தையிட்டி:        அபகரிப்புக்கு அரச அங்கீகாரம்….!(வெளிச்சம்:044)

தையிட்டி:  அபகரிப்புக்கு அரச அங்கீகாரம்….!(வெளிச்சம்:044)

— அழகு குணசீலன் —

 மூக்கு இருக்கும் வரையும் சளி இருக்கும் என்பார்கள் . 77 ஆண்டு காலசுதந்திரத்திற்கும், 75 ஆண்டு கால தமிழ்த்தேசியத்திற்கும் இடையிலான தொடர்பும் இது போன்றதுதான்.

 இந்த நிலையில் தையிட்டி விகாரை விவகாரம் மூக்கும் சளியும். சளிக்கு என்ன வைத்தியம்  என்பதில் கஜேந்திரகுமாருக்கும், இராமலிங்கத்திற்கும் தலையைச் சுற்றுகிறது.

தையிட்டி விகாரையை இடிப்பதா?

 இல்லை நஷ்ட ஈட்டுடன் வேறு இடத்தில் காணியா? 

தீர்வு என்ன? 

இந்த கேள்விக்கு இரண்டு விடையும் பொருந்தும். ஆனால் இரண்டுக்கும் கீறினால் பெ(f)யில்.  “இடிப்பு” என்றால் பொன்னம்பலம் வாத்தியாரிடம் பாஸ், இராமலிங்கம் வாத்தியாரிடம் பெயில். மாறிக் கீறினால் எதிர்மாறு.

“விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில் நிச்சயமாக அந்த மக்களுக்கு அதற்குரிய நஷ்ட ஈடு, மற்றும் காணிகளை வழங்கவேண்டிய தேவை இருக்கிறது. “இது இராமலிங்கம். முன்னுக்குசரி பின்னுக்கு பிழை. இந்தக் கூற்று குற்றச்செயல் ஒன்றை பௌத்த அமைப்பு ஒன்று செய்தது என்பதற்காக சட்ட நடைமுறையில் இருந்து நழுவுதல்.

 “இனிமேல் இந்த நாட்டில் இனவாதம், மதவாதத்திற்கு இடமில்லை.” என்று சொல்லும் ஜே.வி.பி. அமைச்சர் இராமலிங்கம் தனது சுய தீர்ப்பில்  இன, மத வாதங்களையே பேசுகிறார்.

சிறுபான்மை தேசிய இனத்தின் அடிப்படையான காணி உரிமையை நிராகரித்து, சட்டத்தை மீறிய பேரினவாத காணி அபகரிப்பை சமரசம் செய்வதே இன, மதவாதம். தையிட்டி விகாரைக்கு போடப்பட்ட அடித்தளம் வெறும் கல்லும், மண்ணும், சீமெந்தும் குழைத்ததல்ல. சிங்கள, பௌத்த பேரினவாதத்தையும் சேர்த்துக்குழைத்து போடப்பட்ட அடித்தளம். அதை இலங்கை தேசியத்திற்குள் புதைக்கிறார் அமைச்சர்.

ஒருவர் /அமைப்பு, இன்னொருவரின் சொந்த காணியை அடாத்தாக பிடித்து தனக்கு விரும்பியவாறு கட்டிட நிர்மாணம் செய்யமுடியுமா? ஆம். செய்யலாம் அதற்கு வேறு இடத்தில் காணியும், நஷ்ட ஈடும் கொடுத்தால் போய்ச்சு. இதில் என்ன பிரச்சினை என்று ஒரு தவறான முன்மாதிரிக்கு வழிவகுக்கிறார் இராமலிங்கம். ஐந்து இலட்சம் மக்களிடம்  கேட்கப் போகிறாராம். குற்றச்செயலுக்கு மக்களிடம் கேட்டு முடிவெடுப்பது என்றால் சட்டம் -நீதித்துறை எதற்கு? அபகரிப்பை ஏற்றுக்கொள்ளும் அவர் அதற்கான சட்டநடவடிக்கையை தவிர்த்து “சமரசம்” செய்கிறார். காணிச் சொந்தக்கார்களின் கோரிக்கை இருக்க அதில் சம்பந்தப்படாத மக்களிடம் கருத்துக்கேட்பது இனப்பிரச்சினை தீர்வுக்கு சிங்கள மக்களிடம் கருத்து கேட்கும் அரசியல் சமரசம் போன்றது.

