‘சைவர்கள்’ என்று சொல்லிக் கொண்டார்கள் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.)
பக்கம்- 5-
கோட்டைமுனையின் ஒரு பகுதி மோசாப்பிட்டி என்றும் அழைக்கப் பட்டது. இப்பகுதியில் நிறைய முஸ்லீம்கள் வாழ்ந்தனர். மோசாப் பிட்டியில் இஸ்லாமியர் சூழ்நிலையில் அவுலியப்பா சமாதியும் வாவிக்கரையிலிருந்தது. ஒலியுல்லாஹ என்ற பதமே அவுலியா என அழைக்கப்பட்டது. சைவமக்களின் அரசடிப் பிள்ளையார் கோயில் ஒன்றும் அங்கிருந்தது. மங்களராமயா எனும் புத்த விகாரையும் அங்கிருந்தது.
பக்கம் 6- எனது அம்மாவுக்கு அவுலியப்பா மீது அளவு கடந்த பக்தி. அவரிடம் சொன்னால் எல்லாம் நடக்கும் என்பார். ஒன்று மாரியம்மன். மற்றது அந்தோணியார். அடுத்தவர் அவுலிஅப்பா. அம்மாவுக்கு அனைவரும் ஒன்று. அம்மா மூன்று இடங்களிலும் நேர்த்தி வைப்பார் ’ என்கிறார்.
இதேமாதிரி அக்கால கட்டத்தில் அக்கரைப்பற்றின் ஒரு பெரிய வீதியில் பௌத்த விகாரையும் காளி கோயிலும் இருந்தன. மத வேறுபாடன்றி சிங்கள, தமிழ் மக்கள் இரு வணக்க தலங்களுக்கும் சென்றார்கள். (முஸ்லிம்- தமிழர் முரண்பாடு வந்த காலத்தில் அந்தக்கோயில் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டது என்று சொன்னார்கள்)
பக்-7. மோசாப் பிட்டியிற்தான் ஓவியர் அஸிஸ் மாஸ்டர் இருந்தார். எழுத்தாளர் ஷா பித்தன் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினரான ‘தங்கப் பல்’ ஆதம் காக்கா இருந்தார். அம்மாவுக்குப் பிரியமான ‘கச்சிக் காக்காவும்’ இருந்தார். இவருக்குப் பெயர் ‘பொண்டுகள் கச்சி’. ஹாஜி தான் ‘கச்சி’ என்பது எனக்குத் தெரியாது’ என்கிறார்.
இந்த முதலாவது கட்டுரையைப் படித்து முடித்தபின் எனது பின்னேர நடைக்குச் சென்றேன். கட்டுரையில் படித்த சம்பவங்கள் எனது அடிமனத்திலிருந்து மேலெழுந்தது. மௌனகுரு ’சமயம் சாராத உறவுகளால் உன்னதமான பல சரித்திர நிகழ்வுகளின் சிலவற்றை ஒவ்வொரு பக்கமாக இன்னொரு தரம் புரட்டிப் பார் என்ற எனது உணர்வைக் கிளறி விட்டார்.
இன மத மொழி வேறுபாடற்று மனித மேம்பாட்டுக்கு உழைத்த சிலர் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
இன. மத பேதமின்றி கிழக்கிலங்கை மட்டுமல்ல உலகத் தமிழ்கூறும் நல்லுலகமே போற்றப்படவேண்டிய மேன்மை தங்கிய விபுலானந்த அடிகளார் கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமுதாயம் மட்டுமன்றி முஸ்லிம்களின் கல்வியின் மேன்மைக்கும் உதவியது ஞாபகத்திற்கு வந்தது.
சைவக் குடும்பத்தில் பிறந்து கிறிஸ்தவக் கல்லூரிகளில் படித்து இந்தியாவிலும் சாதி மதபேதமற்ற விதத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம் அமைய அன்றைய பிரித்தானிய காலனித்துவ அதிகாரத்துடன் பேச்சுவார்த்தையைப் பெரும் அண்ணல்களின் குழுவுடன் தொடங்கி அதன்பின் அப்பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்த்துறைத் தலைவராக 1939ம் நியமிக்கப் பட்டார். கிழக்கிலங்கையில் மட்டுமல்லாது வடக்கில் வண்ணார் பண்ணை தொடக்கம் கிழக்கிலங்கையில் பல பகுதிவரை முப்பத்தி ஏழு பாடசாலைகளை நிறுவினார்.
சாதி மத பேதமின்றி ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்கும் உழைத்தார். அவரைப் பற்றி ‘அரங்கம்’ பத்திரிகையினால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த விபுலாநந்தர் பற்றிய ஆவணப்படத்தில் ஆய்வாளரும் எழுத்தாழருமான ஒரு முஸ்லிம் அறிஞர் சொல்லியதை இங்கு பதிவிடுகிறேன்.
‘விபுலானந்த அடிகளார் ஒரு முஸ்லிம் நேசராக வாழ்ந்தார் ஒரு கால கட்டத்தில் முஸ்லிம் மக்களின் கல்விக்கு அபார பங்களிப்பு செய்திருக்கிறார். இலங்கை அரசியலில் எத்தனையோ மஜீத்மார்களை சுவாமி விபுலானந்தர் உருவாக்கியிருக்கிறார். சுவாமி விபுலானந்தரால் நன்மையடைந்த இப்படிப்பல பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
விபுலானந்த அடிகளார் கிறிஸ்தவ பாசாலைப்படிப்பின் ஆழமான ஈடுபாட்டைப் பற்றி கிழக்கிலங்கை கிறிஸ்தவரான படுவான்கரை மீன் பிடி திணைக் கழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் பிள்ளை கிருஷ்ண பிள்ளையவர்கள் விபுலானந்த சுவாமி அவர்கள் இயேசுவை ஒரு ‘குருவாகக்’ கண்டவர் என்கிறார்.
அதேபோல் விபுலானந்த சுவாமிகள் இஸ்லாத்திலும் பற்றுள்ளவர். இஸ்லாத்தின் ஒரு அங்கமான ‘சூபிஸ்’ வழிபாட்டு முறையிலும் ஈடுபாடுகள் வைத்திருந்தார். புனித குரானை இஸ்லாமியர் தவிர யாரும் படிக்கக் கூடாது என்றபோது கோபப்பட்டார். விபுலானந்த சுவாமிகள் இமய மலை செல்ல முதல் தனது இஸ்லாமிய மாணவர்களையழைத்து அவர்கள் முறைப்படி மரியாதை செலுத்திச்சென்றாராம்.
அப்படியான சாதி மதமற்ற கிழக்கிலங்கைச் வாழ்க்கைச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த மௌனகுரு அவர்கள் இப்போது முஸ்லிம் மக்களுடனான தனது இணைவான வாழ்க்கை அனுபவத்தை எழுதுவதையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை.
அதேபோல் ஒரு இஸ்லாமியரின் அன்பான தொடர்பால் வந்த வாழ்க்கை மாற்றத்தால் உலக அரசியலில் ஒரு புதிய கோட்பாட்டையே கொண்டு வந்த மிக பிரமாண்டமான ஒரு ஆளுமையின் சரித்திரத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
லண்டனில் சட்டத்தரணியாகப் படித்து இந்தியா திரும்பிய காந்தி; அவரின் தகுதிக்குரிய வேலைகிடைக்காமல் 1893 தென்னாபிரிக்கா செல்கிறார்.
அவரை தென்னாபிரிக்காவில் வேலை செய்ய அழைத்தவர் டாடா அப்துல்லா என்பவர். மகாத்மா காந்தி அவர்கள் டாடா அவர்களின் அன்பான அழைப்பில் அவர்களின் வீட்டிலேயே தங்குகிறார். டாடா அப்துல்லாவின் வியாபாரம் பற்றிய வழக்கைப் பேச சட்டத் தரணியாக வேலையை ஆரம்பித்த முதல்நாளே காந்தியடிகள் வெள்ளையின இனவாதத்தை எதிர் நோக்குகிறார்.
அதன்பின் தென்னாபிரிக்க இனவாதத்திற்கு எதிராக அவரின் சத்தியாக்கிரக முறையிலான பல போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அங்கிருந்த குஜராத்தி ஹிந்தி தமிழ் ஆங்கிலம் மொழிபேசும் இந்திய முஸ்லிம்-தமிழ் மக்கள் அத்துடன் தென்னாபிரிக்க வெள்ளை கறுப்பு மக்களின் உதவியுடனும் 1906 தொடக்கம் 1913 வரை சத்தியாக் கிரகப் போராட்டங்களைத் தொடர்கிறார். அதன்பின் 1914ல் இந்தியா திரும்பியதும் இந்திய மக்களை சாதி சமய இன மொழி வர்க்க வித்தியாசமின்றித் திரட்டி உலகின் பிரமாண்ட சக்தியான பிரித்தானியாவை அடிபணிய வைக்கிறார். டாடா அப்துல்லா என்ற முஸ்லிம்தான் மகாத்தமா காந்தியின் வாழ்க்கையின் திருப்பு முனைக்குக் காரணியாகவிருந்தார் என்பதை அழுத்திச் சொல்லவே இதை எழுதுகிறேன்.
மகாத்மா காந்தியின் சாதி மதபேதமற்ற ஒருமைப்பாட்டால் ஒரு நாட்டின் மக்களையடக்கும் எந்த சக்தியையும் அடியபணிய வைக்கலாம் என்பதற்கு அவரின் கோட்பாடுகளைக் கையிலெடுத்து தென்ஆபிரிக்கக் கறுப்பு மக்களின் சுதந்திரப் போராளி நெல்ஸன் மன்டேலா அமெரிக்காவில் கறுப்பு மக்களின் சமத்துவத்திற்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களைச் சொல்லலாம்.
அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் வளர்ந்த சமத்துவ உணர்வுகளின் நீட்சியாக ஒரு கறுப்பு ஜனாதிபதியாக ஒரு கறுப்பன் அதுவும் அமெரிக்கரால் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆபிரிக்க இனத்தில் ஆண்மகனொருவருக்கும் வெள்ளையினப் பெண்ணொருத்திக்கும் பிறந்த ஒருத்தரான பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் நாற்பத்தி நான்காவது தலைவராக 2009 தொடக்கம் 2017 வரை பதவியிலிருந்தார். அத்துடன் 2009ல் அகில உலக இராஜதந்திரத்திறகான நோபல் பரிசையும் பெற்றார்.
இவரின் தகப்பன் பராக் ஓபாமா சீனியர் ஆபிரிக்காவில் கென்யாவைச் சேர்ந்தவர். தாய் ஆன் டன்ஹாம் என்பவர். ஆங்கிலேய வேல்ஸ் ஜேர்மன் சுவிஸ் அயர்லாந்து என்ற பல நாடுகளின் மரபணுவைக் கொண்டவர். அதாவது ஓபாமாவின் வெள்ளையினத் தாயின் பாரம்பரியப் பாட்டனார் 1859ல் அயர்லாந்திலிருந்து அமெரிக்கா சென்றதும் அதன்பின் அவரின் குடும்பம் ஒவ்வொரு கால கட்டத்திலும் அங்கு குடியேறிய பல வெள்ளையினத்தவர்களுடன் கலந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதுதான் சமத்துவ மனித உணர்வின் வெற்றிகள்.
இன்று அமெரிக்காவில் நியுயார்க் நகர மேயராக அமெரிக்க ஜனநாயக்கட்சியின் பெரும்பான்மையான மக்களைத் தனது பக்கம் சாரவைத்து உலகத்தையே அதிர வைத்திருக்கிறார் ஷொஃரான் மம்டாணி என்ற இந்திய பூர்வீகத்தைக் கொண்ட இளைஞர்.
இவரின் தாய் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான மீரா நாயர். இவர் பஞ்சாப் பகுதியில் பிறந்த ஒரு இந்துப் பெண்மணி. தகப்பன் மொகமட் மம்டானி என்ற கல்வி ஆளுமை. குஜராத் மாகாணத்தைச் சேர்ந்தவர். மும்பாய் நகரில் பிறந்தவர். பல காலத்தின்முன் இஸ்லாத்தைத்தை தழுவிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆபிரிக்காவில் தனது பெற்றோருடன் குடிபெயர்ந்தவர். இவர்களின் மகன்
ஷொஃரான் ஆபிரிக்காவிலுள்ள உகண்டா நாட்டின் தலைநகரான கம்பாலாவிற் பிறந்தவர். சமத்துவமான தாய் தகப்பனின் வாழ்க்கைமுறையில் வளர்ந்த இளம் மம்டானி அவரது இஸ்லாமிய அடையாளத்திற்கப்பால் பொது மக்களின் அன்பைப் பெறுகிறார்.
