வே. பிரபாகரன் :    தம்பியில் இருந்து தலைவர் வரை……!

வே. பிரபாகரன் : தம்பியில் இருந்து தலைவர் வரை……!

(மௌன உடைவுகள் 54)

— அழகு குணசீலன் —

2009 க்கு முன்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஓடியோக்கள் , வீடியோக்கள், நாடகங்கள், நடனங்கள், தெரு கூத்துக்கள், நூல்கள் என  எண்ணற்ற   போர்க்கால கலை, இலக்கிய படைப்புகள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டன. இவை குறிப்பாக ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பிரச்சார, நிதி சேகரிப்பு  நோக்கங்களுக்காக செய்யப்பட்ட வெளியீடுகள்.

ஆயுத மௌனிப்புக்குப்பின்னர்  வெளி வந்த பல நாவல்கள் கடந்து வந்த போர்க்காலம் பற்றி பேசுபவையாக,  புலம்பெயர்ந்த புலிகளின் அனுபவங்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில்  புலிகளுக்கிடையேயே சர்ச்சைக்குரியவையாகப்  பார்க்கப்படுகின்ற இரு முக்கிய  ஆவணங்களை இங்கு குறிப்பிட்டுக்கூறமுடியும்.  

அவற்றில் ஒன்று “வெந்து தணிந்தது காடு” என்ற நாவலும் , அதை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படமும். மற்றையது புலிகளின் தலைவரின் உரைகள், நேர்காணல்கள், கடிதங்கள்,  வாழ்த்துச்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதுமான ஒரு தொகுப்பு.

“எனது மக்களின் விடுதலைக்காக…”  என்ற மகுடத்தில் தேடல்-திரட்டல்-தொகுத்தல் இவற்றை செய்திருப்பவர் பொன்ராசா அன்ரன். சுவிட்சர்லாந்தில் முகவரியைக்கொண்ட நீதியான சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான நடுவம் என்ற அமைப்பின், பிரவாகம் வெளியீடாக , “எனது மக்களின் விடுதலைக்காக”…. வெளிவந்துள்ளது. இதன் முதற்பதிப்பு 18.மே.2022 .  அதாவது முள்ளிவாய்க்கால் 13 வது ஆண்டு நினைவுநாள்.

” வெந்து தணிந்தது காடு”: இதற்கு கனடாவில் எதிர்ப்பும், விமர்சனங்களும், திரையிடுவதற்கான தடையும் ஏன்? மக்கள் படத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் அந்த கோரிக்கையை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதே போன்றே “எனது மக்களின் விடுதலைக்காக.” தொகுப்போடும்  புலம்பெயர்ந்த முன்னாள் புலிகள் உடன்படவில்லை. இந்த சலசலப்பு வெளியீட்டு விழாவிலும் ஒலித்தது.

பொன்ராசா அன்ரனின் தொகுப்போடு  உங்களுக்கு ஏன் உடன்பாடில்லை? என்று கேட்டால் எதிர்ப்வர்கள் கூறுவது இதுதான்.

(*)  தலைவரின் பெயர் பொதுவாக, வெறுமனே “பிரபாகரன்” என மொட்டையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாக்காரர்களே “மேதகு” என்று குறிப்பிடும்போது…… என்று இழுக்கிறார்கள்.

(*) நாங்கள் தலைவரை முப்படைகளின் கூட்டுப்படைகளின் தளபதியாகப் பார்க்கிறோம். புலிகள் என்றாலே வெளிப்படுவது இராணுவ கட்டமைப்பும் அதன் உறுதியான தலைமைத்துவமும்தான். இத் தொகுப்பில்  அவை உள்ளடக்கப்படவில்லை. புலிளுக்கு அரசியல் இரண்டாம் பட்சம்.

(*) இவ்வாறான ஒரு தொகுப்பை செய்யவேண்டும் என சுப. தமிழ்ச்செல்வன் தன்னைக் கேட்டுக்கொண்டதாக பொன்ராசா அன்ரன் குறிப்பிட்டுள்ளார். இதன் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது.

(*) முன் அட்டைப்படத்தில் தங்கள் தலைவரை இராணுவதளபதி சீருடையில் பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள். வெறும் வெள்ளை சிவில் உடையில் அல்ல. அட்டைப்பட ஓவியம் இளஞ்செழியன் என்பவரால் வரையப்பட்டுள்ளது. ஓவியத்தில் பிரபாகரனை தேடுவதில் அவர்களுக்கு திருப்தியில்லை. பிரபாகரன் இராணுவ சீருடையில் பின் அட்டையில் மறைந்துள்ளார்.

(*) ஒட்டு மொத்தமாக புலிகளின் தலைமையின் இராணுவ ஆளுமையை தொகுப்பில் காணவில்லை என்ற கருத்தை  புலிகள் கொண்டுள்ளனர். 

(*) பொன்ராசா அன்ரன் தனது தொகுப்புரையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்தை மறைமுகமாகப் பேசுகிறார்.  தலைவர் இருக்கிறார், மனைவி மதிவதனியும், மகள் துவாரகாவும் இருக்கிறார்கள். இவை மட்டுமா ? பொட்டம்மானும் மனைவி வத்சலாவும் இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்தி சொல்பவர்கள் தொகுப்பாளரோடு முரண்படவே செய்வார்கள். தமிழ்தேசிய தாயக, புகலிட அரசியல் பரப்பில் இந்த ஆவணம் அதிகம் பேசப்படாததற்கும் இவையே காரணங்கள்.

மொத்தத்தில் 800 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் பிரபாகரனின் வாழ்க்கை குறிப்பை தவிர்த்து 197 ஆவணங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1984 இல் விடுதலைப்புலிகளின் தலைவர் இந்திய ஆங்கில  ஏடான “சண்டே”  க்கு வழங்கிய பேட்டியில் தொடங்கி , மாவீரர் நாள் உரைகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான கடிதத்தொடர்புகள் உள்ளிட்ட 12.01.2009 அன்று பிரபாகரன் செல்வராசா பத்மநாதன் என்ற பெயரைக் கொண்ட கே.பி.யை அனைத்துலக உறவுத்துறையின் தலைவராக நியமித்திருப்பதை அறிவிக்கும் கடிதம் வரை இடம்பெறுகிறது. இதன் மூலம் முள்ளிவாய்க்காலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே புலிகளுக்கு இருந்த “நெருக்குவாரத்தை” அனுமானிக்க முடியும். 

1985 டிசம்பர் 30ம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் இந்திய “புரண்ட்லைன்” பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் “எமது தோழர்கள் மக்களோடு நெருக்கமான உறவைப் பேணுகிறார்கள்…..” என்று கூறுகிறார். பொதுவாக புலிகளின்  இயக்கக்கட்டமைப்பில்  “தோழர்” என்ற வார்த்தை தவிர்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. 1985 இல் பிரபாகரன் அதை உச்சரித்துள்ளார்.  இது நிச்சயமாக மார்க்கிஸ வர்க்க அரசியல் அர்த்தத்தில் பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த வார்தைப்பிரயோகத்திற்காகவே மற்றைய அமைப்புக்களை “நையாண்டி” பண்ணியவர்கள் புலிகள். வங்கம் தந்த பாடத்தை வாங்கி மறு வியாபாரம் செய்தவர்கள். மாற்று அமைப்புகளை தடை செய்தவர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, மற்றும் ஈழ தேசிய விடுதலை முன்னணி தொடர்பில் உங்கள் நிலைப்பாடு  என்ன? என்ற கேள்விக்கு “எம்மைப்போன்று அவர்களும் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கூறுகிறார்.

ஆனால் மூன்று மாதங்கள் கழிந்த 1986 மார்ச் 23ம் திகதி  பம்பாய் ” ஜென்டில்மன்” சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி  குறித்த கேள்விக்கு அளித்த பதில் முற்றிலும் வேறுபட்டது. இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் சூழலில் இது முக்கியமானது.

“தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.தமது சுயநல அரசியல் அபிலாஷைகளைகளுக்காக எமது மக்களை ஏமாற்றி வரும் பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகள் இவர்கள். தனித்தமிழ் அரசு அமைக்கப் போவதாகக்கூறி இவர்கள் 1977 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எமது மக்களிடம் மனுப்பெற்றனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இவர்கள் எதையுமே செய்யவில்லை. அதே வேளை அற்ப சலுகைகளுக்காக இவர்கள் அரசுடன் பேச்சுக்களை நடாத்துகிறார்கள். இந்த வகையில் இவர்களது அரசியல் நடவடிக்கைகளை துரோகத்தனம் என்றும் சந்தர்ப்பவாதம் என்றுமே நான் வர்ணிப்பேன்” என்கிறார் பிரபாகரன்.

