— அழகு குணசீலன் —
இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் கிழக்கு அரசியல் களத்தில் தலைமைத்துவம் குறித்த ஒரு விவாதத்திற்கான இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் 2018 இல் கிழக்கு தமிழர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட அரசியல் பிரிவுக்கும், கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் ரி.எம்.வி.பியின் தலைவர் பிள்ளையான், கருணா அம்மான், வியாழேந்திரன் ஆகியோருடன் இணைந்து அமைக்கப்பட்ட படகு சின்னத்தை கொண்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்குமான முரண்பாட்டின் அடிப்படையில் கிழக்கு அரசியல் தலைமைத்துவம் குறித்து பேச வெளிச்சம் முனைகிறது.
அரங்கம் வெளிச்சம் பத்தி தொடரில் இந்த விவகாரம் மீண்டும் ஒரு முறை பேசுபொருளாக்கப்படுவதை தூண்டிய மற்றொரு காரணம் அண்மையில் இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக(?) நாடாகக் கூறப்படுகின்ற இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலை நிரப்பிக்கொண்டு, இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாதுள்ள 345 பதிவுசெய்யப்பட்ட கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறிப்பாக 2019 முதல் கடந்த ஆறு ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளுக்கு இது பொருந்தும். தேர்தலில் போட்டியிடாத இந்த கட்சிகள் அலுவலகங்களை நேரடியாக வைத்திருக்கவும் முடியாது என்பது இந்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு.
இது என்ன இந்திய அரசியல் சமாச்சாரத்திற்கும், கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கும், ரி.எம்.வி.பிக்கும் சம்பந்தமில்லாமல் வெளிச்சம் முழங்காலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுகிறது என்று சிலர் நினைக்கக்கூடும். அங்குதான் விடயமே இருக்கிறது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் உள்நாட்டு அரசியலில் எடுக்கப்படுகின்ற முடிவுகள், சட்டவாக்கங்கள் இலங்கையில் காலனித்துவ காலம் முதல் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. இந்தியாவின் நள்ளிரவுச்சுதந்திரத்துடன் இது ஆரம்பமாகிறது. இந்திராகாந்தியின் அவசரகால சட்டத்திற்கும், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அவசரகாலச்சட்டத்திற்கும் இந்த முடிச்சு பொருந்தும். அதேபோன்று நரேந்திர மோடியின் ஒருநாடு ஒருசட்டத்தின் நிழலே கோத்தபாயாவின் ஒருநாடு ஒரு சட்டம். இன்றைய பிராந்திய பூகோள அரசியலில் இந்தியாவின் செல்லப் பிள்ளையாகவுள்ள இலங்கைக்கு இவ்வாறான அரசியல் கருத்தியல்களை உள்வாங்கி கொள்வதற்கான பிராந்திய அரசியல் தூரம் பாக்குநீரிணைக்கு இடையிலான தூரத்தைவிடவும் குறைவானது என்பது சமகால அரசியல் ஜதார்த்தம்.
சரி. இனி விடயத்திற்கு வருவோம். கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியல் சிந்தனைக்கான – தலைமைத்துவத்திற்கான விருப்பம் என்பது சுதந்திரம் பெற்ற காலம் முதல் நிழலாடிவந்துள்ளது. ஆனால் கிழக்கு தனித்துவ அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த நல்லையா, எதிர்மன்னசிங்கம், மற்றும் பிற்காலத்தில் தேவநாயகம், ராஜன் செல்வநாயகம், இராசதுரை இவர்களால் இந்த விருப்பம் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை. தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய அரசியலை நிராகரித்து நின்ற இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண அரசியல் தலைமைத்துவத்தை கிழக்கில் நிராகரித்தவர்கள். இடதுசாரி அரசியல் செய்த மயில்வாகனம், சிவகுருநாதன் போன்றோரும் யாழ்ப்பாண தலைமைத்துவத்தை நிராகரித்தவர்களே. இராசதுரையைத் தவிர இவர்கள் அனைவரும் கொழும்பு அரசியலில் நீண்டகாலம் நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களின் கிழக்கு அரசியல் தலைமைத்துவம் வெறும் எண்ணமாகவே இருந்ததே அன்றி கருக்கூட்டவில்லை.
இன்னும் ஒருவகையில் சொன்னால் கிழக்கின் நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்த இவர்கள் வடக்கு அரசியலை நிராகரித்து தெற்கு அரசியலோடு இணைந்து பயணிப்பதை இலக்காகக்கொண்டவர்கள். ஆனால் வடக்கு, மேற்கு தலைமைத்துவங்களுக்கு அப்பால் கிழக்கில் ஒரு தலைமைத்துவத்தை விரும்பிய போதும் அது பல்வேறு சமூக, பொருளாதார, ஆயுத -அரசியல் காரணங்களால் சாத்தியப்படவில்லை. இந்த நிலை கொழும்பு முஸ்லிம் தலைமைகளை நிராகரித்த கிழக்கு முஸ்லிம் தலைவர்களுக்கும் பொருந்தும். பின்னர் கொழும்பு முஸ்லிம் தலைமையில் மட்டும் அன்றி வடக்கு தமிழ் தலைமையிலும் நம்பிக்கை இழந்த கிழக்கு முஸ்லிம்கள் “முஸ்லீம் காங்கிரஸ்” ஊடாக தமக்கான தனித்துவ தலைமைத்துவம் ஒன்றையும், அரசியல் அடையாளம் ஒன்றையும் தேடிக்கொண்டனர். அப்போதும் கிழக்கு தமிழர்களுக்கு அந்த வாய்ப்பு கனியவில்லை. இந்த வரலாறு கிழக்கின் தனித்துவ அரசியல் பயணத்தில் ஏற்பட்ட, ஏற்படக்கூடிய ஏற்ற, இறக்கங்கள், தடைகள், பிரச்சினைகளை விளங்கிக்கொள்வதற்கு இன்றைய சூழலில் அவசியமாகிறது.
பொருளாதார கோட்பாடுகளில் சந்தையில் உள்ள பண்டங்கள், சேவைகளுக்கான வெறும் விருப்பங்கள் எவ்வாறு கேள்வியாக (DEMAND) ஆக முடியாதோ, அதே போன்று தான் அரசியல் கோட்பாடுகளில் அரசியல் சந்தையில் வெறும் விருப்பங்களும் கேள்வியாக முடியாது. பொருட்கள் சேவைகள் சந்தைக்கு கேள்வியை ஏற்படுத்த நுகர்வோருக்கு கொள்வனவு சக்தி தேவைப்படுவது போன்று அரசியல் செய்வதற்கும் மக்களை அரசியல் மயப்படுத்தி, கட்சிக்கான கேள்வியை அதிகரிக்க சமூக, பொருளாதார, அரசியல் சக்தி தேவையாகிறது. இந்த சக்தி இல்லாதவரை எந்த அரசியல் சிந்தனையும் வெறும் விருப்பமாகவே இருக்கும். விருப்பங்கள் வேறு, செயற்பாட்டு அரசியல் வேறு. இந்த செயற்பாடுகள் இலங்கையின் பாராளுமன்ற கட்சி அரசியல் சாக்கடையில் எந்தளவு தூய்மையானவை? எந்தளவு அழுக்கானவை ? எது ‘ஒள்ளுப்பம்’ ? எது ‘கொள்ளயாக’ கலந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த உலகில் எங்களால் ஏன் ? நூறு வீத தூய அரசியலுக்கு ஒரு நாட்டை, அல்லது ஒரு அரசியல் இயக்கத்தை பெயரிட முடியாதிருக்கிறது. ஏனெனில் நடைமுறை ஜதார்த்த அரசியலில் அனைத்தும் “கலப்படம்”. தூய்மையும், அழுக்கும், உண்மையும், பொய்மையும் , அறமும், அநீதியும், நேர்மையும், நேர்மையின்மையும் கலந்த அரசியல் உள்ளதேயன்றி முற்றிலும் தூயதான அரசியல் இல்லை. வேண்டுமானால் இந்த கலப்பின் விகிதாசாரமே நாங்கள் பேசும் தூய்மை அரசியலை நிர்ணயிக்கிறது. அது பூச்சியம் முதல் நூறுவீதம் வரை வேறுபடலாம். இன்றைய அரசியலில் 50:50 கலப்புடன் ஒரு அரசியல் கட்சியை கண்டு பிடித்தாலே அது பெரியவிடயம். என்ன செய்ய வேறுவழியில்லை. அரைவாசி தூய்மை அரைவாசி ஊத்தைதான். நாங்கள் காந்தி, காமராஜர், மார்க்ஸ், மாவோ காலத்தில் இல்லை. இதிகாச புராணங்கள் பேசுகின்ற புனைகதை அரசியல் காலமும் அல்ல இந்தக்காலம்.
இந்த அடிப்படையில் கிழக்கிற்கான தூய்மை அரசியலில் மூன்று முக்கிய விடயங்களை முதன்மைப்படுத்தி. நோக்குவதற்கு வெளிச்சம் முனைகிறது.
1.கட்சி அரசியலில் துய்மைக்கோட்பாடு.
2. கள ஜதார்த்தம்.
3. கிழக்கு அரசியல் தலைமைத்துத்தின் எதிர்காலம்.
கட்சி அரசியலில் தூய்மை கோட்பாடு:
உலகின் எந்த ஒரு நாட்டிலும் அதிகாரத்திற்கான கட்சி அரசியலில் நூறு வீத தூய்மை இல்லை. அதிகாரத்திற்கான போட்டி அரசியலில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களைத்தாங்களே தூய்மையானவையாகவும், மற்றையவை தூய்மையற்றவை எனவும் விளம்பரம் செய்யகின்றன. இந்த விளம்பரத்திற்கும் பண்டங்கள், சேவைகள் சந்தை விளம்பரத்திற்கும் இடையே வேறுபாடு காண்பது கஷ்டம். விளம்பரங்கள் ஏமாற்றுக்கள் என்று தெரிந்தும் ஏதாவது ஒன்றை தெரிவு செய்யவேண்டிய கட்டாய நிலையில் மக்கள் பொருளாதார, அரசியல் சந்தையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல அரசியல் தூய்மை.
மக்களின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் நடாத்திய இயக்கங்களின் அரசியலிலே தூய்மையற்ற நிலையில் பாராளுமன்ற கட்சி அரசியலில் தூய்மையை எங்கு தேடுவது. வேறு மாற்றுக்கள் இல்லாமலே மக்கள் சாக்கடைக்குள் ஊத்தை குறைந்தது என்று நினைப்பதை தெரிவு செய்கிறார்கள். அதை அந்தக்கட்சி தாங்கள் தான் புனிதர்கள் என்று புனைகிறது. தமிழ்த்தேசிய கட்சிகளினதும், அதற்கான மாற்றுக்கட்சிகளினதும் தூய்மை இந்த அளவுக்குத்தான் அடங்குகிறது. தென்னிலங்கை கட்சிகளுக்கும், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் இது பொருந்திப்போகிறது.
தென்னிலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்களை விடவும், தேசிய மக்கள் சக்தி தன்னை புனிதராக விளம்பரம்செய்தது. ஆனால் மக்களுக்கு அவர்களின் புனிதம் தெரியாததல்ல. என்றாலும் மற்றையவற்றில் அப்பியுள்ள அரசியல் அழுக்கைவிடவும் ‘ஒள்ளுப்பம்’ குறைவு என்பதால் தேர்வு செய்தார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி கடந்த எட்டு மாதங்களில் அழுக்கை மேலும் அள்ளிப்பூசிக்கொண்டதால் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னாள் இயக்கங்களின் கடந்த முப்பதாண்டுகால போராட்ட அரசியல் அழுக்கு இன்னும் ‘கொள்ளயாக’ அகற்றப்படவில்லை. இதனால் தமிழ்த்தேசியகட்சிகள் ஒப்பீட்டளவில் குறைந்த அழுக்கை கொண்டிருப்பதால் மக்கள் தெரிவு செய்கிறார்கள். இதுதான் இன்றைய இலங்கை அரசியல் ஜதார்த்தம்.
இதற்கும் அப்பால் தூய்மையை தேடினால் இருந்தால்தானே கிடைப்பதற்கு. எனவே கதிரைக்கான கட்சி அரசியலில் முழுத் தூய்மை என்பது முழுப் பொய்மை.
தமிழர்விடுதலைக்கூட்டணி “கறந்தபால் முலைக்கு ஏறாது தனித் தமிழீழமே தீர்வு” என்று பிரகடனம்செய்தது. விடுதலைப்புலிகள் “தமிழர் தாகம் தமிழீழத்தாயகம்” என்றார்கள். இடதுசாரி சார்பு போராட்ட இயக்கங்கள் “சமதர்ம தமிழீழம்” என்றார்கள். இவர்கள் அனைவரிலும் இருந்த கொள்கைத்தூய்மை எவ்வளவு? இந்த இலக்கை அடைய அவர்களின் அரசியல், ஆயுத செயற்பாடுகள் எவ்வளவு தூய்மையாக அமைந்தன? சமூக விஞ்ஞான அரசியல் இலக்கில் இயங்குநிலையில் உள்ள அரசியலில் பூகோள அரசியல் சூழல், மற்றும் மக்களின் அபிலாஷைகள் என்பன எந்தளவுக்கு கருத்தில் கொள்ளப்பட்டன? இதற்குள் எல்லோரும் “கோழிதிருடியவன் கூட நின்று உலாவுவதுபோல்” தூய்மையை தேடுகிறார்கள். அவன்தான் திருடன், இல்லை இவன்தான் திருடன் என்கிறார்கள். இந்த அளவில் தான் நாம் தேடும் கட்சி கதிரை அரசியல் தூய்மை கோட்பாடு இருக்கிறது. தூய்மை என்பது கொள்கை, அதை அடையும் வழி, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை உள்வாங்கல் என்பனவற்றில் பிரதிபலிக்க வேண்டும்.
கள ஜதார்த்தம்:
கிழக்குக்கான தனித்துவ அரசியல் தலைமைத்துவம் என்ற எண்ணம் கடந்த 50 ஆண்டுகளாக ஈடேறாமல் போனதை அரசியல் கள ஜதார்த்தமே தீர்மானித்தது என்பது வெளிப்படை. அந்த கனவை நனவாக்கியதும் கள ஜதார்த்தத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம் தான். விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு இந்த எதிர்பாராத மாற்றம். வெறும் பிளவினால் மட்டும் இது சாத்தியமாகவில்லை. அன்றைய சூழலில் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ளக்கூடிய ஆயுத பலமும் தேவைப்பட்டது. அதுமட்டுமின்றி அன்றைய அரசியலில் அரசாங்கத்தரப்பின் மறைமுக, வெளிப்படையான ஆதரவும் தேவைப்பட்டது. கருணா அம்மான் அணிக்கு களத்தில் வேலை செய்ய போராளிகள் -மனிதவளம் இருந்தது. மக்கள் இருந்தார்கள்.
சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை கொழும்பு அரசாங்கங்களோடு கைகுலுக்காத எதாவது ஒரு தமிழ்க்கட்சி, தமிழ் இயக்கங்கள், அவர்களின் தலைமைகள் இருக்கிறீர்களா? இருந்தால் வெளிச்சத்திற்கு வாருங்கள். கருணாவும், பிள்ளையானும், டக்ளஸ் தேவானந்தாவும் தானா கொழும்பு அரசாங்கத்தின் ஆதரவை பெற்றிருந்தனர். விடுதலைப்புலிகள், புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எப். ஈரோஸ் உள்ளிட்ட அனைத்து ஆயுத அமைப்புக்களும் கொழும்பு ஆட்சியாளர்களிடம் இருந்து ஆயுதங்கள், நிதி, மற்றும் வசதிகளை காலத்திற்கு காலம் பெற்றிருந்தனர். அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் பெற்றன. ஆக, அனைவருமே ஒட்டுக்குழுவும், ஒட்டுக்கட்சியும்தான். இந்த தூய்மை அற்ற அரசியலால் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் கொழும்பால் வளர்க்கப்பட்டன. இதுவே கள ஜதார்த்தமாக இருந்தது.
புலிகளின் அராஜகம் மக்களின் மனநிலையில் கிழக்குக்கு ஒரு அரசியல் தலைமைத்துவம் தேவை என்பதை உறுதிசெய்வதாக அமைந்தது. மற்றைய இயக்கங்களுடனான கடந்த கால கசப்பான அனுபவங்களும் இதனை ஊக்கப்படுத்தின. விடுதலைப்புலிகளின் கொலைக்கலாச்சாரம் உடனடிக்காரணமாக உந்து சக்தியை வழங்கியது. விளைவு: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிறப்பிற்கு வழிவகுத்தது. அன்றைய சூழலில் கிழக்கு மண் இரத்தத்தால் தோய்ந்திருந்த நிலையில், இரத்தக்கறை படிந்த புலிகளை விடவும் ஒப்பீட்டளவில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளிடம் படிந்திருந்த இரத்தக்கறை குறைவானது மட்டும் அன்றி அவர்களின் கோரிக்கை நியாயமானது என்ற முடிவுக்கு மக்கள் வந்திருந்தார்கள்.
நடந்த வெறியாட்டங்கள் தங்களுக்கு என்றொரு தலைமைத்துவம் இல்லாததினால்தானே யாருக்காகவோ, போராடி யாருக்காகவோ எங்கள் இளைஞர்கள் மடிய வேண்டியிருக்கிறது என்ற சிந்தனையை கிழக்கு மக்களுக்கு ஏற்படுத்தியது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை 2008 முதல் மக்கள் தொடர்ச்சியாக ஆதரித்து வருகின்றனர். ஒப்பீட்டளவில் மற்றைய கட்சிகள் எதுவும் கொண்டிராத கட்சி அரசியல் கட்டுமானமும், களச்செயற்பாடும் ரி.எம்.வி.பி.யிடம் உள்ளது. அதற்காக அவர்கள் தவறு செய்யாதவர்கள் என்றோ, செய்த தவறை மறைப்பதாகவோ கருவதற்கில்லை. அப்படி ஒரு அரசியல் தவறுகள் பட்டியல் போட்டால் முதலில் இடம்பிடிப்பவர்கள் விடுதலைப்புலிகளும், தமிழ்த்தேசிய கட்சிகளும்தான்.
கிழக்கு தலைமைத்துவ எதிர்காலம்:
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியது தவறு என்பதில் வெளிச்சத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் சம்பந்தப்பட்டவர்களுடன் இதற்கான அனுமதியை கேட்டும், அவர்கள் ஒன்றுக்கு பலதடவை மறுத்த பின்னரும் அப்பெயரை ரி.எம்.வி.பி.பயன்படுத்தியது விட்டதவறை இரட்டிப்பாக்கிறது. ஆனால் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் ரி.எம்.வி.பி.க்கு எதிரான முறைப்பாட்டில் தேர்தல் திணைக்களம் காட்டும் மெத்தனப்போக்கு சந்தேகத்திற்குரியது. கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு சார்பாகவும், அந்த பெயரை படகு பயன்படுத்தவும் இதுவரை தேர்தல் திணைக்களம் தடைவிதிக்கவில்லை. இதில் ஏதேனும் சட்டவலுவின்மை உள்ளதா? என்றாலும் சட்டமும், மனச்சாட்சியும் எப்போதும் சேர்ந்து பயணிப்பதில்லை என்பதால் சட்டவாதம் ரி.எம்.வி.பி.யை நியாயப்படுத்துவதாகாது.
