— சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா —
(“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”)
— சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா —
(“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”)
1978 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பினைச் (EROS) சேர்ந்தவர்களாக அல்லது அந்த அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள்.
மார்க்சிய, லெனினிச சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு 1975 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த இயக்கம், இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஈழம் என்னும் பெயரில் சமத்துவ மற்றும் சமதர்ம ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் அவர்கள் தாம் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாதவர்களாக, சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த சேதங்களை அகற்றுவதிலும், புனரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டார்கள். காலப்போக்கில் படிப்படியாக அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் மாணவர்களுக்குக் கல்வியூட்டுவது, பரீட்சைகளுக்குத் தயார்படுத்துவது முதலிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார்கள். தமக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த அந்த இளைஞர்களைப்பொதுமக்கள் நன்றியுடன் வரவேற்று, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தார்கள்.
1985 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) , தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (EROS), ஈரோஸ் இலிருந்து பிரிந்த, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) ஆகிய விடுதலை இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, தாக்குதல்கள், என்பன பரவலாக இடம்பெறத் தொடங்கியிருந்தன. ஆரம்பத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) யில் அதிகமானவர்கள் இணைந்தார்கள். அதற்கு அவர்களது ஆட்சேர்ப்பு முறையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.
இந்தக் காலகட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைக் கழகம் ( TELO ), தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புகளிலும் எமது ஊரிலும், அயலூர்களிலும் இருந்து பலர் சேர்ந்து இயங்கத் தொடங்கியமை வெளிப்பட்டது. தமிழ் ஈழவிடுதலைப் புலிகளில் சேர்வதில் இளைஞர்கள், பெரும்பாலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால், விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பு முறை காரணமாக அவ்வளவு எளிதாக அந்த இயக்கத்தில் சேர்ந்துகொள்ள முடியாமல் இருந்தது. பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியை இடைநிறுத்திவிட்டுத் தங்களுடன் சேர்வதை ஆரம்பகாலத்தில் அவர்கள் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால், பிற்காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு விடுதலைப் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களாலும் நடைமுறைப் படுத்தப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சகோதரர்கள் கூட வெவ்வேறு இயக்கங்களில் இணைந்தவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலையில் இயக்கங்களுக்கு இடையில் எதிர்ப்பு உணர்வு கருக்கட்டி, மோதல்களாக வெளிப்பட்டது. அது குடும்பங்களுக்குள்ளும், உறவினர்களுக்கிடையேயும் மட்டுமன்றி ஊர் மக்களிடையும் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்வு கேள்விக்குறியாகியது. நிம்மதி குலைந்தது.
தமிழரசுக்கட்சியின் தந்தை, எஸ்.ஜே.வீ.செல்வநாயகம் அவர்களும், தமிழ்க் காங்கிரஸ் தலைவர், ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களும், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களும் இணைந்து உருவாக்கிய தமிழர் ஐக்கிய முன்னணி ( TUF) யின் தேசீய மாநாடு, 1976 மேமாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைத் தொகுதியில், பண்ணாகம் என்ற ஊரில் அமைந்துள்ள, மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், தமிழர் ஐக்கிய முன்னணியின் பெயர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டதோடு, இலங்கையில் தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமும் எடுக்கப்பட்டது.
அந்தத்தீர்மானமும், அதனைத் தொடர்ந்து இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் அரசியல் போக்கும், அதன் பின்னர் 1977 இலும், 1983 இலும் இடம்பெற்ற இனக்கலவரமும் காரணங்களாக்கப்பட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசினால் 1983 ஆகஸ்ட் 8 ஆம் திகதி, அரசியல் அமைப்பிற்கு ஆறாவது திருத்தத்தை, ஆகஸ்ட் 8, 1983 இல் நிறைவேற்றப்பட்டது. (அப்பொழுது நடைமுறையில் இருந்த அரசியல் அமைப்பு இதே அரசினால்தான் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.)