 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்டது என்றும், தலைவரால் வீடு சின்னம் தேர்வு செய்யப்பட்டது என்றும் பாராளுமன்ற அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய கட்சிகளின் செயற்பாட்டில் 37 ஆண்டுகள் கடந்தும் எந்த மாற்றத்தையும் காணமுடியாத நிலையே உள்ளது. வே. பிரபாகரனின் இந்த வார்த்தைகளை 2009 க்குப் பின்னர் முன்னாள் புலிகள் கூட கிடப்பில் போட்டுவிட்டு கதிரை அரசியலே செய்கிறார்கள் இதுதான் களநிலை.

1986 இல் இந்து ஆங்கில ஏட்டின் ஆசிரியர் ராம் கண்ட நேர்காணலில் விடுதலைப்புலிகளின் சோஷலிச முரண்பாடு வெளிப்படுகிறது. இந்திய இராணுவ பலத்தை மெச்சும் பிரபாகரன் வெளிப்படையாக சீனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார். …… “இல்லை என்றால் இந்நேரம் சீனா டெல்கிக்கு வந்திருக்கும்” என்று சொல்கிறார். இன்றைய பிராந்திய வல்லரசு அரசியலில் இந்திய, சீன நிலைப்பாடுகளில் பாரிய செயற்பாட்டு மாற்றங்கள் இல்லை எனினும் அன்றே புலிகளின் தலைமை சீன எதிர்ப்பு வாதத்தை கொண்டிருந்ததை காணமுடிகிறது.

1986 இல் திம்பு ஆலோசனைகளின் தொடர்ச்சியாக மாகாண சபைகள் தீர்வாக முன்வைக்கப்பட்டபோது பிரபாகரன் அதை நிராகரிக்கிறார். 1986 நவம்பர் முதலாம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். க்கு எழுதிய கடிதத்தில் வடக்கு , கிழக்கு இணைக்கப்படாத தனித்தனியான மாகாணசபைகளை நிராகரிப்புக்கான  முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளார்.  1987 இல் இந்திய இலங்கை உடன்பாடு வடக்கு -கிழக்கை  தற்காலிகமாக இணைத்தபோதும்  ஜனாதிபதியும், பாராளுமன்றமும் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்றும், கலைக்கமுடியும் என்றும் 11.10.1987 இல் எம்.ஜி. ஆர்.க்கும், ஒரு நாள் கழித்து 12.10.1987 இல் இந்தியப்பிரதமர்  ராஜீவ் காந்திக்கும் பிரபாகரனால் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை விடவும் பொது வெளியில் வெளிவராத சர்வதேச தேச மட்டத்திலான தொடர்புகளைக் கொண்ட ஆவணங்களை இந்த தொகுப்பு கொண்டுள்ளது. ஐ.நா.செயலாளர் நாயகம், அணிசேரா நாடுகளின் தலைமை,  தென்னாப்பிரிக்க தலைவர் தபோ உம் பெக்கி , பிரான்ஸ், இங்கிலாந்து தலைவர்கள், நோர்வே அரசு என்பனவற்றுக்கு எழுதப்பட்ட கடிதங்களுடன் வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல் , கிழக்கு திமோர் பிரதமர் இராமோஸ் கோற்றா, எரித்திரியா ஜனாதிபதி இசாயிஸ் அப் வேக்கி போன்றவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் கடல்வழி போக்குவரத்து இராணுவ இலக்கை பின்னணியாகக்கொண்டவையாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. அதேபோன்று  சிவசேனை பால் தாக்கரே, பாரதீய ஜனதா கோவிந்தாச்சாரியா, ஜோர்ஜ் பெர்னாண்டஸ் போன்ற  தெரிவுசெய்யப்பட்ட  பல வட இந்திய அரசியல் தலைவர்களுடனும் விடுதலைப்புலிகளின் தலைமை தொடர்புகளைப் பேணி வந்துள்ளது. இவையெல்லாம் ஒரு கடிதம் என்பதற்கு அப்பால் ஆழமாக ஆராயப்படவேண்டிய பின்புலத்தைக் கொண்டவை.

இத்தொகுப்பின் இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாற்றுக்குறிப்பு என்ற தலைப்பிலான பதிவில்  தமிழ்மாணவர் பேரவை, புதிய தமிழ்ப் புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களின் பரிணாம வளர்ச்சியில் பல தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு பிரபாகரன் மட்டுமே முதன்மைப்படுத்தப்படுகிறார். பல தாக்குதல்கள் குழுவாக மேற்கொள்ளப்பட்ட போதும் அப்பட்டியலில் மற்றவர்களைக் காணவில்லை. கூட்டுப் பொறுப்பு மறைக்கப்படுகிறது. தமிழ் மாணவர் பேரவை பற்றி பேசப்படுகிறது அங்கு சிவகுமாரனை தேடியும் காணவில்லை.

1972 புதிய தமிழ்ப் புலிகளின் தோற்றம் , 1976 இல் தமிழீழ விடுதலைப்புலிகளாக அதன் வளர்ச்சி இவற்றில் அதன் ஆரம்பகால போராளிகள் மறைக்கப்பட்டுள்ளார்கள். 1976 புத்தூர் வாங்கிக்கொள்ளை,  பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலை என்பன  இந்த இருட்டடிப்பில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை. உமா மகேஸ்வரனின் தலைமைத்துவம் பற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மடுக்காட்டில் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதலின்போது அந்த முகாமில் இருந்தவர்களில் நாகராஜா, செல்லக்கிளி, உமாமகேஸ்வரன், செட்டி போன்றவர்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த முகாமில் அப்போது இல்லாத பிரபாகரன் பற்றி பேசப்படுகிறது. பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் மீதான துப்பாக்கி சூட்டில் பிராபாகரனுடன்  உமாமகேஸ்வரன் உடனிருந்தார்.  ஏற்கனவே  உமாமகேஸ்வரனை அறிந்திருந்ததினாலேயே  அவர்களைக்கண்டதும் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி கனகரத்தினம் கதைக்க முனைந்தார்.

புதிய தமிழ்ப் புலிகள் முதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் வரையிலான நிகழ்வுகளுக்கு உரிமை கோரி வெளியிடப்பட்ட அறிக்கையை தட்டச்சு செய்தவர் ஊர்மிளா. இது அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் பாராளுமன்ற காரியாலயத்தில் தட்டச்சு செய்யப்பட்டது. பிரபாகரனுக்கும், உமாமகேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகளால் பிற்காலத்தில் அவர்கள் இருவரும்  ஒரே இலக்குடன் இருவேறு வழிகளில் பயணித்தாலும் தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் இவர்கள் இருவரும் ஒன்றாக செயற்பட்டகாலத்தை மறைப்பது வரலாற்று திரிபும், மறைப்பும் ஆகும்.

ஒட்டு மொத்தத்தில் இந்த தொகுப்பு புலிகளின் ஆவணங்களை தாங்கி வந்துள்ளது. இராணுவ, அரசியல் ரீதியான கனதியான விமர்சனத்திற்கும், ஆய்வுக்கும் அதற்குள் எதுவும் இல்லை. தொகுப்பாளர் கூட உண்மை வரலாற்றை தவிர்த்து புலிகளின் தலைமையை வலிந்து முதன்மைப்படுத்துகிறார். ஆனால் இந்த காரணங்களுக்காக விடுதலைப்புலிகளின் புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் இத் தொகுப்பை நிராகரிக்கவில்லை. அவர்களின் காரணங்கள் இராணுவ வீரசாகசங்களை நோக்கியவை.

 ஆனால் சுவிஸில்  தன்னை ஒரு நாடகவியலாளராக, சுவிஸ் ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளராக, மனித உரிமைகள் செயற்பாட்டாளராக , தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலராக காட்டிக்கொள்ளும் பொன்ராசா அன்ரனுக்கு புலிகளின் இராணுவப்பக்கத்தை வெளிக்காட்டுவது சுவிஸில்  அவ்வளவு இலகுவானதல்ல. அதுவும் 2009க்கு பின்னர் அதன் தேவை என்ன ?  இதனால் சில  இராணுவ புகைப்படங்களை மட்டும் அவர் பேசவிட்டுள்ளார்…..!