பாலியல் சுரண்டல் – ஒரு பார்வை 

பாலியல் சுரண்டல் – ஒரு பார்வை 

— ராகவன் —

சமீப காலங்களில் தமிழ்ப் பரப்பில் பாலியல் சுரண்டல் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள் தொடர்கின்றன. முக்கியமாக முற்போக்கு பொது தளங்களில் பெண்களின் பிரச்சினைகள், ஆணாதிக்க மன நிலை, பெண்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுவது போன்ற விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த பிரச்சினை உலகளாவியது. ஆனால் சமகாலத்தில் தமிழ் பரப்பில்  பொதுத்தளங்களில் பணி புரியும் ஆர்வம் பெண்களிடையே அதிகரித்து வரும் நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த கட்டுரையின் நோக்கம் பெண்ணியவாதிகளுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கிலல்ல. மாறாக கட்டுரையாளரின் நோக்கில் எழுந்த சில வினாக்கள் மட்டுமே.  கட்டுரையாளர் ஒரு ஆணாக இருப்பதால் அவரது சிந்தனை முறை ஆணின் பார்வையால் 

 பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. 

ஆணின் அந்தஸ்து, ஆதிக்கம் சமூகத்தில் பல தளங்களிலும் நிலவுகிறது என்ற நியாயப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

கற்றது கைம்மண்ணளவு என்ற வரையறைக்குள் இருந்து கட்டுரையாளரின் சிற்றறிவுக்கும் சமூக அனுபவத்துக்குமான ஊடாட்டத்தில் இருந்தே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.   

ஒரு ஆணில் பெண் மையல் கொள்வதோ பெண் ஆணில் மையல் கொள்வதோ பாலியல் உறவு கொள்வதோ இயல்பான விடயம். அதே போல் ஆண் , ஆணின் மீதோ பெண் , பெண்ணின் மீதோ மையல் கொள்வதும் பாலியல் உறவு கொள்வதும்  இயல்பான விடயமே. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து மையல் கொள்வதென்பது நிகழ்கிறது.

பரிணாம உயிரியல் ஆய்வாளர்களின் கருத்தின் படி இயற்கைத் தேர்வின் அடிப்படையில் மனித இருப்பின் தொடர்ச்சிக்காக பாலியல் தேர்வு நிகழ்கிறது. இவ்வகையில் மரபணுக்களின் செயல்பாடு பாலியல் உந்துதலுக்கு காரணமாக  இருப்பதாக சொல்லப்படுகிறது. பாலியல் உந்துதல் பாலியல் உறவுக்கான ஒரு செயலியாக தொழிற்படுகிறது. பாலியல் உறவுகளை தேர்ந்தெடுத்தலும் இதன் ஒரு பகுதியே.

ஆனால் மனித வளர்ச்சிப்போக்கில் உருவான குடும்ப அமைப்பு, சமூக பொருளாதார கலாசார மாற்றங்கள் இந்த உறவு நிலை சம்பந்தமான சில வரைமுறைகளை ஏற்படுத்தின. 

இந்த வளர்ச்சிப்போக்கில் ஒரு 

குறிப்பிட்ட ஒரு சமூகக்கட்டமைப்பில் கைக்கொள்ளப்படும் சமூக, பொருளாதார, குடும்ப அமைப்பு முறையில் பாலியல் உறவை யாருடன் வைத்துக்கொள்ளலாம். அதற்கான அமைப்பு முறை எவ்வாறு அமைதல் வேண்டும் என சில விதி முறைகள் ஏற்படுகின்றன. சில சமூகங்களில் ஆண்கள் பல பெண்களுடனான உறவு வைத்திருப்பது பிரச்சினை ஆகப்பார்க்கப்படிவதில்லை. 

 அதே போல் சில சமூகங்களில் பெண்கள் பல ஆண்களுடன் உறவு கொள்வதையும் பிரச்சனையாக பார்ப்பதில்லை.

