— கருணாகரன் —
யுத்தத்தினால் அழிந்து சிதிலமடைந்திருக்கின்ற வடக்குப் பிரதேசங்களை அபிவிருத்தியினால் மேம்படுத்துவதும் அங்குள்ள மக்களை உளரீதியில் புதுநிலைப்படுத்துவதும் ஒன்றாக நடக்க வேண்டும். யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் இவை சரியாக நடக்கவேயில்லை. 2013 – 2018 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு மாகாணசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் இருந்தது. அப்போதும் வடக்கின் அபிவிருத்தியைப் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் நிலையைப் பற்றியும் பொறுப்பானவர்கள், பொறுப்பாகச் சிந்திக்கவில்லை. இதனால்தான் இன்னும் இங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள்.
புதிய (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் மாற்றங்களையும் புதுமைகளையும் செய்ய முயற்சிக்கிறது. என்பதால், வடக்கின் நிலைமைகளிலும் நியானமான – அவசியமான – மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதைச் செய்ய வேண்டிய கடப்பாடு, மாற்றங்களை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கு உண்டு. அதை ஓரளவு உணர்ந்திருக்கிறபடியால்தான் வடக்கின் அபிவிருத்திக்கென 5000 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. வட பிராந்தியத்திற் சில சிறப்புத் திட்டங்களை விருத்தி செய்வதற்கும் முயற்சிக்கிறது.
வடக்கின் அபிவிருத்தியில் முக்கியமான ஒன்று, சுற்றுலாத்துறையை வளர்ப்பதாகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்வதன் மூலமாக பிரதேச அபிவிருத்தியைச் செய்ய முடியும். பொருளாதார ரீதியிலும் வளர்ச்சியை உருவாக்கலாம். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் இது உதுவும். ஒரே கல்லில் மூன்று காய்கள். பொதுவாகச் சுற்றுலாத்துறையில் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் வளர்ச்சி ஏற்படுவதுண்டு. மக்களுக்கான தொழில் வாய்ப்புகளும் பெருகும். ஆகவே அரசாங்கம் வடக்கில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதைப்பற்றிக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அதற்கான வளங்களும் வாய்ப்புகளும் வடக்கிற் தாராளமாகவே உண்டு.
1. இயற்றை வளங்களோடு இணைந்திருக்கும் சுற்றுலா மையங்களை அடையாளம் கண்டு, அவற்றை வளப்படுத்தி, சுற்றுலாவுக்கேற்ற மாதிரி வடிவமைப்பது. இதற்கு பூநகரி – கௌதாரிமுனை மணல்மேடுகள், கௌதாரிமுனைக் கடற்கரை (Beach), வேலணைக் கடற்கரை, நெடுந்தீவு, இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரி பறவைகள் சரணாலயம் (Nature Park), மன்னார் கடற்கரைகள், முல்லைத்தீவு – நாயாற்றுக் கடற்கரை, இரணைமடுக்குளம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், காரைநகர்க் கடற்கரை (Casuarina Beach) போன்றவை உண்டு. இதை விட வேறு மையங்களையும் அடையாளம் காண முடியும். இவை ஏறக்குறைய மாலைதீவு, கியூபா போன்ற நாடுகளில் உள்ள சுற்றுலாவுக்கு நிகரானவையாக இருக்கும். இயற்கையோடிணைந்த உணவு முறைகளையும் இங்கே சேர்த்துக் கொள்வதாக இருக்கும்.
2. பண்பாட்டுச் சுற்றுலா (Cultural tourism) வுக்குரிய இடங்களை விருத்தி செய்வது. இது குறித்த பிராந்தியத்தின் பண்பாட்டு அடையாளங்கள், சொத்துகளின் மீது கவனத்தைக் குவிக்கும் வகையிலானது. இதற்கு நல்லூர், சந்நிதி, நயினாதீவு, கீரிமலை, மாவிட்டபுரம், மடு, திருக்கேதீஸ்வரம், புல்லாவெளி, பொன்னாலை, கந்தரோடை போன்ற இடங்களிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பௌத்த சின்னங்கள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி அமைப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். கூடவே இதற்குத் தோதாக வடக்கின் கலை வெளிப்பாடுகளைக் (கூத்து, நாடகம், நடனம், ஓவியக் கூடம்) காணக் கூடியவாறு செய்ய வேண்டும். கேரளாவின் கதகளி, கண்டிய நடனம் போன்றவை உதாரணம். இந்தச் சுற்றுலாவில் பண்பாட்டைத் தேடி அறிய விரும்புவோரும் ஆன்மீக யாத்திரிகர்களும் அதையொட்டிய சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வரக்கூடும்.
3. காலனிய கட்டிடங்கள் மற்றும் அதையொட்டிய மரபுரிமைகளை மையப்படுத்திய சுற்றுலா. (Colonial architectural heritage tourism). இதற்கு ஏற்கனவே உள்ள யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கோட்டை, மன்னார்க் கோட்டை, நெடுந்தீவில் உள்ள புராத கட்டிடங்கள், யாழ்ப்பாணம் பழைய கச்சேரி, சங்கானைத் தேவாலயம் மற்றும் மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, மன்னார் அரிப்பு அல்லிராணி மாளிகை போன்ற புராதன சின்னங்களை மையப்படுத்த வேண்டும். அவற்றின் சூழலைச் சுற்றுலாவுக்குரியவாறு மாற்றியமைக்க வேண்டும். மேலும் பூநகரி, இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை போன்ற இடங்களில் உள்ள காலனித்துவ காலக் கோட்டைகள், வெளிச்ச வீடுகள் யுத்தத்தினால் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றையும் மீளமைப்புச் செய்தால், அவையும் இந்த வகைச் சுற்றுலாவுக்கு பெரிதும் உதவும். இதற்கு ஹொலண்ட் அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அல்லது அந்த நாட்டின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
4. இதற்கு அப்பால் புதிதாக சுற்றுலா மையங்களை உருவாக்குவது. உதாரணமாக, வடமராட்சியில் முள்ளிக்குளம் மருதங்கேணிக்கும் இடையிலுள்ள களப்பை அகழ்ந்து படகுச் சவாரிகளை உருவாக்குவது. இதற்காக வெளிநாட்டுக் கடனைப் பெற்றாலும் அது பயனுடையதே. ஏனென்றால் அது செலவீனத்தை விடப் பன்மடங்கு வருவாயை ஈட்டித் தரக் கூடியது. அந்தக் களப்பு இயற்கை வளம் நிறைந்த அழகான சூழலில் அமைந்துள்ளது. பசுமைச் சுற்றுலாவாக இதை உருவாக்கலாம். அருகே வங்காள விரிகுடாவுடன் இணைந்த இந்து சமுத்திரமுண்டு. அதனுடைய கரை அழகான கடற்கரையகும். இங்கே கடலுணவும் கடற்கரைக் காட்சியும் மேலதிக வாய்ப்பாக உள்ளன. இதைப்போல இன்னோரிடம், நெடுந்தீவு உட்பட அனலைதீவு, எழுவை தீவு, கௌதாரிமுனை போன்ற இடங்களுக்கான படகுச் சவாரிகளை உருவாக்குவது. இந்த இடங்கள் மிக அழகானவை. அங்கே சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளையும் கலை மற்றும் விற்பனைப் பொருட்களையும் உருவாக்கினால் போதும். அந்த இடங்களும் அபிவிருத்தியடையும்.
5. வடக்கின் பிரத்தியேகமான அறிவுத்துறை, தொழிற்துறை சார்ந்த இடங்களை விருத்தி செய்தல். இவையும் ஒரு தொகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியவையே.
இவ்வாறு வடக்கின் சுற்றுலாவை பல வகையில் விருத்தி செய்யலாம் – செய்ய வேண்டும். இலங்கையின் பிரதான வருவாயில் ஒன்று சுற்றுலாத்துறையாகும். அதற்கு வடக்கு மாகாணமும் தாராளமாகப் பங்களிக்க முடியும். சம நேரத்தில் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாவுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும்.
ஆனால், புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கின் சுற்றுலாத்துறைக்கென சிறப்பான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அது குறித்த சிரத்தையைக் காணவும் முடியவில்லை. இது புதிய அரசாங்கத்தின் முதலாவது பாதீடு என்பதால், அடுத்த ஆண்டுகளில் இதைக் குறித்த அக்கறைகள் மேலெழக் கூடும். அதைக்குறித்த சிந்தனை இருக்குமானால், எதிர்காலத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடியதாக இருக்கும்.
வடக்கு மாகாணசபையில் சுற்றுலாத்துறைக்குப் பொறுப்பாக இருப்போருக்கு இதைப்பற்றிய புரிதலோ கற்பனையோ போதாது. அவர்கள் வழமையான – பாரம்பரியமான சில இடங்களை (மையங்களை) யே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். அந்த இடங்கள் பலரும் பார்த்துப் பழகியவை என்பதை விட அனைவரையும் கவரக் கூடியவையும் அல்ல. புதிய இடங்களைத் தேடிக் காணும் முயற்சியோ, அவற்றைச் சுற்றுலாத்துறைக்கு ஏற்றமாதிரி மேம்படுத்தக் கூடிய அக்கறையோ இல்லை. கேட்டால், தமக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று ஒற்றை வரியில் தமது பொறுப்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த விமர்சனம் அவர்களைக் குற்றம் சாட்டுவதற்கானதல்ல. பதிலாக அவர்களுடைய பொறுப்பை உணர வைப்பதற்கும் அவர்களை முயற்சிக்குமாறு தூண்டுவதற்குமானதாகும்.
சுற்றுலாத்துறையின் அடிப்படைகளில் ஒன்று, கொண்டாட்டத்தையும் அறிவூட்டலையும் வியப்பையும் சமனிலையில் அளிப்பதாகும். அதுவே தீராத கவர்ச்சியையும் தாகத்தையும் உண்டாக்குவது. பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டுவதாக இருத்தல். எண்ணும்தோறும் வியப்பூட்டுவது. பார்க்க முன்பும் பார்த்த பின்பும் தேடலுக்கு உரியதாக இருத்தல். இவை இருந்தால்தான் பலரையும் கவர முடியும். இவையில்லாத சுற்றுலா மையங்கள் விரைவில் சலிப்படைய வைத்து விடும்.
ஆகவே சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் சுற்றுலா மையங்களின் சூழலையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் புத்துணர்வாக்கம் செய்து கொண்டேயிருக்க வேண்டும். புதிய மையங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எப்போதும் பளபளப்பாக இருக்கக் கூடியவாறு நாம் சில பொருட்களையோ பாத்திரங்களையோ மினுக்கி, நேர்த்தியாக அடுக்கி வைப்பதில்லையா? அதைப்போல இந்தச் சுற்றுலா மையங்களை மினுக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.
உலகம் விந்தைகளால் நிரம்பியுள்ளது. இயற்கையாகவும் செயற்கையாகவும் இந்த விந்தை உள்ளது. அவற்றைப் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் என்று மக்கள் பெருந்தொகை பணத்தைச் செலவழித்துப் பயணம் செய்கிறார்கள். கூடவே தங்களுடைய நேரத்தையும் செலவிடுகிறார்கள். அப்படிச் செல்வோரை நாமும் கவர்ந்திழுக்க வேண்டும் என்றால் அதற்கான ஈர்ப்பை உண்டாக்கக் கூடிய சுற்றுலாப்புள்ளிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். மட்டுமல்ல, இதொரு உலகளாவிய போட்டி என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல நாடுகள் சுற்றுலாப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவற்றுடன் நாம் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே இதற்கமைய எங்களையும் எங்களுடைய சுற்றுலா மையங்களையும் மேம்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
வடக்கில் சில சுற்றுலா மையங்கள் இயல்பாக, இயற்கையாக இருக்கின்றன. அவற்றை மேலும் விரிவாக்கிப் புதுக்குவது அவசியம். குறிப்பாக பூநகரி கௌதாரிமுனையில் உள்ள Beach சும் இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் Nature Park க்கும். போக்குவரத்துக்கு வாய்ப்பாக வீதிகளைப் புனரமைத்து, தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை வசதிகளோடு இவற்றை சற்று வளமாக்கினால், மிகச் சிறப்பான சுற்றுலா மையங்களாக மிளிரும்.
