பிட்டும் தேங்காய்ப்பூவும்! உள்ளடக்கத்திலும் தோற்றத்திலும் மாற்றம் வேண்டும்….! (மௌன உடைவுகள்-81)

பிட்டும் தேங்காய்ப்பூவும்! உள்ளடக்கத்திலும் தோற்றத்திலும் மாற்றம் வேண்டும்….! (மௌன உடைவுகள்-81)

— அழகு குணசீலன் —

கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி மார்ச் 25 முதல் தொடர்போராட்டம்  அங்கு இடம்பெறுகிறது. இது குறித்து ஊடகங்களில் செய்திகளாக, பத்திகளாக பேசப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அம்பாறை மாவட்ட எம்.பி.கலையரசனும், யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரனும் உரையாற்றினார்கள். அதற்கு அம்பாறை மாவட்ட எம்.பி.கலையரசனின் சக எம்.பி. ஹாரிஷ் பதிலளித்திருக்கிறார்.

முன்னவர்களின் உரையிலும் பின்னவரின் பதிவிலும் சில முரண்பாடுகளை  மௌன உடைவுகள் காட்சிப்படுத்த முனைகிறது. 

 கிழக்கிலங்கையில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களின் ஒருங்கிணைந்த வாழ்வு ஒரு காலத்தில் பிட்டும் தேங்காய்ப்பூவுமாக பேசப்பட்ட நிலையில் இருந்து சமகால வாழ்வியல் ஜதார்த்தங்களை உள்வாங்கி பிட்டின் உள்ளடக்கத்திலும், தோற்றத்திலும் மாற்றங்களை வேண்டி நிற்கிறது.

பிட்டு மாவுடன் தேங்காய்ப் பூவை சேர்த்து பிட்டுக்கு மாக்குழைத்து அவிப்பது ஒரு முறை.  பிட்டைப்பிரிப்பதற்கு இலகுவாகவும், தோற்றத்தில் அழகுக்காகவும் குழைத்தமாவுக்கு இடையிடையே  பிட்டுக்குழலில் தேங்காய்ப் பூவை எல்லையாகப்போட்டு அவிப்பது இன்னோரு முறை. இந்த இரண்டு பிட்டு மாதிரிகளும் கிழக்கிலங்கையின் தமிழ்- முஸ்லீம் சமூக வாழ்வியலின் ஒன்றிணைந்தும், தனித்துவத்துடனும் வாழும் அன்னியோன்யம் நிறைந்த சமூக பொருளாதார அரசியல் வாழ்வின் அடையாளம். ஒற்றுமையிலும் வேற்றுமை. வேற்றுமையிலும் ஒற்றுமை.

இந்த வாழ்வில் தமிழ் அமைப்புக்களின் ஆயுதப்போராட்ட தவறுகள், அதற்கு எதிரான முஸ்லீம்களின் ஆயுத அமைப்புக்களின் எதிர்வினைகள் என்பன இந்த ஒருங்கிணைந்த சமூக வாழ்வியல்  கோலத்தை அலங்கோலப்படுத்தி, குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாக சிதைத்து விட்டன. இதை மீளக்கட்டுவதற்கு தமிழ் -முஸ்லீம் சமூகங்கள் பிட்டின் உள்ளடக்கத்திலும், வெளித்தோற்றத்திலும் மாற்றங்களை அங்கீகரிக்க வேண்டும். இதன் அர்த்தம் பாரம்பரிய பிட்டும்,தேங்காய்பூவுக்கும் மேலாக கலவையிலும், தோற்றத்திலும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

தமிழரசுக்கட்சி எம்.பிக்கள் கலையரசன், சிறிதரன் ஆகியோரின் பாராளுமன்ற உரைகள் முற்றிலும் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அமைக்கப்பட்ட, அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த  40 வருடங்களாக முஸ்லீம் தரப்பு அரசியல் தடையாய் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதன் சூத்திரதாரியாக தமிழ்த்தரப்பால் கருதப்படும் முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி. ஹாரிஷ் தமிழரசுக்கட்சி எம்.பிக்களுக்கு பாராளுமன்றத்தில் அளித்த பதில் இவர்களின் குற்றச்சாட்டுக்கு மாறுபட்டதாக அமைகிறது. அதேவேளை தமிழரசுக்கட்சியை நோக்கி சில கேள்விகளையும் கேட்கத் தூண்டுகிறது.

ஹாரிஷ் எம்.பி.யின் பாராளுமன்ற பதிலின் முக்கிய உள்ளடக்கங்கள் இவை.

(*)   ஹாரிஷ் : “கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம், காணி அதிகாரம் போன்றவற்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பில் நிராகரித்து இருப்பதால் இந்த விடயத்தில் அரசு எப்படி தலையிட முடியும் ?” என்று தமிழரசாரைப்பார்த்து கேட்கிறார் சட்டத்தரணி   ஹாரிஷ்.

 மௌன உடைவுகள்:  இது போராட்டம் நடாத்தும் கல்முனை தமிழ்மக்களுக்கு தெரியுமா?  நீதிமன்றத்தில் உள்ள ஒரு விடயத்தில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது தமிழரசுக்கட்சி எம்.பிக்களுக்கு தெரியாதா? அப்படியானால் இந்த போராட்டம் இப்போதைக்கு எதையும் பெற்றுத்தராது என்பதும் இவர்களுக்கு தெரியாததா? நீதி மன்ற விவகாரங்களில் அரசாங்க தலையீட்டை கடுமையாக விமர்சனம் செய்கின்ற தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி அரசியல்வாதிகள் இதில் மௌனம் சாதிப்பதன் உண்மை இதுதானா? இந்த நிலையில் அரசாங்கம் இதில் தலையிட வேண்டும் என்று  மக்களை கொண்டு போராட்டம் நடாத்துவது தமிழரசுக்கட்சியின் தவறான முன்மாதிரி இல்லையா? அல்லது ஹாரிஷ் குறிப்பிடுவதுபோல்  “இது தேர்தல் கால செயற்பாட்டு அரசியலா”?

(*)  ஹாரிஷ் : “கல்முனை உப பிரதேச செயலகம் 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06ம் திகதி பொது நிர்வாக அமைச்சின் ஒரு கடிதத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் அது சம்பந்தமாக அச்சமயம் அமைச்சரவை தீர்மானமோ அல்லது வர்த்தமானி பிரகடனமோ வெளியிடப்படவில்லை.”

 மௌன உடைவுகள்: ஹாரிஸ் எம்.பி.யின் பதிலில் உள்ள “சட்டத்தனம்”  அதாவது ….. “அச்சமயம்” என்ற வார்த்தை பிரயோகம் இங்கு கவனிக்கத்தக்கது.  ஊடகங்களும், தமிழரசு எம்.பி.க்களும் பேசுகின்ற இந்த விபரங்கள் குறித்து ஹாரிஷின் பதில் என்ன?

“93/600/034 இலக்க 1993.03.17 திகதிய, 93/600/034(1) இலக்க 1993.03. 31 திகதிய அமைச்சரவை மசோதாக்கள், மற்றும் 1993 .07.09 ம் திகதிய அமைச்சரவை உப குழுக்கள் அறிக்கை, ஆகியவற்றின் அடிப்படையில் 1993 .07.28ம் திகதி அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதேச செயலகமாக மாற்றப்பட்டது. “

இந்த விபரங்களை ஹாரிஷ் ஏற்றுக்கொள்கிறாரா? அவர் கூறுகின்ற”அப்போது….1989 இல் ” இந்த பத்திரங்கள் இருக்கவில்லை. ஆனால்  பின்னர் 1993 இல் சட்டரீதியாக முடிவுகளும், ஆவணங்களும் உள்ளன என்பது குறித்து ஹாரிஷின் பதில் என்ன?

அமைச்சரவை பத்திரம் ஒன்றை சுமந்திரன் எம்.பி. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் காட்டியதால் தான் அவர்கள் தலையிட்டு தரமுயர்வை தடுத்தார்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.யும் ஒரு தடவை கூறியிருந்தார். இதன் உண்மைத்தன்மை என்ன? மேற்குறிப்பிட்ட பத்திரங்களில் எந்த பத்திரத்தை அது குறிக்கிறது?

(*)  ஹாரிஷ்: “2017ம் ஆண்டு , அப்போது பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சராக இருந்த வஜிர அபேவர்தனவின் வீட்டில் இரவு -பகலாக சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றோருடன் பேசினோம். புதிதாக எல்லை நிர்ணயம் செய்யும்போது பிரிக்கப்படும் முஸ்லீம் பிரதேச செயலக பிரிவில் 3,500 /4,000 தமிழ்மக்கள் வாழவேண்டி வரும்.அப்படி வரும்போது இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காணலாம் என்று எங்கள் ஆலோசனையை முன்வைத்தோம் . இதன் மூலம் கல்முனை வடக்கு மக்களுக்கு ஒரு பிரதேசசெயலகம் மட்டும் அல்ல ஒரு உள்ளூராட்சி சபையும் கிடைக்கும் என்று  கூறினோம்”.

“ஆனால் , ஒரு தமிழ் மகன் கூட கல்முனை பிரதேச செயலகப்பிரிவுக்குள் வாழ முடியாது என்று கூறி இனரீதியாகப் பிரிக்கப்பட்ட தனித்தமிழ் பிரதேச செயலகப்பிரிவை கோருகின்றனர். காரைதீவு, நாவிதன் வெளி தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகப்பிரிவுகளில் தலா 40 வீதம் முஸ்லீம்கள் வாழும் போது ஏன்? முஸ்லீம் பெரும்பான்மை செயலகப் பிரிவில் தமிழர்கள் வாழ முடியாது?” என்று கேட்கிறார் ஹாரிஷ். அத்துடன் “தமிழரசுக்கட்சி கோருவது நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகம் ” என்றும் கூறுகிறார்.

மௌன உடைவுகள்:   இந்த தூய புலிகளின் இனச்சுத்திகரிப்பு  பாணியிலான அணுகுமுறை  குறித்த ஹாரிஷின்  கேள்வி நியாயமானது.  தமிழரசுக்கட்சியின் இந்த பிடிவாதம் காரணமாகவே இந்த பிரச்சினை தீர்வற்ற ஒன்றாக இழுபடுகிறதா? புலிகளின் இனச்சுத்திகரிப்பு அரசியலை கல்முனை வடக்கில் அமுல்படுத்தி கிழக்கின் தமிழ் -முஸ்லீம் உறவை சீர்குலைத்து ஆறாத புண்ணாக அரசியல் செய்ய தமிழரசுக்கட்சி விரும்புகிறதா? ஹாரிஷின் கருத்தைப்பார்த்தால் இந்த பிரச்சினைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே தீர்வு கண்டிருக்க முடியும். நியாயமற்ற, அடைய முடியாத,விட்டுக்கொடுப்பற்ற (பதவியைத்தவிர) அரசியலால் தமிழரசுக்கட்சி இதுவரை சாதித்தது என்ன? கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரச்சினை தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மட்டும் அல்ல தமிழரசுக்கட்சியும் காரணமாகிறதா?

பல்லின, மத, கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில் தமிழரசுக்கட்சியின் “தனித்த தமிழர் நிர்வாக அலகு” அதுவும் நிலத்தொடர்பற்றதாக எவ்வளவுக்கு சாத்தியம்.? மஹ்ரும் அஷ்ரப் காலம் முதல் முஸ்லிம் காங்கிரஸ் நிலத்தொடர்பற்ற முஸ்லீம் மாகாண சபையை அல்லது முஸ்லீம் தனி அலகை கோரி நிற்கிறது. இதை முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் மட்டும் கோரவில்லை தமிழ்த்தேசியகட்சிகள்/அமைப்புக்களிடமும் கோருகிறது. இதை கிழக்கு முஸ்லீம்களுக்கு வழங்க தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் தயாரா? இல்லையேல் கல்முனை வடக்கு தூய பிரதேச செயலக கோரிக்கையின் தார்மீக அரசியல் என்ன? 

