— அழகு குணசீலன் —
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சர் என்றவகையில் 2025 வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதங்கள் தொடர்கின்றன. ஜனாதிபதியின் வரவு -செலவுத்திட்ட முன்மொழிவுகள் என்றும் இல்லாதவாறு 159 அரசாங்க தரப்பு உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் வரவுசெலவுத் திட்டத்தின் வெற்றி, தோல்விக்கு அப்பால் இரண்டு விடயங்களை இங்கு நோக்க வேண்டியிருக்கிறது. சுமார் 50 பக்கங்களை கொண்ட தனது வரவு-செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயங்களே அவை.
1. ” இந்த நாட்டில் இனி இன “மோதல்கள் இருக்காது. மதம், இனம், அல்லது பாலினம் இனிமேல் பிரிவினைக்கான காரணிகளாக இருக்காது”‘.
2. ” ஊழல்கள் நிறைந்த நிர்வாகம், தோல்வியுற்ற பொருளாதார திட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் என்பன இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம், இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டை மீட்டுத்தரும்” .
ஜனாதிபதியின் இரு முக்கிய விருப்பங்களே இவையன்றி தீர்க்கப்பட்டுவிட்ட விவகாரங்கள் அல்ல. அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு எதுவும் இன்றி, பாதுகாப்பு செலவினங்களுக்கும் படைத்துறைக்கும் அதிக நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ள இந்த வரவுசெலவுத்திட்டம் ஜனாதிபதியின் விருப்பை நிறைவேற்றுமா? அரசியல் தீர்வு இன்றி ஜனாதிபதியின் இந்த இரு இலக்குகளும் சாத்தியமற்றவை என்பதுடன், பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் முக்கியபங்குவகித்த யுத்தத்தை அவர் வசதிகருதி மறந்துவிடுகிறார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ள ஊழல்கள் நிறைந்த நிர்வாகம், தோல்வியுற்ற பொருளாதாரத் திட்டங்கள், பொறுப்பற்ற தலைமைத்துவம் என்பனவற்றிற்கு இந்த நாட்டில் ஜே.வி.பி. 1970 களில் இருந்து ஏதோ ஒரு வகையில் பொறுப்பாக இருந்துள்ளது. இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளாதவரை தங்களை தவிர்த்து கடந்த கால ஆட்சியாளர்களை தனியாக குற்றம் சாட்டுவது யுத்தத்திற்கு பின்னரான காலத்திற்கு பொருத்தமானதாக இருந்தாலும் அதற்கு முந்திய அரை நூற்றாண்டு காலத்திற்கு ஜே.வி.பி. க்கும் இந்த இனவாதத்திலும், போரிலும், பொருளாதாரதிட்டங்களின் தோல்வியிலும், பொறுப்பற்ற தலைமைத்துவத்திலும் பங்குண்டு.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி ஒரு இடதுசாரி ஆட்சி என்ற விம்பம் விழுகிறது. ஆனால் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் முறைமை மாற்றத்திற்கான எந்த முன்மொழிவுகளும் இல்லை. மாறாக பொருளாதார சீர்திருத்தங்களை கூட தேடவேண்டியே இருக்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் கலாநிதி என்.எம்.பெரேராவின் வரவு – செலவுத்திட்டங்கள் இன்றைய நிலையில் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. அன்றைய சோவியத், சீன, கியூபா பொருளாதார அபிவிருத்தி மாதிரிகளை உள்வாங்கி தயாரிக்கப்பட்டவை. மூடப்பட்ட உள்நாட்டு அபிவிருத்தியும், நிலவுடமை சீர்திருத்தங்களும், தேசிய மயமாக்கலும் முறைமை மாற்றத்தின் அடிப்படையாக அமைந்தவை. ஆனால் இதற்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள் ஜே.வி.பி.யினர். இன்று முறைமை மாற்றம் பற்றி பேசுகிறார்கள் . இன்றைய உலகமயமாக்கல் தாராள பொருளாதாரத்தில் இது காலாவதியான பொருளாதார மாதிரியாகி விட்டது.
இன்றைய உலகமயமாக்கல் சுழலில் முதலாளித்துவ தாராளபொருளாதார மாதிரியை விட்டு விலகி உலகில் எந்த ஒரு நாடும் ஓடமுடியாது. இதனால்தான் தேர்தல் காலத்தில் ஜே.வி.பி/ என்.பி.பி.யினர் கூறிய பொருளாதார கருத்துக்கள் மற்றும் சர்வதேச நாணயநிதிக்கும், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும் எதிரான கருத்துக்களை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக, சகல தரப்பு சந்திப்புக்களிலும் ஐ.எம்.எப்.பின் நிபந்தனைகளுக்கு ஏற்ப செயற்படவேண்டிய தேவையை வலியுறுத்தி ஆடிப்போன தங்கள் நிலைப்ப்பாட்டை நியாயப்படுத்தி வருகிறார்.
ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவின் முன்மொழிவுகளின்படி 2025 பொருளாதார வளர்சி வீதம் 5வீதமாக எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளின் பின்னர் 2028 இல் இருந்து கடன்மீளளிப்பு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடன் மீளளிப்பு மூன்று ஆண்டுகளில் சாத்தியமாவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 2. 3 வீதம் ஆண்டு தோறும் சேமிக்கப்படவேண்டும். இது நடைமுறையில் அவ்வளவு இலகுவான இலக்கு அல்ல. பூகோள அரசியல், பொருளாதாரங்களின் தாக்கங்களும், உள்நாட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையும் இதற்கு ஒத்துழைக்க தவறினால் இந்த இலக்கை ஜனாதிபதி நினைப்பதுபோல் அடையமுடியாது. மேற்கூறிய இரண்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தப் போவது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இருக்கும்..
