“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 07)

“கனகர் கிராமம்” (‘அரங்கம்’ தொடர் நாவல்​​​​​​அங்கம் – 07)

அரசியல் – சமூக – வரலாற்று நாவல்

            —- செங்கதிரோன் —-

கோகுலனின் தாயாரின் அறுபதாம்கட்டைச் சேனை அறுவடைக்குத் தயாரானது.

நாள் சம்பளத்திற்குக் கூலிக்கு அமர்த்தப்பட்ட ஆண், பெண் வேலையாட்கள் காலையிலேயே சேனைக்குள்ளே கூடினர். ஆண் தொழிலாளிகள் முள்ளுமண்வெட்டியைக் கச்சான் பாத்தியின் அடியில் பருப்புகளைப் பாதிக்காவண்ணம் பக்குவமாக ஊன்றிப் பதித்துக் கிண்டிப் பிடுங்கி இலைகள் கீழும் பருப்புகள் மேலேயும் இருக்கத்தக்கதாக வெளியில் புரட்டிப்போடப் பெண்கள் அப்படிப் போடப்பட்ட கச்சான் செடிகளிலிருந்து இரண்டு கைகளாலும் பசுமாட்டின் மடியிலிருந்து பால்கறக்கும் லாவகத்தில் கச்சான் பருப்புகளை ஆய்ந்து வாய் அகன்ற பனையோலைப் பெட்டிகளிலே நிரப்பினார்கள்.

கோகுலனின் தாயார் வேலையாட்களுக்கு இடைக்கிடை தேனீர் போட்டுக் கொடுப்பதிலும் மத்தியானச் சாப்பாட்டைத் தயாரிப்பதிலும் அங்குமிங்கும் ஒடித்திரியக் கோகுலன் அறுவடைச் செயற்பாடுகளைத் தாயாரின் ஆலோசனைகளைக் கேட்டுக்கேட்டு மேற்பார்வை செய்து கொண்டு திரிந்தான்.

கச்சான் பருப்புகள் நிரப்பப்பட்ட பனையோலைப் பெட்டிகளை உச்சந் தலையின் மேல் பாரம்தாங்கியாக வைக்கப்பட்ட சீலைச் ‘சும்மாட்டி’ன்மேல் தூக்கி வைத்துச் சில பெண்கள் தலையிலே காவி வந்து சேனையின் காவல் குடிலின் முன்னாள் உள்ள சமதரையில் விரிக்கப்பட்டிருந்த சணல் கயிற்றினால் பின்னப்பட்ட சாக்குகளை வெட்டிப் பிரித்துப் பொருத்தித் தைத்து உருவாக்கிய நீள அகலமான ‘படங்கு’ எனப்படும் விரிப்பில் கொட்டிப் பரப்பினார்கள். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காய்ந்ததும் ஆண் வேலையாட்கள் இருவர் மரப்பலகையினால் செய்யப்பட்ட ‘புசல்’ முகத்தலளவைப் பெட்டியில் அளந்து சாக்கில் நிரப்பி சாக்கின் வாயைக் கோணி ஊசியும் சணல் கயிறும் கொண்டு தைத்து மூடிக்கட்டினர். ஒவ்வொரு சாக்கும் அண்ணளவாக இரண்டரைப் புசல் கச்சானைக் கொள்ளும்.

நல்ல விளைச்சல். கோகுலனின் தாயாரின் பிரயாசையும் உழைப்பும் கவனமான மேற்பார்வையும் கோகுலனின் இராக்காவலும் வீண்போகவில்லை. நல்ல பலனைத் தந்தது.

கச்சான் அரைவாசிச் சேனைக்குமேல் பிடுங்கியாகிவிட்டது. அப்போதே விளைச்சலை மதிப்பிடக்கூடிய மாதிரி இருந்தது. தொடர்ந்து மிகுதியும் பிடுங்கிமுடிய இன்னும் இரண்டொரு நாள்கள் எடுக்கும் நிலையிலிருக்கும்போது ஒருநாள் பெட்டி பூட்டப்பட்ட உழவு இயந்திரத்தில் சாக்குகளுடனும் ‘புசல்’ அளவைப் பெட்டியுடனும் ஓரிரு வேலையாட்களுடனும் சேனைக்குள் நுழைந்தார் சாறனும் சேட்டும் வலைத்தொப்பியும் ‘ரிப்ரொப்’ பாக அணிந்த ஒருவர்.

