— அழகு குணசீலன் —
இது அரகலயவுக்கு அரகலய காலம். காலிமுகத்திடல் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் தவறான அரசியலை செய்து ‘புரட்சி’ செய்கிறோம் என்று ‘எதிர்ப்புரட்சி’ செய்து மக்களின் எழுச்சியை மழுங்கடித்த ஜே.வி.பி.க்கு இப்போது மங்குசனி. ஜே.வி.பி. காலிமுகத்திடலில் தங்களின் கடந்த கால 1971, 1987, 2022 வன்முறைகளின் வரிசையில் மீண்டும் ஒரு முறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தனது தீவிர வலதுசாரி போக்கை நிறுவியது.
சிறுபான்மை தேசிய இனங்களை கவருவதற்காக இடதுசாரி அரசியல் அடிப்படை அற்ற நூல்நிலையம், போரில் ஈடுபட்டு அங்கங்களை இழந்த இராணுவத்தினரை காட்சிப்படுத்தல், புலிப்படைக்கு அஞ்சலி ……. போன்ற பல அரசியல் பூச்சுத்துக்கள் காலிமுகத்திடலில் ஜே.வி.பி.யினால் மேற்கொள்ளப்பட்டன. மேற்குலகமும், ஜே.வி.பி.யும் இதன் மூலம் பரஸ்பர நன்மையை பெற்றுக்கொண்டன. இரு தரப்பும் வங்குரோத்து நாடு ஒன்றில் தேசிய சொத்துக்களும், தனியார் சொத்துக்களும் அழிக்கப்பட்டது குறித்து எந்த கவலையும் கொள்ளவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக ஜே.வி.பி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்தியது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அதற்கான ஆதரவு தென்னிலங்கையில் பாரிய வீழ்ச்சியை அடைந்து, முதல் நிலையில் இருந்த அதன் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் நிலையில் உள்ளார். இந்த ஆதரவு வீழ்ச்சியை சரிசெய்ய என்ன விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். இதனையே அநுரகுமார கோயில் குளங்களை தரிசித்து வருகிறார் என்று வெளிச்சம் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது.
கடந்த வாரம் இன்னும் ஒரு படி மேலே போய் கையில் காப்பு நூல் கட்டியும், ஆயிரக்கணக்கான பிக்குகளை கூட்டியும் தன்னையும், ஜே.வி.பி.யையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒரு அடையாளமாக, காப்பாளனாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்தியா சென்ற போது பூ நூலும் அணிந்தாரோ தெரியவில்லை. ‘செட்டையை’ முழுமையாக கழட்டினால் தெரியும். இதனால் இதுவரை ஜே.வி.பி.யை ‘சிவப்பு’ என்று நம்பிய மக்கள் மத்தியில் அதன் நிறம் ‘வெளிறி’ வருகிறது.
ஆகஸ்ட் 26ம் திகதி ஜே.வி.பி. /என்.பி.பி. யின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்த நாட்டில் புரையோடிப்போய் இருக்கின்ற சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு எந்த திட்ட வட்டமான தீர்வும் இல்லை. சிறுபான்மை மக்கள் இடதுசாரி கொள்கை நிலைப்பாட்டில் ஜே.வி.பி.யிடம் இருந்து இவ்வாறான தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கவில்லை. திசைகாட்டி மக்களுக்கு சரியான திசைக்கு பதிலாக தவறான திசையைகாட்டி வழிநடத்த முனைகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் சிங்கள மக்கள் மத்தியில் தன்னை ஒரு ‘இரண்டாவது கோத்தபாயவாக’ பிரகடனம் செய்துள்ளார் அநுரகுமார. கோத்தபாய வின் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்றதன் மறுவார்த்தை ‘நாம் இலங்கையர்கள்’ இது தான் காலிமுகத்திடலில் விண்ணைத்தொட்ட கோஷம். கோஷங்களே ஜே.வி.பி.க்கும் கொள்கையாகிப்போனது. இந்த நிலைப்பாட்டில் எத்தனையோ தீவிர வலதுசாரி கட்சிகள் இருக்கும் போது ஜே.வி.பி.யின் தவறான நிறத்தில் இன்னொரு கட்சி தேவையா?
‘நாம் இலங்கையர்’ என்பது உளவியல் உணர்வு. அதை இந்த நாட்டின் ஒவ்வொரு முஸ்லீம், தமிழ், சிங்கள பிரஷைகள் உள்ளார உணரவேண்டும். அதற்கான அடிப்படையை – ‘நாம் இலங்கையர்’ என்ற இலக்கு நோக்கி பயணிப்பதற்கான வீதிவரைபடம் ஜே.வி.பி/என்.பி.பி.யின் தேர்தல் அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை -நம்பிக்கையை அவர்கள் சிதைத்திருக்கிறார்கள்.
இலங்கையின் ஒட்டு மொத்த இடதுசாரி அரசியல் வரலாறானது பெரும்பாலும் சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்த, வலதுசாரிகளுடன் கைகோர்த்த வரலாறாகவே உள்ளது. ‘நாம் இலங்கையர்கள்’ என்ற கோஷம் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்படுகின்ற ஒன்று. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 1972 அரசியல் அமைப்பு மரபு ரீதியான இடதுசாரிகளின் இந்த கோஷத்தை தோலுரித்துக்காட்டியது. இது இலங்கையின் இடதுசாரிகளுள் ஒருவரான, அரசியல் அமைப்பு சிற்பி என வர்ணிக்கப்பட்ட கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் தயாரிக்கப்பட்டது என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. இத்தனைக்கும் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டபோது “ஒரு மொழி இருநாடு, இரு மொழி ஒரு நாடு” என்று கூறிய அவரால் இந்த குடியரசு அரசியலமைப்பு எழுதப்பட்டதென்றால் அதற்கு கதிரையைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்.
இந்த சிங்கள மேலாண்மை மனோநிலையே ‘நாம் இலங்கையர்’ என்ற நிலைப்பாட்டில் இருந்து என்.சண்முதாசன், வி.பொன்னம்பலம் போன்றவர்கள் காலப்போக்கில் தென்னிலங்கை மரபுவழி இடதுசாரி அரசியலில் இருந்து விலகி நிற்க காரணமானது. கொல்வின் ஆர்.டி.சில்வாவுடன் லங்கா சமாஜமாஜக்கட்சியில் பயணித்த வாசுதேவ நாணயக்கார, விக்கிரபாகு கருணாரெட்ண போன்றோர் வெளியேறி நவ சமாஜ மாஜக் கட்சியை அமைத்த போதும் பின் வந்த காலங்களில் அவர்களும் பேரினவாத அலையில் அடிபட்டுப்போயினர்.
வாசுதேவ நாணயக்கார அமைச்சர் பதவிக்காக ஒத்தோடினார்.
“சந்திரிகா குமாரதுங்க இடது சார்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி என்றும், இனவாதம் மற்றும் மதவெறியை எதிர்ப்பதில் தேசிய ஒற்றுமைக்காக நிற்பவர்” என்றும் வாசுதேவ அப்போது கூறினார்.
அண்மையில் மரணித்த விக்கிரமபாகு கருணாரெட்ண தனது இறுதிக்காலத்தில் வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் தலைமையில் இணைந்து எம்.பி. பதவி பெற தயாராய் இருந்தார்.
வாசுதேவ கூறிய வார்த்தைகளை முன்னும், பின்னும் மாற்றிப் போட்டு விக்கிரமபாகு இப்படி கூறினார். “இனவாதம் மற்றும் மதவெறியை எதிர்க்கும் ஒரு சமூக ஜனநாயகவாதியாக யு.என்.பி.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறேன்” என்றார்.
