பாராளுமன்ற தேர்தலில் எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது? தடுமாறும் எதிரணி கட்சிகள் 

பாராளுமன்ற தேர்தலில் எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது? தடுமாறும் எதிரணி கட்சிகள் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

 தேர்தல் தோல்விகளினால் துவண்டுபோகிறவர் அல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஆனால், தனது அரசியல் வாழ்வில்   நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு கிடைத்த இறுதி வாய்ப்பு  என்று சொல்லப்படக்கூடிய  கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டதால் அவர் நிச்சயம் வேதனை அடைந்திருப்பார் எனலாம். வேறு எந்த அரசியல்வாதியாகவும் இருந்தால் விக்கிரமசிங்கவைப் போன்று இவ்வளவு துரிதமாக பொதுவெளிக்கு மீண்டும் வந்திருக்கமாட்டார்.

முதலில் இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்ட பிறகு விக்கிரமசிங்க  அடுத்தடுத்து மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதை  தவிர்த்தார். கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக  அவரிடம்  வசப்படாமல் இருந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இறுதியில் இரு வருடங்களுக்கு முன்னர் எவரும் எதிர்பாராத வகையில் அவரை வந்தடைந்தது. இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை விக்கிரமசிங்க தவிர்க்க முடியாமல் போனமை காலத்தின் கட்டாயம். 

  பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தனது நிருவாகத்தினால் கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த  பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தோன்றிய வழமைநிலையின் சாயல் மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய உதவும் என்று விக்கிரமசிசிங்க பெருமளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், 2022 மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு   பாரம்பரிய அரசியல் தலைமைத்துவங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த கடுமையான வெறுப்புணர்வை அவர் உணர்ந்துகொள்ள முடியாதவராகப் போய்விட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு அவர் தீர்மானித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று மேலும்  ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருக்க முடியாவிட்டாலும், தன்னால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையே ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தொடர்ந்து முன்னெடுப்பதனால் விக்கிரமசிங்க திருப்தியடைகிறார்  என்பதை அவரின் கருத்துக்கள்  உணர்த்துகின்றன. பொருளாதார கொள்கைகைளைப் பொறுத்தவரை தனது ஆலோசனைகள் இனிமேலும் தேவைப்படும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஒரு வார காலத்தில் இரு விசேட அறிக்கைகளை விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வெளியிட்டிருக்கிறார். முதலில் அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவிருக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும்  ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு ஒரு மாத காலத்திற்குள் எதைச் சொல்லப்போகிறார் என்று அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையின் இறுதியில் அவர் தன்னுடன் கடந்த இரு வருடங்களாக பணியாற்றிய அரசியல்வாதிகளை மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்வதற்கு எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும் என்று மக்களிடம் கேட்டபோது அந்த வழமையான ஒரு தேர்தல் பிரசாரத்தின் ஒரு அங்கமாகவே முடிந்துபோனது.

சர்வதேச பங்காளிகளுடன் பொருளாதார நெருக்கடியை கையாளுவதில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக விக்கிரமசிங்க நம்புகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது.

அக்டோபர் 17  ஆம் திகதி அவர் வெளியிட்ட முதல் அறிக்கையில் இன்னமும் நான்கு வருடங்களில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது அரச வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் பாரிய சவாலை எதி்நோக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை செய்தார். இரு வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வேறு எந்த அரசியல்வாதியும்  முன்வராத ஒரு நேரத்தில் துணிச்சலுடன் ஆட்சியைப் பொறுப்பேற்றது குறித்து  எப்போதும் பெருமைப்படுகின்ற விக்கிரமசிங்க அனுபவமுடையவர்களும் பொறுப்புக்களை தட்டிக்கழிக்காதவர்களும் அடுத்த பாராளுமன்றத்தில் இருக்கவேண்டியது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார். 

அரசாங்க நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்ளைக் கொண்ட பாராளுமன்றம் பலம் பொருந்தியதாக இருப்பதற்கு தேர்தலில் எரிவாயு சிலிண்டர் வெற்றிபெறவேண்டும் என்று கூறியதன் மூலம் தனது நிருவாகத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்  என்று ஜனாதிபதி தேர்தலில் அதே சிலிண்டரை நிராகரித்த மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் சரியாக ஒரு வாரம் கழித்து அக்டோபர் 24 ஆம் திகதி இன்னொரு  விசேட  அறிக்கையை விக்கிரமசிங்க வெளியிட்டார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்ட இரு குழுக்களின் அறிக்கைகளை தற்போதைய அரசாங்கம் வெளியிடாமல் இருந்தது குறித்து பிவிதுறு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில கிளப்பிய சர்ச்சை தொடர்பானதே முன்னாள் ஜனாதிபதியின் இந்த இரண்டாவது அறிக்கை.

விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை வெளியிடுவதற்கு அரசாங்கத்துக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய கம்மன்பில் கடந்த வார முற்பகுதியில் அவற்றில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதையடுத்து கருத்து வெளியிட்ட கொழும்பு பேராயர் க்ர்டினல் மல்கம் ரஞ்சித் தேசிய மக்கள் சக்தியுடன் தேர்தல் காலத்தில் இணைந்து பணியாற்றிய குறிப்பிட்ட சில முன்னாள் பொலிஸ் உயரதிகாரிகளை பழிவாங்குவதற்காகவே விக்கிரமசிங்கவின் அரசாங்கம்  விசாரணைக் குழுக்களை நியமித்ததாக குற்றஞ்சாட்டினார். அந்த குற்றச்சாட்டுக்கு தனது அறிக்கையில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார்.

அதேவேளை, தனது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கடந்த வாரம் கோரிக்கை விடுத்தார் . அந்த சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பணம் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறிய அதேவேளை அவ்வாறு பணம் எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்று தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த விக்கிரமசிங்க பேசாமல் வீட்டில் இருக்காமல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றாலாம் என்ற எதிர்பார்ப்பில் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டிருப்பதாகவும் பொய்களைக் கூறிக்கொண்டிருப்பதாகவும் திசாநாயக்க கண்டனம் செய்தார். 

நடைமுறைச்சாத்தியம் குறித்து சிந்திக்காமல் பெருவாரியான வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் அள்ளி வீசின. பதவிக்கு வந்திருக்கும் ஜனாதிபதி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பலம்பொருந்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதற்கு தங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் அமோக ஆதரவை வழங்குமாறு மக்களிடம் கேட்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகளை  பொறுத்தவரை, இப்போது எதைச் சொல்லி வாக்குக் கேட்பது என்று தடுமாறிக்  கொண்டிருக்கின்றன.  

ஒரு புறத்தில்,  தேசிய மக்கள் சக்தியினால் நாடு எதிர்நோக்கும் சவால்களை  கையாள முடியாது என்று இந்த எதிர்க்கட்சிகள் பிரசாரத்தைச் செய்கின்ற அதேவேளை மறுபுறத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவின் ஒரு மாத கால நிருவாகத்தில் பிழைகண்டு பிடிப்பதிலும் அக்கறை காட்டுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் நிலை பெரிய பரிதாபமாக இருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்கவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதில் தங்களுக்கு பிரச்சினை எதூவும் இல்லை என்று கூறும் பிரேமதாச ஜனாதிபதிக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு  தனது கட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவு தருமாறு மக்களைக் கேட்கிறார். ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்துவதற்கு அவரது கட்சியை அல்லவா மக்கள் பதவிக்கு கொண்டுவருவார்கள். அதற்கு பிரேமதாச எதற்கு?

இது இவ்வாறிருக்க, அடுத்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு எந்த தேவையும் இல்லை என்றும் அரசியல் எதிரணி ஒழிக்கப்படுவதை உறுதிசெய்வதே இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி திசாநாயக்கவும் அமைச்சர் விஜித ஹேரத்தும் தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்துவரும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருக்கின்றன.

“நாட்டுக்கு இன்று தேவைப்படுவது பலம்பொருந்திய அரசாங்கம் ஒன்றே தவிர, எதிர்க்கட்சி அல்ல. அதனால் அடுத்த பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் மக்கள் நிரப்பவேண்டும். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களில் அறுபதுக்கும் அதிகமான அரசியல்வாதிகள் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த காரணங்களுக்காக பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். எஞ்சியிருக்கும் ஊழல்வாதிகளையும் எதிரணி அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் புதியவர்களையும் தோற்கடிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை தும்புரவாக்கும் பணியை வாக்காளர்கள் நிறைவு செய்யவேண்டும்” என்று அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார்கள்.

புதிய ஜனாதிபதியாக திசாநாயக்கவை தெரிவுசெய்ததன் மூலம் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் நிராகரித்திருப்பதுடன் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு புதிய தலைவராக அவர் மீதான நம்பிக்கையையும் அவர்கள்  வெளிப்படுத்தினார்கள். பழைய கட்சிகளின் இதுகாலவரையான ஆட்சிமுனறயையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் இனிமேலும் சகித்துக்கொள்ளத் தயாரில்லை என்பதையும் மக்கள் தெளிவாக  வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.  அவற்றை எவ்வாறு கையாளுவது என்பது மக்களைப் பொறுத்த விடயம்.

ஊழல்தனமான அரசியல் கலாசாரத்தைக் கட்டிவளர்த்தவர்களை ஜனநாயக தேர்தல் செயன்முறைகளின் மூலமாக நிராகரிப்பதற்கு முன்னதாக வீதிகளில் இறங்கிக் கிளர்ச்சி செய்வதன் மூலமாகவும் அதிகாரத்தில் இருந்து தங்களால் விரட்ட முடியும் என்று நிரூபித்தவர்கள் இலங்கை மக்கள். அதேவேளை, இலங்கை வரலாறு முன்னென்றும்  கண்டிராத வகையிலான மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதியான தேர்தலில் சுமுகமான அதிகார மாற்றத்தையும் உறுதி செய்தவர்கள் அவர்கள்.

அதேவேளை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மூன்று தசாப்த கால இவைளெியில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்த  ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) கடந்தகால வன்முறைக்கு அதை நெடுகவும் பணயக்கைதியாக வைத்திருக்காமல் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை ஜனநாயக தேர்தல் மூலம்  மக்கள் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். நம்பகத்தன்மையான ஒரு ஜனநாயக இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை நோக்கியதளாலேயே இன்று அதன் தலைவரான திசாநாயக்கவை மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

பலம்பொருந்திய அரசாங்கம் ஒன்று மாத்திரமே இன்றைய தேவை என்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தேவையில்லை என்றும் ஜனாதிபதியும் அமைச்சர் ஹேரத்தும் கூறியிருக்கும் கருத்துக்கள்  பாராளுமன்ற ஜனநாயக அரசியல் மீதான அவர்களின் பற்றுறுதி மீது மக்களுக்கு நிச்சயம் சந்தேகத்தை ஏற்படுத்தும்.

பாராளுமன்றத்தை துப்புரவு செய்வது என்பது ஊழல்தனமான அரசியல் வர்க்கத்தை  ஜனநாயக ரீதியாகத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவது என்று மாத்திரம் அமைய வேண்டுமே தவிர, பாராளுமன்றத்தில் எதிரணியே இருக்கத் தேவையில்லை என்று ஒருபோதும் ஆகிவிடாது. ஜனாதிபதியும் அமைச்சரும் தெரிவித்த கருத்துக்கள்  47  வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலில்  ஐக்கிய தேசிய கட்சி மகத்தான வெற்றி பெற்றபோது தேர்தல் வரைபடைத்தை சுருட்டி வைப்பது குறித்து ஜே.ஆர். ஜெயவர்தன  பேசியதை தவிர்க்க முடியாமல்  நினைவுபடுத்துகிறது.

(ஈழநாடு )

________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *