இலங்கை ஜனாதிபதி தேர்தல் நிலவரம்: கேள்வி- பதில் வடிவில்(பகுதி 4)

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நிலவரம்: கேள்வி- பதில் வடிவில்(பகுதி 4)

(பகுதி 4

கேள்வி, பதில் வடிவில்)

      — வி. சிவலிங்கம் —

கேள்வி:

நாட்டில் மிக முக்கியமான தேர்தல் நடைபெறவுள்ள இச் சமயத்தில் தமிழ் அரசியல் உள்நோக்கி நகர்ந்து உள் முரண்பாடுகளை அதிகரிக்கிறதே! இதனை எவ்வாறு புரிந்து கொள்வது?

பதில்:

தமிழ் அரசியலில் உள்ள சில நாசகார சக்திகள் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளுக்கள் சிக்கியிருப்பதே இதற்குக் காரணம். இலங்கையின் உளவுத்துறை சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குள் ஊடுருவியுள்ளது. உதாரணமாக, கிழக்கு மாகாண அரசியல் இன்று படிப்படியாக தனிமைப்பட்டுச் செல்வதற்குப் பிரதான காரணம் உளவுத்துறையின் திட்டமிட்ட செயற்பாடுகளே. அதாவது கருணா அம்மானின் பிளவு எப்படி ஏற்பட்டது? பின்னர் பிள்ளையான்- கருணா பிளவு எப்படி தோற்றம் பெற்றது? கருணா அம்மான் எவ்வாறு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்? பிள்ளையான் எவ்வாறு வடமாகாண அரசியலுக்கு எதிரியாக நியமிக்கப்பட்டார்? கிழக்கு மாகாணத்தில் யாழ். விரோத அரசியலை முன்னெடுப்பவர்கள் யார்? இவர்களின் தேர்தல் செலவுகளை யார் வழங்குகிறார்கள்?

தற்போது வடமாகாண அரசியலில் சில சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் தமிழ்த் தேசியம் என்ற என்ற பெயரில் ஊடுருவி தமிழரசுக் கட்சிக்குள்ளும் பிளவுகளைத் தோற்றுவித்துள்ளனர். இதனால் தமிழரசுக் கட்சியும் கூறுகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஜனநாயக தமிழர் கூட்டமைப்பு என தமிழர் கூட்டமைப்பிற்கு எதிராக ஓர் அமைப்புத் தோற்றம் பெறுவதும், அது தற்போது தாமே பலமான கூட்டணி எனக் கூறி தமிழரசுக் கட்சியை தம்மோடு இணையும்படி கோருவதும், பொது வேட்பாளர் என்ற பெயரில் சில முடிவுகளை எடுத்து தமிழரசுக் கட்சிக்குள் திணித்து அதனைப் பிளவுபடுத்தி வருவதும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. தமிழரசுக் கட்சி பலவீனப்படுமானால் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டம் மற்றும் ஐ நா மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் வலுவிழந்து போகும். இது யாருக்கு உபயோகமானது?

தமிழ் அரசியலில் தமிழரசுக் கட்சியைச் சிதைத்தால் வடக்கு அரசியலும் பணப்பெட்டி பின்னால் சென்றுவிடும். இதுவே சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரல். உதாரணமாக, தமிழர் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதாக தமிழரசுக் கட்சிக்கு வெளியில் தீர்மானித்த வேளையில் அதனை ஆதரித்த தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களான மாவை, சிறீதரன் என்போர் கட்சி முடிவுகளுக்கு எதிராக இன்னமும் செயற்படுகின்றனர். பொது வேட்பாளரை ஆதரிக்கும் மாவை எந்த அடிப்படையில் ரணிலைச் சந்தித்தார்? எவ்வாறான செய்தியை தமிழ் மக்களுக்கு வழங்குகிறார்? பொது வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய சிறீதரன் இலண்டனில் தேர்த் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இத் தேர்தலுக்கு அவர் வழங்கும் முக்கியத்துவம் என்ன? 

ஒரு புறத்தில் 13வது திருத்தத்தினை அமுலாக்கும்படி கோரும் இக் கட்சிகள் மறு புறத்தில் 13வது திருத்த அமுலாக்கத்தை எதிர்க்கும் அரியநேந்திரனை ஆதரிப்பதன் பின்னணி என்ன? சிங்கள பௌத்த பெருந்தேசியத்தின் நிகழ்ச்சி நிரலில் இவர்கள் இல்லையா?

இச் சம்பவங்கள் யாவற்றையும் சற்று ஆழமாக ஆராய்ந்தால் இவர்கள் யாரின் நலன்களுக்காக தொழிற்படுகிறார்கள் என்பது புரியும்.

கேள்வி:

தமிழ் அரசியல் எவ்வாறான மாற்று வழியில் தனது அரசியல், பொருளாதார பாதையை திருப்ப வேண்டும்?

பதில்: 

தமிழ் அரசியல் இன்றைய தமிழ் அரசியலின் எதிர்காலப் போக்குத் தொடர்பான தெளிவான விவாதத்திற்குள் செல்லுதல் அவசியம். ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்கள் தற்போது தேர்ந்தெடுத்துள்ள பாதையின் நிலமைகளை ஆராய்தல் அவசியம். ஏனெனில் தமிழ் மக்களின் குடிப் பரம்பல், பொருளாதார பலவீனங்கள், சமூக உள் கட்டுமானங்களின் பலவீனங்கள், சிங்கள, பௌத்த பெருந்தேசியத்தின் உள் நோக்கங்கங்கள், தமிழ் அரசியலில் இணக்க அரசியல் என்ற போர்வையில் நடைபெறும் பணப்பெட்டி அரசியல், அதற்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களிக்கும் நிலை போன்ற பல அம்சங்கள் குறித்து ஆழமான பார்வை தேவைப்படுகிறது.

கேள்வி:

இவற்றை யார் செய்வது?

பதில்:

எமது சமூகத்திலுள்ள கல்விச் சமூகமும், சமூகத்தின் எதிர்காலம் குறித்து கவலையுறும் செயற்பாட்டாளர்களும், வெளிநாடுகளிலிருந்து உதவிகளை வழங்கும் தேசப் பற்றாளர்களும் இதனை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் தமிழ் அரசியலை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்த்துவது? அடுத்த கட்டம் என்பது என்ன? என்பது குறித்து பலமான விவாதங்கள் இடம்பெற வேண்டும். இதற்கான அடித்தளங்கள் தொடர்பான வாதங்கள் தமிழரசுக் கட்சிக்குள் தற்போது எழுந்துள்ளன. மிகவும் பலவீன நிலையிலுள்ள சமூதாயம் தனது தற்போதைய நிலையிலிருந்து மேலும் வழுக்கிச் செல்வதைத் தடுக்கவும், அவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதைத் தடுக்கவுமான வேலைத் திட்டங்களை விவாதித்தல் அவசியம். இவை சாத்தியமான கட்சிகளுடன் பொது இணக்கத்திற்குச் செல்வது முதல் அரசில் இணைந்து சில தடுப்புகளை ஏற்படுத்தும் வகையான உறவுகளை ஏற்படுத்தல் என்பன சிலவாகும்.  

எமது சமூகத்தின் சில பிரிவினர் கடந்தகால கசப்பான நிலமைகளை அடிக்கடி கூறி நிலமைகளைச் சிக்கலாக்குவதை விடுத்து பாதுகாப்பிற்கான மாற்று ஏற்பாடுகளை நோக்கி பார்வையைச் செலுத்த வேண்டும். முதலில் பிரச்சனைகள் மேலும் கூர்மையடையாமல் தடுப்பதற்கான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்தல் அவசியம். இம் முடிவுகள் சில சமயம் தோல்வி அடையலாம். ஒரு முயற்சிகளையும் எடுக்காமல் வெறும் எதிர்ப்புகள் மட்டும் மாற்றத்தைத் தராது. அரசியல் எதிரிகள் மத்தியில் ஏற்பட்டு வரும் பிளவுகளில் அல்லது அரசியல் அணுகுமுறை மாற்றங்களில் நாமும் பங்கெடுத்து நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

தற்போதைய சூழலில் மிகவும் தெளிவான கோட்பாட்டு அடிப்படையிலான அணுகுமுறை மிக அவசியம். உதாரணமாக, இலங்கையில் வாழும் தேசிய சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் குறித்த பரந்த உரையாடல் அவசியம். குறிப்பாக இனவாத அரசியலின் தாக்கங்களால் நாட்டின் பொருளாதாரமும், இன நல்லிணக்கமும் சீர்குலைந்து சாமான்ய மக்களின் வாழ்வு மேலும் பாதிப்படைந்து செல்வதை எந்த தேசபக்தனும் அனுமதிக்க மாட்டான். அதுவே இன்றைய அரசியலில் பிரதிபலிக்கிறது.

கேள்வி:

இலங்கை அரசியலில் பாசிசத்தின் கூறுகள் தென்படுகிறதா?

பதில்:

நிச்சயமாக உண்டு. உதாரணமாக, இலங்கை சிங்களவர்களின் நாடு எனக் கூறுவதும், அதனடிப்படையில் ஜனநாயக கட்டுமானங்களைச் சிதைப்பதும், அதனைப் பெரும்பான்மை இனவாதிகளின் கைகளில் ஒப்படைக்க உதவுவதும், தேசிய சிறுபான்மை இனங்களை எதிரியாக கட்டமைப்பதும், அவர்களின் ஜனநாயக உரிமைக் குரலை சிங்கள ராணுவத்தைக் கொண்டு நசிப்பதும் பாசிசத்தின் கூறுகளே.

அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி எதேச்சாதிகாதரத்தை நோக்கி நாட்டின் அரச கட்டுமானங்களை மாற்றவுது, குடும்ப அல்லது குழு ஆதிக்கத்திற்குள் அதிகாரங்களைக் குவிப்பது, நாட்டின் மூல வளங்களை தத்தமது நண்பர்கள், உறவினர் ஆதிக்கத்தில் எடுத்துச் செல்வது, அரச அதிகாரிகளை ஊழலுக்குள் தள்ளி அரச கட்டுமானத்தைச் சீரழிப்பது, இவை யாவற்றையும் சிங்கள, பௌத்த மேலாதிக்கம் என்ற போர்வையில் இதர தேசிய சிறுபான்மையினரை எதிரிகள் நிலைக்குத் தள்ளி ராணுவத்தின் உதவியுடன் நடத்துவது போன்றனவும் உள்ளடக்கம்.

முதலில் இலங்கை என்பது பல்லினங்கள், பன் மதங்கள் பின்பற்றப்படும் ஜனநாயக நாடு என்பதை ஏற்காத வரை பாசிசத்திற்கான அடிப்படைகள் தொடர்ந்தும் இருக்கும். முதலில் நாட்டில் பெரும்பான்மை வாதம், பௌத்தமத மேலாதிக்கம், இதர இனங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துதல், பெரும்பான்மைப் பலத்தின் சட்டங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்தல் என்பன அடிப்படை மனித உரிமைகளை மீறுதலாகும்.

கேள்வி:

சஜித் அல்லது அநுர ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்கள் உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறப்படுகிறதே! அவ்வாறான சிக்கல் ஒன்று உள்ளதா?

பதில்:

அவ்வாறான ஓர் அரசியல் நெருக்கடிக்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. உதாரணமாக, அநுர வெற்றி பெற்றால் அவர் பாராளுமன்றத்தைக் கலைப்பதானால் தேர்தலுக்கான பணம் அவசியம். தற்போது பொதுத் தேர்தலுக்கான பணம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்காத நிலையில் அவர் அமைச்சரவையை உருவாக்கி, நிதி அமைச்சர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கான நிதியையும் ஒதுக்கிய பின்னரே தேர்தலை நடத்த முடியும்.

இங்கு பாராளுமன்றத்தைக் கலைப்பது அல்ல பிரச்சனை. தேர்தலை நடத்துவதற்கான பணத்தைப் பெறுவதற்கு அரசியல் யாப்பு விதிகளுக்கு ஊடாகவே செல்ல வேண்டும். எனவே தற்போதுள்ள பாராளுமன்றத்திலுள்ள கட்சிகளோடு தேசிய மக்கள் சக்தி ஓர் இணக்கத்திற்குச் செல்வது தவிர்க்க முடியாததாகும். இணக்கத்தைத் தவிர்த்து முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தினால் குழப்பநிலை தொடரும். இது யாருக்கும் உகந்த அணுகுமுறை அல்ல.

கேள்வி:

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை அவர் பயன்படுத்த முடியாதா?

பதில்:

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் நிதி என்பது அதற்கான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்போது நிதி அமைச்சர் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும். அது அங்கு தோற்கடிக்கப்பட்டால் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும். இந்த இழுபறி நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தான அணுகுமுறை.

பாராளுமன்றத்தின் அனுசரணையைப் பெறாமல் அரசாங்கத்தை நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்துவது என்பது பல விதங்களில் சிக்கலானது. ஏனெனில் அவர் பாராளுமன்றத்தின் உதவி இல்லாமல் சட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறை மிக வேறாக அமையலாம். அமைய வேண்டும். தேசத்தின் நலன் கருதி பலர் தேசிய மக்கள் சக்தியின் அரசை ஆதரிக்கலாம்.

தற்போதைய நிலமைகளை அவதானிக்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எந்த ஒரு கட்சியும் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எட்டும் எனக் கருத முடியவில்லை. அவ்வாறாயின் இதர கட்சிகளின் ஆதரவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டே புதிய ஜனாதிபதி செயற்பட வேண்டும். ஓர் தேசிய அரச உருவாக்கத்திற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுகிறது.  

இங்கு இன்னொரு பிரச்சனை உண்டு. தேர்தலை நடத்துவதற்கான பணம் அங்கு உள்ளதா? என்பதும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களைப் பயன்படுத்தி தேர்தல் நடத்துவதாயின் அவர்களின் சம்மதமும் பெறப்படுவது அவசியமாக அமையலாம். ஏனெனில் அவர்கள் சில இலக்குகளை அடைவதற்காகவே கடன் வழங்குகிறார்கள்.

கேள்வி:

உங்கள் பதிலை அவதானிக்கும் போது அடுத்து வரும் அரசாங்கம் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கலாம் போல் தெரிகிறது. அவை எவ்வாறான பிரச்சனைகள்?

பதில்:

அநுர தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுவது போல மிகவும் மென்மையான பயணமாக அவை இருக்கப்போவதில்லை. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏற்கெனவே 16 தடவைகள் கடன் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியம் தனது கடனை பகுதி, பகுதியாகவே இம் முறை வழங்குகிறது. ஓவ்வொரு தடவையும் அடுத்த பகுதியை வழங்கும்போது ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட இலக்குகளை எட்டியுள்ளார்களா? என்பதை ஆராய்ந்தே வழங்குகின்றனர்.

இம்முறை சர்வதேச நாணய நிதியம் விதித்த சில இலக்குகளை நாம் பார்க்கலாம். உதாரணமாக, நீதித்துறையில் மக்களுக்குள்ள நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில் சட்டங்களை இயற்றுதல் அவசியம் எனத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும்படி கோரியுள்ளது. ஊழல், விரயத்தைத் தடுப்பதற்கான சட்டங்களை இயற்றும்படி கேட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபத்தில் இயங்கும் விதத்தில் அதன் செயற்பாடுகளை மாற்றி அமைக்கக் கோரியுள்ளது. அதாவது நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மேலும் அரச உதவியை வழங்குவது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்.

இவ்வாறாக சர்வதேச நாயண நிதியம் வழங்கிய ஆலோசனைகளை தற்போதைய ரணில் அரசு நிறைவேற்றுவதற்குப் பதிலாக மக்கள் மேல் வரிச் சுமைகளை அதிகரி;த்திருக்கிறது. சட்டங்களை இயற்றித் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்கப் பயன்படுத்துகிறது. நிதி வளங்களைச் சூறையாடிய பலர் அரச பதவிகளில் இன்னமும் உள்ளனர். ஊழல் இன்னமும் தொடர்கிறது.

கேள்வி:

மேற்குறித்த பதிலைப் பார்க்கும்போது எவர் பதவிக்கு வந்தாலும் நிலமை மிக மோசமாக செல்லலாம் போல் தெரிகிறது. வேறு எவ்வாறான பிரச்சனைகள் ஏற்படலாம்?

பதில்:

மகிந்த அரசும், ரணில் அரசும் பல்வேறு வங்கிகள், சீனா, யப்பான், இந்தியா போன்ற நாடுகள் வழங்கிய கடன்கள் அத்துடன் சர்வதேச இறைமை முறிகள் எனப் பலவுண்டு. இந்தக் கடன் முறிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டியவை. சமீபத்தில் இலங்கைக்கு இவ்வாறு கடன் முறிகளை வழங்கிய நிதி நிறுவனம் அமெரிக்காவிலுள்ள நியூயோர்க் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இவ் வருடம் செப்டெம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் உடனடியாக 250 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்துமாறு கேட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். இத் தீர்ப்பை தாமதிக்கும்படி இலங்கையின் நட்பு நாடுகள் சில கேட்டுள்ளன.

எனவே அடுத்து அரசாங்கத்தைப் பொறுபேற்பவர்கள் மிகவும் சிக்கலான பயணத்தை அனுபவிப்பார்கள். எனவே முறுகல் நிலமைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இணக்க அணுகுமுறையை மேற்கொள்ள நேரிடும்.

கேள்வி:

மகிந்த மற்றும் ரணில் அரசுகள் சர்வதேச நாணயத்திடம் சில நிபந்தனைகளுடன் கடன் பெற்றுள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தினை தம்மால் ஏற்க முடியாது எனவும், அந்த நிபந்தனைகள் தமக்குத் தெரியாது எனவும், தாம் நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தையை நடத்தி சில நிபந்தனைகளை மாற்றி அமைக்கப் போவதாகவும் தேசிய மக்கள் சக்தி. ஐக்கிய மக்கள் சக்தி என்பன கூறுகின்றன. இது சாத்தியமா?

பதில்:

இப் பிரச்சனை தொடர்பாக இந்த இரு கட்சியினரும் வெவ்வேறு அர்த்தங்களில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பதிலளித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம் சில அடிப்படைகளை விவாதித்து அதன் பெறுபேறாகவே கடன் வழங்க சம்மதித்துள்ளனர். இவை இலங்கைக்கு மட்டும் தனித்துவமானதல்ல. பல்வேறு நாடுகளுக்கும் இதே போன்ற சில அடிப்படைகளிலேயே கடன் வழங்குகின்றனர். எனவே அந்த அடிப்படைகளை மாற்றுவது மிகவும் கடினம் எனவும், காலம் எடுக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அநுர தலைமையிலான கட்சியினர் கடன் மீள்கட்டுமான ஆய்வுகளில் அடிப்படை மாற்றங்களைப் பேசி முடிவு செய்யப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பேச்சுவார்த்தைகள் காலத்தை எடுக்கும் வரை நாணய நிதியத்திடமிருந்து பணம் கிடைக்காது. அவ்வாறாயின் இந்த இடைக்காலத்தில் பணம் எங்கிருந்து கிடைக்கும்? தேசிய மக்கள் சக்தியினர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் உதவிகளை மிகவும் சந்தேகத்துடன் அணுகுவதால் வேறு யாரிடமிருந்து கடன் பெறுவார்கள்? என்பதும் பெரும் கேள்வியாகவே உள்ளது.

சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சர்வதேச நாயண நிதியம் வழங்கிய இலக்குகளை அடைய தாம் திட்டம் வைத்திருப்பதாக கூறுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தால் கூறப்பட்டுள்ள இலக்குகளை தாம் வேறு விதங்களில் எட்டப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இந்த ஏற்பாட்டினை ரணில் தவறான அணுகுமுறை எனவும், சாத்தியப்படாது என்றும் கூறுகிறார். இவற்றை நாணய நிதியம் ஏற்குமா? என்பதும் பெரும் கேள்வியாகவே உள்ளது.

இங்கு நாணய நிதியத்தை அணுகுவது குறித்துப் பலத்த வேறுபாடுகள் உள்ளன. நாடு தற்போது வங்குறோத்து நிலையில் இருக்கும்போது, யாரும் கடன் வழங்கத் தயாரில்லாத போது, சர்வதேச நிதி தொடர்பான நாடுகளின் தரங்களை நிர்ணயிக்கும் அமைப்புகள் இலங்கையின் நாணய தர நிரணயத்தை மிகவும் கீழே வைத்திருக்கும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு விருத்தி செய்ய எவ்வாறு கடன் பெறப் போகிறார்கள்?; என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.    

கேள்வி:

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் தேசிய மக்கள் சக்தியினர் எவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்யப் பணம் பெறுவார்கள்?

பதில்:

அவர்கள் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பணத்தை மீண்டும் பறிக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப் போவதாகத் தெரிவிக்கின்றனர். இது வெறுமனே இலங்கையின் கையில் இல்லை. பல வெளிநாடுகள் இணங்க வேண்டும். உதாரணமாக, ஹட்டார், குவைத் போன்ற நாடுகளில் இச் சட்ட விரோத பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சாத்திமா? என்பது சந்தேகமே.

அடுத்து, புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்கள் இலங்கை அரசு வழங்கும் முறியைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைப்பிலிட்டதாகக் கருத வேண்டும். அவ்வாறாக வைப்பிலிடுபவர்களுக்கு அரசு சில சலுகைகளை அறிவிக்கலாம். இவ்வாறாக பணத்தைத் திரட்டலாம் எனத் தெரிவிக்கின்றனர். இதன் சாத்தியங்களையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் தொடரும்……