(‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர்)
— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —
நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் அமரர் தோழர் பத்மநாபாவின் பிறந்த (19.11.1951) தினமாகும். அத்துடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான தற்காலிகமாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் நடைபெற்று (19.11.1988) 35 ஆவது ஆண்டு நிறைவு தினமுமாகும்.
பத்மநாபா உட்பட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் 13 பேர் சென்னை சூளைமேட்டில் வைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டது 19.06.1990 அன்று ஆகும்.
பத்மநாபாவும் சக தோழர்களும் கொல்லப்பட்ட தினமான ஆனி 19 தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டும் பத்மநாபாவின் பிறந்த தினமான நவம்பர் 19 தோழமை தினமாகக் கொண்டாடப்பட்டும் வருகின்றன.
இந்த வருடமும் நவம்பர் 19ஆம் திகதி தோழமை தினமாகத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினால் கொண்டாடப்பட்டுள்ளது.
தோழர் பத்மநாபாவின் மறைவுக்குப் பின்னரான காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இரண்டாகப் பிளவுபட்டுத் தங்களை ஈ பி ஆர் எல் எஃப் என அழைத்துக் கொள்வதும் தற்போது தேர்தல்கள் திணைக்களத்தில் ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி’ எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குவதும் சி வி விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகவும் சிவசக்தி ஆனந்தனைச் செயலாளராகவும் (இப்பெயர் மாற்றம் பெற்ற ஈபிஆர்எல்எஃப் இல் சுரேஷ் பிரேமச்சந்திரனின் பதவி மற்றும் வகிபாகம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. ஊடகங்கள் இப்போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஈ பி ஆர் எல் எஃப் கட்சியின் தலைவர் என்றே குறிப்பிடுகின்றன) கொண்டதுமான தெளிவில்லாத-சிக்கலான அணி ஒரு அணியாகவும், ‘பத்மநாபா மக்கள் முன்னணி’ என வெளிப்படுத்தப்பெற்றதும் தேர்தல் திணைக்களத்தில் ‘தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி’ எனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக விளங்குவதுமான தோழர் சுகு (திருநாவுக்கரசு சிறிதரன்) தலைமையிலான அணி மற்ற அணியாகவும் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அடையாளப்படுத்தப்பெற்றுள்ளன.
இவற்றில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் அணி தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்று அரசியல் செய்ய, திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தோழர் பத்மநாபா வழியில் அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது.
இந்தப் பின்புலத்தில், இந்த வருடம் தோழமை தினத்தை (நவம்பர் 19) முன்னிட்டுத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (அதன் தலைவராகத் தோழர் சுகு விளங்குகிறார்), ‘மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளி‘-‘மாகாணங்களில் மக்களாட்சிக்கு வழிவிடு‘ ‘இனியும் வேண்டாம் இனரீதியான பாரபட்சங்களும் ஒடுக்கு முறைகளும்‘ – ‘வேண்டும் இனங்களுக்கிடையே சமத்துவமும் சகோதரத்துவமும்‘ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுவரொட்டி வாசகங்களின் உள்ளடக்கமே அறிவுபூர்வமாகவும் – யதார்த்த பூர்வமாகவும் இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் தற்போதைய தேவையாகும். இத்தேவையும் கோரிக்கையும் வடக்குக் கிழக்கின் கிராம மட்டங்களிலிருந்து ஒரு ‘வெகுஜன இயக்கம்’ ஆகக் கட்டி எழுப்பப்படாதவரை – மேலெழும்பாதவரை இச்சுவரொட்டிச் செயற்பாடுகள் வெறுமனே சுலோகங்களுடன் அடங்கிவிடும்.
கடந்த சுமார் நூறு வருடங்களாக அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கூடாகவும்-அகிம்சைப் போராட்டங்களினூடாகவும்-ஆயுதப் போராட்டத்தினூடாகவும் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தத்தையும் அதன் கீழமைந்த மாகாண சபை முறைமையும் தவிர வேறு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்பதே வரலாறு எடுத்துக் கூறும் உண்மையாகும்.
இந்தத் தீர்வு எட்டப்படுவதில் முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினதும் அதன் செயலாளர் நாயகம் அமரர் தோழர் பத்மநாபாவினதும் வகிபாகமும் அவர் மேற்கொண்ட துணிகரமான அரசியல் தீர்மானமும் எத்துணை தீர்க்கதரிசனமானது என்பதையும்-மக்களின் நலன் சார்ந்தது என்பதையும்-அரசியல் சமயோசிதமானது என்பதையும் இன்று வரலாறு எண்பித்தும் உள்ளது.
ஆனால், துரதிஷ்டம் என்னவெனில் வடக்குக் கிழக்குவாழ் தமிழ்ச் சமூகம் இந்த உண்மைகளை இன்னும் உணர்ந்த பாடில்லை. இந்த உண்மைகளை இப்போதுதானும் மக்கள் உணர்வதற்கு 2001 இல் ஆரம்பித்துப் பின் துண்டு துண்டுகளாக உடைந்துபோன பின்பும் கூட்டமைப்பு என்றும் தமிழ்த் தேசியத் தரப்பு என்றும் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் தேர்தல் வெற்றிகளை மட்டுமே இலக்காகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் விடுவதாயுமில்லை. இவர்கள் தொடர்ந்து தமது நலன்களுக்காக மக்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் இவர்களைச் சரியாக அடையாளம் காணும்போது மட்டுமே நேர்மறையான மாற்றங்கள் எதுவும் தமிழர் அரசியலில் ஏற்படச்சாத்தியமுண்டு.
மாகாண சபை முறைமையை வலுப்படுத்தப்படுவது ஒன்றே தமிழர்களுக்குத் தற்போதைய நிலையில் பாதுகாப்பானதும் பயன்மிக்கதுமாகும். ‘இரு தேசம்; ஒரு நாடு’ என்பதோ- சமஷ்டி என்பதோ-சர்வதேசம் தீர்வைக் கொண்டு வரும் என்பதோ-புதிய அரசியலமைப்பு மூலம் 13 ஆவது திருத்தத்தை விடக் கூடுதலான அதிகாரங்கள் கிடைக்கும் என்பதோ தற்போதைய தென்னிலங்கை-இந்து சமுத்திரப் பிராந்திய-பூகோள அரசியல் நீரோட்டங்களைப் பார்க்கும் போது சாத்தியமேயில்லை. இப்படியே காலம் இழுபட்டுப் போனால் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்’ பண்ண முடியாத நிலைமைதான் தமிழ் மக்களுக்கு ஏற்படும். அது ஏற்படத் தொடங்கியும் விட்டது. ஆனால் தமிழ்ச் சமூகம் எச்சரிக்கை அடைந்ததாகத் தெரியவில்லை. கோவணம் உரியப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையிலும் பட்டுவேட்டிக் கனவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
தற்போதைய சூழலில் தேசிய நல்லிணக்கத்தினூடாக மட்டுமே மாகாண சபை முறைமையை வலுப்படுத்த முடியும். இதனை விடுத்து வேறு மார்க்கங்களை நாடுவது ‘விஷப்பரீட்சை’ யாகும். எனவே வடக்குக் கிழக்குத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தமக்கு நாமகரணம் சூட்டிக் கொண்டு வலம்வரும் போலித் தமிழ்த் தேசியவாதிகளை முற்றாகப் புறக்கணித்து மாகாண சபை முறைமையை வலுப்படுத்த முனையும் சக்திகளுக்குத் தமது அரசியல் அங்கீகாரத்தை வழங்கத் தாமாகவே முன்வரவேண்டும்.