— செங்கதிரோன் —
(2024 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான இலங்கையின் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கியவிழா – 2024 விருதினையும், சிறந்த ஈழத்துச் சிறுகதைகளுக்கான அவுஸ்திரேலியத், தமிழ் இலக்கியக்கலைச் சங்கம் வழங்கிய விருதையும் பெற்ற கலாபூஷணம் ஏ.பீர் முகம்மது எழுதிய ‘தைலாப்பொட்டி’ சிறுகதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டுவிழா 08.02.2025 அன்று சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் அதன் பொறுப்பதிகாரி யூ.கே.எம்.றிம்ஸான் அவர்களின் தலைமையில் மணிப்புலவர் ஏ.மஜீத் அரங்கில் நடைபெற்ற போது செங்கதிரோன் த.கோபாலகிருஸ்னண் ஆற்றிய ‘திறன்நோக்கு’ உரை இது….)
தமிழில் முதல் சிறுகதையாசிரியர் ஆனால்ட் சதாசிவம்பிள்ளையே என்று செங்கையாழியான் வெளியிட்ட ‘ஈழத்துச் சிறுகதை வரலாறு’ நூல் நிறுவியுள்ளது. இவர் ஈழத்தவரே என்பது எமக்கும் பெருமை. 1850 இல் அவர் எழுதிய சிறுகதைகள் ‘நன்னெறிக் கதாசங்கிரகம்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தன என்ற தகவலையும் செங்கையாழியான் பதிவு செய்துள்ளார்.
நவீன ஈழத்துச் சிறுகதைகள் எனும்போது அதன் ஜனனம் 1930 ஆகவே கொள்ளப்படுகிறது. இலங்கையர்கோன் – க.தி.சம்பந்தன் – சி. வைத்தியலிங்கம் ஆகிய மூவரையும் ஈழத்து நவீன சிறுகதை முன்னோடிகள் எனக்கருதும் ஒரு வாய்பாடும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பொது வெளியில் பயிலப்பட்டு வருகிறது.
1930 தொடக்கம்தான் சிறுகதை ஈழத்தில் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படலாயிற்று எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்படிப் பார்க்கும்போது ஈழத்தில் நவீன சிறுகதைகளின் வரலாறு இன்னும் ஐந்து வருடங்களில் அகவை நூறை எட்டவுள்ளது. இவ்வாறானதொரு முக்கிய காலகட்டத்தில்தான் நண்பர் ஏ.பீர்முகம்மது அவர்களின் ‘தைலாப்பொட்டி’ எனும் சிறுகதைத்தொகுதி, ஏறாவூர் கஸல் பதிப்பகம் வெளியீடாகச் சென்றவருடம் இறுதியில் வெளிவந்துள்ளது.
மட்டுமல்லாமல் இந்நூல் எடுத்த எடுப்பிலேயே 2024 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் விருதையும் அதேபோல் 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஈழத்துச் சிறுகதைத் தொகுப்பிற்காக அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக்கலைச் சங்கம் வழங்கிய விருதையும் பெற்றுப் பெருமை கொண்டுள்ளது. இவ்விரு விருதுகளையும் பெற்றுக்கொண்ட நண்பர் பீர்முகம்மதுவுக்கு முதலில் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
கதைசொல்லும் மரபு ஆதிகாலத்திலிருந்தே மனிதனின் வாழ்வியலோடு வளர்ந்து வந்ததொரு கலையாகும்.
உலகின் முதல்கதையாக அகழாய்வில் கண்டுபிடிக்கப்பெற்ற கிரேக்கச் சிற்பமொன்றுதான் அடையாளப்படுத்தப் பெற்றுள்ளது. ஆற்றில் முதலையின் முதுகில் குரங்கொன்று உட்கார்ந்து செல்வதுபோல் அமைந்த சிற்பம்தான் அது. இச் சிற்பம் கூறும் கதை நமக்குப் பரிச்சயமானதே. ‘குரங்கும் முதலையும்’ கதை குழந்தைப் பருவத்திலிருந்தே கூறப்பட்டு வரும் கதைதான். பழங்கதைகள்யாவும் அற விழுமியங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மகாபாரதத்தில் அருச்சுனனுடைய மனைவி சுபத்திரை கருவுற்றிருந்தாள். சுபத்திரையின் தமையனான கிருஸ்ணன் தனது தங்கையிடம் கூறிய போரில் சக்கரவியூகம் பற்றிய யுக்திகளை கருவின் சிசுவான அபிமன்யு கேட்டுக் கொண்டிருந்தபோதிலும் சக்கரவியூகத்தை உடைப்பது எப்படி என்ற யுக்தியைக் கேட்கத்தவறியதால் போரில் அபிமன்யு கொல்லப்பட நேரிடுவதாக மகாபாரதம் கதைபேசுகிறது.