வந்த மனிதரைச் சுட்டிக்காட்டித் தனது தாயாரிடம் “ஆரம்மா இவர்?” என்று கேட்டான் கோகுலன்.

“ஓம்! மனே! உன்னிட்டச் சொல்ல நேரம் கிடைக்கல்ல. காசு தட்டுப்பாடான நேரத்தில சேன புடுங்கினதும் கச்சான் தாறனெண்டு மூணு மாதத்திக்கு முதல் முற்பணம் வாங்கின நான். அதுக்குரிய கச்சான ஏத்திட்டுப் போகத்தான் மெசினோடயும் ஆக்களோடயும் வந்திரிக்கார். பொத்துவிலூர்தான். அலியார் என்று பேர். பொத்துவில் ரவுணுக்குள்ள சில்லறக்கட வச்சிருக்கார்” என்றாள் கனகம்.

“என்ன விலைக்கு அம்மா கச்சான் கொண்டுபோக வந்திரிக்கார்?” என்று கேட்டான் கோகுலன்.

“இப்ப விக்கிற விலயப்பாக்கக் குறயத்தான் மனே. என்ன செய்யிற. அவசரத்துக்கு முற்பணம் வாங்கிறதால நமக்குக் கைநட்டம்தான்” என்றாள் கனகம்.

கோகுலன் அந்த இளவயதிலும் இப்படிச் சிந்தித்தான்.

இதுவும் ஒருவகைச் ‘சுரண்டல்’ தான். சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்கள் காசுக்குக் கஸ்டப்படும்போது கச்சானுக்கு அறாவிலைபேசி முற்பணம் கொடுத்துப்போட்டுப் பின்னர் அறுவடைக் காலத்தில் சேனைக்கே வந்து சந்தைவிலையைவிடக் குறைந்தவிலைக்குக் கச்சான் வாங்கி ஏற்றிக் கொண்டு போவது.

பயிர்க்காலத்தில் பன்றிகள் வந்து கச்சான் பாத்திகளைக் கிண்டிக்கிளறி ஏற்படுத்தும் பாதிப்புக்களைவிட ஆபத்தானது இந்த உள்ளூர் வியாபாரிகளின் இப்படியான ‘சுரண்டல்’.

கச்சான்சேனை செய்பவர்களுக்கும் அரசாங்கம் வங்கிகள் மூலம் குறைந்தவட்டியில் குறுகியகாலக் கடன்களை வழங்கினால் இப்படியான உள்ளூர் வியாபாரிகளின் சுரண்டல் நடைபெறச் சாத்தியமில்லை.

மட்டுமல்ல, அறுவடைக் காலத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கமே நியாயவிலைக்குக் கொள்வனவு செய்வதுபோலச் சேனைப் பயிர்ச்செய்கைக் காரர்களிடமிருந்தும் அரசாங்கம் கச்சானை நியாயவிலைக்குக் கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகள் வேண்டும். உழைப்பவனுக்கே இலாபமும் உரித்தாக வேண்டும்.

அன்றைய நாள் முழுவதும் இதுபற்றியே சிந்தித்தபடி இருந்தான் கோகுலன்.

இளவயதிலேயே இப்படியான முதிர்ச்சியான நல்ல சிந்தனைகள் அவனுள்ளே எழுவதற்குக் காரணமாயிருந்தது சிறுவயதிலிருந்தே அவனிடமிருந்த தீவிர வாசிப்புப் பழக்கம்தான். வாசிப்பு இளவயதிலேயே அவனது சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தியிருந்தது. கோகுலன் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது அவனுக்கு நேரே மூத்த இரண்டு அக்காமார்களும் எஸ்.எஸ்.சி வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் படித்ததும் பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில்தான்.