இந்த 6 ஆவது திருத்ததின்படி, ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரச அலுவலர்கள் அனைவரும் இலங்கையின் பிரிவினையை ஆதரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன், அவ்வாறானதொரு குற்றத்தை இழைக்க மாட்டோம் என்று சத்தியப் பிரமாணம் எடுக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. மற்றும் இலங்கைக்குள் பிரிவினையை ஆதரிப்பது மற்றும் ஒரு தனி நாட்டை நிறுவுவது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டது.
இந்த அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தத்திற்கு அமைவாக சத்தியப் பிரமாணம் எடுப்பதா இல்லையா என்ற பிரச்சினையாலும், அதற்கு முன்னர் நடைபெற்றிருந்த பொதுத் தேர்தலில், பாராளுமன்ற உறுப்பினர்களை ஆறு வருடங்களுக்கே மக்கள் தெரிவுசெய்திருப்பதால், அதற்குமேல் பதவி வகிக்கக்கூடாது என்று தமிழ் இயக்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் இருந்தார்கள். அவ்வாறு மூன்று மாதங்கள் தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்திற்கு வருகைதராத காரணத்தினால் அரசியல் அமைப்பின்படி, அவர்களது பாராளுமன்ற அங்கத்துவம் பறிபோயிற்று. அதனால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பதினைந்து தொகுதிகளுக்கு, பாராளுமன்றப் பிரதிநிதிகள் இல்லாத ஒரு நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இவ்வாறு, தமிழ் மக்கள் தமக்கான மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்த காலம் அது. மக்களின் அத்தியாவசிய தேவைகளில், முக்கியமாகப் பாதுகாப்பு முதலிய விடயங்களில் அந்த வெற்றிடத்தைப் பிரசைகள் குழுக்களே நிரப்பின. அப்போது இலங்கை ஆயுதப்படையினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விடுவிப்பதில் பிரசைகள் குழுக்களே பெரும் பங்காற்றின.
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர் வேல்முருகு மாஸ்டர் அவர்கள். தலைவர் இராசமாணிக்கம் அவர்களது வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். அங்குதான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அவரின் கவர்ச்சிகரமான உருவமும், எவருடனும் இயல்பாகப் பழகுகின்ற தன்மையும், அவருக்குத் தமிழரசுக் கட்சியில் இருந்த மாறாத பற்றும் காரணமாக, அவரது அறிமுகம் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து அவர் வாழும்வரை அவருக்கும் எனக்கும் அண்ணன் தம்பி உறவு நீடித்திருந்தது. வேல்முருகு மாஸ்டர் அவர்கள், கல்முனை பிரசைகள் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
டி.எஸ்.கே வணசிங்கா அவர்கள் ஆசிரியராக இருந்து, அதிபராக உயர்ந்து, மட்டுநகர், அரசடி வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றியவர். 1986 ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அவர், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக மிக நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழ்த் தேசியத்தில் மிகுந்த பற்றோடு இயங்கிக்கொண்டிருந்த பெருமகன். மட்டக்களப்பு பிரசைகள் குழுவின் உபதலைவராக இருந்தார்.
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள், மட்டக்களப்பு மறைக்கோட்டத்தின் முதல்வராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர். அக்காலத்தில் கிழக்குமாகாணத்தில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், இணங்கத்தை ஏற்படுத்துவதற்கும் இடைவிடாது செயலாற்றியவர். அதற்காக மட்டக்களப்பு பிரசைகள் குழுவினை அமைத்தவர்.
களுவாஞ்சிகுடி பிரசைகள் குழுத்தலைவராக, மு. தர்மரெத்தினம் அவர்களும், இணைச் செயலாளர்களாக கோ.பாக்கியராசா அவர்களும் நானும், மற்றும் பொருளாளராக இளைப்பாறிய பொலிஸ் பரிசோதகர், நடராஜா அவர்களும் இயங்கிக்கொண்டிருந்தோம்.