ஆனால் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கருத்தின்படி கொள்கையளவில் வித்தியாசங்களும் தெரியவில்லை. ஆனால் தூய்மையே ஒரு பிரச்சினை என்றால் அதை எப்படி சுத்தப்படுத்துவது. தமிழரசு சி.வி.கே. சிவஞானம் ஈ.பி.டியை சுத்தப்படுத்தியதும் ஒரு மாதிரிதான். என்.பி.பி. பெரும்பான்மையுள்ள சபைகளில் யாராக இருந்தாலும் ஆதரிப்போம், அது ரி.எம்.வி.பி. என்றாலும் சரி என்ற ஜனநாயக முடிவும் ஒரு சுத்தப்படுத்தல்தான். சுயேட்சை பிரதிநிதி ஒருவர் மக்களின் வாக்கை மதித்து ரி.எம்.வி.பி.யுடன் இணைந்து செயற்பட எடுத்த முடிவும் ஒரு சுத்தப்படுத்தல்தான். இவை அனைத்தும் அவை கதிரைக்கானவை என்றாலும் அரசியல் இயக்கமொன்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் பிரதிபலிப்பு. இந்த அணுகுமுறையே தவறுகளை திருத்தவும், தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுத் கொள்ளவும் உதவும். எந்த ஒரு அமைப்பும், எந்த ஒரு கட்சியும் நூறு வீதம் தூய்மை என்பது பொய்மையானது என்பதை தமிழரசும், என்.பி.பி.யும் இது விடயத்தில் நிரூபித்துள்ளன. தமிழ்த்தேசிய கொள்கைக்கு முற்றிலும் எதிரான முஸ்லீம் காங்கிரஸ், தமிழரசு திருமணமும் நடந்திருப்பதும் அரசியல் இருப்புத்தான்.
கிழக்கில் ரி.எம்.வி.பி.க்கு மாற்றான தலைமைத்துவம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்றால் அதற்கான மேற்கூறிய கள ஜதார்த்தம், மனித, பௌதிக, நிதி வளங்கள் தேவை. இன்றைய சூழ்நிலையில் அவ்வாறான ஒரு மாற்று ஒரு ‘விருப்பமாக’ இருக்க முடியுமே தவிர அரசியல் சந்தையில் டிமாண்ட் ஏற்படுத்துவதாக அமைய வாய்ப்பில்லை. தமிழ்த்தேசிய அரசியலில் மட்டும் அன்றி தென்னிலங்கையில், மலையகத்தில் ஏற்பட்ட பல முரண்பாடுகளில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. கையில் பொல் இல்லாமல் எறியமுடியாது. இருக்கிற கையில் உள்ள பொல்லை சேர்த்து எறிவது கலப்படத்திலும் சற்று தூய்மைப்படுத்துவதாக அமையாதா?
இல்லையேல், இன்றைய நிலையில் கிழக்கின் அரசியல் தலைமைத்துவம் என்பதும், தனித்துவம் என்பதும், கிழக்கிற்கான அரசியல் நகர்வு என்பதும் இல்லாத தூய்மையைத் தேடி எல்லோரும் சேர்ந்து சாக்கடையில் குளித்தகதையாகவே முடியும். இதனால் ஏற்படப்போகின்ற இடைவெளியை நிரப்பப்போவதுயார் என்பது வெளிப்படை. ஒரு அரசியல் இயக்கமொன்றிற்கான அடிப்படைகள் எதுவும் இல்லாமல் மாற்றங்களையும், மாற்றத்தையும் தேடுவது இன்றைய கள நிலையில் கற்பனையானது. ஜே.வி.பி.க்கு இந்த இலக்கை அடைய 60 ஆண்டுகள் ஆனது என்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க.
நாங்கள் அனைவரும் ஏதோ ஒரு அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள். நாங்கள் அனைவரும் ஒரு தூய்மையான அரசியல் பாதையூடாக செல்நெறிதவறாது பயணித்தோம், பயணிக்கிறோம் என்று எங்களில் எத்தனை பேருக்கு சத்தியம் செய்யும் தைரியம், நேர்மை இருக்கிறது?
இல்லாதை தேடுவதைவிடுத்து இருப்பதை பலப்படுத்துவதே கிழக்கின் இன்றைய தேவை.