இது விடயத்தில் ஊடகங்களும், கட்சி அரசியலும் பேசுகின்ற இன்னொரு விடயம் கடந்த ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார வாக்குறுதிகள் பற்றியது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி பங்காளியாக இருந்த போது அரசாங்கம், பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அதனால் இதைச் சாதிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதை ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக்கொண்டால் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக இருந்தும் ஜனாதிபதி கோத்தபாய பதவியில் தொடர முடியாத நிலையில் வியாழேந்திரனால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போல் கருணா தேர்தலில் வெற்றி பெறாததால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழரசுக்கட்சி கடந்த காலங்களில் எடுத்த சாணக்கியமற்ற அரசியல் தீர்மானங்கள் இது விடயத்தில் பாதகமாக அமைந்துள்ளது என்பதும், முஸ்லீம் காங்கிரஸின் ஒரு பிரிவினரின் சாணக்கிய அரசியல் தீர்மானங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எது எப்படியோ, பல்லின,மத, கலாச்சார,பாண்பாட்டு, பாரம்பரிய தேசம் ஒன்றில் அல்லது பிராந்தியம் ஒன்றில் தமிழரசுக்கட்சியின்  கோரிக்கை ஜதார்த்தமற்றதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமாகும்.  இது சாத்தியப்பட வேண்டும் என்றால் முஸ்லீம்களின் இது போன்ற கோரிக்கைகளை முதலில் தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து தங்களால் மற்றவர்களுக்கு மறுக்கப்படும் ஒன்றை தங்களுக்கு கோருகின்ற புலி அரசியல், தீர்வு ஒன்றுக்கான தடையாகவே அமையும்.

இதனால் தான் பிட்டின் உள்ளடக்கத்திலும், தோற்றத்திலும் மாற்றங்களை ஏற்க இரு சமூகங்களும் தயாராக வேண்டும். பிட்டும், தேங்காய்ப் பூவும்  மரபுக்கதை. இது பழங்கதையாகிவிட்டது . இப்போது புதிய பிட்டும் உள்ளடக்கமும், அதற்கான தோற்றமும் தேவைப்படுகிறது. நெத்தலிப்பிட்டு, கரட் பிட்டு, கீரைச் பிட்டு, பீற்றூட் பிட்டு….. என்று உள்ளடக்கமும், தோற்றமும் -நிறமும் மாறிவிட்டது. இது போன்ற மாற்றத்திற்கு தமிழ் முஸ்லீம் சமூகங்கள் தயாராக வேண்டும்- -தயார்ப்படுத்தப்படவேண்டும்.

இந்த மாற்றம் தமிழரசுக்ட்சியிலும், முஸ்லீம் காங்கிரஸிலும் கட்சியளவில் ஏற்படவேண்டும். தமிழரசுக்கட்சியின் கொடி மூன்று நிறங்களைக்கொண்டது. மஞ்சள் , பச்சை, சிவப்பு மூவர்ணக்கொடி அதை மறந்து புலிகளின் தமிழ்த்தேசிய சிவப்பு மஞ்சள் கொடியை இந்துத்துவ குங்குமம் மஞ்சள் அடையாளங்களை அது பூசிக்கொண்டுள்ளது. வீட்டுக்கும் அதையே பூசியிருக்கிறது. அதேபோல் முஸ்லீம் காங்கிரஸும் , அதன் மரமும் எப்போதும் பச்சையாக இருக்க முடியாது. அது இயற்கைக்கு முரணானது. பருவகாலங்களுக்கு ஏற்ப இலைதுளிர், இலையுதிர் கால சிவப்பு, மஞ்சள் நிறங்களையும் அது கொண்டிருக்கவேண்டும். 

இது வெறும் நிறப்பிரச்சினை அல்ல அருகருகே வாழுகின்ற  தனித்துவமான இரு சமூகங்களின் ஒன்றிணைந்த வாழ்வியலின் கலர்புள் அடையாளம்…..!  வாழ்வியல் வர்ணக்கோலம்….!!