கஜேந்திரகுமாரோ  சட்டரீதியில் விகாரை அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறார். சட்டப்படி அபகரிக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்ட கட்டிடம் அப்புறப்படுத்தப்படவேண்டும். அந்த கட்டிடம் விகாரை என்பதால், மதத்தலைவர்கள்/ அமைப்புக்கள் சட்டத்தை மீறியிருந்தாலும் சட்டம் தன் கடமையைச்  செய்யும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களே தாங்கள் கூறியதை பொய்யாக்குகிறார்கள். 

1990 காலப்பகுதியில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் தனியார் காணியில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இது அன்றைய நல்லாட்சி அரசாங்க வீடமைப்பு அமைச்சர் சஜீத்பிரேமதாசாவின் 1125 விகாரைகளை அமைக்கும் “சசுனட்ட அருண” திட்டத்தின் ஒரு பகுதி. இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதியும் தனது தந்தையுமான ரணசிங்க பிரேமதாசாவின் 94 வது பிறந்த தினத்தையொட்டி இத்திட்டத்தை அறிவித்திருந்தார்.

அப்போது நல்லாட்சியில் கோலோட்சியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர்.  இன்று கொடி பிடிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் கூட அன்று கண்களை மூடிக் கொண்டார்கள். இப்போது பழைய அரசியல் கடனைத் திருப்பிக்கொடுக்க போராடுகிறார்கள். இது உள்ளூராட்சி தேர்தலுக்கான யுக்தி என்று கூறுகிறார் அமைச்சர் இராமலிங்கம் வேறு எதை அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்? அவரின் யுக்தி அது.

சட்டமீறல் செயற்பாடு ஒன்றுக்கு சட்டத்திற்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண அரசுதரப்பு முயற்சி செய்கிறது. சட்டம், நீதி ஒழுங்கை அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக இயங்க அனுமதிப்போம் என்ற அரசாங்கத்தின் தலையீட்டு சமரசம் வேறு இடத்தில் காணியும்,  நஷ்ட ஈடும்.

நல்லாட்சியில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பு இன்றி அதாவது மறைமுக ஆதரவுடன் இடம்பெற்ற இந்த திட்டத்தில் கஜேந்திரகுமார் அநுர அரசுக்கு மட்டும் அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை . தமிழ்த்தேசிய கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். 

தற்போது சமரச வாதிகள் தென்னிலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் குறித்து குறிப்பிட்டு  உளவியல் அச்ச உணர்வை தமிழ்மக்களுக்கு ஏற்படுத்தும் மூளை சுத்திகரிப்பு ஆரம்பித்துள்ளது. இதை அமைச்சர் இராமலிங்கம் செய்கிறார். என்.பி.பி. யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் பாவம். தமிழ்த்தேசியமும், சிங்கள பௌத்த தேசியமும் அவர்களை போட்டு மத்தளமாக அடிக்கிறது.

தையிட்டி விகாரையை தோண்டினால் பேரினவாத, தமிழ் குறுந்தேசிய புதையல்கள் கிடைக்கும். ஆனால் கிளீன் சிறிலங்காவிலும் இந்த விடயத்தில் தோண்டுவாரில்லை. இதைத்தோண்டி என்ன? சாராயத் தவறணையைத் தோண்டினால் கைச்செலவுக்கு காசு, பதவியாவது கிடைக்கும்.

இலங்கையில்…

பிரச்சினையும் அரசியல்..

தீர்வும் அரசியல்….!