எனவே ஒரு குறிப்பிட்ட சமூகக்கட்டமைப்பில் பாலியல் உறவு சம்பந்தமான உரையாடல்களின் (discourse) திரட்சியால் எழுந்த  கருத்தியல் பரிமாணத்தை கொண்டே பாலியல் உறவுகள் பற்றிய பார்வை எம்மிடம் உள்மனக்கிடக்கையில் இருந்து எழுகிறது. இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறையை கேள்விக்குட்படுத்தா விட்டால் நமது பார்வை ஒரு குறிப்பிட்ட ஒழுக்க நெறி என்ற வரையறைக்குள் சிக்கிக்கொள்ளும்.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப அலகே  ஒழுங்கான, ஒழுக்கமான அமைப்புமுறை என்ற தற்கால உரையாடலில் இருந்தே பாலியல் உறவுகள் குறித்த எமது பார்வை இருக்கின்றதா என்ற கேள்வியை முன்வைப்பது அவசியமெனப்படுகிறது.

ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் பாலியல் உறவு என்பது வெளிப்படையானதாகவும் ஓரளவு பாலியல் சுதந்திரம் கொண்டதாகவும் இருந்தது. அத்துடன் ஓரினச்சேர்க்கையும் வெளிப்படையாக இருந்தது. 

ஆனால் கிறிஸ்தவ மத வருகைக்கு பின் பாலியல் ஒழுக்கம் என்பது போதிக்கப்பட்டது. அத்துடன் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்பட்டது. கிறீஸ்தவத்தில் பாலியல் உறவு பற்றிய ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் பாலுறவில் மகிழ்வுற்றிருத்தல் பாவமாக கருதப்பட்டது. இந்த கிறீஸ்தவ குற்ற உணர்வு என்பது பாலியல் உறவுகள் சம்பந்தமான பார்வைகளில் தாக்கம் செலுத்தியிருக்கிறது  எனலாம். 

மேற்குலகில் கிறீஸ்தவ ஒழுக்க கலாசாரம் நீண்ட காலமாக பாலியல் உறவுகள் சம்பந்தமான கருத்துருக்களை உருவாக்கியது. இதன் தொடர்ச்சி, பெண்களுக்கான வகிபாகம் குடும்ப நலனைப்பேணுவது,பிள்ளைகளை பராமரிப்பது. கணவனின் நன்மதிப்பைப்பெற்று அவன் மனம்கோணாமல் நடப்பது என்ற ஒழுங்கமைப்புக்குள் வந்தது. 

ஆண் பெண் உறவு மூலம் பெண்கள் குழந்தைகளை பெறுதல் உயிரியல் விடயம் என்பதால் ஒரு தனிக்குடும்ப நடைமுறையில் பெண்கள் தமது கணவனின் உழைப்பு ,உதவிகளே  குழந்தை வளர்ப்புக்கான நீண்டகால முதலீடாயின. ஆனால் ஆசியா, ஆபிரிக்காவில் உள்ள பல சமூகங்களில் கணவனின் பாத்திரம் தனிக்குடும்ப  பாத்திரம் போல் இருக்கவில்லை. உதாரணமாக தாய் வழி கூட்டுக்குடும்ப சமூக அமைப்புகளில் பெண்கள் தமது குழந்தைகளை வளர்க்கவோ அல்லது தமது வாழ்க்கைக்கான பொருளாதாரத்தையோ கணவனிடம் எதிர்பார்க்கவில்லை. கணவன் பொதுவாக தனது தாய் சகோதரருடன் வாழ்வதும் அவர்களின் பொருளாதார தளங்களில் தனது உழைப்பை செலுத்துவதும் நிகழ்ந்தது. அத்துடன் தனது மனைவி வேறு ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறாரா என்ற பிரச்சனைகளும் எழுவதில்லை. அதேபோல் தனது கணவனுக்கு வேறு தொடர்புகள் இருக்கின்றதா என்று மனைவி பார்ப்பதும் இல்லை.

இந்த நிலை  நவீன தனிக்குடும்ப அலகில் இல்லா நிலையில், பெண்கள் தமது பாலியல்  உறவுகளை ஆண்களுடன் கொள்வதால் ஏற்படும் சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு தனிக்குடும்ப கலாசார ஒழுக்க நெறியை அவர்கள் பேண நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டதும் மேற்கு நாடுகளில்  இன்னிலை மாறியது. எமது உடலை நாமே கட்டுப்படுத்துவோம். நாம் குழந்தை பெறும் இயந்திரமல்ல என்ற பதாகையில் பாலியல் சுதந்திரத்தை மேற்கத்திய  முதல் அலை பெண்ணியவாத சிந்தனைமுறை வலியுறித்தியது. 

 பாலியல் சுதந்திரம் என்பது எமது உறவை நாமே தீர்மானிப்போம் என்பதே. உடல் எனது அதனை எப்படி பயன்படுத்துவது என்பது எனது உரிமை சார்ந்த விடயம் என்பதே அதன் சாராம்சம்.  இதனை சிலர் கட்டற்ற பாலியல் உறவு  என தவறாக வியாக்கியானம் செய்வர்.  

பாலியல் சுதந்திரம் ஆண்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிலையை தோற்றுவிக்கிறது என்ற பெண்ணியவாத பார்வையும் இருக்கிறது.

மேற்கு நாடுகளில் இப்போதும் தனிக்குடும்ப அலகே அடிப்படையாக கருதப்படுகிற்து. ஆனால் திருமணம் ஆக முன் பாலியல் உறவுகளை ஆண்களோ பெண்களோ மேற்கொள்வது பற்றிய பிரச்சினைகள் தற்போது இருப்பதில்லை. எனினும் திருமணம் ஆன பின் ஆணோ பெண்ணோ திருமணத்துக்கு வெளியே பாலுறவு கொண்டால் அது ஒரு நம்பிக்கைத்துரோகமாக பார்க்கப்படுகிறது. அது பெரும்பாலும் விவாகரத்தில் முடியும். 

மேற்கு நாடுகளில் வசதி குறைந்த சமூக வர்க்கத்தில் பிறக்கும் பெண்கள் பெரும்பாலும் தமது பதின்ம வயதுகளில் கர்ப்பம் தரிப்பதும் குழந்தை பெறுவதும் நிகழ்கிறது. 

கருத்தடை மாத்திரைகள் இலகுவாக பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் பெரும்பாலும் நடுத்தர, பணக்கார வர்க்கமே தமது நீண்டகால திட்டங்களை கருத்தில் கொண்டு கருத்தடை மாத்திரைகள், உறைகள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். நலிந்த வர்க்கத்திலிருந்து வரும் பெண்கள் கருத்தரிப்பதற்கான ஒரு காரணம் பாலியல் துஸ்பிரயோகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தனிக்குடும்பமே சமூகத்தின் அடிப்படை அலகு என்ற  நவ தாராளவாத பார்வை மேற்குலகில் முதன்மைப்படுத்தப்படும் போது இவ்வாறு சிங்கிள் மதர் ஆக வாழும் பெண்கள் மேலான அவமதிப்புகள் செய்யப்படுகின்றன. இதன் அடிப்படை அவர்கள் வேலை செய்வதில்லை. அரச உதவித்தொகையில் வாழ்கிறார்கள். உழைத்து அரச வரிகட்டுபவர்களின் தயவில் வாழ்கிறார்கள் என்ற பரப்புரை. 

இலங்கை போன்ற நாடுகளில் காலனித்துவ வருகையும் முதலாளித்துவமும் பல மாற்றங்களை சமூக , கலாசார தளங்களில் ஏற்படுத்தியதும் நவீன தனிக்குடும்ப முறை உருவானதும் வரலாற்று நிகழ்வுகள். ஏற்கனவே சமூகங்களில் இருக்கும்  பெண்கள் பற்றிய கருத்தியலும் காலனித்துவ காலங்களில் நிகழ்ந்த மாற்றங்களும் ஒத்திசைந்த நிகழ்ச்சிப்போக்கில் எழுந்த உரையாடல்களில் திரண்ட கருத்தியலையே  நாம் வரித்துக்கொண்டிருக்கிறோம்.

ஒழுக்கம் ,அறம் என்பவை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகங்களின் அரசியல் கலாசார பொருளாதார தளங்களில் உருவாக்கப்பட்டவையே. இங்கு அதிகார அலகுகளும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆண்கள் பெரும்பாலும் அனைத்து சமுதாயங்களிலும் அதிக அந்தஸ்தையும் அதிகாரங்களையும்  கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் உலகளாவிய சில அறங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானவை. அது ஒரு மனிதனை இன்னொருவர்  துன்புறுத்துவது என்ற அடிப்படையில் எழுந்தவை. 

 இவ்வகையில் ஒருவரது அனுமதியின்றி ஒருவருடன் பாலியல் உறவை மேற்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததும் பாலியல் வன்முறையாகவும் சித்தரிக்கப்படுகிறது . அதே போல் ஒரு நிறுவனத்தில் அதிகாரத்தில்  இருப்பவரோ, நில உடமையாளரோ,  உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரோ ,  பல்கலைக்கழக ஆசிரியரோ அல்லது ஒரு 

 முதலாளியோ தனக்கு கீழே இருப்பவர் ஒருவருக்கு சில நெருக்கடிகளை உருவாக்கி , சலுகையை  ஆயுதமாக்கி  உறவு கொண்டால் அதனை பாலியல் சுரண்டலாக கருத முடியும். இங்கு சமூக வர்க்க, பால் நிலை ஏற்றத்தாழ்வின் காரணமாக எழும் அதிகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாத்துறை, பல்கலைக்கழகங்கள், மத நிறுவனங்கள், கட்சிகள், பராமரிப்பு நிலையங்கள், குடும்ப அமைப்புகள் போன்ற இடங்களில் இவ்வாறான அத்துமீறல்கள் நிகழ்கின்றன.

தமிழ் நாட்டில் தமக்கு  நடிக்க வாய்ப்பு வழங்குவதெனில் டைரக்டர் , நடிகர்  என பலருடன் உடலுறவு கொள்ள நடிகைகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இப்போ பல நடிகைகள் அவற்றை வெளிப்படையாக சொல்லியிருக்கின்றனர்.  நடிகைகள் சொல்வதனால் அது ஊடகங்களில் வருகின்றது. அதே போல் மத்திய தர வகுப்பு பெண்கள் வேலைத்தளங்களிலும், அரசியல் தளங்களிலும் , விளையாட்டு அமைப்புகளிலும், பயணங்களிலும் தமக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சுரண்டல்களை பேசக்கூடிய சூழல் இப்போ உருவாகியுள்ளது. 

ஆனால் கடை நிலை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள் ஆக இருக்கும்  பெண்கள் மேலான பாலியல்சுரண்டல்களோ அத்துமீறல்களோ பெரிதாக ஊடகங்களிலோ பொது வெளியிலோ பேசப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.  அதற்காக மத்தியதர பெண்கள் தமது பிரச்சனைகளை வெளியே சொல்வதை குறைத்து மதிப்பிட முடியாது.  சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த அது அவசியமே. 

 ஆனால் ஒரு பல்கலைக்கழக மாணவியுடன் ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் இருவரின் விருப்பின் அடிப்படையில் பாலியல் உறவு கொள்ளும் போது எவ்வாறு இதனை அணுகுவது. ஆசிரியரின் அந்தஸ்து, அதிகாரம் அந்த சூழலிலும் இருக்கிறது. ஆனால் உறவு கொள்ளும் மாணவியும் ஆசிரியரின் அந்தஸ்து ,அதிகாரம் என்பவற்றை அறிந்தே உறவை மேற்கொள்கிறார். அது போல ஆசிரியரும் அந்த அந்தஸ்தை பயன்படுத்தியிருக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கும். அத்துடன் ஒருவர் மேல் ஒருவருக்கான பாலியல்  ஈர்ப்பு  என்பது உயிரியல் சம்பந்தமானது மட்டுமல்ல அவர்களது குண இயல்புகள் மற்றும் பல சமூக கலாசார விடயங்களும் தாக்கம் வகிக்கின்றன என சொல்லமுடியும். 

பாலியல் சுரண்டல் என்ற பதத்திற்கான அர்த்தத்தை எவ்வாறு புரிந்து கொள்வது  என்பதில் சிரமங்கள் உண்டு . இருவர் தமது சுய விருப்பத்தால் இருவர் உடல் உறவில் ஈடுபடுவது அவர்களின் தேர்வு என்ற போதும் ஆழமாக பார்த்தால் சுய விருப்பம் என்பதும் பல சமயங்களில் ஆதிக்கம், அந்தஸ்து என்ற பல பரிமாணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வகையில்  அணுகும் போது  புதிய பிரச்சனைகள் எழுகின்றன. 

இலங்கையை பொறுத்தவரை  வழமையில் பெண்கள் பல  துறைகளில் பணி புரியினும் சமூக அரசியல் வெளியில் அவர்களின் பங்கு பொதுவாக குறைவானதே. சமூக அரசியல் விடயங்கள் ஆண்களுக்கானது என்ற சிந்தனைமுறையின் காரணமாக அவ்வாறு பெண்கள் தமது பங்கை செலுத்த வரினும் அதற்கான பெரும் சமூக மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அத்துடன் கட்சிகளிலோ சமூக அமைப்புகளிலோ அவர்கள் பங்கு பற்றினும் அவர்களுக்கான உரிய இடத்தை  அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கொடுப்பதில்லை. 

இன்னொருபுறம் பல இளம் பெண்கள் அரசியல், இலக்கியம் , மற்றும் சமூகத்தளங்களில் தமது பங்கு அவசியம் என்பதை உணர்ந்து அவற்றில் பங்கு பற்றும் போது பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒன்று அவர்களது பங்களிப்புக்கான மதிப்பு பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. மற்றது பாலியல் ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.

இவ்வாறு பொதுப்பணிகளில்  ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் சுய சிந்தனை கொண்டவர்கள். முக்கியமாக முற்போக்கு அமைப்புகளில் பொதுப்பணிகளில் ஈடுபடுபவர்கள் பாலியல் சமத்துவத்தை வலியுறுத்துபவர்களாக இருப்பர். அதேவேளை சமூகத்தில் இருந்துவரும் அனைத்து ஒழுக்க விதிகள், நடைமுறைகளையும் முற்றாக  நிராகரித்தவர்களுமல்ல. இது ஆண்களுக்கும் பொருந்தும்.

சுயசிந்தனை, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களை வெறும் செயலற்றவர்களாக கருதி பாதிக்கப்பட்டவர்கள் என்ற பச்சத்தாப அணுகுமுறை பிரச்சனைக்குரியது. பொது வெளிக்கு வரும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்கள் , ஆண்களுடன் சேர்ந்து பணிபுரியும் சந்தர்ப்பங்கள் உருவாகும் போது ஓரு ஆணின் மேல் பெண்ணுக்கு பாலியல் ஈர்ப்பு அல்லது காதல்  வருவது இயல்பானதே.   திருமணம் செய்த ஆண், பெண் என்ற நெறி முறையை மீறும் நிகழ்வுகளும் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். இங்கு பாலியல் பொறாமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் நிகழும். உதாரணமாக ஒருவர் இன்னொருவருடன் பாலியல் /காதல் தொடர்புகளை வைத்திருந்துவிட்டு, அதே சமயம் இன்னொருவரின் மேல் மையல் கொள்ளும் போது அல்லது தொடர்புகளை துண்டிக்கும் போது துண்டிக்கப்பட்டவர் உளரீதியான துன்பத்துக்கு ஆளாவது நிகழும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பல பிரச்சனைகள் உருவாகும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுதல், ஆத்திரப்படல் என்பவை இயல்பாக எழும். இந்த உள ரீதியான தாக்கத்திற்கு ஒரு காரணம் பாலியல் பொறாமை எனலாம். மற்றது சில எதிர்பார்ப்புகளுடன் ஒரு உறவை மேற்கொள்ளும் போது அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும் போது ஏற்படும் உள ரீதியான பாதிப்புகள். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் என்பது ஒன்றாக வாழ்தல் என்ற கருத்தியல் பின்னணியில் எழும் போது தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அதேவேளை, சில ஆண்கள் பொது வெளிக்கு வரும் பெண்களை தமது பாலியல் வேட்கைக்கு பயன்படுத்தும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதனையும் மறுக்கமுடியாது.  இதனை எப்படி அணுகுவது என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டியது. பாலியல் ஈர்ப்பு இயல்பானதாக இருக்கும் போது அது சமூக விழுமியங்களால் கட்டுப்படுத்தப்படும் நிகழ்ச்சிப்போக்கில் அந்தக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் பிரச்சனையானவர்களாக பார்க்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இங்கு பாலியல் ஈர்ப்பால் எழும் பாலியல் வன்முறை அல்லது பாலியல் துன்புறுத்தல் என்பதை வேறாக பார்க்கவேண்டும். ஏனெனில் அது இன்னொரு மனிதரை துன்புறுத்தும் நிகழ்வு.  அதேவேளை பாலியல் உறவால் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவரின் மன அழுத்தம் பற்றி எவ்வாறு கணிப்பிடுவது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. சில சமயங்களில் பாலியல் உறவு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நிகழும் போது பெரும் பிரச்சனைகள் உருவாவதில்லை எனலாம்.  அது சில சந்தர்ப்பங்களில்  ஓரிரு  தடவை நிகழும் பாலியல் உறவு. ஆனால் சில எதிர்பார்ப்புகளுடன் நிகழும் பாலியல் உறவில் ஒருவரை ஒருவர் உடமையாக கருதும் நிலை ஏற்படும் போது சம்பந்தப்பட்டவர் இன்னொரு உறவை மேற்கொள்கையில் அல்லது உறவை முறிக்கையில் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இங்கு தான் இயலாமை, ஆத்திரம் போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன. இதனை எவ்வாறு கையாள்வது என்பது கேள்வியாக முன்னிற்கிறது. 

சமீபகாலத்தில் கட்சி உறுப்பினர் ஒருவர் மேலான பாலியல் குற்றச்சாட்டும்  இலக்கியப்பரப்பில் முன்னிலை வகிப்பவர்   ஒருவர் மேலான பாலியல் குற்றச்சாட்டும் சம்பந்தப்பட்ட பெண்களால் முன்வைக்கப்பட்டன. அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெண்கள் பொது வெளியில் பணி செய்ய  வருதல் குறைவு. அவ்வாறு வரும் ஒரு சில பெண்களை ஆண்கள் குறி வைத்து உறவு கொள்வதால் இளம்  பெண்கள் பொது வெளியில் பணி செய்வதற்கு தடையாக இருக்கிறது என்பதாகும்.  இந்த குற்றச்சாட்டில் நியாயப்பாடுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட ஆண்கள் தமது அந்தஸ்தை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவே இது தவிர்க்கப்படவேண்டியது என்பதே அவர்களது நிலைப்பாடு.

ஆனால் இதனை எவ்வாறு கையாள்வது என்பதில் பாரிய பிரச்சனைகள் உருவாகின்றன. ஒரு அமைப்பில் இருக்கும்  பெண் அல்லது ஆண் தனது பாலியல் ஈர்ப்பை கட்டுப்படுத்த வேண்டும் என சட்டம் போட முடியாது. அல்லது கண்காணிப்பு குழுவை அமைக்கவும் முடியாது. 

உதாரணத்துக்கு அமைப்பில் இருக்கும் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி பின்னர் திருமணம் செய்து கொண்டாலோ சேர்ந்து வாழ தொடங்கினாலோ அதற்கான அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. குடும்ப உறவுக்கான அங்கீகாரம் என்ற சிந்தனையின் மறுபக்கமே இது  என தோன்றுகிறது. அத்துடன் பாலியல் அறம் என்ற உரையாடல்  மூலமாக இது பார்க்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே சட்டம் போடுவதற்கான முன்னிபந்தனைகள் என்ன என்பது கேள்விக்குறி ஆகிறது. 

பெண்கள் பொதுவெளியில் வரும் போது ஆண்கள் அவர்களை பாலியல் நோக்கில் மட்டும்  அணுகுவது பிரச்சனைக்குரியதே. ஆனால் இதற்கான விழிப்புணர்வை பெண்கள் மத்தியிலும் ஆண்கள் மத்தியிலும் ஏற்படுத்துவதே அவசியமாகப்படுகிறது. ஒரு சில ஆண்கள் பாலியல் உறவை மேற்கொண்டு அப்பெண்களுக்கு சில நம்பிக்கைகளை ஏற்படுத்தி பணம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள். இதனை பாலியல் சுரண்டல் என சொல்லமுடியும். ஆனால் அனைத்தையும் பாலியல் சுரண்டல் என்ற பதத்துள் அடக்குதல் கேள்வியாக எழுகிறது.

ஒரு முதலாளித்துவ சட்ட அமைப்பில் கூட சுயவிருப்பின் அடிப்படையில் இருவர் பாலியல் உறவு கொண்டால் அவர்களில் ஒருவரை குற்றவாளியாக காண்பதில்லை. 

இன்னொரு புறம் பெண்ணியவாதிகளை விட பெண்ணியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் சில ஆண்கள் பாலியல் குற்றவாளி, பாலியல் சுரண்டல்காரன் என்ற பதாகைகளை தூக்கிக்கொண்டு , பெண்களின் பாதுகாவலர்களாகவும், நியாயம் கேட்பவர்களாகவும் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் பாலியல் பொறாமை காரணமாகவே இவ்வாறு நடந்து கொள்கிறார்களா என்ற வலுவான சந்தேகம் வருகிறது. இவர்கள் ‘பாதிக்கப்பட்ட’  பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக பாவனை செய்யினும் அவர்களின் குறிக்கோள் குறித்த ஆணை மையமாக வைத்து பரப்புரை மேற்கொள்வதாகவே இருக்கிறது. நாங்கள் மற்ற ஆண்களை விட சிறந்தவர்கள் என்று நிரூபிக்கும் நிகழ்ச்சி நிரலாகவே இவர்களைப்பார்க்கமுடிகிறது. பாலியல் சமத்துவத்தை முன்னெடுப்பதல்ல இவர்களது நோக்கம். அனைத்து ஆண்களையும் இந்த வரையறைக்குள் பொதுமைப்படுத்தவில்லை.  பிரக்ஞை பூர்வமாக இதனை அணுகுபவர்களும் இருக்கின்றனர். 

 பாலியல் உறவு என்பது இயல்பானது. அதற்கான அற நெறிகள் நிலவிவரும்   அரசியல்பொருளாதார கலாசார தளங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட 

 கருத்துருவாக்கங்கள் எனவே  கட்டுரையாளர் பார்க்கிறார். இந்த அற நெறிகள் நித்தியமானவையல்ல. குறிப்பிட்ட சமூக பொருளாதார கலாசார நெறிகளினால் உருவாகும் உரையாடல்களினால் எழுந்த கருத்தியல் கட்டுமானமே இவை என்பது கட்டுரையாளரின் கருத்து.

பால் நிலை சமத்துவம் என்பது மனித குலத்துக்கு அவசியமானது. பாலியல் உறவுகளிற்கும் பாலியல் சமத்துவத்திற்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பரிசீலிப்பதும் காலத்தின் தேவையாக இருக்கின்றது என்பதே எனது பார்வை.

இக்கருத்துக்கள் முழுமையானவை அல்ல என்பதும் யதார்த்தம்.