— அழகு குணசீலன் —
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கவின் படு கொலை அநுர அரசாங்கத்திற்கு எதிரான அதிர்வலைகளை அதிகரித்திருக்கிறது. என்.பி.பி.க்குள் நிலவும் உள்கட்சி அதிகாரப்போட்டிக்கும், அதிகாரிகள் எங்கள் சொல்லை கேட்கிறார்கள் இல்லை என்ற அரசாங்கத்தின் இயலாத்தன்மைக்கும், பாதுகாப்பு தரப்புக்களை காட்டிக் கொடுக்கமாட்டோம் என்ற ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கும் மற்றொரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க 2009, ஜனவரி 8ம்திகதி கொலை செய்யப்பட்டார். இவரின் கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய பாதுகாப்பு நிர்வாகத்தின் புலனாய்வு பிரிவினரே காரணம் என்று ஆரம்பத்தில் இருந்து சந்தேகிக்கப்பட்டது. இதனால் விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை. கோப்புகள் மாற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசாரணைகளை துரிதப்படுத்தும் பட்டியலில் லசந்தவின் கொவைவழக்கு முதலாவது இடத்திற்கு வந்தது.
இந்த நிலையில் வழக்கின் மூன்று முக்கிய கொலை சந்தேகநபர்களை விடுதலைசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் சிபார்சு செய்திருப்பது அநுர ஆட்சியிலும் நீதியின் அர்த்தம் அதற்கு முன் “அ” கரத்தை போடுவதுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழ் சொற்களை எதிர்ச்சொற்களாக்க அவற்றிற்கு முன்னால் “அ” போட்டால் (நீதி -அநீதி) அது தமிழ் அல்ல சமஸ்கிருதம் என்று ஒரு அறிஞர் அண்மையில் கூறியிருக்கிறார். நீதியின் அர்த்தத்தை திரிபுபடுத்த இது இலகுவழிதான் போலும். திருக்குறளில் வள்ளுவரின் முதல் எழுத்துக்கு அத்தனை பலம் மட்டும் அல்ல அரசியல் திரிபுகளுக்கும் உதவுகிறது.
லசந்தவை கொலை செய்தவர்கள் “திரிபோலி” படைப்பிரிவினர் என்று சந்தேகிக்கப்படுகிறது. கோத்தபாய ஆட்சியில் ஒரு தனிப்பிரிவாக இக்குழு இயங்கியது.
லசந்தவின் கொலையாளிகள் பயன்படுத்திய வாகன இலக்கம் திரிபோலி படைப்பிரிவினருக்கு உரியது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் லசந்த சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை அறிக்கை திரிபுபடுத்தப்பட்டபோதும், பின்னர் லசந்த கத்தியால் குத்தி கொவைசெய்யப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
லசந்தவின் சாரதி கடத்தப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தன்னை கடத்தியவர் ஆனந்த உதலாகம என்று சாரதி அடையாளம் காட்டியிருந்தார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, திசாரி சுகபாலவிடம் இருந்த லசந்தவின் டயரியை பெற்று அழித்தவர் என்று கூறப்படுகிறது. இந்த டயரியில் தன்னை பின்தொடர்ந்த திரிபோலி படைப்பிரிவின் வாகனத்தின் இலக்கத்தை லசந்த குறித்து வைத்திருந்திருக்கிறார்.
இந்த கொலையின் சந்தேகநபர்கள் அன்றைய பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகந்தபால, இராணுவ புலனாய்வு பிரிவு சார்ஜன்ட் மேஜர் ஆனந்த உதாலகம.
இவ்வாறு விசாரணையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபரின், சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சிபார்சு பலதரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்பைக்காட்டியுள்ளனர். சிவில் சமூக, மனித உரிமைகள் அமைப்புக்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டமா அதிபரை அழைத்து நேரடியாக விளக்கம் கேட்டிருக்கிறார். இதன்போது நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் இருந்துள்ளார். இது விடயத்தில் பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் அவர் வாயே திறக்கவில்லை என்று தெரியவருகிறது. “வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்க தோழர்” என்று ஜனாதிபதி சொல்லியிருக்கக்கூடும்.
இந்த நாணயக்காரவுக்கும், பிரதி பொலிஸ் மா அதிபர் நாணயக்காரவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது வெளிச்சத்திற்கு வரவில்லை. நீதி அமைச்சர் நாணயக்கார நவசமஜமாஜக்கட்சியின் வாசுதேவ நாணயக்காரவின் குடும்பத்தவர். என்.பி.பி. -ஜே.வி.பி . அதிகாரப்போட்டியும் லசந்தவின் விசாரணையில் புகுந்து விளையாடுகிறதா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
இத்தனைக்கும் மத்தியில் இன்னும் சில விடயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டி உள்ளது. இவை அரசாங்கம் நீதி, நிர்வாகம், சட்டம் என்பனவற்றில் தலையிடாக்கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியவற்றுடன் தொடர்பு பட்டவை.
ஜேர்மன் மொழியில் ஒரு வழக்கு இருக்கிறது. முற்றிலும் உண்மையற்ற / முரணான விடயத்தை இப்படி கூறுவார்கள். “STIMMT VORNE UND HINTERN NICHT” ஆங்கிலத்தில் இதை இப்படி சொல்லலாம்.” WRONG FRONT AND BACK” தமிழில் இதன் மொழியாக்கம் முன்னும் பின்னும் உண்மையில்லை/பிழை. அதாவது ஒரு பத்திரத்தில் முன், பின் இரண்டு பக்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பவை உடன்பாடற்றவை/தவறானவை. லசந்தவின் கேஸில் இதுதான் நிலைமை. இந்த நிலையில்……
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சட்டமா அதிபரை அழைத்து ஒரு வழக்கு குறித்து கேள்வி எழுப்புவது நீதித்துறையின் சுதந்திர செயற்பாட்டில் தலையிடுவதாக அமையாதா? சட்டமா அதிபரின் நீதித்துறை அதிகாரத்தில் தலையிடும் அரசியல் அதிகார துஷ்பிரயோகமா? இல்லையா?
அமெரிக்காவில் வாழும் லசந்தவின் மனைவிக்கு, அரசாங்கம் ஐ.நா. வில் நிரந்தர பிரதிநிதி நியமனம் வழங்கப்பட இருப்பதாக தெரியவருகிறது. இதன் பின்னணியில் அரசாங்கத்திற்கும், லசந்தவின் மனைவிக்கும் இடையிலான சமரசம் என்ன? அதுவும் திடீரென இந்த சூழலில் இத்தகவல் கொண்டு வரும் செய்தி என்ன?
மறுபக்கத்தில் லசந்தவின் மகள் அகிம்சா சட்டமா அதிபருக்கு எதிராக பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இந்த கோரிக்கையை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளாரே அன்றி ஜனாதிபதிக்கு அல்ல. ஏற்கனவே ஹரிணி- விஜயகேரத் – அநுரவுக்கான அரசியல் அதிகார உறவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஹரிணி பகுதிநேர பார்வையாளராகவும், வெளியில் முழுநேர பார்வையாளராகவுமே மௌனிக்கிறார். இதுவும் ஜே.வி.பி. அதிகாரத்தின் “வாயைமூடு” அரசியல் தான் என்று அறிய வருகிறது.
ஆக, அரசாங்கம் பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டு வருமா? அல்லது சட்டமா அதிபரை பதவிநீக்கம் செய்யுமா?
இல்லையேல்…..,
எதிர்க்கட்சிகள் இந்த நீதிமறுப்பு சூழலில் சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்களா?
அப்படி நடந்தால் தானே கனியாதது தட்டிக்கனியக்கூடும்….!
இதில் தமிழ்த்தேசிய சட்டவாத அரசியல் நிலைப்பாடு என்ன?
அகிம்சாவின் குரல் அநுரவின் காதில் விழுகிறதா…..?