அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
—- செங்கதிரோன் —-
பச்சைப்பசேலென்றிருந்த சேனையின் செழிப்பிலும் இயற்கையின் எழில் கோலங்களிலும் மனதைப் பறிகொடுத்து நின்றிருந்த கோகுலனிடம் கனகம், “மனே! சேனயத் திருப்பி ஒருதரம் நல்லாச் சுத்திப் பாத்திட்டு வா. ராவு பண்டிகிண்டி எங்கயும் வந்து தோண்டியிருக்கா எண்டு பார். தோண்டின இடத்தில இல சாடயா வாடிக்கிடக்கும். நான் மத்தியானச் சாப்பாட்டச் செய்யப்போறன்?” என்றாள்.
கோகுலன் தம்பி யோகனையும் கையில் பிடித்தபடி தாயின் கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான்.
கோகுலன் மீண்டுமொருமுறை மிக்க அவதானத்துடன் கண்களைக் கூர்மையாக்கி மேய விட்டபடி சேனையைச் சுற்றிப் பார்வையிட்டு வரும்போது, சேனையின் காட்டுப்பக்கம் இருந்த ஒரு மூலையில் கச்சான் இலைகள் சில வாடியிருந்தன. அருகில் சென்று பார்த்தபோது பத்துப்பதினைந்து கச்சான் பாத்திகள் கிண்டப்பட்டு உழக்கப்பட்டுக் கிடந்தன. உழக்கப்பட்டுக் கிடந்த கச்சான் செடிகளில் அப்போதுதான் முளைவிடும் பிஞ்சுக்காய்கள் வெண்முத்துக்கள் போலத்தெரிந்தன. உடனே தாயாரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டுக் காட்டினான். கனகம் வந்து பார்த்துக் காலடிகளையும் நோட்டம்விட்டபின்னர், “ராவு பண்டி வந்திருக்குமனே?” என்றாள்.
கனகம் இப்படிச் சொல்லும்போது அவளது கண்கள் கலங்கியதைக் கோகுலன் கவனித்தான். அமைதியாகவும் ஆதரவாகவும் தன் முகத்தை வைத்த கண்விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கோகுலனிடம், “சரி! மனே நீ சேனய தம்பியயும் கூட்டிக்கொண்டு நல்லாச் சுத்திப் பாத்திட்டு வா. நான் போய்ச் சமயலப் பாக்கணும். பொழுதுபட்டொன்ன செல்லத்தம்பி காவலுக்கு வருவான். வந்தொன்ன அவனக் கேக்கணும் ராவு என்ன நடந்தெண்டு” என்று கூறிவிட்டுக் குடிலை நோக்கி நடந்தாள் கனகம். தனது கவலையைப் பிள்ளைகளுக்குக் காட்டக் கனகம் விரும்பவில்லை.
பொத்துவிலிருந்து வாங்கிவந்த கீரிச்சூடமீன் கருவாட்டுடன் உருளைக்கிழங்கும் போட்டுக் குழம்பும், சேனைக்குள்ளே ஆய்ந்தெடுத்த பூசணித் தலைப்புக் கடையலும், காட்டுக்குள் பறித்த கானாந்தி இலைச் சொதியும் வைத்துக் குத்தரிசிச் சோறும் ஆக்கி மத்தியானச் சாப்பாட்டைத் தயாரித்தாள் கனகம்.
மத்தியானம் அம்மாவின் சேனைச் சமையலை ஒரு வெட்டு வெட்டிவிட்டுக் காட்டுக்கம்புகளால் குடிலினுள்ளே கட்டியிருந்த தட்டிக் கட்டிலில் ஒரு குட்டித் தூக்கமும் போட்டுக் கோகுலன் எழுந்திருக்கையில் நேரம் மாலை 5.00 மணியாகி விட்டிருந்தது. கோகுலன் பகல் தூக்கம் போட்டிருந்த வேளையில் அவனுடைய தம்பி குடிலுக்குள்ளே கொழுவியிருந்த “கெற்றபோல்” எனும் கருவியைக் கையிலெடுத்துப் பின் சிறுகுறுணிக் கற்களும் தேடிப்பொறுக்கி அதனால் குருவிகளைக் குறிபார்த்து அடித்து விளையாடி நேரத்தைப் போக்கினான்.
தூக்கம் கலைந்து எழும்பிய கோகுலனைப் பார்த்துக் கனகம், “ராவு பஸ்சுக்குள்ள நித்திர ஒழுங்கா இல்ல என்ன மனே! நல்லாப் படுத்துத் தூங்கித்தா” என்றாள். கோகுலன் தம்பி யோகனின் கையில் ‘கெற்றபோல்’ இருப்பதைக் கண்டுவிட்டு “எத்தின குருவி அடிச்ச நீ” என்று சிரித்துக்கொண்டே கேட்டான். அதற்குத் தம்பி யோகன் “ஒண்டுக்கும் படல்ல” என்றதும் கோகுலனும் தாய்கனகமும் கவலைகளை மறந்து சிரித்தார்கள்.
