— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையில் கடந்த காலத்திலும் பாராளுமன்ற சபாநாயகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தற்போதைய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை முன்னையவற்றில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும்.
முன்னைய சபாநாயகர்கள் அரசியலமைப்பை மீறியதாக குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டதில்லை. அதன் காரணத்தினால்தான் சபாநாயகர் அபேவர்தன 2022 அறகலய மக்கள் கிளர்ச்சியின்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்குமாறு தன்மீது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும், அதற்கு பணிந்துபோகாமல் உறுதியாக நின்று அரசியலமைப்பைப் பாதுகாத்த ஒருவராக தன்னை காண்பிப்பதற்கு சபையில் அறிக்கையொன்றை வெளியிடவேண்டும் என்று தீர்மானித்தார் போலும்.
தற்போது கிடைக்கக்கூடிய பதிவுகளின்படி பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1963 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. பத்திரிகை ஆணைக்குழுவுக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுவதை தடுப்பதற்கு அன்றைய சபாநாயகர் ஆர்.எஸ்.பெல்பொல சபையை ஒத்திவைத்த காரணத்தினாலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.
1966 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததற்காக அன்றைய பிரதி சபாநாயகர் சேர்லி கொறியாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
1980 ஆம் ஆண்டில் சபாநாயகர் பாக்கீர் மாக்காருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தேர்தல் ஆட்சேப மனுவொன்றை அடுத்து அன்றைய கலவான தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை உயர்நீதிமன்றம் பதவிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து மூண்ட சர்ச்சையே அதற்கு காரணமாகும். சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு பாக்கீர் மாக்கார் அனுமதித்தார். அவரது உத்தரவு பாராளுமன்றத்தை அவமதித்ததாகக் கூறியே அவருக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டது.
1991 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் குற்றப் பிரேரணையை (lmpeachment motion ) நிராகரித்தமைக்காக சபாநாயகர் எம்.எச். முஹம்மதுவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. (முஹம்மது முன்னிலையிலேயே அந்த பிரேரணையில் தாங்கள் கைச்சாத்திட்டதாக பாராளுமன்ற விவாதத்தில் சில உறுப்பினர்கள் பேசினார்கள் என்பது வேறு விடயம்) பிறகு 1992 ஆம் ஆண்டில் 18 குறைநிரப்புப் பிரேரணைகளை சபையில் விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு அனுமதித்தமைக்காக மீண்டும் அவருக்கு எதிராக ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.
ஆனால், சபாநாயகர் அபேவர்தனவுக்கு எதிரான பிரேரணை அண்மையில் தோற்கடிக்கப்பட்டதைப் போன்றே அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் தோற்கடிக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சபாநாயகர்களை பெரும்பாலும் ஆளும் கட்சியே காப்பாற்றியிருக்கிறது.
தனக்கு எதிரான பிரேரணை மூன்று நாள் விவாதத்தின் இறுதியில் மார்ச் 21 மாலை தோற்கடிக்கப்பட்ட பிறகு அறிக்கையை வெளியிட்ட சபாநாயகர் அபேவர்தன அறகலய மக்கள் கிளர்ச்சியின்போது அரசியலமைப்பை மீறி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்று புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு உள்நாட்டு சக்திகளும் சர்வதேச சக்திகளும் தன்மீது பிரயோகித்த நெருக்குதல்களை உறுதியாக நின்று நிராகரித்து அரசியலமைப்பை பாதுகாத்ததாக பெருமைப்பட்டுக் கொண்டார்.
உயர்நீதிமன்றம் விதந்துரைத்த திருத்தங்களில் பலவற்றை சேர்க்காமல் அரசாங்கம் கடந்த ஜனவரியில் நிறைவேற்றிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தை கைச்சாத்திட்டு சான்றுப்படுத்தியதன் மூலமும் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனின் நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்கியதில் அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பின்போது நடந்துகொண்ட விதம் மூலமும் சபாநாயகர் அரசியலமைப்பை மீறியதாக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
அதனால் அரசியலமைப்பை மீறி ஒருபோதும் செயற்படாதவர் போன்று தனனை ‘ நிரூபிப்பதே’ அவரின் அறிக்கையின் நோக்கமாக இருந்தது.
” அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு பலம்பொருந்திய சக்திகள் நெருக்குதலைக் கொடுத்தன. கொந்தளிப்பான நிலைவரத்தை தணித்து நாட்டைப் பாதுகாப்பது அல்ல, சட்டவிரோதமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலமாக இலங்கையை ஒரு லிபியாவாக அல்லது ஆப்கானிஸ்தானாக மாற்றுவதே அவர்களின் நோக்கம்.
” ஜனாதிபதவியைப் பொறுப்பேற்று அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தவறினால் எனது வீட்டைச் சுற்றிவளைத்து எனக்கு ஊறு செய்யப்போவதாக முக்கியமான சில மதத்தலைவர்கள் கூட அச்சுறுத்தினார்கள். அன்று என்மீது நெருக்குதலைப் பிரயோகித்த அரசியல்வாதிகளில் சிலர் எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் கைச்சாத்திட்டிருந்தனர்.
” நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டதுடன் விவாதத்தில் பஙகேற்கவுமில்லை. வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் இல்லை.
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என்னனுடன் தொடர்புகொண்டு எனக்கு அதிகாரத்தை கைமாற்றுவது தொடர்பில் கருத்துக்களைக் கேட்டார். ஆனால், ஒரு பிரதமரும் அமைச்சரவையும் இல்லாமல் பாராளுமன்ற சபாநாயகர் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு அதிகாரமளிக்கும் எந்த ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லாத நிலையில் நான் ஆட்சியைப் பொறுப்பேற்றால் நாடுபூராவும் பிராந்திய தலைவர்கள் உருவெடுத்து அராஜக நிலை தோன்றும் என்று கூறியபோது ராஜபக்ச அதை விளங்கிக் கொண்டார்.
“அரசியலமைப்பின் பிரகாரம் புதிய அரசாங்கம் அமைப்பது தாமதிக்கப்பட்டிருந்தால் நாடு பிளவடைவதற்கு அது வழிவகுத்திருக்கும். நாட்டின் வெவ்வேறு பகுதிகளை பல்வேறு சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கும்” என்று சபாநாயகர் கூறினார்.
லிபியாவை அல்லது ஆப்கானிஸ்தானை ஒத்த நிலைவரத்தை இலங்கையில் தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்ததாக அவர் குற்றஞ்சாட்டுகின்ற அந்த வெளிநாட்டுச் சக்திகளின் சதி முயற்சியை முறியடித்த தனது உறுதியான செயற்பாட்டை இதுகாலவரை எதற்காக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தாமல் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும்வரை காத்திருந்தார்?
மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டுச்சதி குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடந்தவருடம் வெளியிட்ட ‘ ஒன்பது ; மறைக்கப்பட்ட கதைகள் ‘ என்ற நூலில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஷங் சபாநாயகரை நேரடியாகச் சந்தித்து ஆட்சியைப் பொறுப்பேற்குமாறு நெருக்குதல் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த வேளையில் சபாநாயகர் அதை மறுத்தார். இப்போது கூட அவர் தனது அறிக்கையில் எந்த நாட்டினதோ அல்லது எந்த நபரினதோ பெயரையும் குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொண்டார்.
வெளிநாட்டுச்சதி குறித்து முதலில் வீரவன்சவும் மிகவும் அண்மையில் கோட்டாபயவும் தங்களது நூல்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களையே சபாநாயகரும் தனது அறிக்கையில் ஒப்புவித்திருக்கிறார். எதிரணியினரால் நேர்மையற்ற முறையில் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஒரு ‘ தேசபக்தனாக ‘ தன்னைக் காட்டுவதே அவரின நோக்கம் என்று தெரிகிறது.
தேசபந்து தென்னக்கோனின் நியமனத்தை அங்கீகரிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையில் தனது வாக்கைப் பயன்படுத்தியதற்கு நாட்டின் பாதுகாப்பு மீதான தனது அக்கறையே காரணம் என்றும் சபாநாயகர் கூறினார்.
ஜனநாயக விரோத செயல்களிலும் அதிகார துஷ்பாரயோகம் மற்றும் அரசியலமைப்பு மீறல்களைச் செய்கின்ற அரசியர்வாதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ‘ தேசிய பாதுகாப்பையும் தேசபக்தியையும் ‘ வசதியான கேடயங்களாக கையிலெடுப்பது நமது நாட்டில் ஒன்றும் புதிய விடயமல்ல.
இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்டதாக சட்டமா அதிபர் எழுத்துமூலம் உத்தரவாதத்தை வழங்கியதை அடுத்தே அதில் கைச்சாத்திட்டு சான்றுப்படுத்தியதாகக் கூறிய சபாநாயகர் பொலிஸ்மா அதிபரை தெரிவுசெய்ததில் தனது வாக்கு தவறானது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து குறிப்பிடுகையில் தேசபந்து தென்னக்கோனின் நியமனத்தை எதிர்ப்பதற்காகவே அரசியலமைப்பு பேரவையியின் இரு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கருதப்படுமானால் தனது வாக்கை அளிக்கப்போவதாக ஜனாதிபதிக்கு அறிவித்ததாக தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத் தரப்புக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை பலம் காரணமாக தோற்கடிக்கப்பட்டதை அரசியலமைப்பை மீறி சபாநாயகர் செயற்படவில்லை என்று நிரூபிக்கப்பட்டதாக அர்த்தப்படுத்தமுடியாது.
அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர் தனது வாக்கை பயன்படுத்தியது குறித்து முன்னாள் சட்டமா அதிபரும் நீதியமைச்சின் நிரந்தரச் செயலாளருமான அரசியலமைப்புச்சட்ட நிபுணர் கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகளை இங்கு மீள்பிரசுரம் செய்வது பிரயோசனமானதாக இருக்கும்.
” பொலிஸ்மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்படும் ஒருவரைத் தவிர வேறு எவரும் நியமிக்கப்படமுடியாது என்று அரசியலமைப்பு கூறுகிறது.
” ஏகமனதான தீர்மானம் ஒன்றை எட்டுவதற்கே அரசியலமைப்பு பேரவை முயற்சிக்கவேண்டும் என்கின்ற அதேவேளை, பேரவையின் கூட்டத்தில் பிரசன்னமாக இருக்கும் ஐந்துக்கும் குறையாத உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத பட்சத்தில் பேரவையின் தீர்மானம் செல்லுபடியாகாது என்றும் அரசியலமைப்பு கூறுகிறது.
” பேரவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகருக்கு அடிப்படை வாக்கு (Original vote) இல்லை என்றபோதிலும், வாக்குகள் சமநிலையாகப் பிரிவடையும் பட்சத்தில் அவர் வாக்களிக்கமுடியும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது.
” தேவையான ஐந்து வாக்குகளுக்கும் ஒன்று குறைவாக அரசியலமைப்பு பேரவையின் நான்கு உறுப்பினர்களே ஜனாதிபதியின் சிபாரிசை அங்கீகரித்து வாக்களித்த அதேவேளை, இரு உறுப்பினர்கள் ( தானும் உட்பட) எதிராக வாக்களித்ததாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். இரு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் ஜனாதிபதியின் சிபாரிசை நிராகரித்ததாகவே கருதப்படவேண்டும்.
” ஆனால், சிபாரிசை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக சபாநாயகர் தனது வாக்கை அளித்ததாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். எந்த அந்தஸ்தில் சபாநாயகர் வாக்களித்தார் என்ற கேள்வி எழுகிறது. அவருக்கு அடிப்படை வாக்கு இல்லை.வாக்குகள் சமநிலையாகப் பிரிவடையும் (Tie) பட்சத்தில் மாத்திரம் அவர் அளிப்பதற்கு ஒரு மேலதிக வாக்கு ( Casting vote ) இருக்கிறது.
” அரசியலமைப்பு பேரவை நான்கு — நான்காக பிரிவடைந்த நிலையில் மேலதிக வாக்கை பயன்படுத்தியதாக சபாநாயகர் கூறினார். இரு உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களித்த போதிலும், கூட்டத்தில் இரு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததை மேலும் இரு எதிர்ப்பு வாக்குகளாகக் கருதி வாக்குகள் சமநிலையாகப் பிரிந்ததாக நினைத்து ஜனாதிபதியின் சிபாரிசை அங்கீகரிப்பதற்கு தேவையான பெரும்பான்மை வாக்குகளை உறுதிசெய்வதற்கு தனக்குரிய மேலதிக வாக்கைப் பயன்டுத்த சபாநாயகர் தீர்மானித்தார் போன்று தோன்றுகிறது.
” வாக்களிப்பில் கலந்துகொள்ளாத ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்ததாகக் கருதப்படவேண்டும் என்று அரசியலமைப்பு கூறவில்லை.
” வாக்களிப்பில் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை
என்றால் அவர் தனது வாக்கை அளிக்கவில்லை என்பதே அர்த்தமாகும். எதிரானது என்றோ அல்லது ஆதரவானது என்றோ எண்ணப்படுவதற்கு அங்கு வாக்கு எதுவும் கிடையாது.
” எனக்கு தெரிந்தவரையில் இலங்கையிலோ அல்லது வேறு எங்குமோ பாராளுமன்ற நடைமுறையில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத உறுப்பினர் ஒருவர் எதிராக வாக்களித்ததாக ஒருபோதும் கருதப்பட்டதில்லை. வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்றால் வாக்களிக்கவில்லை என்பதே அர்த்தம். அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகரின் செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது மாத்திரமல்ல, யதார்த்தத்துக்கும் புறம்பானது.”
(ஈழநாடு )