சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை : பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்து ஆண்டுகள் பகையும். (பகுதி:1)

சம்மாந்(ன்)துறை -வீர(ர்)முனை : பல நூற்றாண்டுகள் உறவும், சில பத்து ஆண்டுகள் பகையும். (பகுதி:1)

— அழகு குணசீலன் —

” வடக்கே வெருகல் வளம் செய்யத் தெற்கே 

  குடைபோல் வளைந்து குமுக்கன் அணிசெய்யும் இடைநடுவே 

    நீள்வாவி தாலாட்டும் நிலமடந்தை மட்டுநகர் 

   ஆழிக்கரத்தில் அணைந்தே கிடக்கின்றாள்”

 மட்டக்களப்பு தமிழகம்  நீளவாக்கில் வெருகல்

 ஆற்றுக்கும், குமுக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்டதும், அகலவாக்கில் வங்காள விரிகுடாவையும், வெல்லச பிரதேசத்தையும் கொண்ட பெருநிலப்பரப்பு. 

நில, நீர், வனவளங்களையும், கலை, பண்பாட்டு பாரம்பரியங்களையும், புராதன குடியேற்றங்களையும், ஆதிகால கிராமங்களையும் கொண்ட மண். இதில் சம்மன்துறையும், வீரர்முனையும் கண்டி இராச்சியத்தின் இராஜதானி அந்தஸ்த்தைப்பெற்றிருந்த மட்டக்களப்பு தமிழகத்தின் குடியிருப்பு முதுசங்கள். இன்னும் சொன்னால் பழங்கால மட்டக்களப்பு.

வரலாற்றை பேசுவதில் பொதுவாக கல்வெட்டுக்கள் முதன்மையானவை. ஆனால் கிழக்கின் வரலாற்றை பேசுவதில் இந்த முத்திரை செப்பேடுகளுக்கே உண்டு. திரிகோணமலைச்செப்பேடு, கொக்கட்டிச்சோலைச்செப்பேடு, துறைநீலாவணைச்செப்பேடு, வீரமுனைச்செப்பேடு, திருக்கோயிற்செப்பேடு என்பன சம்மன்துறை-வீரர்முனை வரலாற்றை தெளிவாக எடுத்துரைப்பவை.

மட்டக்களப்பு தமிழகத்தின் வரலாறு, சமூக கட்டமைப்பு, கோயில் வழிபாட்டுமுறைகள், நில மானியம், சமூகக்கட்டமைப்பில் கோயில்கள் சார்ந்து இன்னார்க்கு இன்னபணி என குறித்தொதுக்கப்பட்ட தொழில்சார் – சமூகப்பிரிவுகள், நிலபிரபுத்துவ ஆதிக்க குடிகள் – அவர்களின் கத்தறைகள், தாய்வழிமரபுகள், சமூக உருவாக்கம், அவை பன்மைத்துவ சமூகங்காளாக கொண்டிருந்த உறவுநிலை, பகைநிலை என்பன எல்லாம் பற்றி எழுதப்பட்டுள்ள சமூக -வரலாற்று ஆய்வு நூல்கள் எண்ணற்றவை அல்ல.  மாறாக ஒரு கைக்குள் அடக்கக்கூடியவை.

 சுவாமி விபுலாநந்தரின் யாழ் நூல் உள்ளிட்ட மூத்த வரலாற்று ஆய்வு அறிஞர்களான  எப்.எக்ஸ்.சி. நடராசாவின் மட்டக்களப்பு மான்மியம், வி.சி. கந்தையா பண்டிதரின் மட்டக்களப்பு தமிழகம் , கண்ணகி வழக்குரை மற்றும் மட்டக்களப்பின் சைவக் கோயில்கள், பல் துறைப்படைப்பாளி அருள். செல்வநாயகத்தின் சீர்பாதகுலவரலாறு,  கே.தனபாலசிங்கத்தின் மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி, ஞா. சிவஞான சண்முகம் எழுதிய மட்டக்களப்பு குகன் குல முற்குகர் வரலாறும் மரபுகளும், க.தங்கேஸ்வரியின் குளக்கோட்டன் வரலாறு, வெல்லவூர்க்கோபாலின் தமிழகவன்னியரும் ஈழத்துவன்னியரும்,…… போன்றவை இன்றைய பேசுபொருளாக உள்ள வீரர்முனை-சம்மன்துறை சமாச்சாரத்தோடு  அந்நியோன்னியப்படுத்தி ஆதாரப்படுத்தக்கூடியவை.

 அதேவேளை மேற்குறிப்பிட்ட படைப்புக்கள் மட்டும்தான் மட்டக்களப்பின் வரலாறு பேசுகின்றன என்பதல்ல. பல்வேறு தனியான ஆய்வுக்கட்டுரைகள், வேறு கலை பண்பாட்டு ஆய்வு நூல்களிலும் ஆங்காங்கே மட்டக்களப்பின் சமூக வரலாறு  விடுபடவில்லை என்பதையும் இங்கு வலியுறுத்த வேண்டியுள்ளது.

இந்த நூல்கள் பலவற்றிற்கும் இடையே நாம் காணக்கூடிய ஒரு இணைப்பு -பிணைப்பு ஒரு கோர்வை போன்றது. ஒன்றை ஒன்று ஆதாரமாகக் கொண்டு பேசுகின்ற போக்கே அந்தக் கோர்வை. இந்தத் தொடர்பானது மட்டக்களப்பு வரலாறு குறித்து அதிகமாக ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பதையும், இதனால் ஒன்றைச்சுற்றி ஒன்று சுழல வேண்டியதாயிற்று என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. மறு வளத்தில் இதனால்தான் மேற்குறிப்பிட்ட பல்வேறு நூல்களிலும் பொதுவாக ஒரே வரலாற்று நிகழ்வுகள் திரும்பத்திரும்ப பேசப்படுவதாக உள்ளது. ஒரு வகையில் வரலாற்று ஆய்வில் இது தவிர்க்க முடியாததுதான்.

மட்டக்களப்பு தமிழகத்தின் மக்கள் குடியேற்ற வரலாற்றில்  கோவில்கள் முக்கியம் பெறுவதை காணமுடிகிறது. ‘தேசத்துக் கோவில்’ என்பது மட்டக்களப்பு தேசத்தின் முக்கியபண்பு.   ‘தேசத்துக் கோயில்கள்’ பொதுமக்கள் -சமூகங்களால் கூட்டாக, கூட்டுப் பொறுப்புடன் நிர்வகிக்கப்படுபவை. எல்லாச்சமூகங்களுக்குமான உரிமைகள், கடமைகள், திருவிழாக்கள் இங்கு பங்கிடப்படுதல் மரபு. குறிப்பாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆரையம்பதி, காத்தான்குடி தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கும் இந்த கடமைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன. 

மட்டக்களப்பு வரலாற்றின் முக்கிய ஆதாரமாக கொள்ளப்படுகின்ற செப்பேடுகள் இந்த கோவில்களிலேயே வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இதனால்தான் இங்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செப்பேடுகள் பெற்றுள்ள ஊர்ப்பெயர்கள் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களை குறித்துநிற்கின்றன. இன்னொரு வகையில்  சொல்வதானால் மட்டக்களப்பு வரலாறானது கோவில்களில் பாதுகாக்கப்பட்டுவரும் செப்பேடுகளைச் சுற்றி சுழல்கிறது.

பண்டைய குடியேற்றங்கள், இடம் தேடுதல், நாடுபிடித்தல்களில் நீர்வழிப்போக்குவரத்து முதன்மையானது. இந்த முக்கியத்துவத்தை மட்டக்களப்பு உப்புநீர் ஏரி -மட்டக்களப்பு வாவி இயல்பாகவே பிடித்து விடுகிறது. இதனால்தான் மட்டக்களப்பு தமிழகத்தின் வரலாற்றில் – சமூக பொருளாதார, அரசியலில் இருந்து மட்டக்களப்பு வாவியை பிரித்து நோக்க வாய்ப்பில்லை. வங்கக்கடலின் கிழக்குக்கரையோரம் பயணித்து கீழ்க்கரையின் உப்புநீர் ஏரி – மட்டக்களப்பு வாவிக்குள் படகோட்டி வந்து கரைதட்டிய இடங்களில்/ துறைகளில் குடியேறிய கதையாகவே மட்டக்களப்பு தமிழகத்தின் சமூக வரலாற்று கதை அமைகிறது. 