2023 இல் 2.9 பில்லியன் டொலர்கள் அவசர நிதி ஐ.எம்.எவ்.ஆல் வழங்கப்பட்டதை அடுத்தே இலங்கை தன்னை மீட்டுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இலங்கையின் இன்றைய கையிருப்பு 9 பில்லியன் டொலர்களாக உள்ளது. மத்திய வங்கியின் தகவல்களின் படி இது நான்கு மாத இறக்குமதிக்கு மட்டுமே போதுமானது. இந்த இருப்பு 2022 இல் 1.9 பில்லியன்களாக மட்டுமே இருந்தது. இன்றைய இந்த கையிருப்பை உயர்த்தியதில் சகல விமர்சனங்களுக்கும் அப்பால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார அணுகுமுறை பெரும் பங்கு வகித்துள்ளது என்பதை அநுரகுமாரவும் ஏற்றுக்கொள்வார்.
நாட்டில் ஏற்கனவே இருந்த பணப்புழக்கத்துடன் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுடனான நிவாரண, சம்பள, உதவித்தொகை அதிகரிப்புக்களும் எப்ரல் 2025 இல் இருந்து வழங்கப்படும் போது பணப்புழக்கத்தில் ஏற்படும் அதிகரிப்பு பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். உற்பத்தி அதிகரிக்காத, குறைவடைகின்ற அல்லது இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்படுகின்ற சூழலில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தது போன்ற பொருட்கள் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படலாம். முக்கிய அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைநிர்ணயத்தில் தனியார் துறையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது. அந்தளவுக்கு முதலாளித்துவ சந்தைப்பொருளாதாரம் விலை நிர்ணயத்தில் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கிறது.
இந்த நிலையில் நிதி திட்டமிடல், கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம் , மாகாணசபைகள், ஊடகம் போன்ற துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீட்டுடன் பார்க்கையில் குறைவானவை. பாதுகாப்பு செலவினங்களுக்காக 442 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்ற போது 2009 இல் இராணுவத்தினர் தொகை மூன்று இலட்சம். இது 2024 இல் 15 ஆண்டுகளில் 1,35,000 ஆக குறைக்கப்பட்டது. 2023 கடற்படையினர் 44,532 ஆகவும், விமானப்படையினர் நிரந்தரம்17,567 ஆகவும், தற்காலிக படையினர் 9,076 ஆகவும் இருந்தனர். மொத்தத்தில் யுத்தத்தின் பின்னர் படையினர் தொகை குறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு செலவினங்களில் ஏற்படும் அதிகரிப்பு எதனைக் குறிக்கிறது? இராணுவ ஆயத நவீனமயப்படுத்தல் என்றால் அதற்கான தேவை என்ன?
இத்தனைக்கும் மத்தியில் 2030 இல் இராணுவத்தை ஒரு இலட்சமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி இருக்க 2023 இல் 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட பாதுகாப்புதுறைச்செலவுகள், தற்போதைய வரவுசெலவுத்திட்டத்திலும் 2024 விடவும் 3 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடற்படை செலவுகள் 12 வீதமாகவும், விமானப்படை செலவுகள் 4 வீதமாகவும் அதிகரித்துள்ளது. இராணுவத்தினர் தொகை அரைவாசிக்கும் கூடுதலாக குறைக்கப்பட்டுள்ளபோது “எல்லோரும் இலங்கையர்” என்ற நாட்டில் இராணுவ செலுவுகள் அதிகரிப்பின் பின்னணி என்ன?
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய யாழ்.பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த விபரங்கள் இவை:
இலங்கை இராணுவ மொத்த டிவிசன்கள்: 20.
வடக்கு, கிழக்கில் நிலை கொண்டிருப்பது: 16.
வடக்கில் மட்டும்: 14.
கிழக்கில்: 02.
இன்னோரு வகையில் நோக்கினால்,
கடற்கரைகளில் இரண்டு கிலோமீற்றருக்கு ஒரு கடற்படைமுகாம் அமைந்துள்ளது. முல்லைத்தீவில் இரண்டு பொதுமக்களுக்கு (2:1) ஒரு படையினர் நிலை கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 14 பொதுமக்களுக்கு ஒரு படைவீரர்.(14:1} உள்ளனர்.
வன்னியில் 10 பொதுமக்களுக்கு ஒரு படைவீரர் (10:1) உள்ளார்.
இந்த விபரங்கள் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை எட்டும் எண்ணத்தில் இன்னும் உறுதியாக இல்லை எனபதை காட்டுகிறது. இதனால் தான் பொருளாதார வங்குரோத்துக்கு மத்தியிலும், போர் ஓய்வுக்கு பின்னரும் வடக்கு, கிழக்கில் இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதார வங்குரோத்துக்கு போர்தான் முக்கி காரணம் என்பதை மறைத்து கடந்தகால ஆட்சிகளின் ஊழல்களை மட்டும் முதன்மை படுத்தி அநுரகுமார அரசியல் செய்கிறார்.
படையினரின் தமிழ்ப்பகுதி பிரசன்னத்தை நோக்கினால் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு உலகில் வடக்கு,கிழக்கை விடவும் வேறு உதாரணம் இருக்கமுடியுமா? அநுரகுமார தென்னிலங்கையையும், சிங்கள, பௌத்த மக்களையும் விடுவித்து வடக்கு கிழக்குமக்கள் மீது இராணுவ ஆட்சியை நடத்துகிறாரா? இதற்கு “இலங்கையர்” கோஷம்வேறு….!
தொடரும்…….!