அம்ஷிகா (தற்)கொலை :  பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும்…..!(வெளிச்சம்: 058)

அம்ஷிகா (தற்)கொலை :  பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியும்…..!(வெளிச்சம்: 058)

— அழகு குணசீலன் —

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கமாக, பொறுப்பு வாய்ந்த ஒரு மகளிர் விவகார அமைச்சராக, ஒரு பெண்ணாக, இன்னுமோர் பெண்ணுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டிய குரல் மகளிர் அமைச்சரின் குரலாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அது மக்களின் பக்கம் குற்றம் சாட்டும் குரலாக மாறியிருப்பது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை சட்டை செய்யாத, பதவியில் இருந்தும் தனது இயலாமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது துரதிஸ்டவசமானது……..”. 

என்று என்.பி.பி. அரசாங்கத்தின் மகளிர், சிறார் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ்க்கு. காட்டமான கண்டனத்தை பதிலாக அளித்திருக்கிறார் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன். 

 கொழும்பு, பம்பலப்பிட்டி இராமநாதன் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பாலியல் வன்முறை தொடர்பாக அமைச்சர் சரோஜா பாராளுமன்றத்தில் பேசுகையில் குறிப்பிட்ட  குறித்த மாணவி, மாணவியின் பெற்றோர், சமூக ஊடகங்களிடம்  தீர்வை தேடல் பற்றிய கருத்துக்களுக்கு எதிர்வினையாக அனுஷாவின் பதில் அமைந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் இது விடயமாக   மனோ கணேசன்  எம்.பி. யும் அமைச்சர் சரோஜா பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்களை கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹருணி அமரசேகர வெளியிட்டுள்ள கருத்தும் சிந்திக்கத் தக்கது. “இவ்வாறு சிறுமி தற்கொலை செய்து கொண்ட தானது சமூகம் என்ற வகையில் நாம் தோல்வியடைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது…..”.   அப்படியானால் தோல்வியுற்ற அந்த சமூகம் எது?  சமூகவியல் நெருக்கடிகளில் ஒரு சமூகத்திற்கு பாரிய பொறுப்புண்டு. ஆனால் இந்த பொறுப்புணர்ச்சி, பொறுப்புக்கூறல் ஒரு சமூகத்தில் தானாக ஏற்படுவதில்லை அதற்கான அடித்தளம் இடப்படவேண்டும். அதைச் செய்யாமல் சமூகம் தோற்றுவிட்டது என்று தப்பிச்செல்லமுடியுமா? அப்படியானால் முறைமை மாற்ற அரசியலின் விளைவு என்ன?

 மறுபக்கத்தில் இலங்கையில் இனம், மதம், பிரதேசம், திசைகளை கடந்த சமூகத்தை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ஜனாதிபதி போற இடமெல்லாம். ஓதுவதும், இன, மத வாதமற்ற இலங்கை  சமூகத்தை கட்டி எழுப்புவோம் என்று சூளுரைப்பதும் வெறும் கனவா? இதைத்தான் சமூகத்தின் தோல்வி என்று பிரதமர் கருதுகிறாரா? வேளாண்மையை பயிரிடாது, அதற்கான பராமரிப்பு தேவைகளை கவனத்தில் கொள்ளாது, பாதுகாக்காது அறுவடை எவ்வாறு திருப்தியான விளைச்சலாக இருக்கமுடியும். 

இலங்கையில்  ஆட்சியாளர்கள்  தங்கள் அரசியலை வலது, இடது  அரசியல் என்று தங்களைத் தாங்களே அடையாளப் படுத்திக் கொண்டாலும்  கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.  ஒரு பெண்ணாக இருந்தால் மகளிர் விவகார, சிறுவர் பாராமரிப்பு அமைச்சராக இருக்க அந்த தகுதிபோதும் என்பதாகும். அதுவல்ல முக்கியம் . பெண்ணாக இருப்பதை விடவும் முக்கியம்  பெண்கள் விவகாரங்கள் தொடர்பான துறைசார் நிபுணத்துவம். இது இல்லையெனில் அதிகாரிகளால் எழுதிக்கொடுப்பதை வாசிப்பதுடன், கொள்கை வகுப்பில் தவறான பாதையூடாக பயணிக்கவும் வேண்டி ஏற்படும். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்திற்கு கடற்றொழில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருப்பது போன்றதுதான் இதுவும்.

