சுவிஸ் TV யில் துவாரகா……! (மௌன உடைவுகள் 94) 

சுவிஸ் TV யில் துவாரகா……! (மௌன உடைவுகள் 94) 

  — அழகு குணசீலன் —

சுவிஸ் தொலைக்காட்சியில் ஒன்றைவிட்டு ஒரு புதன்கிழமைகளில் ‘RUNDSCHAU'( மீள்பார்வை) என்று ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படும். தேசிய, பிராந்திய, சர்வதேசிய விவகாரங்களை அலசும் ஒரு சமூக, பொருளாதார, அரசியல் பார்வை. இதில் 19.06.2024 அன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் 14 நிமிடங்கள் துவாரகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் நிதிப்பொறுப்பாளரும், தற்போதைய உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் (WTCC) தலைவருமான அப்துல்லா, விடுதலைப்புலிகளின் முன்னாள் சுவிஸ்பொறுப்பாளர்  குலசேகரசிங்கம் செல்லையா (குலம்), விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி அந்தோனிப்பிள்ளை, தலைவர் குடும்பம் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறி(?) நிதி சேகரித்து துவாரகாவுக்கு நிதி வழங்கிய ஜகதீசன் தேவகூல் என இன்னும் சிலரையும் ,குரல்களையும் பார்க்கவும் கேட்கக்கூடியதாக இருந்தது.

நிகழ்ச்சியின் உள்ளடக்கம் இதுதான். பிரபாகரன் மனைவி, மகள் ஆகியோர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற விடயமும் அதையொட்டி இடம்பெறுகின்ற நிதிசேகரிப்பும் தொலைக்காட்சிக்கு எட்டியிருக்கிறது. இதனால்தான் விவகாரத்தை அறிய மோப்பம் பிடித்திருக்கிறது தொலைக்காட்சி.

2023 நவம்பரில் மாவீரர் நாளையொட்டி தன்னை பிரபாகரனின் மகள் என்று அறிமுகம் செய்த பெண்ஒருவர் யூடியூப்  விடியோ மூலம் மாவீரர் உரை நிகழ்த்தியது உலகத்தமிழர்கள் அறியாத ஒன்றல்ல. அந்த உரையின் உள்ளடக்கமும் தெரியாததல்ல. சுருக்கமாகச் சொன்னால்  போராட்டத்தை தொடர,  தாயகமக்களுக்கு உதவ நான்  தலைவர்   -தந்தையின் ஆசீர்வாதத்துடன் ‘அவதாரம் ‘ எடுத்துள்ளேன் என்பதுதான் அது. அந்த வீடியோ சுவிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் தோன்றினார் துவாரகா.

துவாரகாவை தேடிச்சென்ற தொலைக்காட்சி அவர் யார்? என்பதை அடையாளம் கண்டு கொண்டது. அவரின் உண்மையான பெயரையோ, துவாரகா என்று அவர் பயன்படுத்திய பெயரையோ பயன்படுத்தாமல் தொலைக்காட்சி சூட்டிய பெயர் அரிதி. அவர்  அந்த  யூடியூப்  விடியோவில் இருப்பவர் ,தான் இல்லை என்று மறுக்கிறார். தான் எந்த நிதிசேகரிப்பிலும் ஈடுபடவில்லை என்றும், நிதிசேகரிப்பு தொலைபேசி உரையாடலில் உள்ள குரல் தனதல்ல என்றும் கூறுகிறார். ஆனால் AI தொழில்நுட்பத்தின் மூலமான அடையாளம் காணலில் 95.3 வீதம் அரிதியின் படத்துடன் அது ஒத்துப் போகிறது என்கிறது தொலைக்காட்சி.

நினைவேந்தல் நினைவு ஒன்றிற்கு சென்று சுவிஸ் தொலைக்காட்சியினர் அங்கு வந்திருந்த மூன்று விடுதலைப்புலிகளின் பக்தர்களை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.

பதில் ஒன்று: ஆம் ! நிட்சயமாக,100வீதம்.

பதில் இரண்டு:  ஆம்! அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். எங்களால் நிருபிக்க முடியும்.

பதில் மூன்று: அவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இந்த நிகழ்வில் சுமார் 200பேர் கலந்து கொண்டார்கள் என்பது தொலைக்காட்சி மதிப்பீடு. 

  யூடியூப்பில் வீடியோவை பதிவேற்றம் செய்தவர் யார் என்று தேடி அப்துல்லாவின் விலாசத்தை அறிகிறார்கள் தொலைக்காட்சியினர். விலாசம் அறிந்து அவரைச்சந்தித்து கேட்கிறார்கள். தான் நிதிசேகரிப்பில் ஈடுபடவில்லை என்று மறுக்கிறார் அவர். 

ஆனால் இலங்கையில் போராட்டத்தை தொடரவேண்டிய தேவை தமிழர்களுக்கு இருக்கிறது. மாவீரர் உரையாற்றும் துவாரகா பிரபாகரனின் உண்மையான மகள் என்றும், தனக்கு அவருடன் தொடர்புள்ளது என்றும் உறுதியாக கூறுகிறார் அப்துல்லா.

“நாங்கள் புதியதலைமை  ஊடாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மகள் இருப்பது தமிழர்களுக்கு ஒரு பலம். நாங்கள் முன்னோக்கி செயற்படவேண்டும். அரசியல்ரீதியாக நாடுகளின் அழுத்தத்தை கொடுத்து நாட்டை பிரிக்க வேண்டும். இது ஒரு STARTING POINT என்று தொலைக்காட்சி கமராவுக்கே முன் அப்துல்லா கூறுகிறார்.

ஆனால், அப்துல்லா நிதிகோருகின்ற தொலைபேசி உரையாடலை தொலைக்காட்சியிடம் மறுக்கிறார். அது தனது குரல் அல்ல, தான் அல்ல என்று கூறுகிறார். ஆனால் அப்துல்லாவின் குரலே அது என்றும் பல தமிழர்களுக்கு அவரின் குரல் நன்கு தெரியும் என்றும், பல தமிழர்கள் அது அப்துல்லாவின் குரல் என்று சொல்கிறார்கள் என்றும் தொலைக்காட்சி சொன்னது.

“நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் படைக்கட்டுமானம் தேவை. அதனூடாக சர்வதேச நாடுகளின் அழுத்தத்துடன் நாட்டை பிரிக்க முடியும்” என்று அந்த தொலைபேசி ஒலிப்பதிவு குரல் பேசுகிறது. அதையே மறுக்கிறார் அப்துல்லா.

பணம் கொடுத்த இருவரை சந்திக்கிறார்கள் தொலைக்காட்சி ஊழியர்கள். ஒருவர் ஜகதீசன் தேவகூல். 3,80,000 சுவிஸ் பிராங்குகளை தான் வழங்கியதாகக்கூறுகிறார் அவர். ஆள் மாறாட்டம்(துவாரகா) செய்து பணம் சேகரித்ததாக சந்தேகிக்கப்படும் அந்த நபர் தலைவர்,அவரது மனைவி,மகள், சமையல்காரர், மெய்க்காப்பாளர் மேலும் 16 பேர் உயிருடன் இருப்பதாக தன்னிடம் பணம்கேட்டபோது சொன்னதாக கூறுகிறார். கட்டுக்கட்டாக பணம் வழங்குவதற்கு தயார் படுத்தப்பட்ட போட்டோவை தொலைக்காட்சி காட்டியது.

இவர் கடன்சுமை காரணமாக இரண்டு வேலைகளுக்கு போகவேண்டிய நிலையில் உள்ளார். உணவகம் ஒன்றில் வேலை செய்யும் அவர், அதிகாலை வேளையில் பத்திரிகைகள் போடும் வேலையும் செய்கிறார். தனக்கு 60,000 கடன் இருந்ததாகவும் இரண்டு வேலைசெய்வதால் ஒருபகுதியை அடைத்து விட்டேன் இன்னும் 40,000 சுவிஸ் பிராங்குகள் கடன் அவருக்கு இருக்கிறதாம். தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத ஒருவர் தான் ஒரு வங்கியில் இருந்து எடுத்து 58,000 சுவிஸ் பிராங்குகளை வழங்கியதாக கூறுகிறார்.

புலிகளின் சுவிஸ் பொறுப்பாளரையும் தொலைக்காட்சி விட்டு வைக்கவில்லை. “இது தேவை இல்லாத  ஒரு பிரச்சினை. அப்துல்லாவின் நடவடிக்கைகளில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறும் குலம், இந்த நடவடிக்கைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமானால் அதற்கு எதிராக சுவிஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

முன்னாள் போராளி அந்தோனிப்பிள்ளைக்கு முன்னால் பிரபாகரனின் படம் ஒன்று இருக்கிறது. அதைக் குறிப்பிட்டு உங்களுக்கு இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார்கள்.  “அவர் எனக்கு கடவுள். ஒவ்வொருநாளும் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்குகிறேன்” என்கிறார் அந்தோனிப்பிள்ளை.

“இலங்கையில் பத்து படையினரையோ, சிங்களவர்களையோ கொன்றுவிட்டால் அதனூடாக போராட்டம் தொடங்கிவிட்டது என்று காட்டி இங்கு அதிகபணம் சேகரிக்கலாம். அதற்காகத்தான் இந்த முயற்சிகள்” என்று இவற்றோடு தனக்கு உடன்பாடின்மையை வெளிப்படுத்துகிறார் அந்த முன்னாள் போராளி.

“2009 இல் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது. புலிகள் சொந்த நாடோன்றுக்காக போராடி தோற்றுப்போனார்கள். 2009 வரை 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சுவிஸில் இருந்து நேரடியாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. கட்டாய நிதி சேகரிப்பு தொடர்பான வழக்கில் சுவிஸ் நீதி மன்றம் விடுதலைப்புலிகள் ஒரு கிரிமினல் அமைப்பு அல்ல என்று தீர்பளித்து, சந்தேக நபர்கள் 13 பேரையும் விடுதலை செய்திருந்தது. இது விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், மற்றும் பல நாடுகளுக்கும் முரணானது.  அப்துல்லாவுக்கு மட்டும் இரு வருடங்கள் நன்நடத்தைப்பிணை வழங்கப்பட்டது. அது முடிந்தவுடன் WTCC யை உடனடியாக பதிவு செய்து ஆரம்பித்து விட்டார்.”   இது மீள் பார்வை நிகழ்ச்சித்தொகுப்பாளரின் கருத்து.