அவர்களின் மேல்வகுப்புக்களுக்குப் பாடப் புத்தகங்களாகவிருந்த கவிமணி தேசிகவிநாயகப்பிள்ளையின் ‘மலரும்மாலையும்’ கவிதை நூல் – ‘பண்டைத்தமிழர் பண்பாடு’- ‘கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம்’ – ‘திருவிளையாடற்புராணவசனம்’ மற்றும் குடியியல், சரித்திரம், பூமிசாத்திரப் பாடப் புத்தகங்களையெல்லாம் பலதடவைகள் எடுத்துப் படித்திருக்கிறான். அவற்றைப் படிப்பது அவனுக்குப் பொழுதுபோக்குமாதிரி. அதிலிருந்துதான் அவனது வாசிப்புப் பழக்கம் ஆரம்பமாகிற்று. எந்தப் புத்தகத்தை எங்கு கண்டாலும் அதை எடுத்து வாசிக்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே அவனிடம் ஒரு வியாதிபோல் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் அந்தப் பதினாறுவயதிலேயே நிறையப் புத்தகங்களை வாசித்திருந்தான்.

மறுநாள் காலை கோகுலன், தாயார் தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றித்தந்த காலைத் தேனீரை இடது உள்ளங்கையிலுள்ள சீனியை நுனிநாக்கினால் நக்கிச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்கும்போது பக்கத்துச் சேனைப் பூரணி அக்கா,

“பெரியம்மா! பெரியம்மா!” என்று அலறிப்புடைத்துக்கொண்டு கச்சான் சேனைக்குள்ளாலக் குடிலை நோக்கி ஓடிவருவதைக் கண்டு கோகுலன் தாயாருக்குக் காட்டினான்.

“என்ன புள்ள! விடிஞ்சும் விடியாததுமா ஓடி வாறா. ஆருக்கும் பாம்புகீம்பு கடிச்சுப்போட்டா?” என்று வினாவினாள் கனகம்.

சேனைக்குள்ளே-வயலுக்குள்ளே-காட்டுக்குள்ளே திரியிற, குடியிருக்கிற ஆட்களுக்குப் பாம்பு தீண்டுவது அடிக்கடி நிகழ்வதொன்று. அதுதான் கனகம் அப்படிக் கேட்டாள். பாம்பு தீண்டியிருந்தால் கடிபட்டவரை உடனே திருக்கோவில் ஊரிலிருக்கும் “விஷக்கல்”லுக்குக் கொண்டுபோய்ச் சுகமாக்கிவிடுவார்கள். அப்படி யாருக்கும் பாம்பு தீண்டியிருந்தால் சுணங்காமல் திருக்கோவில் விஷக்கல்லுக்குக் கொண்டுபோகச் சொல்லிப் பூரணியிடம் சொல்லும் எண்ணத்துடனும்தான் கனகம் அப்படிக் கேட்டாள்.

“பாம்பு கடிச்சா விஷக்கல்லுக்குக் கொண்டு போய்ச் சுகமாக்கி உசிரக் காப்பாத்திப் போடலாம். ஆன அடிச்சா என்ன செய்யிற பெரியம்மா?” என்றாள் பூரணி.

“என்னபுள்ள சொல்லுறா? ஆருக்கு ஆன அடிச்ச?” அதிர்ச்சியுடன் கேட்டாள் கனகம்.  

“அதென்னத்துக் கேட்டயள் பெரியம்மா. ராவு நல்லம்மாக்காட சேனைக்குள்ள ஆன வந்து அவவ அடிச்சுக் கொண்டு போட்டாம். விதானையிட்ட அறிவிக்க ஆக்கள் பொத்துவிலுக்குப் போயிருக்காங்களாம்” என்று ஓடிவந்த ஓட்டத்தில் இளைக்க இளைக்க எடுத்துச் சொன்னாள், பூரணி.

“என்னெண்டு புள்ள நடந்ததாம்?” கனகம் கவலையுடன் கேட்டாள்.

“நல்லாம்மாக்காட புருஷன் காச்சலெண்டு ரெண்டு நாளா பொத்துவில் ஆஸ்பத்திரியில “வாட்”டிலயாம் பெரியம்மா. அவ தனியத்தான் இரிந்திருக்கா. குடிலுக்கு முன்னால தீனாப் போட்டிருந்த நெருப்பு ராவு பேய்ஞ்ச தூத்தல் மழைக்கு நூந்து போய்த்தாம். நல்லம்மாக்காவும் இது தெரியாமக் கண்ணயந்திட்டாவாம். பொத்துவில் ஆஸ்பத்திரிக்குப் போன நல்லம்மாக்காட புருஷனுக்கு இப்ப காச்சல் எப்படி எண்டு கேக்கிறதுக்குக் காலம்பற அவட பக்கத்துச் சேன சீனியர் போனப்பதான் குடில் வாசலடியில நல்லம்மாக்கா செத்துக் கிடந்ததக் கண்டிரிக்கார். ஆன வந்துபோன கால்தடத்தப் பாத்துத்தான் கண்டுபுடிச்சவங்களாம்” என்று தனக்குக் கிடைத்த தகவல்களை ஒப்புவித்தாள் பூரணி.

“தீனாப் போட்ட நெருப்பு நூராமப் பத்தியிருந்தா ஆன வந்திரிக்காது புள்ள. நெருப்பக் கண்டா எட்டப் போயிரிக்கும். என்ன செய்யிற அவட காலம். புருஷன் இல்லாத நேரம்பாத்து மழத்தூத்தலும் வந்திரிக்கு. பாவம் நல்லம்மா. புள்ளகுட்டியில்லாததுகள். புருஷன் கணபதியும் தனிச்சுப் போனான். அவனும் பாவம். காலம் வந்தா சாவ ஆரு புள்ள தடுக்கேலும். நமக்கும் என்னென்ன எழுதியிரிக்கோ” என்று சிறிது நேரம் அமைதிகாத்த கனகம்.

“எதுக்கும் எப்பவாம் சவம் எடுக்கிறண்டு அறிஞ்சி ஒருக்கா எனக்கும் சொல்லு புள்ள” என்று கூறிமுடித்துவிட்டுக் குடிலுக்குள் சென்று சீனிப்போத்தலுடன் வெளியில்வந்து “நிண்டு தேத்தண்ணி குடிச்சித்துப்போ புள்ள” என்று புறப்படபோன பூரணியைத் தடுத்து நிறுத்திவிட்டுக் குசினியை நோக்கி அடியெடுத்தாள்.

இவையெல்லாவற்றையும் குடிலுக்குள் விரித்துப் போடப்பட்டிருந்த சாக்குக்கட்டிலில் அமர்ந்தவாறே காதில் வாங்கிக்கொண்டும் கவனித்துக்கொண்டும் காலைத் தேனீரைப் பருகி முடித்த கோகுலன் சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்களுக்குக் காட்டு விலங்குகளால் வரக்கூடிய பாதிப்புக்களையும் உயிராபத்துக்களைக் குறித்தும் பெரிதும் கவலைப்பட்டான். தனது தாயாரையும் நினைத்து அவளுக்கு ஒரு ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்றும் கடவுளை மனதிற்குள் மன்றாடினான்.

பன்றிக்குக் காவல் காக்கலாம். சத்தம் போட்டுத் துரத்தினால் ஓடிவிடும். யானைக்கு எப்படிக் காவல் காக்கமுடியும். சேனைப் பயிர்ச்செய்கைப் பிரதேசம் முழுவதையும் சுற்றி “யானைவேலி” அமைத்து அறுக்கை செய்வதுதான் இதற்குத் தீர்வு. அதனை அரசாங்கம் தானே செய்து கொடுக்கவேண்டும் என்றும் கோகுலன் சிந்தித்தான்.

மேலும், பூரணி அக்கா காலையில் அம்மாவை நோக்கி ஓடிவருகிறபோது ‘ஆருக்கும் பாம்புகீம்பு கடிச்சுப்போட்டா?’ என்று தனது தாயார் முதலில் கேட்டது அவன் ஞாபகத்திற்கு வந்தது. பாம்பு தீண்டிய ஆட்களைத் திருக்கோவிலுள்ள ‘விஷக்கல்’லுக்குக் கொண்டு போவது பற்றிக் கோகுலன் கேள்விப்பட்டுள்ளான். ஆனால், அது பற்றிய விபரங்களொன்றும் அவனுக்குத் தெரியாது. அது பற்றிய விபரங்களையும் விளக்கத்தையும் தனது தாயாரிடம் கேட்டறிந்து கொள்ளவேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான்.

பூரணி தேனீரைக் குடித்துவிட்டுச் சென்றதும் கனகம் காலைச்சாப்பாட்டைத் தயார் செய்வதில் ஈடுபட்டிருந்தாள். கோதுமை மாவைத் தண்ணீர் ஊற்றிப் பச்சைக்கொச்சிக்காய், சின்ன வெங்காயம் எல்லாம் சின்னத்துண்டுகளாய் அரிந்து போட்டுத் தேங்காய்ப்பூவும் சிறிதளவு இட்டு நன்றாகப் பசையாகப் பிசைந்து தோடம்பழம் அளவுக்குச் சிறுசிறு உருண்டைகளாக்கி வைத்தாள், அதனைப் பின்பு தட்டி முழுப் பப்படப் பொரியல் அளவுக்கு வட்டவடிவமாகத் தட்டையாக்கி அடுப்பில் மண்சட்டியை வைத்து அதனடியில் இட்டு ‘ரொட்டி’ சுடுவதற்காக. ‘ரொட்டி’ சுடுவதற்கான பூர்வாங்க வேலைகளையெல்லாம் தனது தாயார் தொடங்குவதைக் கண்ட கோகுலன் சற்றுச்தொலைவில் கடற்கரையை நோக்கி அண்மித்ததாக இருந்த சேனைக்குள் ஒரு பள்ளத்தில் பதித்திருந்த மரக் ‘கொட்டு’க் கிணற்றடிக்குப் போய்க் குளித்துவிட்டு வர ஆயத்தமானான்.

“மனே குளிச்சிட்டுச் சுணங்காம வா. ‘ரொட்டி’ சுடப்போறன். ‘ரொட்டி’ சுடச்சுடச் சாப்பிட்டாத்தான் ருசி” என்றாள் கனகம். கோகுலன் தாயாரின் சேனையிலிருந்து கொட்டுக் கிணற்றடிக்குச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

கோகுலன் குளிக்கப்போன மரக் ‘கொட்டுக்’ கிணற்றடிக்கு பக்கத்துப்பக்கத்துச் சேனைகளில் இருந்து குளிப்பதற்கும் முகம் கழுவிச் செல்வதற்கும் குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்கென்றும் பலர் வந்திருந்தார்கள்.

மரக் ‘கொட்டு’க் கிணறு எல்லோரும் நின்று ஒரே நேரத்தில் தண்ணீர் அள்ள முடியாதபடி வாய் சிறியதாக இருந்தது. அதனால் நெருக்கடியைக் குறைக்க ஒருவர் பின் ஒருவராகத்தான் அலுவலை முடிக்க முடிந்தது. அதனால் நேரமும் எடுத்தது.

விட்டம் கூடிய சீமெந்துக் கிணறு என்றால் பெரிதாக இருக்கும். கயிறு கட்டிய வாளியைக் கொண்டுவந்தால் சுற்றிவரப் பலபேர் நின்று தண்ணீர் அள்ளலாம் எனவும் யோசித்தான்.

ஒரு பொதுவான இடத்தில் சேனைப்பயிர்ச் செய்கைக்காரர் எல்லோருக்கும் பயன்படக்கூடியமாதிரி ஆறு அடி விட்டத்தில் ஒரு பொதுக்கிணற்றை அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுத்தால் எவ்வளவு நல்லது என்றும் யோசித்தான்.

கிணற்றடியில்வைத்து மற்றவர்கள் தமக்குள்ளே கதைக்கத் தான் காதுகொடுத்துக்கேட்ட விடயமும் அவனுக்கு விசனத்தையளித்தது.

அது என்னவென்றால், பொத்துவில் – மொனராகல பிரதான வீதியில் இரண்டாம் கட்டையில் அமைந்துள்ள ‘தாமரைக்குளம்’; சேனைக்குள்ள வைத்து ஒரு ஆளுக்கு இரவு புடையன் பாம்பு கடித்துக் கடிபட்டவரை இரண்டு மூன்றுபேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு பிரதான வீதிக்குக் கொணர்ந்து இரவோடிரவாக ஆளை  மாட்டுவண்டிலொன்றில் ஏற்றிப் பொத்துவிலுக்கு ‘மாத்தயாவ’ ரிட்டக் கொண்டு போயிருக்கிறார்கள் என்ற செய்திதான் அது.

பொத்துவில் மட்டக்களப்பு பிரதான வீதியில் ‘அறுபதாம்கட்டை’ச் சேனை அமைந்திருந்த மாதிரி பொத்துவில் – மொனராகல பிரதான வீதியின் இரண்டாம்கட்டையில் (மைலில்) வலப்புறத்தில் உள்ள ‘தாமரைக்குளம்’ எனும் சிறிய நீர்ப்பாசனக்குளத்தின் ‘வால்கட்டு’ப் பகுதியிலிருந்து ஆரம்பித்துக் ‘கள்ளியாப்பத்தை’ எனப்படும் வயல்வெளிப் பக்கமாகப் பரந்து விரிந்து கிடந்தது ‘தாமரைக்குளம்’; சேனை.

சிலவேளைகளில் இரவு நேரத்தில் ‘டோர்ச் லைட்’ கையிலிருந்தாலும்கூட சேனைக்குள்ளால நடந்துதிரியும் தனது தாயாரை நினைந்தான். நல்லாம்மாக்காவை யானை அடித்துச் சாகடித்த செய்தியைக் கேட்டுக் கவலையடைந்துள்ள தனது தாயாரிடம் தான் கேள்விப்பட்ட தாமரைக்குளச் சேனையில் ஒருவருக்குப் பாம்புகடித்த செய்தியையும் சொல்லி மேலும் அவவின் மனதை அங்கலாய்க்க வைக்கக்கூடாதென்றும் தீர்மானித்தான். ‘மாத்தயாவரை’க் கோகுலனுக்கு நன்கு தெரியும். கோகுலனுடைய இளையக்காவின் கணவருக்கு உறவுமுறையில் பெரியப்பா. நெருங்கிய உறவினர். புஞ்சிமாத்தயா என்பதுதான் அவரது பெயர். ‘மாத்தயாவர்’ என்று பொத்துவிலில் மரியாதையாக அழைப்பார்கள். உகந்தை முருகன்  கோயில் வண்ணக்கரும் அவர்தான். பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும் திறமையும் அவருக்கு இருந்தது. தலை மயிரைப் பின்னுக்குவாரித் தேசிக்காய் அளவில் சிறு ‘கொண்டை’ முடிந்திருப்பார்.

கோகுலன் குளித்துவிட்டுக் குடிலுக்கு வரும்போது குசினிப்பக்கமிருந்து ‘ரொட்டி’ சுடும் வாசம் மூக்கைத் துளைத்தது. வந்ததும் வராததுமாக வலதுகை மோதிரவிரலையும் பெருவிரலையும் பரதநாட்டியத்திற்கு அபிநயம் பிடிப்பதுபோல நுனிகளை ஒன்றாய்ச் சேர்த்துப்பிடித்து இரு விரல்களையும் குடிலுக்குள் கொழுவியிருந்த திருநீற்றுக் குடுவைக்குள் விட்டுச் சிறிது திருநீற்றைக் கிள்ளி நெற்றியிலே சாத்திச் சாமி கும்பிட்டுவிட்டு, குளிக்கப்போகும்போது மடித்துச் சாத்திவைத்த சாக்குக்கட்டிலை மீண்டும் விரித்து அதில் அமர்ந்தான்.

அலுமினியம் பீங்கானில் கனகம் ‘ரொட்டி’யைக் கொணர்ந்து அவன் அருகில் சாக்குக்கட்டிலில் வைத்தாள். தொட்டுச் சாப்பிடுவதற்குச் சிறிதளவு தேங்காய்ப்பூவுடன் சின்னவெங்காயமும் காய்ஞ்சகொச்சிக்காயும் சேர்த்து மாப்போல இடித்தெடுத்துத் தேசிக்காய்ப்புளியும் அளவாக இட்டுப் பிசைந்து செய்த ‘சுள்’ளென்று உறைக்கும் சம்பலும் வந்தது. கோகுலன் ‘ரொட்டி’யைச் சம்பலுடன் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே தாயாரிடம் திருக்கோவில் ஊரிலுள்ள விஷக்கல் பற்றிய விபரத்தையும் விளக்கத்தையும் தனக்குச் சொல்லும்படி கேட்டான்.

திருக்கோவில் விஷக்கல் பற்றிய விபரங்களைக் கோகுலன் தன் தாயாரிடம் கேட்டதும், அவனது தாயார் கனகம்,

“பாம்பெண்டா படையும் நடங்கும் மனே” என்று பழமொழியொன்றைச் சொல்லி விளக்கத்தைக் கூறத்தொடங்கினாள்.

(தொடரும் … அங்கம் 08)