பாராளுமன்றத்தில் மகளிர் விவகார அமைச்சர் , அம்ஷிகா மரணம் தொடர்பாக அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை. இதே குறைபாட்டை பிரதமர் ஹருணி, பிரதம கொறடா அமைச்சர் பிமல் அளித்த பதில்களும் கொண்டுள்ளன. அவர்கள் அளித்த வரையறுக்கப்பட்ட பதில்கள் காரணமாக, அரசாங்க தரப்பை விடவும் சம்பவத்தை விபரமாக அறிந்திருந்த எதிர்க்கட்சியினர்  மேலும் விபரங்களை அறிய முற்பட்டனர். ஆனால் அகப்பை அரசாங்க தரப்பின் கைகளில் இருந்தபோதும் பானையில் இருக்கவில்லை. இது சமூகத்தின் தோல்வியானால் இவர்களை தெரிவு செய்ததால் சமூகம் தோல்வியடைந்துள்ளது என்று சொல்லலாமா?

பாராளுமன்றத்தில் மேலதிக தகவல்களை அறிய விரும்பிய எதிர்த்தரப்பு தொடர்கேள்விகளை கேட்க வேண்டியதாயிற்று. உதாரணமாக “நீங்கள் ஏன் நேற்றைய நிகழ்வுக்கு வரவில்லை?” என்ற கேள்விக்கு “எனக்கு சுகமில்லை” என்று பதிலளிப்பது சரியானதுதான். ஆனால் அதன் மூலம் நாம் கேள்வி கேட்டவருக்கு இன்னொரு கேள்விக்கான வாய்ப்பை வழங்குகிறோம். “என்ன வருத்தம்/ சுகவீனம்?” என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். இதையே பாராளுமன்றத்தில் அவதானிக்க கூடியதாக இருந்தது.  இதனால் தொடர்கேள்விகளை சந்திக்க மனனம் செய்யப்பட்ட பதில்களோடு வந்த பொறுப்பான அமைச்சர்களால் முடியவில்லை. அவர்கள் ஒருவழிப் பாதையில் பயணித்து திரும்பி வரமுடியாத பரிதாபத்தில் இருந்தார்கள். 

இந்த நிலையில்   அமைச்சர் பிமல் கூறிய பதில் இன்னும் வேடிக்கையானது. எதிர்கட்சி தலைவர், முஜிபுர் ரகுமான், மற்றும் பெரேரா எத்தனை தடவைகள் பேசியிருக்கிறீர்கள் என்று கணக்குப்பார்த்து எங்கள் பக்கத்தில் (அரசாங்கம்) இருபதுபேர் இருக்கிறோம் அப்படியென்றால் அவர்கள் எல்லோருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று அவரது ஜே.வி.பி.பாணியில் வாதிடுகிறார். நீங்கள் 159 பேரும் பேசுவது யாருக்கும் பிரச்சினை இல்லை அதற்குத்தான் மக்கள் உங்களை தெரிவு செய்திருக்கிறார்கள்.  159 பேரில் 20 பேர்தான் என்றால் …..? அதுவும் ஒரு வகையில்  சேமிப்பா …? ஆனால்  அந்த மக்கள் உங்களிடம் இருந்து இந்த விவகாரத்தில் சரியானதும், தெளிவானதும், விபரமானதும், நம்பகத்தன்மை கொண்டதுமான பதிலை எதிர்பார்கிறார்கள். அந்த பதில் பாதிக்கப்பட்டவரின் நலன்களை பாதுகாப்பதாக இருக்கவேண்டுமே அன்றி பாதிப்பை ஏற்படுத்தியவர்களை பாதுகாப்பதாக இருக்க முடியாது. இதை எந்த தரப்பும் தங்கள் கட்சி அரசியலுக்கு பயன்படுத்த கூடாது தான். ஆனால் பொறுப்புக்கூறவேண்டிய அரசுதரப்பு அந்தப் பொறுப்பை, பொறுப்புடன் கையாளத நிலையில் மறுதரப்பு அரசியலாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