இன்னும் ஒரு படி மேலே சென்ற விக்கிரமபாகு “தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள எவரும் வெட்கப்படல் தேவையில்லை” என்றதுடன் மட்டும் நிற்கவில்லை. “மார்க்ஸ் உயிருடன் இருந்திருந்தால் ரணிலுடன் கைக்குலுக்கி அரவணைத்திருப்பார்” என்றும் வெட்கம் இல்லாமல் கூறினார். 2010 இல் பச்சை சட்டை அணிந்து, யானை சின்னத்தில் களுத்துறை மாவட்டத்தில் யு.என்.பி.யில் போட்டியிட்டார். இன்று உயிருடன் இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் மேடைகளில் அவரைப் பார்க்க கிடைத்திருக்கும்.
காலப்போக்கில் இடதுசாரி அரசியல் என்பது எந்த வழியிலாவது பதவியைப் பெறுவதாகவே கடந்த 50 ஆண்டுகளில் இருந்துள்ளது. இதையே ஜே.வி.பி. யும் சிங்கள, பௌத்த மக்களை மையப்படுத்தி தற்போது செய்கிறது. இதனால்தான் ஒட்டு மொத்த இலங்கை மக்களும் இடதுசாரி அரசியலை சற்று எட்டத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஜே.வி.பி.யின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் கதிரையுள்ள திசையையே காட்டுகிறது. அதற்காக அனைத்து புரளியையும், புரட்டையும் செய்ய அது தயாராகிறது.
இடது,வலது கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சிங்கள தலைமைகள் ஆட்சி அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் ஒரே இனவாதப் பாதையில் பயணித்தனர். இதில் இருந்து தமிழர் அரசியல் வேறுபட்டதல்ல. தமிழ்த் தலைமைகளும் அதே பாதையில் பயணித்தனர். சிங்கள வலதுசாரிகளுடனே அவர்களின் இணக்க அரசியல் இருந்தது. முஸ்லீம் தலைமைகளிலும் இதுவே பொதுநிலை.
இவற்றோடு ஒப்பிடும்போது ஜே.வி.பி.யின் கடந்த கால அரசியல் வரலாற்றை மன்னித்த மனப்பாங்கில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் ஜே.வி.பி. மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதனை ஜே.வி.பி.யின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் மறுதலிக்கிறது. அதுவும் தனது அரசியலை சிங்கள, பௌத்த மக்களுக்காக செய்ய முனைந்துள்ளது. காலிமுகத்திடலில் ஒலித்த மாற்றம், மாற்று, முறைமாற்றம் எல்லாம் காலாவதியான கதையாகிவிட்டது. மேலெழுந்தவாரியாக ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்திருத்தம், தேர்தல் கால பொருளாதார சலுகைகள் பற்றியே பேசுகிறது ஜே.வி.பி.
1. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் இடம் பெற்ற கொலைகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
2. பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட, அடக்குமுறை சட்டங்கள் நீக்கப்படும் .
3.இந்தியாவை, பிராந்திய நாடுகளை அச்சுறுத்த இடமளியோம்.
4. சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர்.
5. இனக்கட்டமைப்பை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்படும்.
6. வடக்கு, கிழக்கில் நிர்வாகத்தில் மொழியுரிமை பேணப்படும்.
இவையே வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் கவனம் செலுத்தக்கூடிய முன்மொழிவுகள் எனலாம்.
இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஜே.வி.பி /என்.பி.பி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அளித்த பேட்டி ஒன்று தனது தேர்தல் உறுதிமொழியை தானே மறுதலிப்பதாக உள்ளது.
“போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களையும், மனித உரிமைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளவர்களையும் தேசிய மக்கள் சக்தி தண்டிக்க முயற்சிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து சிறுபான்மை தேசிய இனங்களுக்கான மேற்கூறிய உறுதிமொழிகளில் அதிகமானவற்றை மறுதலிக்கிறது. இதுதான் முடிவு என்றால் போடப்பட்டுள்ள பட்டியல் வெறும் கண்துடைப்பு. இவற்றில் அதிகமானவை மனித உரிமைகள் சார்ந்தவை.
