இலங்கைப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு திரும்பத்திரும்பச் செல்வது ஏன்?

இலங்கைப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு திரும்பத்திரும்பச் செல்வது ஏன்?

— சீவகன் பூபாலரட்ணம் —

வெளிநாடுகளுக்குச் சென்று குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் சென்று வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்கள் விவகாரம் இலங்கையில் ஒரு முக்கிய விடயமாகவே எல்லோராலும் பார்க்கப்படுகின்றது. கணிசமான வெளிநாட்டு வருவாயை இலங்கைக்குப் பெற்றுத்தரும் இந்த வீட்டுப் பணிப் பெண்கள் இலங்கையின் பொருளாதாரம், சமூகம் போன்றவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கணிசமானது. 

இதனால், இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் களையப்பட வேண்டும், அவர்கள் வெளிநாடு செல்வதால், அவர்களுடைய குடும்பங்கள், குறிப்பாக அவர்களது குழந்தைகள் படும் சிரமங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பாலும் வலியுறுத்தப்படுகின்றது. ஆனாலும், அந்த விடயங்களில் பெரும் முன்னேற்றங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. 

அதுமாத்திரமன்றி, பெண்களுக்குப் பதிலாக ஆண்களை அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்ப எடுத்த முயற்சிகளும் அவ்வளவு சோபிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. 

வட்ட வடிவ குடிபெயர்வு: 

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் பணிப்பெண்கள் பெரும்பாலும் “வட்ட வடிவ குடிபெயர்வுக்கே” உள்ளாவதாக கூறப்படுகின்றது. அதாவது, ஒருவர் தனது தாய் நாட்டில் இருந்து ஒரு தடவை இன்னுமொரு நாட்டுக்கு வேலைக்குச் சென்று திரும்பி வந்து மீண்டும் அதே நாட்டுக்கு வேலை தேடிச்செல்வதை இப்படி “வட்ட வடிவ குடிபெயர்வு” என்கிறனர். அதிலும் இலங்கைப் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கே இவ்வாறு சென்று திரும்புகின்றனர். 

அவர்களின் இந்தப் போக்கு குறித்து ஒரு நீண்ட ஆழமான ஆய்வு தேவைப்பட்டதாக கூறுகிறார் மத்திய கிழக்கில் நியமிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த இராஜதந்திரியான மதுக்க சஞ்சய விக்கிரமாராச்சி. International Journal of Scientific and Research Publications  இல் இது குறித்து இவர் ஒரு ஆய்வு அறிக்கையை பிரசுரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த கால்வாசி வெளிநாட்டுப் பணிப்பெண்கள் இந்த மாதிரியான வட்ட வடிவ குடிபெயர்வாளர்களே என்று அதில் அவர் கூறியுள்ளார். தமது 20 வயதுகளில் வெளிநாட்டு வேலைக்காக முதலில் செல்லும் இவர்கள் தமது 40 அல்லது 50 வயதுவரை திரும்பத்திரும்ப வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்று திரும்புகின்றனர். தாம் பெரியவரானது முதல் சுமார் இரு தசாப்தங்களை இவ்வாறு அவர்கள் வளைகுடா நாடுகளில் பணிப்பெண்ணாக கழிக்கின்றனர். 

படிநிலை குடிபெயர்வு: 

இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்கள் பெரும்பாலும் இந்த “படிநிலை குடிபெயர்வுக்கு” உள்ளாவதில்லை. அதாவது, இலங்கையில் இருந்து ஒரு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய், அங்கிருந்து திரும்பி இலங்கை வராமல், அப்படியே இன்னுமொரு வெளிநாட்டுக்கு வேலைக்கு போதல், படிநிலை குடிபெயர்வு எனப்படும். அப்படி பெரும்பாலான இலங்கைப் பணிப்பெண்கள் செய்வது கிடையாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி வந்து, பின்னரே மீண்டும் இன்னுமொரு நாட்டுக்கு வேலைக்குச் செல்கின்றனர். 

பெரும்பாலான இலங்கைப் பணிப்பெண்கள் முதல் தடவை பெரும்பாலும் குவைத் நாட்டுக்கே வேலைக்குப் போகிறார்கள். திரும்ப மீண்டும் செல்வதற்கும் அந்த நாடுதான் அவர்களது முதல் தெரிவாக இருக்கிறது. சவுதி அரேபியாதான் இரண்டாவது தெரிவு. அண்மைக்கால போக்குகளின்படி ஐக்கிய அரபு இராச்சியந்தான் வெளிநாட்டு வேலை தேடிச்செல்லும் பணிப்பெண்களின் மையமாக திகழ்கிறது என்றும் விக்கிரமாராச்சி கூறுகிறார். “சுற்றுலா விசா”வை “பணிக்கான விசா”வாக மாற்றிக்கொள்வதில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் நெகிழ்வுத்தன்மைதான் அதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.  

வேலைவாய்ப்புக்கான குறைந்த வயதெல்லையை வலியுறுத்தல் மற்றும் குடும்பப் பின்னணி குறித்த அறிக்கை கோரல் போன்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கை காரணமாக பல வீட்டுப் பணிப்பெண்கள், வளைகுடா நாடுகளுக்கு உரிய “வேலை விசா”வைப் பெற்று செல்ல தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருக்கும் சில நெகிழ்வுத்தன்மைகள், இலங்கை அரசாங்கம் விதிக்கும் சில கட்டுப்பாடுகளை, குறுக்கு வழியில் தவிர்த்துவர பணிப்பெண்களுக்கு உதவுகின்றது என்கிறார் ஆய்வாளர் விக்கிரமாராச்சி. அதாவது சுற்றுலா விசாவில் அங்கு சென்று அதனை வேலைக்கான விசாவாக இவர்கள் மாற்றிக்கொள்கிறார்கள். 

2019 கணிப்பீடு 

சவுதி மற்றும் குவைத்தில் 100 பெண்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வின்படி, அவர்கள் இரண்டாவது தடவையாகவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகவே வேலைக்குப் போக முயல்வதாக தெரிகிறது. வெளிநாட்டு வேலைக்கு போகும் 28-45 வயது வரையிலான பெண்களிடமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் எல்லோரும் திருமணமாகி, குறைந்தது பத்து வயதிலாவது குழந்தைகளை கொண்டிருந்தார்கள். 

அவர்களில் எல்லோருமே பொருளாதார மேன்பாட்டுக்காகவே அங்கு சென்றிருப்பதும் தெரியவந்தது. அதாவது இலங்கையில் தாம் வேலை செய்து பெறக்கூடிய வருமானத்தைவிட மூன்று மடங்கு வருமானம் அவர்களுக்கு வளைகுடா நாடுகளில் கிடைக்கிறது. 

அழுத்தக் காரணிகள் 

பெரும் வேலையில்லா திண்டாட்டம், கணவருக்கு வேலை இல்லாமை, பொருளாதார ஈட்டலுக்கான வாய்ப்புகள் இலங்கையில் இல்லாமை ஆகியவையே இவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல தூண்டும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஏனைய காரணிகளான இயற்கை அழிவுகள் மற்றும் சமூக அமைதியீனம் போன்றவற்றை பெரும்பாலும் இந்தப் பெண்கள் குறிப்பிடவில்லை.  

ஆச்சரியம் என்னவென்றால், இவர்களில் 3 வீதத்தினர் மாத்திரமே, தாம் மீண்டும் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு உள்நாட்டு மோதல்கள்(பயங்கரவாதம் மற்றும் போர்) காரணம் என்று சொல்லியுள்ளனர். இன்னுமொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இவர்களில் 84வீதமான பெண்கள், தாம் இரண்டாவது தடவையாக அல்லது அதற்கு அதிகமாக வெளிநாடு செல்வதற்கான முடிவை தாமே எடுத்ததாகவும், ஏனையவர்கள் அல்லது குடும்பத்தினர் அதனை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இப்படியான முக்கிய விடயத்தில் ஒரு பெண் தானே முடிவெடுப்பது, இலங்கையின் கீழடுக்கில் உள்ள கிராமிய மற்றும் நகர பெண்கள் மத்தியில் தன்னாதிக்கம் வளர்ந்து வருவதை குறிப்பதாக கொள்ளலாம். 

முன்கூட்டிய கொடுப்பனவு: 

வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதற்கு முன்னதாக பணிப்பெண்களுக்கு கொடுக்கப்படும் முன்கூட்டிய கொடுப்பனவுகள், இந்தப் பெண்கள் குடிபெயர்ந்து வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கின்றன என்றும் மதுக்க சஞ்சய விக்கிரமாராச்சி கூறுகிறார். முன்னனுபவம் உள்ள பணிப்பெண்களுக்கு அதிகமான முன்கொடுப்பனவுகளையும், அதிக மாதாந்த சம்பளத்தையும் வேலைவாய்ப்புத் துணை முகவர்கள் கொடுக்கிறார்கள். 

கடனில்லாமல் வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லலாம் என்ற நிலைமையும் அவர்கள் வெளிநாட்டு வேலை தேடிச் செல்வதை ஊக்குவிக்கின்றது. பெரும்பாலும், பயணத்துக்கான பெரும்பாலான செலவுகளை இவர்களுக்கு அனுசரணை வழங்கும் ஆட்களே எடுக்கிறார்களாம். ஆனாலும் ஏஜண்டுகளால் ஏமாற்றப்படுதல் போன்றனவும் தொடரத்தான் செய்கின்றன. 

இந்தப் பெண்கள், தமது விருப்பம், வேலைவாய்ப்பினால் ஏற்படக்கூடிய பாதகங்கள் மற்றும் தமது குணாதிசியம், கடந்த தடவை வெளிநாடு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் ஆகியவற்றை கொண்டே முடிவுகளை எடுக்கிறார்கள். ̀முன்னைய வேலைகளில் கிடைத்த நல்ல அனுபவங்கள் அவர்களை மீண்டும் செல்ல ஊக்கப்படுத்துகின்றன. 25 வீதமான பெண்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு, அவர்களது முன்னைய வேலையின் நல்ல அனுபவங்களே தூண்டுகின்றன. 

குடும்பங்களை விட்டுச் செல்லல்: 

2008இல் இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப்பெண்களில் 69 வீதமானவர்களின் பிள்ளைகளை யாராவது சொந்தக்காரர்கள்தான் ஊரில் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படி பராமரிப்பவர்களில் அவர்களது தாய் அல்லது மூத்த மகள் ஆகியோர் அடங்குகின்றனர். பல பெண்களிடம் ‘ஏன் உங்கள் பிள்ளைகளை சொந்தக்காரர்களிடம் விட்டுப் போக முடியவில்லை?’ என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் சொல்லும் பதில், ‘சொந்தக்காரர்களை நம்பமுடியவில்லை’ என்பதாகும். ‘கணவர் பிள்ளைகளை பார்த்துக்கொள்வார்’ என்று பொதுவாக எந்தப் பணிப்பெண்ணும் கூறவில்லையாம். 

தாம் “ரியூசன் கிளாசுக்கும், புத்தகங்களுக்கும்” பணம் அனுப்புவதால், தமது குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்படுவதாக, நாடு திரும்பிய பல பெண்கள் கூறியுள்ளனர். 

சிதறிய குடும்பங்கள்: 

தமது முதலாவது விடுமுறையில் நாடு வந்த பெண்களில் 62 வீதத்தினர், கணவர் குடும்பத்தை கைவிட்டதாலும், வேறு பெண்ணை திருமணம் செய்ததாலும் குடும்பம் சிதறிப் போனதை கண்டதாக ஆய்வில் கூறியுள்ளனர். அப்படியான பெண்களுக்கு குடும்பத்தை காப்பாற்ற,  மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதை தவிர வேறு வழியில்லாமல் போய்விடுகிறது. துஸ்பிரயோகம் அதிகமாக நடப்பதாகவும், உறவு குலைந்து போவதாகவும் பல சோகக்கதைகள் நடந்துள்ளன. அப்படியானவர்களுக்கு தமது பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி இந்த “வட்டவடிவ குடிபெயர்வு”தான் என்கிறார் விக்கிரமாராச்சி. 

பல பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் திரும்பி வரும்போது, அவர் அனுப்பிய பணம் அனைத்தையும் அவர்களது குடும்பத்தினர் செலவழித்துவிடுகிறார்கள். இவர்கள் உழைத்து அனுப்பிய பணத்தில் சேமிப்பு அல்லது முதலீடு என்று எதுவும் இருப்பதில்லை. இதன் காரணமாக இந்த பெண்கள் மீண்டும் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக செல்ல நேர்கிறது. 

ஆனால், எல்லா வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் விடயத்திலும் இப்படித்தான் நடக்கிறது என்று இன்றைய நாட்களில்  கூறிவிட முடியாது. இவர்களில் பலர் செல்லிடத்தொலைபேசிகள் மூலம் நாட்டில் உள்ள சொந்தங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள். அண்மையில் தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துள்ளமையால், குடும்பக் குழப்பம், இடையூறு இன்றி பல பெண்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வது சாத்தியமாகிறது. அதனால், இந்த “வட்ட வடிவ குடிபெயர்வு” அதாவது திரும்பத்திரும்ப வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லல் அதிகரிக்கிறது. நவீன தொலைத்தொடர்பு வசதிகள் காரணமாக வெளிநாட்டில் இருப்பவர்களுடன் தொடர்பைப் பேணி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை இந்தப் பெண்கள் பெறுகிறார்கள். 

வெளிநாட்டு வேலைக்கு பழகிப்போதல் 

இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகும்போதுதான் தம்மால் தமக்கென கொஞ்சம் பணத்தை சேமிக்க முடிவதாக 90  வீதமான பணிப்பெண்கள் கூறுகிறார்கள். இரண்டாவது தடவை வெளிநாடு சென்றவர்களில் 30 வீதத்தினரும், மூன்றாவது தடவை சென்றவர்களில் 70 வீதத்தினரும் மீண்டும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இது, வெளிநாட்டு வேலை தேடிச் செல்வது ஒரு பழக்கமாக உருவாகி வருவதை அல்லது ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கலாச்சாரம் உருவாகிவருவதை காண்பிக்கிறது என்கிறார் விக்கிரமாராச்சி.  

அதேவேளை, திரும்பத்திரும்ப வெளிநாட்டுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்கள், ஏனைய இலங்கைப் பெண்களைப் போல ஆடைத்தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்ல விரும்புவதில்லையாம்.  

ஆண்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் முயற்சி: 

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் நாடுகளை வெறுமனே வளைகுடா நாடுகளுக்குள் மட்டுப்படுத்தாமல், ஏனைய நாடுகளையும் அதனுள் அடக்கும் கொள்கை ஒன்றை இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கிறது. தென்கொரியா, ஜப்பான் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்களை வேலைக்கு அனுப்பும் முயற்சியிலும் அது ஈடுபடுகின்றது.  

பயிற்றுவிக்கப்பட்ட ஆண்களை இப்படியான நாடுகளுக்கு அனுப்பி, வளைகுடா நாடுகளில் இருந்து வீட்டுப் பணிப்பெண்கள் அனுப்பும் பணத்தைவிட அதிகமான வருமானத்தை பெற இலங்கை முயல்கிறது. ஆனால், அந்த முயற்சி பெரிய பயனைத்தரவில்லை என்கிறார் விக்கிரமாராச்சி. பயிற்றப்பட்ட தகைமை சார் ஆண் தொழிலாளர் மூலமான வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆகக்கூடிய வருமானத்தை பெறும் தொழில்சார் பணியாளர் வருமானமும் குறைவே. 

ஆகவே இலங்கை மீண்டும் தமது வெளிநாட்டு பணிப்பெண்களையே வருமானத்துக்காக நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2014இலும் 2015இலும் இலங்கை, முறையே 7.036 பில்லியன் அமெரிக்க டாலரையும், 6.98 பில்லியன் அமெரிக்க டாலரையும் வெளிநாட்டு பணிப்பெண்கள் மூலமான வருமானமாகப் பெற்றது. இது மொத்த உள்ளூர் உற்பத்தியில் 8.4 வீதம். ஆடை ஏற்றுமதி வருமானம்(5 பில்லியன் டாலர்), சுற்றுலாத்துறை(4.4 பில்லியன் டாலர்), விவசாய ஏற்றுமதி (2.7 பில்லியன்) (இதில் தேயிலை ஏற்றுமதி 1.5 பில்லியன்) ஆகியவற்றைவிட வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தரும் வருமானம் எவ்வளவோ அதிகமானதாகும். இலங்கையின் மொத்த தொழிலாளர் சக்தியில் 23 வீதத்தை வெளிநாட்டு வேலையாட்கள் பகிர்கின்றனர். 

வளைகுடா கூட்டுறவு நாடுகளிலும் மற்றும் சவுதி அரேபியாவிலும் இப்போது இலங்கை வீட்டுப் பணிப்பெண்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டுப் பணிப்பெண்கள் மற்றும் ஏனைய நாட்டுப் பணிப்பெண்களை விட, இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் ஒப்பீட்டளவில்  மலிவானவர்கள்(ஊதியத்தில்), பணிவானவர்கள் மற்றும் அன்பானவர்கள். தமது எஜமானர்களின் குழந்தைகளை தமது குழந்தை போல பார்த்துக்கொள்பவர்கள்.  

வளைகுடா நாடுகளில் இலங்கை வீட்டுப் பணிப்பெண்களின் மாதச் சம்பளம் குறைவு என்பதால், வருமானம் குறைந்த குடும்பங்கள் கூட அவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடிகிறது என்கிறார் விக்கிரமாராச்சி.