— கலாநிதி சு.சிவரெத்தினம் —
ஆசிரியர், அரசியல்வாதி, பத்தி எழுத்தாளர் என தன் முகங்களைக் காட்டி வந்த அழகு குணசீலன் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ எனும் தனது மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியின் ஊடாக தன்னை ஓர் இலக்கியலாளனாகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
ஜேர்மன் மொழியிருந்து மொழிபெயர்த்த பதிநான்கு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூலாகும். இன்று நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்ற இசக் கோட்பாடுகளுக்குள் புகுந்து வாசகர்களுக்கு புரியாது தனக்கு மட்டும் புரிந்து கொள்கின்ற புதிர் முடிச்சுக்களை வைத்து மொழிவிளையாட்டை நிகழ்த்தி அவைதான் நவீன சிறுகதைகள் எனக் கூறிக் கொள்ளும் ஒரு போக்கும் காணப்படும் தமிழின் நவீன இலக்கியச் சூழலில் அந்த இசக்கோட்பாடுகள் பிறந்த ஐரோப்பிய தேசத்தில் இருந்து இந்த இசங்களைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி தான் வாசித்து ருசித்த சிறுகதைகளை தமிழுலகுக்கும் வழங்க விரும்பி இலகுவான மொழிநடையில் மொழிபெயர்த்துள்ளார்.
இவற்றை வாசிக்கும் போது ஒரு மொழிபெயர்ப்பையா வாசிக்கின்றோம் என்ற எண்ணமே தெரியவில்லை மொழியினைப் பிரயோகித்த முறையிலும் கதை நகர்விலும் அதன் கருப்பொருளிலும் எல்லாமே எமது மக்களின் அனுபவங்களாக இருக்கின்றன.
கறுப்பு நட்சத்திரம் எனும் முதல் சிறுகதையே இச்சிறுகதைத் தொகுதிக்கான பெயராகவும் அமைந்திருக்கிறது. பலவித அர்த்தங்களைக் கொண்ட அப்பெயர் இச் சிறுகதைத் தொகுதிக்குப் பொருத்தமானதேயாகும். கறுப்பு நட்சத்திரம் எனும் சிறுகதை ஒரு போர் காரணமாக கைது செய்யப்பட்டு புகையிரதத்தில் ஏற்றிச் செல்லப்படும் ஒரு தாய் தன் குழந்தைகளுடன் படும் துயரங்களையும் அந்தச் துயரச் சூழலையும் தாயினதும் குழந்தைகளினதும் மற்றவர்களினதும் உணர்வுகளையும் மிக உயிரோட்டமாகச் சொல்கிறது.
தனதும் தனது சமூகத்தினதும் வாழ்வியல் அனுபவங்களை வெளிப்படுத்த முனைந்த தேடலின் அல்லது ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்தக் கதையினை குணசீலன் தேர்வு செய்திருக்கிறார் போல் தெரிகிறது. உலகில் யுத்தம் எங்கு நடந்தாலும் யுத்தத்துக்கு இனம், மொழி, மதம், நாடு என்ற எல்லைகள் கிடையாது அது ஒரே வகையான வடிவத்தினையும் பாதிப்பினையுமே மனிதகுலத்துக்கு வழங்கும் என்பதற்கு இச்சிறுகதை நல்லதொரு உதாரணமாகும்.