இந்தியாவை அச்சுறுத்த அனுமதியோம் என்று சொல்லும் அளவுக்கு ‘சேவகம்’ செய்ய ஜே.வி.பி.தயாராகிவிட்டது. இது விடயத்தில் தென்னிலங்கை வலதுசாரிகளின் நிலைப்பாட்டையே அதுவும் கொண்டுள்ளது. இந்திய நலன்களை பாதுகாக்க ஒத்துழைத்து தமிழ், முஸ்லீம் மக்களின் உரிமைப் பிரச்சினையில் இந்தியாவை தூரத்தில் வைத்தல். பௌத்த -இந்துத்துவ உறவை முதன்மை படுத்துகின்ற வெளிநாட்டு கொள்கையை தொடரல்.
இதனால்தான் அநுரகுமாரவை இரண்டாம் கோத்தபாய என்று கூறவேண்டி உள்ளது. இந்தியா அநுரகுமாரவை கூப்பிட்டு கதைத்த போது இருந்த தேர்தல் களநிலை இப்போது இல்லை. அந்த நேரத்தில் அநுரகுமார முதல் நிலையில் இருந்தார். இப்போது அநுரவுக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியா மற்ற இருவரில் ஒருவரை தேடுகிறது. இதற்காககத்தான் இந்தியாவின் பாதுகாப்பு பற்றி ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கை பேசுகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், அடக்குமுறை சட்டங்கள் மனித உரிமைகள் சார்ந்தவை. அரசியல் கைதிகள் விவகாரம் மனித உரிமைகள் சார்ந்தது. மொழியுரிமை அடிப்படை மனித உரிமை. இந்த வகையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்க வழிசெய்யாது யார் மீறியிருக்கிறார்கள், யார் மீறவில்லை என்றும், யார் போர்க்குற்றங்களை செய்தார்கள், யார் செய்யவில்லை அல்லது யார் அதிகம் செய்தார்கள், யார் குறையச்செய்தார்கள் என்று அவற்றிற்கு பொறுப்பானவர்களை வெளிப்படுத்துவதற்கு மட்டும் விசாரணைக் குழுக்கள் எதற்கு? நீதியற்ற விசாரணை. போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்களுக்கு பின்னால் ஜே.வி.பி. யும் இருக்கிறது. கொலைகளுக்கு பின்னாலும் ஜே.வி.பி. இருக்கிறது . இரண்டாம் கிளர்ச்சி காலத்தில் ஜே.வி.பி. அதிகளவான இடதுசாரிகளை கொலை செய்திருக்கிறது. இதனால்தான் இப்படிச் சுத்துகிறார்கள்.
‘நாட்டின் தேசிய சொத்தை கோயில் சொத்து போன்று’ பாதுகாப்பேன் என்று ஒரு இடதுசாரி கட்சியின் (?) தலைவர் கூறும் அளவுக்கு ஜே.வி.பி.யின் நிலையுள்ளது. ஊழல்கள் நிறைந்த இடங்கள், கோயில் சொத்தை சூறையாடும் இடங்களாக அனைத்து மத கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இவர்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும்?
ஆக, மொத்தத்தில் ஜே.வி.பி. ஒரு மாற்றும் அல்ல, மாற்றமும் அல்ல. வேண்டுமானால் இடது ‘செட்டையில்’ வலதுக்கான ஒரு பதிலீடு மட்டுமே.
மகிந்தவை, சிறிசேனவை, கோத்தபாயவை, ரணிலை பதிலீடு செய்கிறார் அநுரகுமார திசாநாயக்க அவ்வளவுதான்.
அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றால் அது பலாப்பழத்தை பழுக்க வைக்க முள்ளைப்பிடுங்கி கட்டையை அடித்த கதையாகும். தமிழ், முஸ்லீம் சிறுபான்மை தேசிய இனங்கள் அரசனை நம்பி புருஷனை கைவிடமாட்டார்கள் என்று நம்புவோம்.