இதேபோல் சக்ரபதி சிவாஜியிடம் மழலைப்பருவத்தில் அவருடைய தாயார் ஜீஜாபாய் அறக்கருத்துக்களைக் கதையாகக்கூறி வளர்த்தாராம். அவற்றைக் கேட்டு வளர்ந்த சிவாஜி வீரதிரபராக்கிரமசாலியாகப் பின்னாளில் விளங்கினார் என்கிறது வரலாறு.
உலகம் எத்தனையோ இயற்கை அழிவுகளைக் கண்டிருக்கலாம். போரினால் சாம்பல் மேடாகிப் போயிருக்கலாம். இராச்சியங்கள் கவிழ்ந்து போயிருக்கலாம். ஏடுகள் அழிவுற்றிருக்கலாம். ஆனால் வாய்மொழிக்கதைகள் காலத்தை வென்று வாழ்கின்றன. வாய்மொழிக் கதைகளிலுள்ள வசீகரம்தான் அதற்குக் காரணம். வாய்மொழிக் கதைகளைக் காப்பாற்றுவதற்காக முதலில் சுவீடன் நாடு முடிவுசெய்து 2003 முதல் மார்ச் 20 ஆம் திகதியைக் கதைசொல்லும் நாளாகக் கொண்டாடி வருகிறது. பின்னர் முழு உலகமும் இத்தினத்தைக் கதை சொல்லும் நாளாக அங்கீகரித்தும் உள்ளது.
குகைகளில் கீறல்களாகவும், ஆதிவாசிகளின் உடல்களில் பச்சை குத்திய படிமங்களாகவும் கதைகள் மண்ணில் உலாவந்தன. பின்னர் இலைச்சருகுகளிலும் பனை ஓலைகளிலும் கதைகள் வளர்ந்தன. கதைகளின் தாயகம் இந்தியாவாகும். அவற்றைக் கற்ற பாரசீகர்கள் அதனை அரேபிய நாட்டில் பரப்பினர். மத்திய கிழக்கு நாடுகள் எங்கும் கதைகள் சிறகு விரித்தன. உலகின் மிகச்சிறிய கதையாக ஒரு தமிழ்க்கதைதான் குறிப்பிடப்படுகிறது.
‘ஒரு ஊரில் ஒரு நரி. அதோட சரி’ என்பதுதான் அக்கதை.
விடுகதைகளும் பழமொழிகளும்கூட தமக்குள் கதைக்கான கருக்கள் நிரம்பியவைதான்.
‘இருட்டுவீட்டில் ஒரு முரட்டுக்கடா’ எனும் விடுகதை கருங்கூந்தலில் ஒளிந்திருக்கும் பேன் பற்றிய குட்டை உடைத்தது. பூம்பூம் மாட்டுக்காரன் – குடுகுடுப்பைச் சாத்திரக்காரன் – குறிசொல்லும் மந்திரவாதி எல்லோரும் தமக்குள் கதைகளைப் பதுக்கி வைத்துள்ளனர்.
ஆதிகாலத்திலிருந்தே மனிதவாழ்வு பல கதைகள் மலிந்ததுதான். உதாரணமாக ஒரு ஏழைப்பெண்ணை வறுமை காரணமாக பணக்கார வயோதிபனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
‘பணக்காரக் கப்பலெண்டு
பாத்துக் குடுத்தீங்களே – அது
பாழடைந்த கப்பலெண்டு
பாத்தவங்க சொல்லல்லையா’
என்று அப்பெண் பேசினாள். இதுவே ஒரு கதைதானே. காகம் ஏறப் பனம்பழம் விழுந்ததும் ஒரு கதைதான் எனக் கவிஞர் காசிஆனந்தன் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரே கதை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகிறது. உதாரணமாக ‘காகமும் நரியும்’ கதையைக் கூறலாம்.
காகத்தை நரி ஏமாற்றிய கதை நாம் எல்லோரும் அறிந்ததே. சீனாவிலே இக்கதை வேறுவிதமாகக் கூறப்படுகின்றது.
பாட்டியிடம் பசிக்கிறது என்று கூறி காகம் வடை வாங்கிச் சென்றதாம். காகத்திடம் நரி பாட்டுப்பாடச் சொன்னதாம். காகம் பாடத்தொடங்க வடை கீழே விழுந்ததாம். நரி அதனைக் கவ்விக்கொண்டு ஓடியதாம். காகம் கா… கா… என்று கத்தியதாம். நூற்றுக்கணக்கான காகங்கள்கூடி நரியைக் கொத்திக் கொன்று தமக்கு இரையாக்கினவாம்.
இதேபோல் நாம் அறிந்த மற்றொருகதை ‘ஆமையும் முயலும்’ என்பது. இக்கதை மறுவாசிப்பில், முயல் ஆமையை இன்னொரு ஓட்டப்பந்தயத்திற்குக் கூப்பிட்டதாம். ஓட்டப்பந்தயத்தை முதலில் தண்ணீரில் வைத்துக்கொள்வோம், அதற்குப் பின்பு வேண்டுமானால் தரையில் நடத்துவோம் என்ற ஆமை சுடச்சுடப் பதிலளித்ததாம் என்று மாறியுள்ளது.
கதைகள் கால தேச வர்த்தமானங்களுக்கூடாகச் சிறுகதை – தொடர்கதை – உருவகக்கதை – குட்டிக்கதை – குறுங்கதை – மாத்திரைக்கதை – ஒருபக்கக்கதை – ஒருபத்திக்கதைகளாகவும் நவீன நாடகங்கள் – கவிதை – குறும்படம் – திரைப்படம் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளன. இப்போதும் கதைகள் தேவைப்படும் சூழலில்தான் நாம் வாழ்கிறோம். கூட்டுக்குடும்பத்தில் பாட்டிமார்களும் தாத்தாமார்களும் தமது பேரக்குழந்தைகளுக்குக் கதைசொல்லிகளாகவே மாறினர். ஆனால் இப்போது கூட்டுக்குடும்பமும் தொலைந்து பாட்டி தாத்தாமார்களும் இடம்பெயர்ந்துபோய் தொலைக்காட்சிகளும் ‘செல்போன்’களும் பாட்டிகளினதும் தாத்தாமார்களினதும் இடத்தைப் பிடித்துக் கொண்டு குழந்தைகள் எந்திரப் பொம்மைகள்போல் உலாவருகிறார்கள்.
குழந்தைகளுக்கு – சிறுவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் பெரியவர்கள் – முதியவர்களுக்கும்கூட அவர்களின் மனங்களைச் செழுமைப்படுத்தவும் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகும் அவர்களை ஆசுவாசப்படுத்தவும்கூட புதிது புதிதாகக் கதைகள் தேவைப்படும் காலத்தில்தான் நாம் இப்போது காலூன்றி நிற்கிறோம்.
இப்படியானதொரு காலப்பின்னணியில்தான் புதியகோலத்துடன் வித்தியாசமான உருவம் – உள்ளடக்கங்களுடனும் உத்தியுடனும் நண்பர் பீர்முகம்மதுவின் ‘தைலாப்பொட்டி’ வெளிவந்துள்ளது. ‘மண்ணின் மொழியில் மக்களின் கதைகள்’ என மகுடமிட்டு வந்துள்ள ‘தைலாப்பொட்டி’க் கதைகள்யாவும் பருவமழை வயற்காட்டு மண்ணில் முதன்முதலாக விழும்போது எழும் புழுதிவாசம்போல மண்வாசனை கமழுமாறு பின்னப்பட்டுள்ளன.
அந்தவகையில், இச்சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு ‘மண்ணின் மணம்பரப்பும் தைலாப்பொட்டிக்கதைகள்’ எனும் மகுடமிட்டுத் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சகோதரர் எம் அப்துல்றஸாக் வழங்கியுள்ள அணிந்துரையில்,
‘புழங்குமொழியில் முழுக்கதையையும் சொல்வது எழுத்தாளன் ஏற்றுக்கொண்டுள்ள பெரும் சவால். இன்றைய நாட்களில் பழங்கால நினைவுகளை அசைபோடும் பீர்முகம்மது போன்ற அனுபவ பிராகிருதி ஒருவராலேதான் இது சாத்தியமாகும்’ எனக் கூறியுள்ள வரிகளை நான் வழிமொழிகிறேன்.
‘தைலாப்பொட்டி’ யின் உள்ளீடுகளை உணர்ந்து கொள்வதற்கு சகோதரர் அப்துல்றஸாக் வழங்கியுள்ள அணிந்துரையும் நூலாசிரியர் நண்பர் பீர்முகம்மது வழங்கியுள்ள முன்னுரையுமே போதும் என்பதால் நானும் அவற்றையே மீண்டும்கூறிக் ‘கூறியதுகூறல்’ குற்றத்திற்கு ஆளாகாமல் இக்கதைகள் குறித்த எனது மனப்பதிவுகள் சிலவற்றை இங்கு குறிப்புகளாகத் தந்து எனது பணியை நிறைவுசெய்ய விழைகிறேன்.
1. ஈழத்துச் சிறுகதைப்பரப்பில் இது ஓர் புதிய பாணி வரவாகும்.
2. மண்ணின் மொழியில் மக்களின் கதைகள் என இக்கதைகளுக்கு மகுடமிட்டிருந்தாலும் கூட அதனை இடம்மாற்றி மக்களின் மொழியில் மண்ணின் கதைகள் என இக்கதைகள் மணிமுடி தரித்தாலும் அதுவும் பொருத்தமே. அந்த அளவுக்குப் பாலிலே நெய் கலந்துள்ளதைப்போல மண்ணின் மொழியும் மக்களின் கதைகளும் அல்லது மக்களின் மொழியும் மண்ணின் கதைகளும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. இக்கதையின் தனித்துவம் இதுதான்.
3. கதைகளின் அணிவகுப்புக்கூட (நூலின் உள்ளடக்கம்) கதைகளுக்குள்ளே நுழையத் தூண்டுகின்றன. நுழைந்த பின்பு வெளியிலேவர விருப்பமில்லாதபடி மீண்டும் மீண்டும் உள்ளே சுண்டியிருக்கும் மொழிநடையும் சொல்லாட்சியும் வியக்கத்தக்கன.
கவிதைகளுக்கு உவமையணி – உருவகவணி – தற்குறிப்பேற்றவணி – உயர்வுநவிற்சியணி போன்ற அணிகளும் மற்றும் படிமங்களும் குறியீடுகளும் கனதி சேர்ப்பதுபோலக் கதைகளுக்கும்கூட இவை பெறுமதிசேர்ப்பவை.
உதாரணங்களாகத்,
• ‘தைலாப்பொட்டி’க் கதையில் வரும், ‘அறுணாக்கொடிக் கவுறு ஒரு சுட்டுவெரல் தடிப்பத்தில வேறயா கெடந்திச்சு’
• ‘செவப்புக்கல்தோடு’ கதையில் வரும், ‘வெத்திலத் தூவாணம் வெளிய தெறிக்காம அதுக்குள்ள பத்திரமா துப்புவா’
• அதே கதையில் வரும், ‘…. கையொரலுக்குள்ள பத்திரமா போட்டு இடிச்சா அதுல வாற ஓசயக்கேட்டு மத்தாக்கள் கண்ண முழிச்சிருவாக’
• ‘சிலேட்டுப்பலக’ கதையில்வரும், ‘பழய அஞ்சிசதக்காசி நாலு மூலையும் மழுங்கினமாதிரி சற்சதுரமா இரிக்கும்’
• ‘கூப்பன் பொத்தகம்’ கதையில் வரும், ‘செரியான கரப்பத்தான் பூச்சி. எல்லா இடத்திலயும் நிப்பான்’
• அதே கதையில் வரும், ‘காலத்தால சூரியன் தலயக் கௌப்பி பொழுது விடியிற நேரம்’
• ‘மரக்கறிக்கெழவி’ கதையில் வரும், ‘ஒரு நூல்தடிப்புல பால் கொறஞ்சாலும் கேட்டுவாங்காம உட மாட்டாரு’
• ‘பொண்டுகச்சட்டி’ கதையில் வரும், ‘ஒடம்பெல்லாம் ரோசாப்பூமாதிரி’
• ‘புள்ளக்கொழுக்கட்ட’ கதையில் வரும், ‘காலத்தால இரிந்து வகுறு மப்பும் மந்தாரமுமா இரிக்கிறமாதிரி அவக்கு வெளங்குது’
• ‘பட்டக்கலியாணம்’ கதையில்வரும் ‘ஒரு காலத்தில கரவாப்பத்து சொளகுமாதிரி பெரிசா இரிந்த’
எனும் சொற்றொடர்கள் குறிப்பிடத்தக்கவை.
அருகிப்போன பல பழந்தமிழ்ச் சொற்களும் புழக்கத்திலுள்ள பேச்சுவழக்குச் சொற்களும் இக்கதைகளைச் சொல்லும் ‘கதைசொல்லி’ யான கதாசிரியர் நண்பர் பீர்முகம்மதுவுக்குக் கைகட்டிச் சேவகம் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாநிலத்திற்கே உரித்தான பல வட்டாரச் சொற்கள் இக்கதைகளுக்கு மேலும் வளமூட்டியுள்ளன.
உதாரணங்களாக : ‘வெசகளம்’ – வியளம், ‘சுறுக்கா’, ‘கணகாட்டு’, ‘அசவு’, ‘மசண்டை’, ‘ஒள்ளுப்பம்’, ‘மெத்தஊடு’, தெயாலம்’ – தியாலம், ‘சொணக்கம்’ – சுணக்கம், ‘உலுவா அரிசி, ‘படங்கு’, ‘அரிக்கன்லாம்பு’, ‘மதனி’, ‘மணக்குச்சி’, ‘துப்பணி’ – துப்பல், ‘பிச்சாட்டரிசி’, ‘மறுகா’, ‘பாலாணம்’, ‘கன்பொஞ்சாதி’, ‘மையறுக்கிழங்கு’
மேலும், இத்தொகுப்பிலுள்ள கதையின் தலைப்புக்கள்கூட மிகவும் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன. வாசிக்கத்தூண்டும் தலைப்புகள் இவை.
கிழக்கு மாகாணத்தில் முதல் சிறுகதை 1940 இல் வந்ததாகவே அறியப்படுகிறது.
மட்டக்களப்பு மாநிலத்தைப் பொறுத்தவரை முதற் சிறுகதையாளராக தனது 91 ஆவது வயதில் 2011 ஆம் ஆண்டு காலமான மட்டக்களப்புச் சிங்களவாடியைச் சேர்ந்த அமரர். வ. சிவசுப்பிரமணியம் அடையாளப்படுத்தப் பெறுகிறார். இவரது முதல் சிறுகதை ‘ஈழகேசரி’ ப் பத்திரிகையில் வெளிவந்ததாக அறியக்கிடக்கிறது. இவருக்குப் பின்னரே மட்டக்களப்பிலிருந்து,
எஸ். பொன்னுத்துரை – பித்தன் ஷா – சா. இ. கமலநாதன் – எஸ்.டி. சிவநாயகம் – செபரெத்தினம் – திமிலைத்துமிலன் – ஜோன்ராஜன் – காசி ஆனந்தன் – மௌனகுரு – புரட்சிக்கமால் எம்.எம்- ஸாலிஹ் – ஆரைப்பற்றையைச் சேர்ந்த நவம் – அன்புமணி – தங்கன் – ஆரையூர் தங்கராசா – சந்திரசேகரம் – ஆரையூர் அமரன் – ஏறாவூர் யூ. எல். தாவூத் – பொத்துவில் யுவன் – அக்கரைப்பறறு அ.ஸ. அப்துல்ஸமது – வேதாந்தி – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – மண்டூர் செழியன் பேரின்பநாயகம் போன்ற மூத்த எழுத்தாளர்கள் சிறுகதைகள் எழுதத் தொடங்கினர். இந்த வரிசையில் வரலாற்றுச் சிறுகதைகள் படைத்த குறுமண்வெளி அருள்செல்வநாயகம் மற்றும் வாகரை வாணன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.
பின்னர் இந்த வரிசை ம.த. லோறன்ஸ் – பாலுமகேந்திரா – செ.குணரெத்தினம் – வை.அஃமத் – எஸ்.எல். எம். ஹனிபா – நீலாவணன் – மருதூர்க்கொத்தன் – மருதூர்க்கனி – சண்முகம் சிவலிங்கம் – காரைதீவு சத்தியநாதன் – மணிப்புலவர் ஏமஜீத் – யூ. எல். ஆதம்பாவா – பாண்டியூரன் – திமிலைத்துமிலன் – திமிலைமகாலிங்கம் – ஆ.மு.சி. வேலழகன் – முகில்வண்ணன் – முத்துமீரான் – ஜோர்ஜ் சந்திரசேகரன் – திருக்கோயில் யோகா யோகேந்திரன் – காத்தான்குடி ஜூனைதாஷெரீப் – பொன். சுரேந்திரன் – ஏ. எச். ஏ. பஸீர் – மண்டூர் அசோகா – உமா வரதராஜன் – ஓட்டமாவடி அறபாத் – அஸ்ரப் சிஹாப்டீன் – ஜின்னாஷரிப்புத்தீன் – மருதூர்வாணன் – கல்லூரன் – ரவிப்பிரியா – ஒ.கே. குணநாதன் – களுவாஞ்சிகுடி கருணானந்தராஜா – பாடும்மீன் சிறிகந்தராசா – கோவிலூர் செல்வராஜன் – அன்புடீன் – தீரன் ஆர். எம். நௌஸாத் – மு. சடாட்சரன் – மருதமுனை அப்துல் ஹமீத் – கிண்ணையடி பாண்டியன் – கல்குடா பரமானந்தராஜா – எழுகவிஜலீல் – ஹாசிம் ஆதம் – எம். தாஜீத் – அப்துல்ரஸாக்; – அசீஸ். எம். பாயிஸ் – ஏ. இக்பால் – கல்லாறு சதீஷ் – இந்திராணி புஸ்பராசா – மண்டூர் மீனா – கமலினி சிவநாதன் – சுமதி அற்புதராஜா – வாழைச்சேனை மு. தவராசா – தாழை செல்வநாயகம் – கறுவாக்கேணி முத்துமாதவன் – அ.ச.பாய்வா – திரேசா – மணிசேகரன் – ஆனந்தா ஏ. ஜே. இராஜேந்திரம் – சாருமதி – காத்தான்குடி பாத்திமா – முகைதீன் சாலி – நஸீலா மீரா முகைதீன் – ரி. எல். ஜப்பர்கான் – தமிழ்ப்புதல்வி அன்னபூரணா – சோலையூர் குருபரன் – வரதசீலன் – மைக்கல்கொலின் – மண்டூர் தேசிகன் – நவரெத்தினராஜா குரூஸ் – கல்லாறு ஆத்மராஜா றூட் சந்திரிக்கா – அண்ணாதாசன் – செங்கதிரோன் – எருவிலைச் சேரந்த கிறிஸ்டி முருகுப்பிள்ளை – சக்கரவர்த்தி – நிலாதமிழின்தாசன் – திருக்கோயில் கவியுகன் – லோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி – புன்னகைவேந்தன் அ.மு. பாறூக் – கலைக்கோட்டன் இருதயநாதன் – முல்லைவீரக்குட்டி – முஸ்டீன் – பாண்டியூர் இராகி – நிலாமதிபிச்சையப்பா – சக்திதாசன் – த. மலர்ச்செல்லன் – ஒலுவில் வஹாப்டீன் – சஞ்சீவிசிவகுமார் – சபா சபேசன் – சிவ வரதராஜன் – ஜிப்ரிஹசன் – எஸ். நசுறுடீன் – தாழங்குடாவைச் சேர்ந்த சௌத் லொனாட் லொரன்சோ – கோமாரியூர் விவேபிறேம் – ஹரண்யா பிரசாந்தன் – பொத்துவில் அகமது ஃசைல் – பொத்துவில் குணாருபேஷ் என அனுமார்போல நீண்டு வந்துள்ளது.
இந்த வரிசையிலே ‘தைலாப்பொட்டி’ நூலாசிரியர் நண்பர் பீர்முகம்மது சற்றுத் தூக்கலாகவே இணைந்து கொள்கிறார்.
இந்தப் பெயர்ப்பட்டியலில் சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம். கூடியவரை எனது ஞாபகத்தில் வந்த பெயர்களையே உள்ளடக்கினேன். விடுபட்டவர்கள் வேண்டுமென விடப்பட்டவர்களல்ல. அத்தகையோர் என்னை மன்னித்துக் கொள்ளவேண்டும்.
ஈழத்துப் புனைகதை இலக்கியப்பரப்பில் பல பரீட்சார்த்தங்களையும் உத்திகளையும் மேற்கொண்டவர் எழுத்தாளர் எஸ். பொன்னுதரை அவர்கள். அவரது தடத்தில் இலக்கியப்பயணம் மேற்கொண்ட நண்பர் பீர்முகம்மதுவும் அவரைப்போன்றே புதிய உத்திகளைத் தனது புனைவுகளில் குறிப்பாகச் சிறுகதைகளில் புகுத்தியுள்ளார். இவரது சோதனை முயற்சிகளுக்கு முதன்முதல் களம்கொடுத்தது என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘செங்கதிர்’ சஞ்சிகைதான் என்பதை இத்தருணத்தில் பெருமையோடு பதிவு செய்கிறேன். ரஷ்ய எழுத்தாளர் சொலக்கோவ் எழுதிய மீன்கதையை மறுவாசிப்புக்குட்படுத்தி ‘இறைவனின் சித்தம்’ என்ற தலைப்பில் எழுதினார். செங்கதிர் 2012 பெப்ரவரி இதழில் இது வெளிவந்தது.
பின்னர் ஒரு பாத்திரமே உரையாடும் ‘ரிங்லோடன்’ உத்தியில் ‘ஜெனிவாவுக்குப்போன ஜெமீந்தாரு’ எனும் சிறுகதையைப் பிரசவித்தார். இது ‘அரங்கம்’ மின்னிதழில் அரங்கேற்றம் கண்டது.
இதே உத்தியில் ‘வெளிச்சத்துக்குவராத வெள்ள நிவாரணம்’ எனும் கதை செங்கதிர் நவம்பர் 2011 இதழில் வெளிவந்தது.
அதேபோன்று ‘தைலாப்பொட்டி’க் கதைகளும் இவருடைய பிறிதொரு பரிசோதனை முயற்சி. ‘வம்மிப்பூ’ என்ற தலைப்பில் ஞானம் அக்டோபர் 2021 சஞ்சிகையில் வெளிவந்த இவரது சிறுகதை உள்ளடக்கத்தில் இன்னொரு பரிசோதனை. அதேபோல் ஜீவநதி செப்டம்பர் 2021 இதழில் வெளிவந்த ‘சாமுண்டி’ எனும் கதை.
‘இலட்சியங்கள் நிறைவேறுகின்றன’, ‘கடலை வியாபாரியின்’ கனவு என்பனவும் இவரது சிறுகதைகளாகும். இதுவரை இருபத்தியொரு சிறுகதைகளைப் படைத்துள்ள நண்பர் பீர்முகம்மது மண்ணின் மொழியில் படைத்த மக்களின் கதைகள். பதின்மூன்றைச் சலித்து வேறுபடுத்தி இத் ‘தைலாப்பொட்டி’ க்குள் வைத்துத் தந்துள்ளார். சிறுகதைகளுக்குரிய கட்டுமானங்களில் இது ஒரு புதிய பரிமாணமாகும்.
மண்ணின் மொழியில் மக்களின் கதைகளை நண்பர் பீர்முகம்மது வடித்திருப்பதன் மூலம் ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் ஒரு புதிய திசையைக் காட்டியுள்ளார்.
சகோதரர் அப்துல்ரஸாக் அவர்கள் தன் முன்னுரையிலே சிலாகித்துக் கூறியுள்ளவாறு இந்த மண்ணும் மக்களும் பொதிந்து வைத்திருக்கும் அள்ளஅள்ளக் குறையாத ரகசியங்களை அவற்றின் மண்வாசைன கலைந்துவிடாமல் கதைகளாக மடைமாற்றுவதில் நண்பர் பீர்முகம்மது பெருவெற்றிபெற்றுள்ளார். அதனால்தான் இந்நூலுக்கு இவ்வளவு விரைவாக விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திலே திருநெல்வேலிப் பேச்சுத்தமிழில் புனைவுகளைத் தந்த கி.ராஜநாராயணனின் எழுத்துக்களைக் ‘கரிசல்காட்டு இலக்கியம்’ என வகைப்படுத்தியுள்ளனர். அதேபோன்று நண்பர் பீர்முகம்மது அவர்களின் ‘தைலாப்பொட்டி’ க் கதைகள் போன்ற மண்ணின் மொழியிலான மக்களின் கதைகளை அல்லது மக்களின் மொழியிலான மண்ணின் கதைகளை ஈழத்து இலக்கியப் பரப்பு எதிர்காலத்தில் ‘கரவாகு இலக்கியம்’ என வகைப்படுத்தக்கூடும்.