எதிர்கட்சியினர் பல விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். பாலியல் வன்முறைச்சம்பவம் ஒக்டோபர் 23, 2025 இல் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் மாணவியை மாற்றலாகி செல்லுமாறு அதிபர் அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறப்படுகிறது. கவனிக்க: சந்தேகநபரான ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படவில்லை. மாணவி கொட்டாஞ்சேனையில் இராஜேஸ்வரி இன்சிரியூட்டில்  பெப்ரவரி மாதமளவில் சேர்ந்ததாக அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததையும் அவர் உறுதிப்படுத்துகிறார். மாணவியின் மரணம் 29, ஏப்ரல் 2025 இல் பாலியல் வன்முறை இடம்பெற்று சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இதன் அர்த்தம் இந்த உளவியல் சித்திரவதையை அம்ஷிகா ஆறு மாதங்களாக  தனக்குள் சுமந்துள்ளார். இந்த நிலையில் தான் ரியூட்டரியில் நடந்த(?) சம்பவம்  மாணவியின் மரணத்திற்கான உடனடிக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்தே சந்தேகநபரான ஆசிரியர் மே,08, 2025 இல் இடமாற்றம் செய்யப்பட்டார். அவரின் புத்தளத்திற்கான இடமாற்றத்திற்கு எதிராக புத்தளம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

கல்வி அமைச்சின் இந்த இடமாற்றம் பாலியல் வன்முறை சந்தேகநபர் ஒருவர் குறித்த “உளவியல்” புரிந்துணர்வு தொடர்பான கேள்வியை எழுப்புகிறது.  இந்த வன்முறையாளர்கள் போதைவஸ்து பழக்கம் போன்று இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டவர்கள். இவர்கள் சீர்திருத்த முகாம்களில் அடைக்கப்பட்டு கவனிக்கவும், கண்காணிக்கவும் படவேண்டியவர்கள் இதனால் அவர் குற்றவாளியா? நிராபராதியா? என்பது நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்படும்வரை அவர்  சந்தேகநபராக சம்பளத்துடன் பதவிநீக்கம் செய்யப்படுவதே சரியானது. அதைச்செய்யாமல் கல்வி அமைச்சு கதை சொல்கிறது. அத்தோடு அவர் குற்றவாளி இல்லை என்று தீர்பளிக்கப்பட்டாலும் அவரை மகளிர் பாடசாலைகள், கலப்பு பாடசாலைகளுக்கு நியமிக்காது செயற்படவேண்டியதும், மாற்று வழியை தேட வேண்டியதும் கல்வி அமைச்சைச்சார்ந்தது.  இந்த குளறுபடிகளுடன், தனியார் கல்லூரி உரிமையாளர் என்.பி.பி. யின் கொழும்பு மத்தி ஒருங்கிணைப்பாளர் என்பதாலும் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கில் மக்கள் சந்தேகம் கொள்கின்றனர். இதை போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

“இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும் ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர். இது உண்மை. சந்தேகநபர் ஆசிரியர் சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அதனாலேயே அவர் ஏற்கனவே இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை…” என்று கூறுகிறது தமிழர் ஆசிரியர் சங்க அறிக்கை.  இவ்வாறு பல பின்னணிகள் உள்ளன. இவற்றையெல்லாம் இலகுவாக தட்டிக் கழித்து விடயத்தை அரசியலாக்கவேண்டாம்  என்று எதிர்க்கட்சிகளை கேட்கும் அரசாங்கம், சம்பந்தப்பட்டவர்களுடன் உள்ள தங்கள் தரப்பின் அரசியல் தொடர்புகள் குறித்து என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

                                                                                                         பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள்  முன்பின் அறிமுகமற்ற  யாரோ? எவரோ? அல்ல என்பது சர்வதேச ஆய்வுகளும், உளவியலாளர்களும்  உறுதிப்படுத்தும் ஒன்று. குடும்ப உறவினர்கள், சந்தேகமற்ற வகையில் நெருக்கமாக பழகுபவர்கள், தொழில் நண்பர்கள்,  நிறுவனங்கள் சார்ந்து நம்பிக்கையுடன் கூட்டாக செயல்படுபவர்களே  பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இந்த அடிப்படையிலே   இலங்கையில் ஆண்களான ஆசிரியர்கள், அதிபர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள்…..  அதிகாரிகள் போன்றோர் கல்வி, உயர்கல்வி நிறுவனங்களில் விரிக்கும் வலையில் பாடசாலை, பல்கலைக்கழக மாணவிகள் விழ்ந்து விடுகிறார்கள்.  இதில் ஒரு பகுதி பாலியல் இலஞ்சமாகிறது. 

இன்னும் எத்தனை அம்ஷிகாக்கள்……..?