— அழகு குணசீலன் —
உங்களில் பலருக்கு நினைவிருக்கும். அந்த காலத்தில் பாடசாலையில் தவணைப்பரீட்சை முடிந்து அல்லது வகுப்பேற்ற பரீட்சை முடிந்த பின்னர் ரிப்போர்ட் தருவார்கள். அதில் வகுப்பு ஆசிரியர் / ஆசிரியை ஒரு குறிப்பு எழுதவும் இடம் உள்ளது. அனேகமாக “திருந்த இடமுண்டு” என்று எழுதி விடுவார். அந்த குறிப்பு வீட்டில் தப்பிக்கொள்ளவும் வசதியாக இருக்கும். திருந்துகிறோமோ? இல்லையோ ? அடுத்த ரிப்போர்ட் வரை காலத்தை கடத்த அது போதும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் நடந்த (அ) நாகரிகம் தான் இந்த பள்ளிக்காலத்தை நினைத்துப்பார்க்க வைத்தது.
“திருந்த இடமுண்டு” என்று எழுதுவது மிகவும் நாகரீகமான வார்த்தைப் பிரயோகம்.
பாதிக்கப்பட்ட அந்த மட்டக்களப்பு அரசியல்வாதியும் ஒரு முன்னாள் ஆசிரியர், கல்வி அதிகாரி. அவர் கூட ஆசிரியராக பிள்ளைகளுக்கும், அதிகாரியாக ஆசிரியர்களுக்கும் “திருந்த இடமுண்டு” என்று எழுதியிருக்க வாய்ப்புண்டு.
அதனால் அவருக்கு மட்டும் அல்ல அவரைப்போன்ற இன்னும் திருந்தாதவர்களுக்கு “திருந்த இடமுண்டு” என்று எழுதவேண்டி உள்ளது. இது முதல்தடவை அல்ல பலதடவைகள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை கூட்டங்கள் என்று தொடர்கிறது. நீங்கள் இன்னும் திருந்தவில்லை என்றால் உங்களுக்கு ஒரு உளவியல் கோளாறு இருக்கிறது என்று சந்தேகப்படவேண்டி உள்ளது. அந்தக் கோளாறு உங்கள் சுயத்துவம், தன்மானம், சுய நம்பிக்கை, தற்துணிவு அற்ற “சுயத்தை” இழத்தல் கோளாறாக இருக்கமுடியும். உங்களுக்கான அவமானத்தை கதிரைக்காக விழுங்கிக் கொள்வதாகவும் இருக்கலாம். ஆனால் “வெளியே போடா …” என்று சொன்னது உங்களை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த மட்டக்களப்பையும், அதன் மக்களையும்.
வவுனியா கூட்டத்தில் கிழக்கை -மட்டக்களப்பை அவமானப்படுத்தி அப்படி என்னதான் நடந்தது?
அந்த அவமானப்படுத்தலுக்கு உட்பட்ட மட்டக்களப்பு அரசியல்வாதியார்?
அதைச் செய்தவர்கள் யார்? தமிழரசுக்கட்சியில் அவர்கள் எந்த அணியைச்சேர்ந்தவர்கள்?
அந்த கூட்டத்தில் இருந்த தலைவர்கள், மூத்தவர்கள், முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
இன்னும் ஒரே வீட்டில் குடியிருக்கின்ற கிழக்கின் -மட்டக்களப்பின் சக அரசியல் வாதிகள் இதன்போது எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
இத்தனைக்கும் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பின்னால் சரி/பிழை, நீதி/நியாயம், உண்மை/பொய் என்பனவற்றை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு உங்களுக்கு பின்னால் நின்றவர்தானே இவர். அதற்காக நீங்கள் செய்திருக்கின்ற கைமாறு “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போல் “இரட்டை” அவமதிப்பு.
தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் 11 ஆகஸ்ட் 2024 அன்று வவுனியாவில் நடந்தது. இதில் முக்கிய விடயமாக ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதாக இருந்த போதும் முடிவு எடுக்கப்படவில்லை. தமிழரசுக்கட்சியின் வழக்கு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதில் மட்டக்களப்பு அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டதும் ஒன்று.
கூட்டத்தில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனைப் பார்த்து இருவர் “வெளியே போடா…..” என்று ஆவேசமாக கத்தியிருக்கின்றனர்.
இந்த வார்த்தை வன்முறையில் ஈடுபட்டவர்கள் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன் பீற்றர் (முல்லைத்தீவு), கேசவன் சயந்தன் (சாவகச்சேரி) என்று ஒரு ஊடகத்தில் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டிருப்பதை அறிய முடிந்தது.
இவர்கள் இருவரும் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள். திருகோணமலை பொதுச்சபைக்கூட்டத்தில் யாழ்ப்பாண எம்.பி. ம.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்படவேண்டும் என்று விரும்பியவர்கள். பிரச்சினையான விடயங்களில் சுமந்திரன் நேரடியாக தலையீடாது இவர்களைப் போன்ற கையாட்களை வைத்து காரியத்தை கச்சிதமாக முடித்து விடுகிறார் என்று கூறப்படுகிறது. கோடேறிய கதையும் இப்படித்தான். இத்தனைக்கும் முல்லைத்தீவு பீற்றர் தமிழரசுக்கட்சியின் யாப்புக்கு முரணாக சுமந்திரனால் மத்திய செயற்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டவர்களுள் ஒருவராம்.
இந்தக் கூட்டம் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் நடைபெற்றது. மாவை சேனாதிராஜா 1977 தேர்தலில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட விரும்பியவர். 2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்லியடைந்து, தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் எம்.பி.யை தனக்கு தரவேண்டும் என்று வாதாடியவர். கலையரசனுக்கு அது கிடைக்கக்கூடாது என்று வாதாடியவர்கள் அப்போது கிழக்கை அவமானப்படுத்தும் வகையில் பேசியதால்தான் இரா.சமபந்தர் அன்று அந்த கூட்டத்தில் “இதை பிரதேசவாத பிரச்சினை” ஆக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்க வேண்டி இருந்தது.
“வெளியே போடா….” என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சொன்ன போதும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ம.சுமந்திரன் போன்ற தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், மூத்தவர்கள் மௌனம் சாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் சீ.யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், (பா. அரியநேத்திரன் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ) ஆகியோர் சி.சிறிதரனை தலைவராக தெரிவு செய்வதற்கு ஆதரவளித்த தாகும்.
ஆனால் சுமந்திரனை விடவும் சிறிதரன் தனது மட்டக்களப்பு ஆதரவாளர்கள் அவமானப்படுத்தப்பட்டபோது வாய்திறக்காதது சுமந்திரன் அணியினருக்கு மேலும் வாய்ப்பாக இருந்துள்ளது. சும்மா சொல்லக்கூடாது எந்த எதிர்ப்பும் இல்லாமல் சுமந்திரன் அணி சிறிநேசன் கூட்டத்தை வெளுத்து வாங்கியிருக்கிறது.
வடக்கு சகாக்கள் தான் இப்படி என்றால் கிழக்கு சகாக்கள் என்ன செய்தார்கள்.? எதுவும் இல்லை. குகதாசன், சாணக்கியன், கலையரசன் எல்லோரும் சுமந்திரனை தாஜா செய்வதற்காக வாயே திறக்கவில்லையாம். ஒன்று செய்திருக்கிறார்கள். வாயைப் பொத்திக்கொண்டு கொடுப்புக்குள் சிரித்திருக்கிறார்கள். இவர்கள் சுமந்திரனோடு இணைந்து தமிழ்பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள். மறு பக்கத்தில் சிறிநேசன், யோகேஸ்வரன் பொதுவேட்பாளரை ஆதரிப்பவர்கள்.
குறிப்பாக பொதுவேட்பாளர் கருத்தை ஆதரித்து “புதிய சுதந்திரன்” பத்திரிகையில் சிறிநேசன் தொடர்ச்சியாக சில கட்டுரைகளை எழுதியதும். நேர்காணல்களை வழங்கியதும், அரியநேந்திரனை ஆதரித்ததும் இந்த அவமானப்படுத்தலின் உடனடிக்காரணங்களாக அமைகின்றன. இதை தமிழரசுக்கட்சியின் “கருத்துச்சுதந்திரம்” என்று நாளை சுமந்திரன் அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தனையும் நடந்தும், இது பற்றிய செய்திகள் ஊடகங்களில் கசிந்தும், இதுவரை அதிகார பூர்வமாக தமிழரசுக்கட்சி இது விடயமாக “வருத்தம்” தெரிவித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. யாழ்.மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மட்டும் சம்பந்தப்பட்ட இருவரையும் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரியுள்ளார். சுமந்திரனின் இறக்கைக்குள் இருக்கும் இவர்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. இதுவும் ஒரு வகையில் “பூசி மெழுகல்” தான். பத்தோடு பதினொன்றாக கடந்து போகும்.
ஆக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சிகளாக பிரிந்து….,
தமிழரசு அணிகளாகப்பிரிந்து……,
வடக்கு -கிழக்காக பிரிகிறது……….
வெளிச்சத்தில் ஒன்று மட்டும் தெரிகிறது .
அவமானப்பட்டு, அவமானப்பட்டு இன்னும் எத்தனை காலத்திற்கு.
இன்னும் காலம் கடந்து விடவில்லை.
திருந்த இடமுண்டு.