— அழகு குணசீலன் —
ஞாயிறு(26.07.2025) காலை எழுந்த போது அந்தச் செய்தி.
அண்ணர் பேராசிரியர் செல்வராசா நோயுற்றிருப்பதை அறிந்திருந்ததால் அது எதிர்பாராத செய்தி அல்ல, எதிர்பார்த்த ஒன்றுதான். என்றாலும் ஏற்க மனம் மறுத்தது.
சுமார் ஐம்பது ஆண்டுகால உறவும், தொடர்பும் மனக்கண்ணில் காட்சியாக ஓடின.

கடந்த மார்ச் மாதம் மட்டக்களப்பில் இடம்பெற்ற எனது ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ மொழிபெயர்ப்பு சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா அவர் முன்னிலையிலேயே நிகழ்ந்தது.
நோயுற்றிருந்த போதும் , குடும்பத்தினரின் ஆதரவுடன் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் கலந்து கொண்ட இறுதி பொதுநிகழ்வு அதுதான்.
எங்கள் இறுதிச்சந்திப்பும் அதுதான். அந்த வகையில் ஒரு திருப்தி.
ஆனாலும் அன்றைய நினைவுகள் இதயத்தை இறுக்குகின்றன.
எனக்கும் செல்வராசா அண்ணருக்குமான உறவு அவரது திருமண பந்தத்திற்கு முந்தியது. அதனால் அவரது முனைக்காடு திருமணபந்தத்தில் எனக்கும் ஒரு பங்குண்டு.
பிறந்த மண்ணில் திருமண பந்தம் விடுபட்டிருந்த தாய்வழி வேர்களைத் தேடவும், முதுசத்தை அறியவும் பெரும் வாய்ப்பாகிப் போனதை அண்ணர் அடிக்கடி நினைவு கூருவார்.
இல்லையேல் அந்த தொப்புள்கொடி உறவு அறுபட்டு போயிருக்கும் என்பது அவர் கருத்தாக இருந்தது.
அண்ணர் பேராசிரியர் செல்வராசா எம்.ஏ. கற்கைநெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட காலமும், அவர் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க மகாவித்தியாலயத்தில் ஆசிராயராக கடமையாற்றிய காலமும், எனது பல்கலைக்கழக காலமும் ஒன்று.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்கும்போது வார இறுதி நாட்களில் அவரது குடும்பத்தினரை சந்திக்க செல்வதுண்டு. அனேகமாக மதிய உணவு வேளைக்கு செல்வது வழக்கமாக இருந்தது.
அவரது அன்பு துணைவியார் குணலெட்சுமியின் சமையல் தனிரகம். குணலெட்சுமி முனைக்காடு, முதலைக்குடா பாடசாலைகளில் எனது வகுப்புத் தோழி என்பதால் இந்த உறவு ஒரு குடும்ப உறவாகவே ஆரம்பம் முதல் மலர்ந்தது.
இந்த பல்கலைக்கழக காலத்தில் தான் 1978, நவம்பரில் சூறாவளி கிழக்கைத்தாக்கியது.
ஏற்கனவே சமூக, பொருளாதார, அரசியலில் பின் தங்கியிருந்த – பட்டிக்காடு- படுவான்கரைக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இழப்பு என்பது ஒரு தனி நபரிடம் அல்லது ஒரு சமூகத்திடம் இருந்ததில் எவ்வளவு இழக்கப்பட்டது என்பதைக்கொண்டு நிர்ணயிக்கப்படுவது.
இங்கு இழப்பு அளவு ஒன்றாக இருந்தாலும், இழப்பின் சுமை வீதம் குறைவாக இருப்பவர்களுக்கே அதிகமாக இருக்கும்.
அந்த சமூக, பொருளாதார, அரசியல் குறைவை – பற்றாக்குறையை கொண்ட பிரதேசம் படுவான்கரை. இதனால் சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு-இழப்பு இங்கு அதிகமாக இருந்தது.
இந்த சூழலை பார்த்து இதிலிருந்து விடுபட எங்களால் அன்றைய சூழலில் செய்யக்கூடியதாக இருந்த ‘சிரமதானம்’ இலவச வகுப்புக்களை நடாத்துவது மட்டுமே.
இந்த எண்ணக்கருவின் தந்தை பேராசிரியர் செல்வராசா.
முனைக்காட்டில் கிடைக்கக்கூடியதாக இருந்த மனிதவளத்தை ஒருங்கிணைத்து “ஒளிக்கல்லூரி”( COLLEGE OF LIGHT) நிறுவப்பட்டது.
ஒளிக்கல்லூரியின் முதலாவது அதிபராக பொறுப்பேற்று அதற்கான விதையை விதைத்து தேவையான அனைத்தையும் வழங்கி, திட்டமிட்டு செயற்பட வேண்டியிருந்ததால் ஊரிலும், கொழும்பிலும் அண்ணரைச் சந்தித்து அடிக்கடி ஆலோசனைகளைப் பெறவேண்டிய தேவை..
முதலில் O/L மாணவர்களைக் கொண்டு அதற்கும் கீழ் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும், அடுத்து A/L மாணவர்களைக் கொண்டு O/L மாணவர்களுக்கும் கற்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அன்றைய பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள் பல்கலைக்கழக விடுமுறைக்காலத்தில் A/L பிள்ளைகளுக்கு வகுப்புக்களை நடாத்தினோம்.
பிற்காலத்தில் அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கன்னன்குடா கிராமங்களுக்கும் ஒளிக்கல்லூரியின் பணி விரிவுபடுத்தப்பட்டது. உள்ளூர் மனித, பௌதிக வளங்களுடன் முனைக்காடு இளைஞர்களும் இந்தப் பணியில் இணைந்து கொண்டனர்.
இதன்மூலம் ஒளிக்கல்லூரியின் சேவை மண்முனை தென்மேற்கில் இருந்து மண்முனை மேற்கிற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த அடிப்படையில் இறால் பண்ணை படுகொலை வரையும், யுத்தம் ஒரு தொகுதி மக்களை ஊரை விட்டு துரத்தும் வரையும் ஒளிக்கல்ல்லூரி என்ற விதை ஒரு பெரு விருட்சமாக வளர்ந்தது. அந்த விருட்சத்தின் விழுதுகள் இன்றும் நீள்கின்றன.
இந்த விருட்சம், செல்வராசா என்ற மானிட விருட்சம் மரணித்தும் இன்னும் படுவான்கரைக்கு விட்டுச் சென்றிருக்கின்ற அழியாச்சொத்து.
1983 கறுப்பு யூலை வன்முறைகாலத்தில் இரத்மலானை இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்தார். கல்லூரியின் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து இருந்து உயிர் தப்பினார்.
தேசிய கல்வியியல் நிறுவனம் முதல் கல்விசார் பல பதவிகளை அலங்கரித்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட தலைவராகவும் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் வேந்தராகவும் பதவி உயர்ந்தவர் அண்ணர் செல்வராசா.
மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷனுடனான அவரது உறவு மிக நீண்டது.
இராமகிருஷ்ண பரமகம்சர், சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர்,சுவாமி விபுலாந்தர் ஆகியோரின் தத்துவங்களால் புடம்போடப்பட்டவர் அவர்.
சுவாமி ஜீவானந்தா ஜீயின் காலத்தில், சிவானந்தா வித்தியாலய அதிபர்கள் கணபதிப்பிள்ளை, மற்றும் தியாகராஜா காலத்தில் மிஷனின் முக்கிய செயற்பாட்டாளர்களுள் ஒருவர்.
இவற்றிற்கும் புறம்பாக தாழங்குடா முதல் மட்டக்களப்பின் 15 கிராமங்களில் தாய்மார் பாடசாலைகளை ஆரம்பித்த முன்னோடி. இது ‘ஒரு பெண்ணுக்கு கல்வியூட்டுவது ஒரு சமூகத்திற்கு கல்வியூட்டுவதற்கு சமமானது’ என்ற ஆபிரிக்க பழமொழியை என்றும் எமக்கு சொல்லுகிறது.
மட்டக்களப்பு மண்ணை என்றும் நேசிக்கும் ஒருவராகவே அவரை அடையாளப்படுத்தமுடியும், அவரும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
இது மட்டக்களப்பின் சமூக, பொருளாதார, அரசியல், மானிடவியலில் வரலாற்றில் அவர் அக்கறை கொள்ள காரணமானது.
கிழக்கிலங்கை தமிழர் ஒன்றியத்தில் அவரின் செயற்பாடு இது சார்ந்தது. கட்சி அரசியலில் என்றுமே ஈடுபாடற்ற அவர், எனினும் படுவான்கரையின் சமூக, பொருளாதாரத்தை முதன்மை படுத்திய அரசியலுக்கும், பிரதிநிதித்துவத்திற்கும் முதன்மை அளித்தார்.
இந்த வகையில் மட்டக்களப்பு தமிழகத்தில் எரிந்து கொண்டிருக்கின்ற மண்ணின் சுடர்களில் ஒன்று இன்று அணைந்தது.
அண்ணர் செல்வராஜாவின் பிரிவுத்துயரால் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர், ஊரவர்களுக்கும், மட்டக்களப்பு கல்விச்சமூகத்திற்கும், மக்களுக்கும் அரங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இறுதி அஞ்சலியும் , இறுதி வணக்கமும் அண்ணா…!