1987 ஜூலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி, இந்திய அமைதிப்படை இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய பிரசைகள் குழுக்களின் கூட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்ற போது, அதில் களுவாஞ்சிகுடி பிரசைகள் குழுவின் சார்பில் அதன் தலைவராக இருந்த திரு மு. தருமரெத்தினம் அவர்களும்,
இணைச் செயலாளரான நானும் கலந்துகொண்டோம். கல்முனை பிரசைகள் குழுவின் சார்பில் அதன் தலைவர் வேல்முருகு மாஸ்டர் அவர்களும், மட்டக்களப்பு பிரசைகள் குழுவின் சார்பில் அதன் தலைவர், அருட் தந்தை சந்திரா ஃபெர்னாண்டோ அவர்களும், உப தலைவர் வணசிங்கா அவர்களும் இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தியப் படையினராலும், தமிழ் இயக்கங்களாலும் மக்களுக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்கள் சம்பந்தமாகக் காரசாரமான கருத்துகள் பரிமாறப்பட்டன. அந்தக் கூட்டம் நடைபெற்றுச் சில மாதங்களில், 20.03.1988 அன்று கல்முனைப் பிரசைகள் குழுத் தலைவர், வேல்முருகு மாஸ்டர் அவர்கள் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1988 ஜுன் மாதம் 06ஆம் திகதி அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு வருடத்திற்குள், 31.03.1989 ஆம் திகதி வணசிங்கா அவர்களும் சுடப்பட்டு மரணமானார். இந்திய அமைதிப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ்க் குழுக்களினாலேயே அவர்கள் மூவரும் கொல்லப்பட்டார்கள் என்று பேசப்பட்டது.
இவ்வாறு, பிரசைகள் குழுக்களின் தலைவர்களும், மனிதநேயச் செயற்பாட்டாளர்களும் இந்திய இராணுவம் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைதிப்படை என்ற பெயரில் செயற்பட்டுக்கொண்டிருந்த நேரத்திலேயே, சுட்டுக் கொல்லப்பட்ட அந்தக் காலகட்டத்திலே, பிரசைகள்குழுக்களில் அங்கம் வகித்துப் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் என்னைப்போன்ற மற்றவர்களும் அதேவிதமான உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இவ்வாறான அரசியல் படுகொலைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும், சமூகப்பணிகளிலும் கம்பியின்மேல் நடப்பதைப் போன்று தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தோம்.
அப்போது, களுவாஞ்சிகுடியில் மட்டுமல்லாமல், பட்டிருப்புத் தொகுதி முழுவதிலுமே நான் ஒருவன் மட்டுமே சட்டத்தரணியாகத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். எங்கள் ஊரில் எனக்கு முன்னர் சட்டத்தரணியாகிச் சில வருடங்கள் தொழிலாற்றிக்கொண்டிருந்த, நண்பர், சதாசிவம்பிள்ளை சூரியகுமார் அவர்கள், நீதித்துறையில் பதவி வகிக்கத் தொடங்கிவிட்டார். என்னுடன் ஒரே காலத்தில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்திருந்த எனது நண்பர்கள் இருவர் ஏற்கனவே ஆசிரியர்களாக இருந்தார்கள். அவர்கள் சட்டத்தரணியான பின்னரும் தமது ஆசிரியர் தொழிலைச் சில வருடங்கள் தொடர்ந்தார்கள்.
எனவே, பல ஊர்களில் இருந்தும் சட்டத் தேவைகளுக்கு என்னை நாடிவரும் மக்களின் தொகை என்னைத் திக்குமுக்காட வைத்தது என்றுகூடச் சொல்லலாம். இளமையிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்டிருந்த காரணத்தால், இயக்கங்களினதும் அரச படையினரதும் செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்களும் என்னிடம் உதவியை நாடி வந்தார்கள். அவர்களது பெரும்பாலான சட்டத் தேவைகளைப் பூர்த்திசெய்ய என்னால் முடியாத சூழலே நாட்டில் நிலவியிருப்பது பொதுமக்களுக்குத் தெரிந்திருந்தாலும், பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது, அவர்கள் என்னையே முதலில் நாடினார்கள்.
எனது வாழ்வின் மிகவும் இக்கட்டான காலகட்டத்தின் ஆரம்பமாக அது இருந்தது.
(தொடரும்)
.