‘இது உண்மை’ எனும் கதையானது ஒரு மொழிபெயர்ப்புக் கதையாகத் தெரியவில்லை அது முழுக்க முழுக்க சொந்தக் கதைபோலவே மொழியாக்கம் செய்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற 1983ம் ஆண்டின் யூலைக் கலவரத்தையும் அதில் அனுபவப்பட்டவர்களின் வாக்கு மூலங்களாகவுமே அதனைப் பார்க்கமுடிகிறது. அந்தளவுக்கு எமது அனுபவங்களையொத்த அனுபவங்களை மூலக் கதையாசிரியரும் கொண்டிருந்தார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
இந்தக் கதை சொல்லும் செய்தி முக்கியமானது அதாவது 1983ம் ஆண்டு யூலைக் கலவரத்தின் போது பல சிங்கள மக்கள், தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்றி நிலமை சரிவந்ததும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைத்ததும் அவர்களைக் கருணையோடு அரவணைத்துக் கொண்டதுமாகும். ஆனால் இந்த விடயத்தை எந்தளவு தமிழ் இலக்கியகாரர்களும் அரசியல்வாதிகளும் அழுத்தினார்களோ தெரியவில்லை ஆனால் 1983 ம் ஆண்டு சிறுவர்களாக இருந்தவர்களுக்கு மனதில் பதிக்கப்பட்ட பொதுவான பதிவு சிங்களவர்கள் கொலைகாரர்கள் என்பதேயாகும். இதனை அழுத்துவதற்கு ‘மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுத்தவன்’ எனக் கூறுவதுமுண்டு இவ்வாறு எதிர்மறையான பண்பினை அழுத்துவதில் அரசியல்வாதிகளும் அவர்களது ஊடகங்களும் முக்கிய பங்கினை ஆற்றின. ஆனால் தமிழர்களும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அந்த அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அழகாக மறந்துவிடுவதுதான் துயரம். முரண்பாடுகளுக்குள்ளும் கலவரங்களுக்குள்ளும் மனிதாபிமானத்தைப் பார்ப்பதும் அதனை வளர்த்தெடுப்பதும் இன்றைய எமது நாட்டிற்குத் தேவையான ஒன்றாகும். அதனை இக்கதை இலக்கிய நயத்துடன் வெளிப்படுத்துகின்றது.
‘சிநேகிதி’ சாதாரண மத்தியதர வர்க்கப் பெண்ணின் உணர்வுகளையும் அதே வர்க்க ஆண்களின் வக்கிர உணர்வுகளையும் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. ‘வறண்ட அந்த நிலத்தில் ஆடுகள் தீனி தேடிக் கொண்டிருந்தன’ என்கின்ற கவித்துவமான வரிக்கூடாக இந்தக் கதையின் முழுச்சாரத்தையுமே சொல்லிவிடுவது இக்கதையின் அழகாகும்.
‘அகதி’ புலம்பெயர் வாழ்வின் நிலமை பற்றிக் கூறுகிறது. இலங்கையில் உள்ளவர்களுக்கு சுவிஸ், கனடா போன்ற நாடுகளுக்குப் போனால் ஏதோ சொர்க்கத்துக்குப் போனதாகவும் அங்கு எல்லாச் செல்வங்களும் இருப்பதாகவும் அவற்றை அள்ளிக் கொண்டு வருவதுதான் என்பது போன்ற மன உணர்வில் இருப்பவர்களுக்கு வேலைக்கான அனுமதியினைப் பெறுவதும் வசதியான இடங்களில் வாழ்வதுமே பெரிய விடயம் என்பதைக் கூறுகிறது.
‘அந்தப்புர அழகிகள்’ சவுதிஅரேபியாவின் உயர்மட்ட பெண்களின் ஆடம்பரமான வாழ்வுக்குள்ளால் ஆண்களின் பாலியல் அதிகாரத்தை விமர்சனம் செய்வதாக அமைகிறது. மன்னர் பெண்களை பரிசுப் பொருளாக அதிகாரிகளுக்கு வழங்குவதும், ஓர் ஆண் நான்கு மனைவிகளை வைத்திருப்பதும் எந்த ஒரு மனைவியும் தனது கணவன் இன்னொருத்தியுடன் உறவு வைத்திருப்பதை விரும்புவதில்லை என்கின்ற பெண்ணின் உளக்குமுறல் அழகாகப் பதிவு செய்யப்படுகிறது. ஆயினும் ‘ஷரியா சட்டம்’ நடைமுறையில் இருப்பதையும் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டிய முரண்நகையான நடைமுறை என்பது மிக சூச்சுமமான முறையில் கூறப்படுகின்றது.
‘மகளிர் தினம்’ பெண்களுக்கான உரிமையும் சுதந்திரமும் பேணப்படுவதை உறுதி செய்து கொண்டாடும் ஒரு தினமாகும் ஆனால் அத்தினத்தில் அத்தினத்தினத்திற்காக தயார் செய்து கற்பித்தலை நடாத்தும் ஆசிரியர் மாணவிகளை எவ்வளவுக்கு கீழ்த்தரமாக நடாத்துகிறார் என்பதைக் காட்டும் ஒரு சிறுகதையாகும். மகளிர் தினம் கொண்டாடப்படும் பாடசாலையில் ஓர் அதிபராக இருக்கும் பெண் சுதத்திரமில்லாமல் வீட்டுச் சுமையுடன் இருப்பதையும் அவள் கூட ஆண்நிலைக் கருத்தியல்களால் வடிவமைக்கப்பட்டவளாக இருப்பதையும் வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர் தனது மனைவியையும் மாணவிகளையும் ஆண்நிலைக் கருத்துநிலையில் நின்று கொண்டு தனது நடவடிக்கைகளை மிருகத்தனமாக மேற்கொள்வதையும் அதற்கான நியாயப்பாடுகளை அந்தக் கருத்துநிலைக்குள்ளால் முன்வைப்பதையும் ஆசிரியரை ஒரு வகைமாதிரிப் பாத்திரமாக கொண்டு காட்டப்படுகிறது. அடிப்டை விளக்கம் இன்றி அரசின் அல்லது திணைக்களங்களின் சுற்றுநிருபத்துக்காக சமூகத்தில் இவ்வாறான கொண்டாட்டங்கள், தினங்கள் அர்த்தமற்று நடக்கும் யாதார்த்தத்தினை இக் கதை அழகாக முண்வைத்துள்ளது.
‘விவேவிகளின் தாய்’ எனும் சிறுகதையும் பெண்களின் துயர் பற்றியே பேசுகிறது. பெண்களை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாக கணவன்மார் நோக்குவதையும் பெண்கள் அதை அறியாமல் அதனை ஒரு பெருமையாக எண்ணிக் கொள்வதையும் தாய்க்கு இருக்கின்ற அன்பு, பாசம், குடும்பப் பொறுப்பு, குடும்பச் சுமை, அவர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் என்பன இயல்பாக வெளிப்படுத்தப்படுகிறது.
‘தலைவன்’ எனும் சிறுகதை சிறைச்சாலையில் நடக்கும் சித்திரவதைகளுக்குள்ளும் அவலங்களுக்குள்ளும் நகைச்சுவை நிரம்பியவர்கள் அதனையும் கலகலப்பான வாழ்வாக மாற்றி மற்றவர்களை மகிழ்விக்க முடியும் என்பதற்கு உதாரணமாகும். சிறைச்சாலை, வைத்தியசாலை போன்ற இடங்களில்த்தான் வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்க முடியும். அவர்கள் தங்கள் மீதும் பிறர் மீதும் காட்டும் அன்பும் அக்கறையும் போலித்தனமானவையல்ல உயிரோட்டமானவை அந்த உயிரோட்டமான போக்கினை இச்சிறுகதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளது.
‘மறு அடையாளம்’ இடப்பெயர்வுகள் ஒருத்தரின் அடையாளத்தினை எவ்வாறு மாற்றியமைக்கின்றது என்பதைக் கூறும் கதையாக இருக்கின்றது. இங்கு பேசப்படும் நாடுகள் கிரேக்கம், சைப்பிரஸ், ஆஸ்திரிய போன்ற நாடுகளாக இருந்தாலும் இலங்கையர்களுக்கும் இந்த இடப்பெயர்வுகளும் அடையாளமாற்றங்களும் தற்போது இயல்பான ஒன்றுதான் என்பதைக் கூறுவதாக இக்கதை அமைகிறது.
‘அக்காவும் நானே அம்மாவும் நானே’ எனும் சிறுகதை உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சோமாலிய இளம் பெண்ணின் இடப்பெயர்வையும் அகதி முகாம் வாழ்வையும் பற்றி விபரிக்கின்றது. உள்நாட்டு யுத்தங்களில் பொதுமக்கள் பற்றிய எவ்வித கரினையும் காட்டப்படாது கொன்றொழிக்கப்படுபவர்கள் என்பது பொதுவான ஒரு விடயமாகவே இருக்கின்றது. இக் கதை சோமாலியப் பெண் பற்றிய கதையாக இருந்தாலும் உள்நாட்டு யுத்தமும் கடல் பயணங்களும், அகதி வாழ்வும், குடும்பப் பிரிவும் ஈழத் தமிழர்களுக்கும் பொதுவானவிடயமாகவே இருப்பதைக் காணலாம்.
‘பொய்யின் நிழலில்’ எனும் சிறுகதை ஓர் உயர்வர்க்க குடும்பப் பெண்ணின் குடும்ப உறவு பற்றிக் கூறுகின்றது. முதலாளித்துவ சமூகத்தில் பொருளுற்பத்தி போன்று மனித உறவு நிலைகளையும் முதலாளித்துவம் உற்பத்தி செய்ய முயல்வதை இச்சிறுகதை காட்டுகின்றது. ஆயினும் நிலையான அன்பும் அக்கறையும் மனித உறவுகளுக்கிடையிலே சாத்தியமானது என்பதை முன்வைக்கின்றது.
‘முதுமை’ எனும் சிறுகதை மற்றொரு அனுபவத்தை எம்முன் நிறுத்துகின்றது. முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்கள் மனித உறவாடுகைக்கும் அன்புப் பரிமாற்றத்துக்கும் ஏங்கும் ஏக்கம் அழகாக கூறப்பட்டுள்ளது. ‘வயோதிப காலத்தில் தனிமை என்பது கொடுமையானது. அது ஒரு மனிதரை எந்தளவிற்குப் பாதிக்கின்றது. ஒருவருக்கு எந்தளவிற்குச் சுமையாக உள்ளது என்பதற்கு எமக்கெல்லாம் அம்மணி வால்டர் ஒரு உதாரணம். அந்தத் தனிமையை உடைக்க அம்மணி கண்ட வழி எமக்கொரு படிப்பினை’ என வரும் கதையாசிரியரின் கூற்று இளைய தலைமுறையினர் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
மனித உரிமை வாதிகளாலும் மனிதநேயமிக்கவர்களாலும் கண்டிக்கப்படுகின்ற ஒரு தண்டனை மரணதண்டனையாகும். சில நாடுகள் மரணதண்டனையை தங்களது நாடுகளின் சட்டங்களில் இருந்து அகற்றியுள்ளன. ஆயினும் ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற அமெரிக்கா போன்ற மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மரணதண்டனை இன்றும் வழக்கிலுள்ளது. மரணதண்டனைக் கைதிகள் எல்லோரும் எப்போதும் கொடூரமானவர்களாக இருப்பதில்லை அவர்களுக்குள்ளும் அன்பு, கருணை, ரசனை என்பன எங்கோ ஒரு இடத்தில் மறைந்து கிடக்கும் அவற்றை சரியானமுறையில் வளர்த்தெடுக்காமல் விட்டது எமது சமூகமும் அரசாங்களும் ஆகும். இவ்வாறான ஒரு விடயத்தை கருவாகக் கொண்டதுதான் ‘மரணதண்டனை’ எனும் சிறுகதையாகும்.
‘பாத்துமா மாதா’ எனும் சிறுகதை பாத்துமா எனும் சிறுமி தாய் தந்தையர் இல்லாமல் வளர்ப்புத் தாயால்; வளர்க்கப்படுவதையும் அந்தத் தாய், மனிதநேயமே இல்லாமல் அந்தச் சிறுமியை கொடுமைப் படுத்துவதையும் கொடூரமாகச் சித்திரவதை செய்து துன்புறுத்துவதையும் அந்தச் சிறுமியின் துயர்நிறைந்த வாழ்வையும் உயிரோட்டமாக் கூறுகின்றது.
மேற்கூறிய அத்தனை மொழிபெயர்ப்புக்களிலுமே சொல்லுக்குச் சொல் தமிழில் தராமல் அதனை எமது பண்பாட்டுக்கும் மொழிவழக்குக்கும் ஏற்றாற் போல் கதைகளின் மொழியைக் கையாண்டிருப்பது மொழிபெயர்ப்பாளரின் கலைநயத்தினையும் மொழிவளத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக ‘பாத்துமா மாதா’ எனும் சிறுகதையில் ‘நான் தகப்பனைத் தின்னியாம், பெற்றதாய் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டாள். அதனால் ஆட்டக்காரியின் மகளாம். அம்மா எட்டடி என்றால் நான் பதினாறடி பாய்வேனாம்’ போன்ற உரையாடல்கள் சாதாரணமாக தமிழ்ச் சூழலில் பயன்படுத்தப்படுகின்றவைகளாகும். இது போன்ற மொழிபெயர்ப்பு எம்மை இவை ஒரு அந்நிய தேசத்துக்குரிய கதைகளாக அன்றி எமது சமூகத்துக்குரிய கதைகளாக மனதில் பதிந்து விடுகின்றது.
அழகு குணசீலன் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட கதைகளின் மாந்தர்கள், சூழல், கதைக்களம் என்பவை வேறுபட்டவைகளாக இருந்த போதிலும் குணசீலனுக்குள்; இருந்த மானுட நேசிப்பின் காரணமாக ஒவ்வொரு கதையின் பாத்திரத்தினுள்ளும், கதைக்களத்தினுள்ளும் தன்னை அடையாளம் கண்டிருக்கின்றார். இந்த அடையாளம் காணல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சமூக யதார்த்தத்தின் மீதும் அந்த யதார்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தின் அனுபவத்தின் மீதும் அவருக்கிருந்த உறவாடுகையின் விளைவாகும். மனிதார்த்துவத்தையும் அதன் சாற்றையும் கொண்டு படைக்கப்படும் படைப்புகளுக்கு இனம், மதம், நாடு, மொழி என்ற எல்லைகள் கிடையாது என்பதற்கு ‘கறுப்பு நட்சத்திரம்’ எனும் இச்சிறுகதைத் தொகுப்பு நல்ல உதாரணமாகும். அவர் கூறுவதுபோல் ‘….ஒற்றுமையில் வேற்றுமையை அங்கீகரிப்பதும் வேற்றுமையில் ஒற்றுமையாய் இணைந்து போவதும் ஒருங்கிணைந்த வாழ்வும் சமகால சமூக பொருளாதார அரசியல் வாழ்வியலின் யதார்த்தமாகும்.’
நாளுக்கு நாள் சமூக, இன, மத, நாட்டு முரண்பாடுகள் அதிகரித்து யுத்தத்தையே தீர்வாகக் கொண்டு நடாத்தப்படும் யுத்தங்களும் அதனூடான வல்லாதிக்க வர்த்தகப் போட்டிகளும் மனிதகுல அழிவுக்கே இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த மனிதகுல அழிவுக்கு எதிராக இவ்வாறான படைப்புகளை வெளிக் கொண்டுவந்த அழகு குணசீலன் பாராட்டப்பட வேண்டியவராகின்றார். அவர் தொடர்ந்து தமிழுலகிற்கு இத்தகைய படைப்புக்களை தனது சிறந்த மொழிபெயர்ப்பின் மூலம் தர வேண்டும்.
குறிப்பு: இந்த நூலின் வெளியீடு வரும் மார்ச் முதலாம் திகதி பி.ப 3 மணிக்கு மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.