கௌதாரிமுனை Beach ஆழம் குறைந்த கடலைக் கொண்டது. மிக நீண்ட Beach. சுற்றயல், மணல் மேடுகளும் தாழம் புதர்களும் நிறைந்த அழகான இயற்கை அரண். நீராடுவதற்கும் நீந்திக் களிப்பதற்கும் அருமையான இடம். இதை இப்பொழுது படையினரே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதை மாற்றிச் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வழங்க வேண்டும். அத்துடன் இந்த Beach க்குச் செல்லக் கூடிய போக்குவரத்துப் பாதையைச் சீராக்கி, போக்குவரத்தையும் குறைவான செலவில் உருவாக்கலாம். இந்த Beach க்கு அண்மித்ததாக மண்ணித்தலையில் சோழர் காலச் சிவன் கோயில் ஒன்றுள்ளது. அதனுடைய சிதைவுகளே எஞ்சியுள்ளன. ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதிரி வரலாற்று எச்சங்கள்தான் ஈர்ப்புக்குரியவை. அங்கிருந்து 15 நிமிடத்தில் யாழ்ப்பாணத்துக்குப் படகில் செல்ல முடியும். அதற்கான இறங்குதுறை ஒன்றை அமைத்தால், உள்ளுர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக இந்த Beach இல் நிறைவர்.
இதைப்போல இயக்கச்சி – சுண்டிக்குளம் – ஆனையிறவுக் கடனீரேரியோடிருக்கும் Nature Park கும் பறவைகள் சரணாலயமும் (Bird sanctuary) சற்று விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். சரணாலயத்தை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் பறவைகளே விரிவாக்க வேண்டும். ஆனால், அந்தச் சூழலை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அதைப் பார்க்கச் செல்லும் வழிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும். அங்கே 136 பறவை இனங்கள் உண்டு. 187 தாவரங்கள் இருப்பதாக ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் பறவைகள் தங்குவதற்கான வில்லுகளும் (குளங்களும்) நீண்ட வெளியும் உண்டு. ஓரம் நீளத்துக்கும் களப்புக் கடலும் கண்டற்காடுகளும். மறுபக்கத்தில் அலைமோதிக் கொண்டிருக்கும் இந்து சமுத்திரம்.
நமது பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டுமாக இருந்தால், அதற்குரிய சிறப்பம்சங்கள் அங்கங்கே இருக்க வேண்டும். அல்லது அவற்றை உருவாக்க வேண்டும். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் என்ற வணிகக் கட்டிடம் இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதைப்போல எல்லா இடங்களிலும் கட்ட முடியாது. அதற்கு மக்களிடமுள்ள தாங்குதிறன் இடமளிக்காது. ஆனால், வெவ்வேறு பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்தியங்களின் வளங்கள், வாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொன்றையும் உருவாக்கலாம். அது அந்தந்தப் பிராந்தியங்களின் அடையாளங்களைக் கொண்டிருந்தால் சிறப்பு.
யுத்தம் முடிந்த பிறகு, மிக அதிகமானோர் வடக்கு நோக்கி வந்தனர். நீண்டகாலமாக யுத்தம் நடந்த ஒரு பிரதேசத்தை, யுத்த்ததினால் அழிந்த பகுதிகளை, யுத்த காலத்தில் முழுதாகவே மூடப்பட்டுத் தடை செய்யப்பட்டு, இருண்டிருந்த ஒரு பிராந்தியத்தைப் பார்ப்பதற்கு விரும்பினார்கள். யுத்தத்தின் எச்சங்களையும் வடுக்களையும் கண்டு திரும்பினார்கள்.
இது யுத்தம் முடிந்த பிறகான சூழல். இனியொரு புதிய யுகத்தைக் காண்பதற்கான காலம். அதற்கான அக – புற விழிகளை நிறைக்கும் வகையில் இன்றைய – நாளைய சுற்றுலா அமைய வேண்டும். சுற்றுலா மட்டுமல்ல, இன்றைய நாளை நாட்களும் சூழலும் அமைவது அவசியம். அதற்கான வாசல்கள் திறக்கப்படட்டும்.