இன்று இலங்கையிலிருக்கும் முஸ்லிம்களின் பாரம்பரியம் கி.பி 7ம் நூற்றாண்டில் அராபிய வியாபாரிகளின் வருகையுடன் ஆரம்பிக்கிறாகச் சொல்லப் படுகிறது. அவர்கள் இலங்கையிலுள்ள துறைமுகம் சார்ந்த இடங்களில் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் அவ்விடங்களிலுள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று சரித்திரம் சொல்கிறது.
7. இஸ்லாம் எங்கள் மொழி இன்பத் தமிழ் எங்கள் மொழி- சுபைர் இளங்கீரனும் எச்.எம்.பி.முகைதீனம் கூறியவை.
என்ற மௌனகுரு அவர்களின் கட்டுரையில் அவர்களின் தாய் மொழி தமிழாக இருப்பதற்கு, இந்தியாவின் தமிழ் அரசர்களுடன் பண்டைக்காலம் தொடக்கம் அராபியர்களுடனிருந்த வியாபாரத் தொடர்பு காரணமாக இருந்திருக்கலாம். வியாபாரிகளாக வந்த முஸ்லிம்கள் இந்திவின் முதல் மூன்று மசூதிகளையும் கட்டினார்கள். முதலாவது இந்தியன் மசூதி கி .பி..624ல் கொடுங்கலுர் என்ற இடத்தில் கட்டப்பட்டது. அக்கால கட்டத்தில் சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவுகிறான். ’தாயுடின் சேரமான் பெருமாள்’ என்று அவன் பெயர் வைத்துக்கொள்கிறான்.
கேரளாவில் சேரமான் ‘யுமா மொஸ்க்’ கி.பி.629லும் கட்டுகிறார். அப்போது கேரளாவில் இருந்த மொழி தமிழாகும். அக்கால கட்டத்தில் அங்கிருந்து தமிழ் பேசும் அராபிய வியாபாரிகள் இலங்கைக்கும் வந்திருக்கலாம்.
1505ல் போத்துக்கேயர் பீரங்கியுடன் கோட்டை இராச்சியத்தில் வந்து இறங்கியதும் அவர்களுக்கெதிராகப் போராடியது கொழும்பிலிருந்த முஸ்லிம் வியாபாரிகள் என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதி கோட்டை அரசர் முஸ்லிம்களைப் பத்திரமாக இலங்கையின் உட்பகுதிகளுக்கு அனுப்பியதாகவும் சொல்லப் படுகிறது.
அதேமாதிரி 1815ல் ஆங்கிலேயர் கண்டியைப் பிடித்ததும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் பாதுகாப்பு கருதி பலர் கிழக்குப் பக்கம் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. உதாரணமாக கிழக்கு வந்த வியாபாரிகளும் அந்த ஊர்ப் பெண்களையே மணம் செய்து கொண்டார்கள் என்பதற்கு கிழக்கு முஸ்லிம்களிடமிருக்கும், தமிழர்களிடமுள்ளது போன்ற ‘குடிமுறை’ போன்றவை உதாரணமாகும். அதன் நீட்சியாக அவர்களிடையே இன்னும் பல இடங்களில் இறுக்கமான இணைவுகள் உள்ளன.
திரு மௌனகுரு அவர்களின் புத்தகத்தைப் படிப்போருக்கு இப்படியாகச் சாதி மத பேதமற்ற ஒரு அற்புதமான சமுதாயம் இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தது என்று தெரியும்.
அந்தச் சமுதாயம் இலங்கையில் நடந்த போர்க்காலத்தில் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள் பகைமையுடன் வாழ்ந்தார்கள் என்பதையும் எழுதப் படவேண்டும். அப்படியே தொடர்ந்து வாழ்தலுக்குப் புரிந்துணர்தல்களும் சமத்துவ சிந்தனைகளும் இரு சமூகங்களாலும் முன்னெடுக்கப்படவேண்டும்.