பின் கனகம் அடுப்பைமூட்டித் தண்ணீரைக் கொதிக்கவைத்துத் தேனீர் தயாரித்து கோகுலனுக்கும் யோகனுக்கும் இருவரிடமும் இடதுகைகளை நீட்டச்சொல்லி உள்ளங்கையில் கொஞ்சம் சீனியும் வைத்து சிரட்டையிலே தேநீரும் ஊற்றிக் கொடுத்தார். இருவரும் தேனீர் நிரப்பப்பட்ட தேங்காய்ச் சிரட்டையை வலது கையில வாங்கிச் சீனியை நாக்கின் நுனியால் நக்கிக்கொண்டு சிரட்டைத் தேனீரை ஆசையோடு அருந்தினார்கள். கனகமும் இன்னொரு சிரட்டையில் அவர்களுடன் சேர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருக்கையில், சேனைக்குக் காவல் காக்கும் செல்லதம்பி பக்கத்திலிருந்த பூரணி அக்காவின் சேனைப் பக்கமிருந்து தங்களது சேனைக்குள் நுழைவது கோகுலனுக்குத் தெரிந்தது. தாயாரிடம் காட்டினான்.
குடிலை நெருங்கிய செல்லத்தம்பியிடம் கனகம், “என்ன செல்லத்தம்பி ! சேனைக்குள்ள அந்தப் பாலமரத்து மூலயில ராவு பண்டி வந்து பத்திப் பதினைஞ்சு கச்சான் பாத்திகளப் பதம் பாத்திருக்கு. நீ ஒண்டும் சொல்லல்லயே! உனக்குத் தெரியாதா?” என்றாள்.
“ஓம்! அக்கா மறந்திட்டன். விடியச் சாமத்திலக் கொஞ்சம் கண்ணயந்திட்டன். பண்டிக்கிளயொண்டு அந்தக் காட்டுப்பக்க மூலயால கொத்துவேலியப் பிச்சிட்டு உள்ளுக்க வந்திட்டிது. சத்தம் கேட்ட உடன நான் எழும்பிப் பண்டிக்கிளயக் கண்டுத்தன். அப்பத்தான் வந்திருக்கோணும, வெடி வைச்சன். அஞ்சாறு பண்டிகள் அவடத்தில உழுந்திருக்கணும். சா! ஓடித்துகள்”; என்று சர்வசாதாரணமாகச் செல்லத்தம்பிட பதிலளித்தான்.
கோகுலனுக்குச் செல்லத்தம்பியின் பொறுப்பற்றபதில் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவரைப் பொத்துவில் ஊரில் “புளுகன்” செல்லத்தம்பி என்றுதான் குறிப்பிடுவது அவனுக்கு ஞாபகம் வந்தது.
“இல்ல செல்லத்தம்பி! இவ்வளவு பாடுபட்டுக் காசயும் செலவழிச்சி பகலிரவாக் காவல் பாத்துப் பண்டிக்குத் தின்னக் குடுக்கிறண்டா இந்த ஆனவாற காட்ட வெட்டிச் சேன செய்யத் தேவல்லயே” என்று அமைதியாகக் கூறிவிட்டுச் செல்லத்தம்பியின் பதிலுக்குக் காத்திராமல் “பொழுதுபட்டுப் போகுது. தம்பியும் பள்ளியில சோதனை எடுத்துப்போட்டு லீவில வந்திருக்கான் ஊட்ட போகணும். எதுக்கும் காவலக் கவனமாப்பார் செல்லத்தம்பி. அடுப்பில சுடுதண்ணிகிடக்கு தேத்தண்ணியப் போட்டுக்குடி” என்று விட்டு இளையமகன் யோகனைக் கையில் பிடித்துக்கொண்டு கோகுலன் பின்தொடரச் சேனையை விட்டு வெளியேறினாள் கனகம்.
அன்றிரவு வழமைபோல் அம்மாவுக்குப் பக்கத்தில்தான் கோகுலன் படுத்திருந்தான். அன்று பகல் முழுவதும் அறுபதாம்கட்டையில் சேனைக்குள்ளே கழித்ததையும் அங்கு நிகழ்ந்தவற்றையும் மனதில் அசைபோட்டான். நீண்டநேரமாகியும் உறக்கம் வரமாட்டேனென்று அடம்பிடித்தது தனக்கும் அம்மாவுக்கும் இடையில் படுத்திருந்த தம்பி யோகன் நித்திரையாகி விட்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் கோகுலன் உறக்கத்திலிருந்த தாய் கனகத்தை மெல்லவாகத் தட்டியெழுப்பி, “அம்மா! சோதன முடிவு சித்திரமாதம்தான் வரும். வந்தாறுமூலைக்கு முதல் தவண போகாம நிண்டுபோட்டு இரண்டாம் தவணைக்குப் பள்ளி தொடங்கப் போனாப் போதும். நாளயிலிருந்து கச்சான் சேன இரவுக்காவல நான் பாக்கன். செல்லத்தம்பிய நாளயோட நிப்பாட்டுங்க. அவருக்குக் குடுக்குற சம்பளமும் மிஞ்சும். பகல்லில நாம இல்லாத நேரத்தில பக்கத்துச் சேனையில பகலிரவாக் குடியிருக்கிற பூரணி அக்கா பார்த்துக்கொள்ளுவா. இடயில அப்பப்ப நாமளும் பகலிலயும் போய்ப் பாத்திட்டு வரலாம். இரவயில நாம சேனைக்குள்ள தங்கிக் காவல் காப்பம். யோகன் இளையக்காவோட பொத்துவிலில இருப்பான்தானே” என்றான்.
“இல்ல மனே! நீ சின்னப்பிள்ள. தகப்பன் இல்லாத புள்ளய நான் பாடுபடுத்திறனெண்டு ஊராக்கள் கதைப்பாங்க. தம்பியும் இரவில நானில்லாமப் பொத்துவிலில நிப்பானோ தெரியா. வேணாம் மனே!” என்றாள் கனகம் கெஞ்சுமாற் போல.
“இல்லம்மா. நான் வளந்திட்டன். எனக்கு இப்ப பதினாறு வயசு முடிஞ்சு பதினேழு தொடங்கித்து. வளந்தாப் பிறகு எனக்கும் தனியாகக் கச்சான் சேன செய்ய ஆசயாக்கிடக்கு. அதற்கு இப்பவே பழகின மாதிரியும் இருக்கும். இரவில நான் கண்முழித்துக் காவல் பாப்பன். பகல்லில வீட்டவந்து படுக்கலாம்தானே. தம்பி நாம எல்லாரும் சேர்ந்து சொன்னாக் கேப்பான்” என்றான் கோகுலன்.
கனகம் எவ்வளவு மறுப்புச் சொல்லியும் கோகுலன் கேட்கவேயில்லை. இறுதியில் கோகுலனின் கோரிக்கையே வென்றது.
அடுத்து நாளிலிருந்து கோகுலனும் தாயாரும் இரவில் அறுபதாம் கட்டைச் சேனையில் தங்கத் தொடங்கினார்கள். கோகுலன் இரவில் கண்விழித்துச் சேனைக்காவல் புரிவதும் பகலில் பொத்துவில் சென்று வீட்டில் படுத்துத் தூங்குவதுமாய் நாள்கள் நகர்ந்தன.
பின்னாளில் தானும் தனியாகக் காடுவெட்டிக் கச்சான் சேனை செய்ய வேண்டுமென்ற ஆசை அடிக்கடி அவன் மனதில் நிலத்தில் நடப்பெற்ற விதைக்கச்சான் நிலத்தைப்பிளந்து வெளியே முளை தள்ளுவதைப் போல எழுந்தது.
ஒருநாள் தன் தாயாரிடம் கச்சான் பயிரிடும் விபரங்களைக் கேட்டறிந்தான்.
முதலில் சேனை செய்யப்போகும் காட்டின் எல்லைகளை அடையாளமிட்டுக் ‘காடுவளைய’ வேண்டும், பின் வசதியான ஒரு நாளில் கூலியாட்களைக் கொண்டு காட்டை வெட்டத்தொடங்கி காடுவெட்டி முடிந்ததும் வெட்டிய காட்டை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும். வெட்டிப்போட்ட பச்சைக்காடு நன்கு காய்ந்ததும் பொருத்தமானதொரு நாளில் காற்றுவழத்தை – காற்றுவீசும் திசையைப் பார்த்து நெருப்புமூட்டவேண்டும். வெட்டிப்போட்ட காடு முழுமையாகப் பற்றிமுடிந்தபின்பு எரியாமல் எஞ்சியுள்ளவற்றைக் கூட்டிப் பற்றவைத்தும் நிலத்தில் வேர்பிடுங்கியும் துப்பரவு செய்து புற்றுக்களைக் கொத்தித் தரைமட்டமாக்கி நிலத்தைத் தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சேனையைச் சுற்றிக் கொத்துவேலியும் – முள்வேலி போடவேண்டும். அவ்வப்போது ஆங்காங்கே முளைக்கும் வளரும் காட்டுச் செடிகளையும் வெட்டித் துப்பரவு செய்ய வேண்டும்.
புரட்டாதிமாதக் கடைசியில் அல்லது ஐப்பசிமாத முதல்பாதியில் முதலில் பருவமழைகண்டதும் நிலம் ஈரமாகவிருக்கும்போது விதைக்கச்சான் பருப்பைப் பாத்திக்குப் பாத்தி ஒரு அடி மட்டில் இடைவெளிவிட்டு அரைஅங்குல ஆழத்தில் நடவேண்டும். கச்சானில் ‘மூன்றுமாத்தயான்’ ‘நாலுமாத்தயான்’ என இருவகையுண்டு. கோகுலனின் தாயார் தேர்ந்தெடுத்து நாட்டியுள்ளது ‘நாலுமாத்தயான்’ ஆகும். விதைமுளைத்து இலைவிட்டுப் பயிராகும்வரை காட்டெலிகளிடமிருந்து காப்பாற்றவும் வேண்டும். சிலவேளைகளில் பன்றிகளும் வந்து விதைக்கச்சானைத் தோண்டித் தின்றுவிடும். காட்டெலிகள் மற்றும் பன்றிகள் தோண்டித் தின்றிருக்கும் இடங்களில் அவ்வப்போது பார்த்து பார்த்து மாற்றுவிதைகளையும் நடவேண்டும். இரண்டரை மாதத்தில் பயிராகிப் பூக்கத் தொடங்கிவிடும். கிழங்கும் இறங்க ஆரம்பித்துவிடும். அவ்வப்போது பயிர்களுக்கிடையில் வளரும் களைகளையும் நீக்கம் செய்ய வேண்டும். பயிராகி நிலத்தில் கொடிபடர ஆரம்பித்ததும் பயிரின் அடிப்பகுதியிலும் கொடிபடர்ந்துள்ள இடங்களிலும் கிழங்கு இறங்குவதற்கு வசதியாக மண் அணைத்து விடவும்வேண்டும். அறுவடை நான்கு மாதங்கள் கழிந்தபின் நடைபெறும்.
. . .
15.08.2019 அன்றைய வீரகேசரிப் பத்திரிகைச் செய்தியைப் படித்துக் கடந்தகாலத்து நினைவில் மூழ்கிப்போயிருந்த கோகுலனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
அவனது மனைவி சுந்தரி அருகில்வந்து, “ நேரம் எட்டரையாப் போய்த்து. வாங்க சாப்பிட” என அழைத்தபோதுதான் உயரப்பறந்து கொண்டிருந்த அவனது கடந்தகால நினைவுப் பட்டம் நூலறுந்தது.
அம்மா அன்று தனக்குப் பதினாறு வயதாயிருக்கும்போது கூறிய விபரங்கள் பசுமரத்தாணிபோல் தனக்கு அறுபத்தியொன்பது வயதாகிவிட்ட இன்றும்கூடத் தனது மனதில் பதிந்துள்ளதை எண்ணிக் கோகுலன் வியந்தான்.
2003 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட தனது தாயாரின் நினைவுகள் கடல் அலைகள்போல் மேலெழுந்து அவனை ஆட்கொண்டதில் சற்றுநேரம் மனம் நெகிழ்ந்தும் போனான். இந்த வயதிலும் தாயாரின் நினைவில் அவன் கண்கள் பனித்தன.
அவ்வேளை 1966 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட தனியாகக் கச்சான் சேனை செய்ய வேண்டுமென்ற ஆசை ஐம்பத்திமூன்று ஆண்டுகள் கழிந்தும்கூட இன்னும் நிறைவேறவில்லையே என்றும் ஆதங்கப்பட்டான். ஆசைகள் எல்லாமே நிறைவேறுவதில்லைத் தானே. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்ற திரைப்படப்பாடலை நினைந்து கொண்டே காலை உணவுக்காக எழுந்தான்.
குசினிக்குள் சென்று இடியப்பம் – முட்டைச் சொதியுடன் காலைச்சாப்பாட்டை முடித்துவிட்டு வந்தபின்பும்கூட கனகர்கிராம விவகாரமே அவன் மனதைவிட்டு நீங்காமல் வியாபித்திருந்தது.
‘செற்றி’யில் வந்தமர்ந்து வீரகேசரிப் பத்திரிகையை எடுத்து அச்செய்தியைப் பரீட்சைக்குப் படிக்கும் மாணவனைப்போல் மீண்டுமொருமுறை படித்தான். மீண்டும் நினைவிடை தோய்ந்தான்.
காலக்குதிரை அவனை ஏற்றிக்கொண்டு 1966 ஆம் ஆண்டை நோக்கிக் கடுகதியில் ஓடியதில் அறுபதாம்கட்டைக் கச்சான் சேனையில் மீண்டும் போய் விழுந்தான்.
(தொடரும் … அங்கம் 07)