இது மட்டக்களப்பு முற்குகர்/முக்குவர் வரலாறும், சீர்பாத குல வரலாறும் கூறுகின்ற பொதுவான வரலாற்றுப் பண்பு. இதில் இன்னும் முக்கியம் இரு இளவரசிகளில் இந்த வரலாறு பின்னிப்பிணைந்து இருப்பது. வீரர்முனை-சம்மன்துறை இளவரசி சீர்பாததேவியையும், மண்முனை இளவரசி உலகநாச்சியையும் குறித்து நிற்கின்றன.

இவர்களின் படகுப்பயணம், கடலில் இருந்து வாவிக்குள் வழியெடுத்து வாவிக்கரையில், வாவியின் முடிவில் – மட்டமான களப்பில் கரையொதுங்கிய வரலாற்றுக் கதை. குறிப்பாக அருள்செல்வநாயகத்தின் சீர்பாதகுலவரலாறும், ஞா. சிவசண்முகத்தின் மட்டக்களப்பு குகன் குல முற்குகர் வரலாறும், மரபுகளும் இதையே பதிவுசெய்கின்றன.  எப்.எக்ஸி. நடராசா, வி.சி.கந்தையா பண்டிதர், வெல்லவூர்க்கோபால், க.தங்கேஸ்வரி உள்ளிட்ட பலரும் தங்கள் ஆய்வுகளில் இந்த படகுப் பயணத்தை உறுதி செய்திருக்கின்றனர்.

“இங்கே உலக நாச்சி வரும்போது மட்டக்களப்பில் கலிங்கர் ஆட்சியே இடம்பெற்றிருந்தது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மட்டக்களப்புக்கு வடபால் மண்முனை எனக்குறிப்பிடப்படுவதால் பண்டைய மட்டக்களப்பு சம்மான்துறையாக இருக்கமுடியும் எனும் ஆய்வாளர்கள் கூற்றும் ஏற்றுக்கொள்ளத்தாகின்றது.” என்று தனது வன்னியர் குறித்த நூலில் எழுதியுள்ளார் வெல்லவூர்க்கோபால். இதில் ஒரு விடயம் எமக்கு தெளிவாகிறது இன்றைய மட்டக்களப்பு பிற்காலத்திற்கானது. இதில் இருந்து தெற்கில் அமைகிறது மண்முனை.

வீரமுனைச்செப்பேடு செப்புவது என்ன………?

“சிலையதைத்  தாங்குமத் தெய்வீகக் கப்பல் 

  அலைகடல் மீதே அல்லலுறாமல் 

  மட்டுக் களப்பு வாவியை யண்டி 

   முட்டுப்படாமல் மோதிநில்  லாமல் 

   ஒரேதிசை யாயோடி உறைவிட மிதுவென 

   வீரர் முனைக் கரை விரும்புட நின்றதே…”

இங்கும் சம்மன் கப்பலில் திருக்கோணேஸ்வரர் கடலில் தடைப்பட்டு நின்ற கப்பலுக்கு கீழ் கண்டேடுத்த பிள்ளையார் விக்கிரகத்துடன் சீர்பாததேவியின் சம்மன் என்ற பெயர்கோண்ட கப்பல் கரைதட்டிய மட்டக்களப்பு வாவியின் தென்கரை வீரர்முனை – சம்மன்துறையாகிறது.

இது பண்டைய மட்டக்களப்பு. கண்டி இராட்சியத்திற்குட்பட்டிருந்த இராஜதானி தலைநகர் சம்மான் துறை……..

இன்னும் வரும்….!