பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் 

பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் 

— ராகவன் —

கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன.  

இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. 

டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார்.  அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ் மொழி அவருக்கு தெரிந்திருப்பினும் அவரது மொழியாளுமை பிரஞ்சு மொழியில் தான். அவரது தாய் மொழி பிரஞ்சு மொழி என்றே கூறலாம். புவியியலில் மானிட புவியியல் என்பது  ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் நிலப்பரப்புக்குமான உறவுகளை ஆய்வது.  அதுவே மாதவனின் துறைசார் தேர்ச்சி.

தனக்கு முடிந்தளவில் தமிழில்  ஒர் அறிமுகத்தை அவர் செய்தபின் நிர்மலா அவரது ஆய்வை தமிழில் வாசித்தார். அவரது ஆய்வுக்கட்டுரை புலம்பெயர் தமிழ் இனப்பிரதேசங்களின் இயக்கவியல் பற்றியது. 

கோலாலம்பூர், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் 

 போன்ற நாடுகளில் தமிழர்கள் தமது கலாசார பாரம்பரியங்களை நிலைநாட்ட முயற்சிப்பது, அதன் விளைவான புவியியல் மாற்றங்கள் போன்ற விடயங்களை ஆய்வு செய்த கட்டுரை அது.

அது தவிர 2002 சமாதான ஒப்பந்த காலத்தில் அவர் இடப்பெயர்வு சம்பந்தமான சமூக, புவியியல் ஆய்வொன்றையும் யாழ் குடா நாட்டில்  மேற்கொண்டிருந்தார். சாதிய அடையாளத்தை வைத்து ஒதுக்கும் முறை ஒழிந்து கொண்டு வரும் நிலை இருப்பினும், சாதிய அமைப்பு முறை ஒழிந்ததால்  சாதிய யதார்த்தம் அருகிவிட்டதென பொருள் கொள்ள முடியாது. அகமணம், சாதிப்பற்று போன்ற காரணிகள் சாதியத்தை நிலை நிறுத்துகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் பணம் சாதிய பிரிவினைக்கான உந்து சக்தியாக தொழிற்படுகிறது என்கிறார் அவர். 

மாதவன், தமிழர்களிடம் உள்ள மதம், சாதி இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, அவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்ற  தனது கள ஆய்வை மேற்கொண்டார். 

அதில் அவர் குறிப்பிடுவதானது – அடிமை குடிமை முறை கொண்ட சாதிய அமைப்பு முன்னர்  இருந்தது. அத்துடன்  சாதிய அமைப்பு ஆழமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆனால்  தேசிய விடுதலை போராட்டம் காரணமாக நிகழ்ந்த இடப்பெயர்வு, விடுதலைப்புலிகள் சாதிய வேறுபாடுகள் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமானவை என்ற கருத்தியலை கொண்டிருந்தமை, சாதிய வேறுபாடுகளை எதிர்க்கும் சட்டங்களை கொண்டுவந்தமை, விடுதலைப்புலிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் இணைந்தமை போன்ற விடயங்களால் சாதிய வேறுபாடுகள் அற்ற நிலை ஒன்று தோன்றியது. அத்துடன் தொழில் சார் சாதிய அமைப்பு முறையிலிருந்த மாற்றங்களும் சாதியத்தை ஆட்டம் காண வைத்தன. 

ஆனால் விடுதலைப்புலிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி சமாதான சூழல் ஒன்று உருவாகையில் சாதியம் மீண்டும் தலையெடுத்தது என்பதாகும்.

அதற்கான முக்கிய காரணங்களாக இரண்டு விடயங்களை அவர் பார்க்கிறார்.

ஒன்று அகமணமுறை. – இளைஞர்கள் நிகழ்ந்த  மாற்றங்களினால் சாதிய வேறுபாடுகளை பொருட்படுத்தா நிலை ஏற்பட்ட போதிலும் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் பெற்றாரின் சொற்கேட்டு சாதிக்குள் திருமணம் செய்வது. 

மற்றது யுத்ததால் பெரும்பாலான வெள்ளாளர்கள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் உழைத்த பணத்தை உற்றார் உறவினர்களுக்கு அனுப்பியதால் சமாதான காலத்தில் மீண்டும் தமது இருப்பை உறுதி செய்ய ஆதிக்க சாதியினர் குறித்த பகுதிகளில் காணிகள் வாங்கி  வீடுகள் கட்டி வாழ்வதால்  ஏற்பட்ட சமூக புவியியல் மாற்றங்கள் பற்றி அவர் ஆய்வு செய்தார். நளவர்களில் ஒரு பகுதியினர்   புலம்பெயர்ந்து சென்றதால் அவர்களது சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் அவர் குறிப்பிடுகிறார். பள்ளர், பறையர் போன்றவர்களின் பொருளாதார நிலை காரணமாக அவர்களின் சமூகங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் பெரிதும் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.   

தேசிய விடுதலைப்போராட்டத்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் சாதியத்தின் நீடிப்பு தொடர்கிறதென்றும் குறிப்பிட்டார். 

முடிவில், யுத்தத்திற்கு முன்னரான சாதிய அமைப்பு யுத்தத்திற்கு பின்னராக மாறி வருகிறது. காதல் திருமணங்கள் மற்றும் சாதி சார் தொழில்கள் மாறிவருதல் போன்றவற்றால் சாதி ரீதியான புவியியல் சார்ந்த சாதிய ஒதுக்கல்கள் படிப்படியாக மறைந்து வருகின்றதென அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார்.

அவரது ஆய்வை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏதும் கிடையாது.  முக்கியமாக சாதி சார்ந்த தொழில்கள் அருகுவதால் சாதியம் விரைவில் ஒழிந்துவிடும் என்ற  கருதுகோளை அவர் முன்வைப்பதில்  சில பிரச்சனைகள் உண்டென்பதே எனது பார்வை.  இது  சமூக அறிவியல் ரீதியாக விவாதிக்கப்படவேண்டிய விடயம்.

ஆனால் ஒரு துறை சார் ஆய்வை ஒருவர் மேற்கொள்ளும் போது, அவரது உழைப்பை மதிப்பது அவசியம். அத்துடன் அவரது ஆய்வை உள்வாங்கி அதற்கான விமர்சனங்களை முன்வைப்பதே அறிவார்ந்த செயல். 

அவரது ஆய்வு பற்றிய எவ்வித அறிவார்ந்த  பார்வையும் இன்றி, எவ்வித வாசிப்பும் இன்றி  வந்தவர்களில் ஒருவரான நெய்தல் நாடன் அவரைப்பார்த்து சாதி அடிமை முறை இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்; அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டார். மாதவன் அடிமைமுறை சமகாலத்தில் இருப்பதாக சொல்லவில்லை. அத்துடன்  மாதவனுக்கு தமிழ் புரிவது கடினம். எனினும் அவர் யாழ்ப்பாணம் பற்றிய மற்றவர்களின் ஆய்விலிருந்து தான் எடுத்தேன் என்றார். 

கார்வண்ணா எழுந்து தேசியம் பற்றி எழுதாமல் சாதியம் பற்றி எழுதியது தேசியத்தை வீழ்த்தும் சதி என்றவகையில் கூக்குரல் இட்டார். தேசியம் சமாதானத்துக்கு போன காலகட்டத்தில் சாதியம் மீண்டும் தலைதூக்கும் காரணிகளையே மாதவன் கண்டறிந்தார். அவரது ஆய்வானது சமூக புவியியல் மாற்றம் பற்றியது. எனவே தேசியம் பற்றி ஆய்வு செய்யவில்லை என கூக்குரல் இடுவது தற்குறித்தனமே.

அதிருக்க அவர்கள் நான்கு பேரும் அவை நாகரீகத்துக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் மற்றவர்களின் ஜனநாயக உரிமை பற்றி கரிசனை ஏதுமற்று  தொடர்ந்து இடைமறிப்பு செய்து அவர்களது அறியாமையை வெளிப்படுத்தினர். அதனை பெரும் வீரமாகவும் நினைத்து புளங்காகிதம் அடைந்தனர். உண்மையில் மாதவன் விடுதலைப்புலிகளின் சாதி ஒழிப்பு சட்டங்களால் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றே  ஆய்வில் கண்டறிந்தார். ஒருவகையில் விடுதலைப்புலிகளின் சாதிய ஒழிப்பு நடவடிக்கைகளை விதந்துரைத்தார்.

இது  பற்றி எவ்வித வாசிப்போ அறிவோ அற்று,ஒரு  இரண்டாம் தலைமுறை புகலிட அறிவாளியை அவமானப்படுத்துவதாக நினைத்து அவர்கள் தம்மையே அவமானப்படுத்திக்கொண்டனர்.

சமாதான காலத்தில் சாதியம் மீளுருவாக்கம் அடைவதன் காரணிகளைத்தான் அவர் ஆய்ந்தார். 

இதனைக்கூட விளங்கமுடியா தற்குறிகளாகத்தான் இவர்களது நடவடிக்கை இருந்தது. 

அதன் பின்னர் சாதியம் பற்றிய கள நிலை உரை ஒன்றை தேவதாசன் ஆற்றினார். ஜேசிபி இயந்திரம் மூலமான தேர் இழுப்பிலிருந்து நல்லிணக்கபுர மதில் வரை விடயங்கள் பேசப்பட்டன.

உரை முடிந்தவுடன் ஜேசிபியால் தேர் இழுத்ததற்கான காரணம் குடும்ப சச்சரவு என்று கார்வண்ணா கதை அளந்தார். இலக்கிய சந்திப்பில் இலக்கியத்தை பேசுவதை விடுத்து சாதி பற்றி எதற்கு பேச்சு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தினார்.

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் இவர்கள் குறுக்கே குரல் எழுப்புவதை நிறுத்துமாறும் கைகளை உயர்த்தினால் ஒழுங்கு முறையில்  அவர்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும் எனவும்  பல முறை கூறிய போதும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து கூச்சல் இட்டு தமது அறியாமையை நன்கு வெளிப்படுத்தினர். 

ஒன்று மட்டும் தெரிகிறது. வந்தவர்கள் நால்வரும்  எந்த இயக்கப்பக்கமும்  தலை வைத்தும் படுக்காமல் வெளி நாட்டில் இருந்து கொண்டு வீரம் பேசும் முக நூல் போராளிகள். 

விடுதலைப்புலிகளின் மோசமான அரசியலை மாற்றுக்கருத்தாளர்கள் கடுமையாக விமர்சித்தபோதும் விடுதலைப்புலிகளிற்கும் மற்றைய இயக்கங்களுக்கும் தமிழ் தேசிய கருத்தியலை வரித்துச் சென்றவர்களில் பெரும்பாலும்  ஒரு பண்பு இருக்கும். அவர்கள் சேர்ந்து வாழப்பழகியவர்கள். அத்துடன் ஒரு கட்டுப்பாட்டை பேணியவர்கள். இவ்வாறு கூச்சலிட்டு குழப்பும் பண்பு அவர்களிடம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. என்னிடம் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமது அரசியல் தஞ்ச கோரிக்கைக்காக வந்திருக்கின்றனர். மிகவும் பண்பாக நடப்பர். அதேபோல் தான் மற்றைய  இயக்கங்களிலிருந்து வந்த பலரும். 

இந்த சந்திப்புக்கு விடுதலைப்புலிகளில் அங்கத்தவராக இருந்து  விடுதலைப்புலிகளை இப்போதும் விட்டுக்கொடா நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும் வரை கண்ணியமாக இருந்தார். தனக்கு தரப்படும் நேரத்தில் அவர் கேள்விகளையும் கேட்டார். இந்தப்பண்பு தேசியம் என்று கூக்குரலிட்டவர்களிடம் இருக்கவில்லை. 

பிரபாகரன் மிக மோசமான சர்வாதிகார அமைப்பாக புலிகளை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி அதனை ஒரு அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பினும் அவர் சாதிய சமூக அமைப்பு தவறானதென்ற பார்வையை கொண்டிருந்தார். 

சாதி ஒழிப்பிற்கான சமூக நீதி அரசியலை விடுதலைப்புலிகள் எடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, விடுதலைப்புலிகள் அமைப்பு சாதியத்துக்கெதிரான சட்டங்களை கடைப்பிடித்தது. 

விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதியம் இல்லாவிட்டால் அவ்வாறான சட்டங்களின் தேவை ஏற்பட்டு இருக்காதென்பதை ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

அத்துடன் பிரபாகரன் ‘வெள்ளாள சோசலிசம்’ என்று ஆதிக்க சாதிகள் சோசலிசம் பேசுவதை நகையாடினார். அவருக்கு சாதியம் சம்பந்தமான ஆழமான தேடல் இல்லை எனினும் சாதிய வேறுபாடு வெள்ளாள ஆதிக்கம் என்பது பற்றிய புரிதல் இருந்தது.  வெள்ளாளர்கள் எவ்வாறு தொழில்வாய்ப்பு விடயங்களில் கரையாரை ஒதுக்கினார்கள் என தனது மாமா தனக்கு சொன்னதாக என்னிடம் கூறி இருக்கிறார். அத்துடன்  வெள்ளாளரை வேரறுக்க பிறந்த பரசுராமன் நானே என்றும்  ஒருமுறை எனக்கு சொன்னார்.

அதே போல்  புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவையிடம் நண்பர் ஒருவர் சாதியம் பற்றி கேட்க அவர் சொன்னாராம் :  சாதி வசை செய்வோருக்கு குண்டியில் அடிச்சு பிரயோசனமில்லை ; அது மண்டையில் இருக்கு என்று.

யோகுவும் கார்வண்ணனும் புலியில் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு   சாதி  இப்போது இல்லை ; ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினர் தேர் இழுத்தது வடம் பிடித்தால் தீட்டு என்பதற்காக இல்லை என கூறி இருப்பார்களாயின் அவர்களுக்கு ஆறு மாசம் சமையல் செய்ய பனிஸ்மண்ட் கிடைத்திருக்கும். அதன் பின்னும் தொடர்ந்தால் சீட்டு கிழிக்கப்பட்டிருக்கும்.

இலக்கிய சந்திப்புக்குழு இவர்களை வெளியேற்றாமல் தொடர்ந்து கத்தவைத்தது ஒரு நல்ல விடயம். இவர்களது உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் முக நூல் பக்கம் சென்று பார்த்தால் இவர்களது அவதூறுகள், பெண்வெறுப்பு என்பவை  வெள்ளிடை மலை. இலக்கிய சந்திப்பு காணொளியில் இவர்களது தற்குறித்தனத்தை காணலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *