— அழகு குணசீலன் —
பண்டைய மட்டக்களப்பானது ஒரு குறிப்பிட்ட ஊரைமட்டும் குறித்த இடப்பெயரா? அல்லது மட்டமாகவும்,களப்பாகவும் இருந்த உப்பேரி ஊடறுத்த ஒட்டு மொத்த நிலப்பரப்பின் பிரதேசத்தை குறிக்கிறதா என்பது ஆய்வுசெய்யப்படவேண்டிய ஒன்று. மட்டக்களப்பு சம்மான்துறையாக மாறியவரலாறும், புளியந்தீவு -கோட்டைமுனை மட்டக்களப்பாக ஆகிய வரலாறும் ஆழ்ந்து ஆய்வு செய்யப்படவேண்டியவை.
எது எப்படியோ சம்மான்துறை கண்டி இராட்சியத்தின் கீழான ஒரு இராசதானி. அருள்செலவநாயகத்தின் சீர்பாதகுலவரலாற்றில் திருக்கோயில் செப்பேட்டு பாடல் இது :
“கண்டி மாநகர் கரையை யடைந்தால்
ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி
பூசை செய்விப்பேனென பூபதிபோற்றினான்
இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க
செவ்வாய் மடவாள் சிரசில் கைகூப்ப என்று 12 ம் பாடலிலும்,
“கணேச னருளினால் கப்பலு மோடி
சம்மாந்துறை சார்ந்திரு நகரம்
வீரர்முனையென விளம்பிய திக்கரை
கப்பல் சேர கண்டு எல்லோரும்
கப்பலை விட்டு கரையிலிறங்கி ” என்று 13 வது செப்பேட்டு பாடலையும் சீர்பாதகுல வரலாறு கூறுகிறது.
மட்டக்களப்பு தமிழகத்தில் பண்டிதர் வி.சி.கந்தையா குறிப்பிட்டுள்ள மற்றொரு குறிப்பு சம்மான் துறை கண்டி இராட்சிய இராசதானி தலைநகர் என்பதை உறுதி செய்வதாக உள்ளது. மட்டக்களப்பில் இருந்து கண்டிக்குச் செல்வதற்கான பழைய வழி ஒன்றிருந்தை பண்டிதர் தனது நூலில் பதிவிட்டுள்ளார்.
“காரைதீவில் இருந்து சம்மாந்துறை, வீரமுனைகளுக்கூடாகச் சென்றது .மண்டூரிலிருந்தும், பழுகாமத்திலிருந்தும் வந்த ‘கண்டி அதர்’ என்ற காட்டுவழி இரண்டும் இன்றைய ஊவா மாகாண எல்லையைச்சார்ந்துள்ள ‘கண்டியக்கட்டு’ என்னும் இடத்தில் வீரமுனை வழியோடு சந்தித்தது. இவை இரண்டும் கண்டடிநாடு மட்டக்களப்போடு கொண்டிருந்த தொடர்பை உறுதிப்படுத்துகின்றன. பழுகாமத்தை இன்றும் ‘சிங்காரக்கண்டி’ என்று அழைக்கின்ற வழக்கம் உண்டு.
பண்டிதரின் மட்டக்களப்பு தமிழகம் பேசுகின்ற இன்னொரு விடயம் வீரமுனை கண்ணகி அம்மன் ஆலயமும் வழிபாடும். கண்டியில் இருந்து வீரமுனை வழியாக கண்ணகி வழிபாடு கிழக்கிற்கு வந்தது என்பதாகும். மட்டக்களப்பு தெற்கில் உள்ள தம்பிலுவில், வீரமுனை கிராமங்களில் இருந்து மட்டக்களப்பின் வடக்கு நோக்கி பரவியதாக மட்டக்களப்பு தமிழகம் கூறுகிறது.
‘ பட்டிநகர் தம்பிலுவில்,காரைநகர், வீரமுனை
பவிசுபெறு கல்முனை,கல் லாறு, மகிழூர், எருவில்
செட்டி பாளையம், புதுக்குடியிருப்பு, செல்வ
முதலைக் குடா, கொக்கட்டிச் சோலை,
அட்ட திக்கும் புகழு வந்தாறு மூலை,
அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்
வட்டிவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்கவினை மாறியோடிடும்”.
மட்டக்களப்பு -சம்மான் துறைப்பகுதியை ஆட்சி செய்தவன் கூத்திகன் என்றும் அவனது மகனை சேனன் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.
ஆய்வாளர் வெல்லவூர்க்கோபால் மட்டக்களப்பு வரலாறு என்ற நூலில் உலகநாச்சிகால மண்முனைக் குடியேற்றம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்றும், கோவில்குளம், தாழங்குடா, புதுக்குடியிருப்பு என்பனவே ஆரம்ப குடியேற்றங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
சீர்பாத குடியேற்றம் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும், கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி க்கும் இடைப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அவரின் ஆய்வாக உள்ளது.
சீர்பாததேவி, உலகநாச்சி இருவரினதும் வழிவந்ததாக இரு சமூகப்பிரிவினரும், சமூக உட்கட்டமைப்பாக ‘குடி’ வழக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த குடிவழக்கானது முஸ்லீம்கள் மத்தியிலும் முற்குக பெண்களுக்கும், பட்டாணியர், அராபியர்களின் திருமண உறவின் ஊடாக உள்வாங்கப்பட்டுள்ளது.
தாய்வழி சமூக அமைப்பு சேரநாட்டிற்குரியது என்று கூறுகிறார் கலாநிதி.இ.பாலசுந்தரம். தமிழர் திருமண மரபுகள் மட்டக்களப்பு மாநிலம் என்ற தனது ஆய்வு நூலில் இது பற்றி அவர் பேசுகிறார். குடிவழக்கில் மட்டக்களப்பு கோவில் நிர்வாகங்கள் பங்கிடப்பட்டதை பேசும் அவர் இந்த வழக்கு முஸ்லீம்கள் மத்தியிலும் இருக்கிறது என்கிறார். மட்டக்களப்பு பள்ளிவாசல் நிர்வாகத்திலும் குடிமுறையில் இருந்து தலைவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். சைவக்கோயில்களில் குடிசார் தலைவர்கள் ‘வண்ணக்கர்’ என்று அழைக்கப்படுவது போல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் இவர்கள் ‘மரைக்காயர் ‘ என்று அழைக்கப்படுகின்றனர்.
“வேரோடு விளாத்தி காய்த்தாலும் தாய்வழி இன்றி தகப்பன் வழி இல்லை”
வேரோடு விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது”
என்றும் , மட்டக்களப்பு சமூகக்கட்டமைப்பில் தாய்வழிச்சமூக முக்கியத்துவம் தமிழ், முஸ்லீம் சமூகங்களிடையே வேரூன்றி உள்ளது. அருகருகே வாழ்கின்ற இருசமூகங்கள் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ,ஒரு புள்ளியில் சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் இவை.
இன்னும் வரும்…..