திசைகாட்டிக்குச் செல்லும்  முஸ்லிம்  வாக்குகளை தடுக்கும் நோக்கிலான பிரச்சாரம்: வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு கோவணம்  கட்டிக் கொள்ளும் முட்டாள்தனம்!

திசைகாட்டிக்குச் செல்லும்  முஸ்லிம்  வாக்குகளை தடுக்கும் நோக்கிலான பிரச்சாரம்: வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு கோவணம்  கட்டிக் கொள்ளும் முட்டாள்தனம்!

— எம். எம். எம். மன்சூர் —

நாட்டின் பெரும்போக்கு அரசியலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரம்மாண்டமான எழுச்சி, சிங்கள வலதுசாரி அரசியல்வாதிகளை பலவீனப்படுத்தி, எவ்வாறு ஒரு தடுமாற்ற நிலைக்குள் தள்ளியிருக்கின்றதோ அதற்குச் சற்றும் குறையாத விதத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அது ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அதேபோல, தென்னிலங்கையில் SJB மற்றும் ரணில் விக்ரமசிங்க அணி போன்றவற்றுடன் இணைந்து செயல்பட்டு வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதே மாதிரியான ஒரு தடுமாற்ற நிலையை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

முஸ்லிம்களை பொறுத்தவரையில், 2015, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் பொழுது, 2024 தேர்தல்கள் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது, தேசிய அரசியலில் ஒரு ‘பொது எதிரி’ இல்லாத நிலையே இங்குள்ள பிரச்சினை. ‘ராஜபக்சகள் போஷித்து வளர்த்து வந்த சிங்கள இனவாதம்’ மற்றும் அதன் குரூர முகமான கோத்தபய / ஞானசார கூட்டு என்பவற்றை முன்வைத்து, முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி, அவர்களை அணி திரட்டுவது முன்னைய தேர்தல்களில் மிகவும் எளிதான ஒரு காரியமாக இருந்து வந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் கச்சிதமாக அந்தக் காரியத்தை செய்திருந்தார்கள்.

ஆனால், ‘இனிமேல் அந்தத் தேர்தல் வியூகம் சாத்தியமில்லை’ என்ற  கள யதார்த்தம் இந்த அரசியல்வாதிகளை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.

கோத்தபயவோ, ஞானசாரவோ, சன்ன ஜயசுமனவோ அல்லது சரத் வீரசேகரவோ இன்றைய தேசிய அரசியலில் பொருட்படுத்தக்கூடிய சக்திகளாக இருந்து வரவில்லை. மறுபுறம், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த தீவிர சிங்கள – பௌத்த அரசியல் கதையாடல் (Narrative) ஒரு தேர்தல் சுலோகம் என்ற முறையில் முற்றிலும் வலுவிழந்து போயிருக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகளின் போது ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை முஸ்லிம் சமூகத்தின் ‘பொது எதிரியாக’ கட்டமைப்பதற்கு தீவிரான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அந்த முயற்சி படு தோல்வியில் முடிந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. 

இந்த நிலையில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தச் சுலோகத்தை முன்வைத்து முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பது என்ற தடுமாற்ற நிலையை அவர்கள் எல்லோரும்  இப்பொழுது எதிர்கொண்டிருக்கிறார்கள். 

அப்படி  திக்கற்ற  நிலையில்  அலைகழிந்து  கொண்டிருந்தவர்களுக்கு  இப்பொழுது  ‘பாராளுமன்றத்தில்  முஸ்லிம் பிரதிநிதித்துவம்’ என்ற  ஒரு  புதிய ஆயுதம் கைக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைவடைய முடியும் என்றும், அது முஸ்லிம்களின் நலன்களை மிக மோசமாக பாதிக்க முடியும் என்றும் பலர் மிகுந்த கவலையுடன் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல, அரசியல் பிரச்சார மேடைகளிலும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் உரைகளை நிகழ்த்தி  வருகிறார்கள். 

”தேசிய மக்கள் சக்தி வென்றுவிட்டது என்பதற்காக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க விரும்புகின்றீர்களா?……..  எம்மத்தியில் உள்ள சிலர் இந்த வேலைகளை செய்வதற்கு துணிந்துள்ளனர். இந்தச் சதிகளுக்கு துணை போயுள்ள நமது சகோதரர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளது” என அண்மையில் ஒரு தலைவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.

2015 மற்றும் 2020 பாராளுமன்றத் தேர்தல்களின் போது எவரும் தெரிவித்திருக்காத இத்தகைய கவலைகள், புதிதாக இப்பொழுது எழுந்திருப்பது ஏன்? சமூகத்துக்காக மனமுருகி, கண்ணீர் விடும் இந்த நபர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கூட்டணிகளின் சார்பில் கடந்த  காலத்தில் பாராளுமன்றத்தை  அலங்கரித்த உறுப்பினர்களின் யோக்கியதை என்ன? இதன் மூலம் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்க முயலும் மறைமுகமான செய்தி எது போன்ற கேள்விகளுக் கூடாகவே  இப்பிரச்சினையை அணுக வேண்டியிருக்கிறது.

தான் பாராளுமன்றத்திற்கு தெரிவானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் கூட்டணியில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அரபு நாடுகளுடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு உதவுவதாகவும் கிழக்கைச் சேர்ந்த ஒரு தலைவர் பேசியிருக்கிறார். அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் ‘முஸ்லிம்களின் விரோதி’ என அவர்களால் முத்திரை குத்தப்பட்ட அநுர குமார திசாநாயக்கவுடன் இணைந்து கொள்வதில் அவர்களுக்கு இப்பொழுது எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஒரு புறம், முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்குச் செல்வதைப் பார்த்து ஒப்பாரி வைக்கும் இவர்கள் மறுபுறம், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்துடன்  கூட்டணி அமைத்து செயற்பட விரும்புவதாக சொல்லி வருகிறார்கள்.

இந்த நபர்களின்  தார்மீக ரீதியான இந்தச்  சீரழிவே  ‘முஸ்லிம் அடையாள அரசியல்’ மிக வேகமாக அஸ்தமித்துச் செல்வதற்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மருத்துவ விஞ்ஞானத்தில் ‘Selective Amnesia’ என்ற ஒரு வகை மறதி நோய் பற்றி சொல்வார்கள். இந்த   நோயால் பீடிக்கப்படுபவர்கள் தமது வாழ்க்கையில் அண்மையில்  நடந்த பல முக்கியமான  சம்பவங்களை  மறந்திருப்பார்கள். ஒரு சில சம்பவங்கள் மட்டுமே அவர்களுக்கு  நினைவிருக்கும்.

தம்மை  சங்கடப்படுத்தக் கூடிய நிகழ்வுகளை மறந்து (அல்லது அப்படி மறந்திருப்பதாக பாவனை செய்து),  தமது பிழைப்புக்குத்   தேவையானவற்றை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளை குறிப்பதற்கென சமகால அரசியலில் ‘Selective Amnesia’ என்ற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் பல அரசியல்வாதிகளை  அந்நோய் பீடித்திருப்பதை இப்பொழுது அவதானிக்க முடிகிறது. 

அதன் காரணமாகவே, மக்கள் ஏன் தம்மை அதிகரித்த அளவில் நிராகரித்து வருகிறார்கள் என்ற அடிப்படைத் கேள்விக்கு பதில் தேட முயலாது, திசைகாட்டியின் பக்கம் செல்பவர்களை  தடுக்கும் பொருட்டு (தமது  தவறை மற்றவர்கள் மீது போடும்) முற்றிலும் பிழையான கோணத்தில் இப்பிரச்சினையை அணுகி  வருகிறார்கள்.

கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொள்வதன் மூலம் கடுமையான  வயிற்றுப் போக்கை தடுத்து நிறுத்த முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையின் வெளிப்பாடு அது.

‘அம்பாறை மற்றும் கண்டி போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம்’ என்ற விதத்தில் தெரிவிக்கப்படும் அச்சங்களை  இந்த இரட்டை  வேட  நாடகங்களின் பின்புலத்திலேயே  நோக்க வேண்டியிருக்கிறது. 

மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு  என்ன செய்ய  வேண்டும் என அவர்கள் சொல்லாவிட்டாலும் கூட – 

”திசைகாட்டிக்கு அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குகள் முஸ்லிம் அல்லாத நபர்கள் பாராளுமன்றம் செல்வதற்கே உதவ முடியும். எனவே, உங்கள் வாக்குகளை விரயம் செய்யாதீர்கள்” என்ற செய்தியையே வெளிப்படையாக அவர்கள் வழங்கி வருகிறார்கள். 

இன்னும் தெளிவாக சொல்லப் போனால், திசைகாட்டி தவிர (தொலைபேசி, சிலிண்டர், மரம். மயில் போன்ற) ஏனைய சின்னங்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே அவர்கள் முன்வைக்கும் வேண்டுகோள். 

இது ஒரு ஜனநாயக விரோதமான, இலங்கையில் புதிதாக துளிர்த்து வரும் அரசியல் கலாசாரத்தை இழிவுபடுத்தும் விதத்திலான  ஒரு வேண்டுகோள். முஸ்லிம்களை ஏனைய  சமூகங்களிலிருந்து அந்நியப்படுத்தக் கூடிய ஆபத்தான ஒரு நிலைப்பாடு.

ஆனால், ‘திசைகாட்டிக்கு வாக்களிக்க வேண்டாம்’ எனக் கேட்டுக் கொள்ளும் இந்த ‘முஸ்லிம் நேசர்கள்’ பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் வாக்காளர்கள் திசைகாட்டியின் பக்கம் திரும்புவதற்கு அவர்களைத் தூண்டிய காரணிகள் குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். அதேபோல, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டும் நபர்களின் யோக்கியதை குறித்துச் சொல்வதற்கும் அவர்களிடம் ஒன்றுமில்லை. 

பாராளுமன்றத்தில் ‘முஸ்லிம் பிரதிநிதித்துவம் தேவையில்லை’ என்ற வாதத்தை ஒரு போதும் தேசிய மக்கள் சக்தி முன்வைக்கவில்லை. இடதுசாரி சிந்தனையுடன் கூடிய கட்சிகள் எப்போதும்  ‘அனைவரையும் அரவணைத்தல்’ (Inclusiveness)  என்ற கருத்திற்கு முன்னுரிமை அளிப்பவை. அந்த அடிப்படையில், அக்கட்சியின் அந்தந்த மாவட்டங்களுக்கான  வேட்பாளர் பட்டியல்களில் முஸ்லிம் மற்றும்  தமிழ்  வேட்பாளர்கள்  போதியளவில்  உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். 

முஸ்லிம் வேட்பாளர்களில் உலமாக்கள், பட்டதாரிகள், டாக்டர்கள் மற்றும்  பொறியிலாளர்கள் போன்ற தொழில்வாண்மையாளர்கள் மற்றும்  நீண்ட கால சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பரந்த பிரிவினர் அடங்குகின்றனர்.

இந்த வேட்பாளர்கள் குறித்து அவர்கள் முன்வைக்கும் விமர்சனம் ‘அரசியல் அனுபவம் இல்லாதவர்கள்’ மற்றும் ‘பிரபல்யம் இல்லாதவர்கள்’ என்பது. 1977 ஜூலை பாராளுமன்றத் தேர்தலின் போது வீசிய யுஎன்பி ஆதரவு அலையில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய 168 உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 100 பேர் முதல் தடவை பாராளுமன்றம் வந்தவர்கள். 2020 ஆகஸ்ட் தேர்தலிலும் மொட்டுக் கட்சி சார்பாக  வெற்றியீட்டியவர்களில் 70 – 75 சதவீதத்தினர் புதியவர்கள்.

இந்தத் தடவை  திசைகாட்டி அலை வீசுகிறது. ஜனநாயகத் தேர்தல்களில் இவை தவிர்க்க முடியாத போக்குகள். துரிதப் பயிற்சி மற்றும் பொருத்தமான விதத்திலான நெறிப்படுத்தல் என்பவற்றுக்கு ஊடாக ஓரிரு மாதங்களிலேயே புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்குத்  தேவையான  அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொடுக்க முடியும். 

அடுத்து, பிரபல்யம் (Popular) என்ற விஷயம் தொடர்பாகவும் சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. ஒன்று Popular என்பது. அதாவது, மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றனர். அடுத்த சொல் ‘Notorious’ என்பது. மோசமான காரியங்கள் தொடர்பாக நன்கு அறியப்பட்டிருக்கும் நபர்களை குறிப்பதற்காக அந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கான இலங்கை அரசியலின் சிறந்த உதாரணம் மேர்வின் சில்வா. அதன் பின்னர்  சனத் நிஸாந்த, திஸ்ஸகுட்டி ஆரச்சி என இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது.   

இந்த  ‘Notorious’  வகைக்குள் அடங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் யார் என்பது குறித்து சொல்லி விளக்க வேண்டிய அவசியமில்லை. 

எனவே, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் வேட்பாளர்களின்  அனுபவம் குறித்தோ அல்லது பிரபல்யம் குறித்தோ பேசுவதற்கு   இதுவரை காலமும் ஊழல் மற்றும் மோசடி அரசியல் கலாசாரத்தில் ஊறி திளைத்திருந்தவர்களுக்கு  எந்தவிதமான  அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *